கொடுக்கவும்.... திறக்கவும்....
இன்றைய நாள் வாசகங்கள் கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும். தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். என்று கூறி நம்பிக்கையோடு தொடர்ந்து நமது தேவைகளை நாம் இறைவனிடத்தில் கேட்டு பெற்றுக் கொள்ளவும், இறைவனின் இதயத்தை தட்டி திறக்கவும் வலியுறுத்துகின்றன.
பல நேரங்களில் நாம் இறைவனிடத்தில் பலவற்றை கேட்கின்றோம். பல தேவைகளுக்காக இறைவனது இதயக் கதவைத் தட்டுகிறோம். தட்டும் பல நேரங்களில் அவை திறக்கப்படாத போல ஒரு உணர்வு நமக்குள் இருந்தாலும், நான் கேட்டது கிடைக்காதது போன்ற ஒரு எண்ணம் நமக்குள் இருந்தாலும், உண்மையாலுமே நான் கேட்பது எப்போது நமக்கு தேவையோ.. அந்த நேரத்தில் இறைவன் நமது குரலுக்கு செவி கொடுத்து நாம் கேட்டதை கொடுப்பவராகவும், இதயக்கதவை நமக்காக திறப்புவராகவும் இருக்கிறார் என்பதனை இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
ஆனால் இன்றைய வாசகங்களின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் சீர்தூக்கி பார்க்கின்றபோது கேட்கும்போது கேட்டது கிடைக்க வேண்டும். தட்டும்போது தட்டப்பட கூடிய கதவு திறக்கப்பட வேண்டும் என எண்ணுகின்ற நாம், நம்மிடம் கேட்பவருக்கு கேட்டதையும், நமது இதய கதவுகளை தட்டுபவருக்கு நமது கதவுகளை திறப்பவருமாக நாம் இருந்து இருக்கின்றோமா? என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுப்பார்க்க அழைக்கப்படுகின்றோம்.
ஒவ்வொரு நாளும் பலர் பலவற்றை நம்மிடம் கேட்கின்றார்கள், பலரின் வாழ்வு நமது இதய கதவுகளை தட்டி கொண்டே இருக்கின்றது. இன்னும் சில மாதங்களில் அருள் பணியாளராக அருள் பொழிவு பெறப் போகின்ற நாம் நமது வாழ்வில் நம்மை நோக்கி வந்து தங்களது துன்பங்களையும், துயரங்களையும் நம்மோடு பகர்கின்ற மக்கள் மீதும், தங்கள் வாழ்வுக்காக நம்மிடம் கையேந்தி நிற்கின்ற மனிதர்கள் மீதும், பணிக்கு செல்லுகின்ற இடங்களில் எங்களையும் உங்கள் பணியில் நினைத்துக் கொள்ளுங்கள் என நம்மை எதிர்நோக்கி இருக்கக் கூடிய ஏழை எளியவர்கள் மீது அக்கரை கொண்டவர்களாய் அவர்களது குரலுக்கு செவி கொடுத்து, நாம் அவர்கள் கேட்பதை கொடுக்கின்றோமா? அவர்களின் அவல நிலை கண்டு நமது இதயக் கதவுகள் அவர்களுக்காகத் இருக்கின்றதா? சிந்திப்போம்.... நாம் கேட்கின்ற போது, நாம் தட்டுகின்ற போது கொடுக்கப்படவேண்டும், திறக்கப்பட வேண்டும் என எண்ணுகின்ற நாம் நம்மிடம் கேட்கக் கூடியவர்களுக்கு கொடுக்கக் கூடியவர்களாக, நமது இதய கதவை தட்டும் குரலை உணர்ந்து கொண்டு கதவைத் திறப்பார்களாக மாறிட இன்றைய நாள் வாசகங்களில் வழியாக நமக்கு அழைப்பு தரப்படுகிறது.
பல பணிகளுக்கு மத்தியில் அனுதினமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்ற நாம் நம்மிடம் கேட்பவரின் குரலுக்கு செவி கொடுப்போம். நமது இதயக்கதவை தட்டுகிற உள்ளங்களை கண்டு கொள்வோம். அவர்களின் தேவைகளை நிறைவு செய்வோம். அடுத்தவரின் தேவைகளை நிறைவு செய்கின்ற போது நம் தேவைகளை இறைவன் நிறைவு செய்வார் பல நல்ல உள்ளங்கள் வழியாக என்ற நம்பிக்கையோடு, இந்த நாளிலே அடுத்தவரின் கேட்கும் குரலையும், தட்டுப்பவர்களின் ஓசையையும் கண்டு கொள்ளக் கூடியவர்களாக நாம் மாறிட இறைவனிடத்தில் அருள்வேண்டி தொடர்ந்து ஜெபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக