வெள்ளி, 1 அக்டோபர், 2021

அச்சம் வேண்டாம் ஆண்டவரின் தூதர் நம்மோடு....(2.10.2021)

அச்சம் வேண்டாம்  ஆண்டவரின் தூதர் நம்மோடு....

இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
சில வருடங்களுக்கு முன்பாக ஒரு அருள் பணியாளர் தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணமாக அவர் ஒரு வெள்ளைத்தாளில் இவ்வாறு எழுதி வைத்திருந்தார் "தனிமை என்னை வாட்டுகிறது" என்று. 
நோய்களில் மிகவும் கொடுமையான நோய் எது? என்ற கேள்வியை எழுப்பினால் தனிமையுணர்வு தான் என்ற பதில் விடையாக வந்து கிடைக்கும்.

தனிமையுணர்வு பல நேரங்களில்  பலர் நோயாளிகளாக மாறி வருகிறார்கள். சிலர் வாழ்வின் மீது வெறுப்பை அடைகிறார்கள். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்ற இந்த உலகத்தில் ஒருவர் பேசுவதை என்னவென்று காதுகொடுத்து கேட்பதற்கு கூட இன்று உண்மையான உள்ளங்கள் இல்லை என்பது நிதர்சனமான உண்மையாக இருக்கின்றது.

எல்லாவற்றிலும் விரைந்து செயல்படுகின்ற நாம் அடுத்தவர் பேசும் போது கூட, அதையும் விரைந்து கேட்டுவிட்டு நகர்கிறோமே ஒழிய, ஏன்? எதற்காக அவர் நம்மோடு உரையாடினார்? இதை ஏன் அவர் என்னிடத்தில் பகிர்ந்து கொண்டார்? என சிந்திப்பதற்கு நேரம் இல்லாதவர்களாக இன்று நாம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். 
ஆனால் இன்றைய நாளில் திருஅவையானது காவல் தூதர்களை நினைவுகூர நமக்கு அழைப்பு தருகிறது. யார் இந்த காவல் தூதர்கள்? என்றால் வேடிக்கையாகச் சொல்வார்கள் கடவுள் இந்த உலகத்தில் ஒரு குழந்தையை பிறக்கச் செய்யும் போது, அந்தக் குழந்தையுடன் ஒரு வானதூதரை காவலுக்கு அனுப்பி வைப்பாராம். இந்த வானதூதர் எல்லா நேரமும் நம்மோடு இருந்து நம்மை ஒவ்வொரு நாளும் வழிநடத்துவார். பல நேரங்களில் நாம் அவரோடு உரையாடி இருக்கலாம். ஆனால் காலத்தின் சுழற்சி, வளர்ச்சி என்ற பெயரில், நாம் வளரவளர நம் அருகில் இருக்கும் வானதூதரை நம்மோடு இருக்கிறார் என்பதை மறந்து போய், நாம் நம்மை கவனிக்க எவருமில்லை என்ற எண்ணத்தில் பல நேரங்களில் பல இடங்களில் பல தவறுகளை இழைக்கின்றோம். ஆனால் காவல் தூதர்கள் எப்போதும் நம்மோடு இருந்து, நன்மை தீமையை நமக்கு மனதின் குரல் ஓசையாக இருந்து வழிகாட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் குரலுக்கு செவி கொடுத்து நடக்கும்போது நாம் நேரிய வழியில் நடக்க முடியும்.


ஒரு சிறு குழந்தை எப்படி தாயின் சொல்லைக் கேட்டு சரியான பாதையில் செல்கிறதோ, அது போல நாமும் வானதூதர்களின் குரல் ஓசையை கேட்டு சரியான பாதையில்,சரியான முடிவுகளை, சரியான நேரங்களில் எடுக்கவும், செல்லவும் அழைக்கப்படுகின்றோம். 

நம்மோடு இருக்கும் வானதூதர்கள் கடவுளால் அனுப்பப்பட்ட வானதூதர்கள் அவர்கள் நம்மோடு இருக்க கவலை இனி நமக்கு இல்லை. நம் கண்ணுக்குப் புலப்படாத இறைவன் நமக்காக நம்மோடு இருப்பதற்கு அனுப்பி வைத்துள்ள காவல் தூதர்களை இந்நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்ப்போம். நமது மனதின் ஓசை வழியாக அவர்கள் உரையாடுவதற்கு செவி கொடுப்போம். இனி வருகின்ற நாட்களில் தனிமை உணர்வால் தவிப்பதை விட்டுவிட்டு இறைவன் அனுப்பிய கண்ணுக்குப் புலப்படாத வானதூதர்கள் நம்மோடு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து இந்த சமூகத்தில் நலமான பணிகளை முன்னெடுக்க கூடியவர்களாய், வானதூதர்களின் குரல் ஓசையின் அடிப்படையில் நமது பாதையை அமைத்துக் கொள்ள இறையருள் வேண்டுவோம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...