புதன், 27 அக்டோபர், 2021

திருத்தூதர்களின் பாதையில் பயணிக்க ...(28.10.2021)

திருத்தூதர்களின் பாதையில் பயணிக்க ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இன்று தாய்த்திரு அவையாக இணைந்து நாம் அனைவரும் திருத்தூதர்களான சீமோன், யூதா ஆகியோரின் விழாவினை சிறப்பிக்கின்றோம்.

இயேசுவைப் பின்தொடர்ந்த அனைத்து சீடர்களும் போற்றுதலுக்கும், மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவர்கள். ஆண்டவரின் வார்த்தைகளை உலகெங்கும் சென்று பறைசாற்றியவர்கள் இவர்கள்.
 மாற்கு நற்செய்தி 16 ஆம் அதிகாரம் 15 ஆம் வசனத்தில் குறிப்பிடுவதைப் போல "படைப்பிற்கு எல்லாம் சென்று நற்செய்தியை பறைசாற்றுங்கள்" என்ற வார்த்தையை வாழ்வாக்கியவர்கள். அவர்களுள் இருவரான திருத்தூதர் சீமான், திருத்தூதர் யூதா இவர்களை இன்று நாம் சிறப்பாக நினைவு கூறுகின்றோம்.

யார் இந்த யூதா? என்று பார்க்கின்றபோது...

பன்னிரு சீடர்களில் ஒருவரானவர் இந்த யூதா... தொடக்கத்தில் யூதா என்ற பெயருக்கும் யூதாஸ்காரியோத்து என்ற பெயருக்கும் இடையே பல புரிதல் மோதல்கள் ஏற்பட்டு, பலர் இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்தையும்  யூதாவையும் ஒன்றாகக் கருதினார்கள். ஆனால் இவர்கள் ஒன்றல்ல வெவ்வேறானவர்கள். எனவேதான் யூதா என்ற பெயருக்கு பின்னால் ததேயு என்ற பெயர் இணைக்கப்பட்டது.

யூதா ததேயு  என்றால் அன்பானவர், துணிவுமிக்கவர், ஆற்றல் கொண்டவர் என்ற அர்த்தங்கள் உண்டு. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறப்பு உயிர்ப்பு விண்ணேற்புக்கு பிறகாக, அஞ்சி நடுங்கி வாழ்ந்து கொண்டிருந்த சீடர்கள் தூய ஆவியாரின் தூண்டுதலால் ஆற்றல் பெற்றவர்களாக, படைப்பு எல்லாம் நற்செய்தியை பறைசாற்றும் பணியை மேற்கொண்டார்கள். அப்போது யூதேயா, சமாரியா, மெசபத்தோனியா போன்ற பகுதிகளில் இறைவனது நற்செய்திப் பணியை ஆற்றியவர் இன்று நாம் நினைவு கூறுகின்ற இந்த யூதா ததேயு அவர்கள்.

மத்தேயு நற்செய்தி 13: 15 வசனங்களில் இயேசுவைக் குறித்து  இவருடைய சகோதரர் யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா அல்லவா ? என்ற வார்த்தைகளின் அடிப்படையில் இவர் இயேசுவின் சகோதரராக அடையாளம் காட்டப்பட்டவர்.  இயேசுவின் நெருங்கிய உறவினர்களில் ஒருவராக கருதப்பட்டவர்.

 இந்த யூதா ததேயு அவர்கள் எழுதிய கடிதம் விவிலியத்தில் இடம்பெற்றிருக்கின்றது. அக்கடிதத்தில் அவர் தன்னை இயேசு கிறிஸ்துவின் பணியாளன் என குறிப்பிடுகிறார். இவ்வார்த்தைகள் இவர் கொண்டிருந்த தாழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன.
வெறும் 25 வசனங்களை மட்டுமே கொண்ட இந்த கடிதத்தில் இவர் தன்னை பணியாளன் என்றும், போலி இறைவாக்கினர்களின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்காதீர்கள் என்பதை ஆழமாகவும், தூய ஆவியாரின் துணையோடு வேண்டுதல் செய்யுங்கள் எனவும் இறையாச்சிக்கான பாதையை தெளிவுபடுத்தி காட்டியவர். இவரைத்தான் இன்றைய நாளில் நாம் நினைவு கூறுகின்றோம்.

இச்சமயம் இன்றைய நாளில் நினைவு கூறப்பட கூடிய மற்றொரு புனிதர் திருத்தூதர் சீமோன். இவர் விவிலியத்தில் தீவிரவாதியாய் இருந்த சீமோன் என அடையாளம் காட்டப்படுகிறார். எப்படி இன்று நாம் வாழும் சமூகத்தில் அநீதியை இழக்கக்கூடிய ஆட்சியாளர்களை எதிர்த்து குரல் எழுப்புகின்ற போது நாம் சமூக விரோதிகள் என முத்திரை குத்தப்படும் நிகழ்வு அரங்கேறுகிறதோ, அதுபோல அன்றைய காலகட்டத்தில் உரோமை  ஆட்சி அதிகாரத்தை எதிர்த்த ஒவ்வொருவரும் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டார்கள். அவர்களுள்  ஒருவராகத்தான் இந்த சீமோனும் கருதப்பட்டார்  என்பது வரலாறு நமக்கு கற்பிக்கின்ற பாடமாக உள்ளது.

இயேசுவை பின்பற்றிய ஒவ்வொருவரும் தொடக்கத்தில்  ஏதோ ஒரு நோக்கத்திற்காக அவரை பின்தொடர்ந்தாவர்கள். 

சிலர் இவர் உரோமை அரசை எதிர்த்துப் போராடி நமக்கு உரிமையை பெற்றுத் தருவார் என்ற எண்ணத்தோடு பயணித்தார்கள். 
சிலர் இவர் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் பொழுது பதவியில் நாம் அமர வேண்டும் என்ற நோக்கத்தோடு பயணம் செய்தார்கள். 
சிலர் தங்களுக்குள் முதன்மையானவராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பயணம் செய்தார்கள். 

இயேசுவைப் பின்தொடர்ந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான எண்ணங்களை கொண்டு இருந்தார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவின் இறப்பு, உயிர்ப்பு,  விண்ணேற்றம் அவர்களுடைய எண்ணங்களை எல்லாம் மாற்றியமைத்தது. தங்களை முன்னிறுத்தி அவரை பின்தொடர்ந்து வந்த அத்தனை சீடர்களும் இயேசுவை முன்னிறுத்திய நற்செய்திப் பணியை ஆற்றும் நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளர்களாக மாறிப் போனார்கள் என்பது தான் வரலாறு நமக்கு கற்பிக்கின்ற பாடமாக உள்ளது.

இன்று நாம் நினைவு கூறுகின்ற இந்த இரண்டு திருத்தூதர்களின் வாழ்க்கையும் இதையே  நமக்கு கற்பிக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிடப்படுவது போல கிறிஸ்துவை மூலைக்கல்லாக  கொண்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் நாம். நமது அடித்தளம் இடப்பட்டிருப்பதாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மேல் என்பதை மனதில் நிறுத்தி,  அன்று இயேசுவின்  சீடர்கள் செய்தது போலவே நாமும் நமது வாழ்வில் நம்பிக்கையோடு நற்செய்தியை எடுத்துரைக்கும் நல்ல பணியாளர்களாக மாறிட இன்றைய நாளில் அழைப்பு தரப்படுகிறது.
 நற்செய்தியை அறிவிப்பது என்பது வெறும் வார்த்தை அல்ல, மாறாக செயலில்  வெளிப்பட வேண்டும். வார்த்தையும் வாழ்வும் இணைந்து போகின்ற போதுதான் அது அர்த்தமுள்ளதாக மாறுகிறது. திருத்தூதர்களின் வாழ்வும், வார்த்தையும்  இணைந்து இருந்தது எனவேதான் திருத்தூதர்கள் தங்கள் வாழ்வில் இறைவனுக்கு சாட்சியம் புரியக்கடிய வகையில் தங்கள் இன்னுயிரையும் இறைவனுக்காக தியாகம் செய்ய முன்வந்தார்கள்.... 

இந்த திருத்தூதர்களின் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிந்து கொண்டு அவர் காட்டுகின்ற  பாதையில் பயணம் செய்கின்ற நாமும் நமது வாழ்வில் நல்லதொரு நற்செய்தி பணியாளர்களாக, எடுத்துக்காட்டான வாழ்வு வாழக் கூடியவர்களாக மாறி திருத்தூதர்களின் பாதையில் பயணிக்க  இறைவன் தாமே நம்மை வழிநடத்த வேண்டும் என இன்றைய நாளில் இணைந்து தொடர்ந்து வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...