திங்கள், 4 அக்டோபர், 2021

நல்ல பங்கை தெரிந்து கொள்ள வாருங்கள் ...(05.10.2021)

நல்ல பங்கை தெரிந்து கொள்ள வாருங்கள் ...

இறைவனில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ..
கடவுள் மனிதரைத் தம் உருவிலும் சாயலிலும் படைத்தார் என தொடக்கநூல் 1: 28 ஆம் வசனம் குறிப்பிடுகிறது.

கடவுளின் உருவில் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தங்களது வாழ்வில் நல்ல பங்கை எப்போதும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் இறைவனது விருப்பமாக இருக்கிறது.


இறைவனின்  கட்டளைக்கு கீழ்படிந்து நல்ல பங்கை தேர்ந்தெடுத்து இருந்தால் இம்மண்ணில்  நமது முதல் பெற்றோரின் பாவம் இருந்திருக்காது என்பது மறுக்கவியலாத உண்மை.  நடந்தவைகளை பேசிக்கொண்டே இருப்பதை விட, நடப்பவைகளை பற்றி கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. அந்த அடிப்படையில் இன்றைய நாள் வாசகங்கள் நாம் நமது வாழ்வில் நல்ல பங்கை தெரிந்து கொள்ள அழைப்பு தருகின்றது. 


இன்றைய நற்செய்தி வாசகத்தில் மரியா இயேசுவின் அருகில் அமர்ந்து இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்.  ஆனால்  பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்த மார்த்தா தனக்கு துணை செய்ய யாரும் இல்லை என்பதை இயேசுவினிடத்தில்  பதிவு செய்தபோது, இயேசு மார்த்தாவிடம்  நல்ல பங்கை தெரிந்து கொள் என அறிவுறுத்துகிறார். நல்ல பங்கை தெரிந்துகொண்டவரிடமிருந்து அது எடுக்கப்பட மாட்டாது எனவும் இயேசு குறிப்பிடுகின்றார். 


இன்றைய முதல் வாசகத்தில் தங்களது விருப்பம் போல வாழ்ந்துகொண்டிருந்த நினிவே நகர மக்களுக்கு கடவுள் இறைவாக்கினர் யோனாவழியாக அவர்களது தவறான வாழ்க்கை முறைகளை சுட்டிக் காண்பிக்கின்றார். தங்களின் வாழ்க்கை முறைகள் தவறு என்பதை உணர்ந்து கொண்ட போது அவர்கள் நல்ல பங்கை தெரிந்து கொள்வதற்காக இறைவனிடத்தில் மன்றாடி, தங்கள் செயல்களுக்காக வருந்தி மன்னிப்பு வேண்டினார்கள்.

இன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் மார்த்தாவைப் போல எப்போதும் விரைந்து பல பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க கூடிய நாம். நமது வாழ்வில் சற்று நேரம் அமைதியாக அமர்ந்து ஆய்வு செய்து பார்ப்போம். நாம் நமது வாழ்வில் நல்ல பங்கை தேர்ந்தெடுத்து இருக்கிறோமா? அல்லது எப்போதும் நிம்மதியற்ற நிலையில் இருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.

வாழ்வில் நல்ல பங்கை தெரிந்து கொள்ள இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகின்றார். மரியாவைப் போல நல்ல பங்கை நாமும் தெரிந்து கொள்ள இன்றைய நாளில் தூய ஆவியானவர் வழியாக இறைவன் நம்மை வழி நடத்த வேண்டி இணைந்து ஜெபிப்போம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...