குடும்பமே இறையாட்சியின் தொடக்கம்
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நாள் இறை வார்த்தையானது, நாம் இணைந்து வாழ்வதற்கு அழைப்பு தருகின்றது. இணைந்து வாழுவதற்கு இந்த சமூகத்தில் ஒரு இடம் இருக்கிறது என்றால் அது குடும்பம் மட்டுமே. குடும்பங்கள்தான் இன்று இணைப்பின் பாலமாக உள்ளன. மனிதன் இணைந்து வாழவேண்டும் என்பதற்காக இறைவன் உருவாக்கிய உன்னதமான குடையே குடும்ப வாழ்வு. இந்த குடும்ப வாழ்வில் பலவிதமான வாழ்வுக்கான அறநெறிகளை நாம் கற்றுக்கொள்ள முடியும்.
ஒருவர் மற்றவரை அன்பு செய்து விட்டுக் கொடுத்தல், பகிர்ந்து கொள்ளுதல், இன்ப துன்பங்களில் உடன் இருத்தல் என பலவற்றை நாம் குடும்பத்தில் கண்டு கொள்ளலாம். ஆனால் இன்று பெரும்பாலும் பல குடும்பங்களில் விட்டுக்கொடுத்தல், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல், பகிர்ந்து வாழ்தல் என்பதெல்லாம் மறைந்து போய், நான் என்ற எண்ணத்தின் அடிப்படையில் ஒருவர் மற்றவரை குறை கூறக் கூடிய, ஒருவர் மற்றவரை குறை சொல்லக் கூடிய, ஒருவர் மற்றவர் மீது குற்றம் கண்டு பிடிக்கக் கூடிய செயல்கள் தான் அனுதினமும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
ஒரு ஊரிலே ஒரு மனைவிக்கு திடீர் சந்தேகம் வந்தது..
தன்னுடைய கணவனுக்கு காது கேட்கவில்லையோ என்று? ஆனால்... இதை கணவனிடம் நேரடியாக கேட்க அவருக்கு தயக்கம். இந்த விஷயத்தை அவரின் உறவுக்கார டாக்டருக்கு தெளிவாக விளக்கி ஒரு கடிதம் எழுதினார்....
டாக்டரிடம் இருந்து வந்த பதிலில்...
🔸 இருபது அடி தூரத்தில் இருந்து கணவரிடம் ஏதாவது பேசிப் பாருங்கள்,...
கணவரின் காதில் விழவில்லை எனில்....
சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள்
🔸 பின் பத்து, ஐந்து இப்படி குறைத்துக் கொண்டே நெருங்கிச் சென்று பேசுங்கள்...
எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் கணவருக்கு காது கேட்கவில்லை எனத் தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம்" என்றிருந்தது.
அதைக் கேட்டவுடன் மனைவிக்கு ஒரே குஷி.
அடுத்தநாள் வீட்டு வாசலில் இருந்தபடியே உள்ளிருந்த கணவரிடம்...
இன்று மகனுக்கு பள்ளி கட்டணம் கட்டியாச்சானு? கேட்டாள்.
பதில் எதுவும் இல்லை...
பின் வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியைக் கேட்டாள். அதற்கும் பதில் இல்லை,
ஹாலில் இருந்து கேட்டாள்,
சமையலறை வாசலில் இருந்தும் மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள். .
கணவரிடமிருந்து பதிலே இல்லை.
போச்சு இரண்டு ஸ்பீக்கரும் அவுட் ஆகிவிட்டதுபோல என்று மனதில் கன்ஃபர்ம் செய்து விட்டார்.
கடைசி வாய்ப்பாக கணவனின் காது அருகே சென்றுச் சத்தமாக....
"இன்னைக்கு பையனுக்கு Fees கட்டியாச்சானு?" கேட்டாள்.
காதில் ஏதோ குண்டு வெடித்தது போல் இருக்கவே... அவளின் கணவன் அவளை கோபமாக திரும்பிப் பார்த்து,
”ஏன்டீ இப்படி கத்துற, நீ வாசல் கேட்டிலிருந்து , வரவேற்பறையில் இருந்து, ஹாலில் இருந்து, சமைலறை வாசலில் இருந்து கேட்க., கேட்க.. நானும் கட்டியாச்சு கட்டியாச்சுனு சொல்லிக்கிட்டே இருக்கேன்..,
அது உன் காதில் விழவில்லையா..........?
காதுல என்ன பஞ்சு மூட்டையா வைச்சிருக்க...?
என பொரிந்துத் தள்ளிவிட்டான்...
மனைவி அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றாள்........
தவறு தன்னிடம் தானா.........
தன்னிடம் இருக்கும் குறையை மறைத்து, தன்னிடம் இருக்கும் குறைகளை மற்றவரிடம் இருக்கின்ற குறைகளாக பார்க்கின்ற பண்பு இன்று குடும்பங்களில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தான் பல குடும்பங்கள் என்று விவாகரத்திற்காக நீதிமன்றத்தை அணுகி இருக்கின்றன.
நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், இறைவனது ஒன்றிப்பை உணர்ந்து கொள்ளும் இடமாக, இறைவனது வார்த்தைகளின் படி, உண்மையான நம்பிக்கையோடு, புரிதலோடு, ஒருவர் மற்றவரை விருப்பு வெறுப்புகளை எல்லாம் புறம்தள்ளிவிட்டு ஏற்றுக்கொண்டு அருளோடும் உறவோடும் வாழ்வதற்கு இறைவன் உருவாக்கியதே இந்த குடும்ப வாழ்வு. இந்த குடும்ப வாழ்வில் நாம் நிலைத்திருக்க வேண்டும். அன்போடும், அரவணைப்போடும், ஒற்றுமையோடும், ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய நாளில் வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகின்ற செய்தி. என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள் என துவக்கத்தில் ஆதாம் ஏவாளைப் பார்த்து கூறியதுபோல, ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருமணம் என்னும் அருள்சாதனத்தின் வழியாக இணைகின்ற போது, இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும், நான் உனக்கு பிரமாணிக்கமாய் இருப்பேன் என ஒருவருக்கு ஒருவர் இறைவனது முன்னிலையில் வாக்குறுதிகளை கொடுத்து இணைந்து வாழ வேண்டும் என இச்சமூகத்தில் அடி எடுத்து வைக்கின்றோம். வைத்தவர்கள் எல்லாம் இன்று அதில் உறுதியுடன் நிலைத்து இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பி பார்க்கின்றபோது, பல குடும்பங்கள் பல காரணங்களால் விவாகரத்துக்காக நீதிமன்றத்தை அணுகி இருக்கின்றன என்பது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் ஒரே வீட்டுக்குள் ஒருவர் மற்றவரோடு உரையாடாது, உனக்கென ஒரு அறை, எனக்கென ஒரு அறை, நம் பிள்ளைகளுக்கு என ஒரு அறை என பிரிந்து கிடக்கின்ற சூழல் அதிகரித்திருக்கிறது. இன்னொரு புறமுமோ, அருகில் இருக்கும் உறவுகளை மறந்து அலைபேசியோடு வாழ்நாளை கழிக்கின்றன சூழலும் இன்று குடும்பங்களில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என்ற இறை வார்த்தைகளின் அடிப்படையில், இந்த உலகத்தில் எத்தனையோ இன்னல்களும் இடர்பாடுகளும் வந்தாலும், அவையெல்லாம் நமது உறவை எந்த காரணத்தை கொண்டும் பிரிக்கக் கூடாது என்ற செய்தியினை, இறைவன் இன்றைய நாளில் வலியுறுத்துகிறார். நமது வாழ்வில் நம்மிடம் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளி, கருத்து வேறுபாடுகள் தான் மாறுகிறதே ஒழிய, அன்பு மாறுவதில்லை, பாசம் மாறுவதில்லை, மனித நேயம் மாறுவதில்லை என்பதை மனதில் இருத்தியவர்களாய் இறைவன் முன்னிலையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு ஏற்ப, ஒருவர் மற்றவரை அன்போடு உபசரித்து, விட்டுக்கொடுத்து, பகிர்ந்து வாழ இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார்.
நாம் இணைந்து இருப்பதில் தான் இறைவன் மகிழுகின்றார். நமது இணைப்பே இறைவனை நம்மோடு இணைந்திருக்க வைத்திருக்கிறது. நாம் குடும்பங்களில் இணைந்திருக்கும் போது தான், இறைவன் உண்மையிலுமே மன மகிழ்வு கொள்வார். ஏனெனில் அவரது வார்த்தைகளின் படி நாம் அவர் முன்னிலையில் இணைந்து, இன்றும் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய தவறான எண்ணங்கள், கருத்தியல்கள், இவைகளை புறம்தள்ளி, நான் என்ற ஆணவத்தை அடியோடு அழித்து, நாம் என்ற வார்த்தைகளுக்கு பொருள் தரும் வகையில், நம் வாழ்வில் ஒருவர் மற்றவருக்காக வாழ, குடும்பத்தின் மகத்துவத்தை உணர்ந்தவர்களாய் செயல்பட இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக