நம்பிக்கையின் மனிதர்களாக பிறந்திட ...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் .
ஒரு காட்டின் ஒரு பகுதியில் இருந்து ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் நடந்து வந்தால்.அதேக் காட்டின் மறுமுனையில் இருந்து சமூகத்தில் நாம் சொல்லுகின்ற அனைத்து விதமான தீமைகளின் ஒட்டுமொத்த உருவமாக ஒரு மனிதன் நடந்து வந்தான். நடுக்காட்டை அடைந்தபோது பேருகால வேதனையுற்று அந்த பெண்மணி ஒரு மரத்தின் நிழலில் சரிந்து விழுந்தாள். வலியும் வேதனையும் ஒருபுறமிருக்க துடிதுடித்துக் கொண்டிருந்தால் தன்னை காக்க யாரேனும் வரமாட்டார்களா? என்ற எண்ணத்தோடு வழி மேல் விழி வைத்து பார்த்தால் அவள் கண்ணில் பட்டது
சமூகத்தின் ஒட்டுமொத்த தீமைகளின் உருவமாக கருதப்பட்ட அந்த மனிதன் மட்டுமே. இவரையா நான் காண வேண்டும்? இவரா எனக்கு உதவி செய்ய போகிறார்? என்ற எண்ணம் ஒருபுறம் இருக்க, வலியும் வேதனையும் மறுபுறம் துடி துடித்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்து நின்ற அந்த கொடூர மனிதன் தன் இடையில் கட்டியிருந்த வேட்டியை எடுத்து அந்த பெண்ணின் மீது விரித்தான். இரத்தத்தோடும் சதையோடு வெளிவந்த குழந்தையை கையில் ஏந்தினார். தன்னுடைய பாதுகாப்பிற்காகவும், அடுத்தவரை அச்சுறுத்துவதற்காக தன் இடையில் வைத்திருக்கும் கூரிய கத்தியை எடுத்து தாய்க்கும் சேய்க்கும் இடையேயான தொப்புள் கொடியை துண்டித்தார். அரைமயக்கத்தில் முனகிக்கொண்டிருந்த தாய்க்கு அருகாமையில் இருந்த ஓடையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். பிறந்த குழந்தையின் பசியை தீர்க்க தாயின் மார்பக துணியை விலக்கி குழந்தை உணவு அருந்துவதற்காக தாயின் மார்பகத்தில் குழந்தையை வைத்தார். இதை எதையும் அவர் இதற்கு முன்பு செய்ததில்லை. ஆனால் அன்று அவர் அதை செய்தார் இந்த கதையை எழுதிய வால்ட் விட்மன் அவர்கள் எழுதிய இந்த கதைக்கு அவர் வைத்த பெயர் ஒரு மனிதன் பிறந்தான் என்பதாகும்.
இறைவன் இயேசுவின் அன்புக்குரியவர்களே பார்வையோடு இருந்து பார்வையை இழந்து போன மனிதன் தான் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் மீண்டும் பார்வை பெற்று புதிய மனிதனாக இச்சமூகத்தில் பிறப்பதை தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்க கேட்டோம்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி அவர் காட்டும் பாதையில் பயன்படுகின்ற நாம் அனைவரும் நம்பிக்கையோடு இந்த ஆண்டவரை நோக்கி நமது குரலை எழுப்ப வேண்டும் என்ற சிந்தனைகளை இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு தருகின்றன.
எரிக்கோ நகர் சாலையில் பார்வையிழந்த பர்த்திமேயு அமர்ந்திருந்த போது அவ்வழியே இயேசு செல்கிறார் என்பதை கேள்விப்பட்டு அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நோக்கி தனது குரலை எழுப்ப கூடியவராக மாறுகிறார்.
அன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன் உடல் நலமற்று இருந்தாலோ அல்லது உடல் குறைபாடுகளோடு இருந்தாலோ அது அவர் செய்த பாவத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட சூழ்நிலை.
எனவே அவனை அனைவரும் புறம் தள்ளிய சூழலில் சாலையில் அமர்ந்து இருந்த அந்தப் பார்த்திமேயு தனிமனித வாழ்விலும் பலவிதமான துன்பங்களை அனுபவித்தவராய் சமூகத்திலிருந்து பலவிதமான தாக்கங்களை பெற்றவராய் தெருவோரத்தில் அமர்ந்து இருந்திருக்கலாம் ஆனால்.... இந்த பார்த்திமேயு சமூகத்திலிருந்து பலவிதமான தாக்கங்களையும் தனிமனிதர் இடத்திலிருந்து பலவிதமான இன்னல்களையும் சந்தித்து இருந்தாலும் ஆண்டவரோடு கொண்டிருந்த நம்பிக்கையை இழக்காதவர்.
ஆண்டவர் இயேசுவோடு பயணித்த மனிதர்களை பல வகைகளில் பிரித்துப் பார்க்கலாம். இயேசுவினுடைய சீடர்கள் என்பதால் அவரை பின் தொடர்ந்தவர்கள். இவர் எதோ புதுமை செய்யப்போகிறார் வாருங்கள் சென்று பார்ப்போம் என சொல்லி அவரது செயல்களை காண வந்த கூட்டம். இவர் ஏதாவது ஏதாவது ஒரு தவறு செய்வார் ஏதாவது ஒரு வார்த்தை தவறாக பேசுவார் அதை வைத்து இவரை பிடித்து சிறையில் அடைத்து விடலாம் என்ற எண்ணத்தோடு பின் தொடர்ந்து ஒரு கூட்டம்.
இத்தகைய மனிதர்களுக்கு மத்தியில் தெருவோரத்தில் அமர்ந்து இருந்த பார்த்திமேயு ஆண்டவர் இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டதன் அடிப்படையில் அவர் மீதான ஆழமான நம்பிக்கையை தனக்குள் வளர்த்துக் கொண்டு அந்த ஆண்டவர் செல்லுகின்ற போது அவரை நோக்கி தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என குரல் உயர்த்துகிறார். பலர் அவரை அடக்க நினைத்த போதும் அவர் தன் குரலை அடக்கி கொள்ளவில்லை. தான் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் இன்னும் அதிகமாக குரல் எழுப்பி ஆண்டவரை நிறுத்தி தான் கொண்ட இருந்த நம்பிக்கையின் அடிப்படையில அவரிடம் இருந்து தனக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்கிறார்.
நாம் பின்பற்றுகின்ற இந்த ஆண்டவர் நமது குரலை கேட்டு கடந்து செல்பவர் அல்ல. மாறாக நின்று நமக்கு பதில் தரக்கூடியவர். அனுதினமும் பலவிதமான எண்ணங்களோடும் ஏக்கங்களும் ஆண்டவரை நோக்கி வந்து அமர்ந்து ஜெபிக்கின்ற நாம் ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதை இந்த ஆண்டவர் அரிந்திருக்கின்ரார். நம் தேவைகளை அறிந்த இறைவன் நமக்கு என்ன வேண்டும் என்பதை தேவையான நேரத்தில் தரவல்லவர் ....
இன்றைய முதல் வாசகம் குறிப்பிடுகிறது அழுகையோடு வந்தவர்களை எல்லாம் ஆறுதல் தந்து நடத்திச் செல்வார் ஆண்டவர் என்று....
அவர்கள் என்னை நோக்கி மன்றாடும் போது அவர்களுக்குப் பதிலளிப்பேன் அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன் அவர்களை தப்புவித்து அவர்களை பெருமைப்படுத்துவேன் என்று திருப்பாடல் 90 :15 நமக்கு அவர் உறுதி அளித்திருக்கிறார்.
நமக்காக நம் பாவங்களுக்காக தன்னையே கையளித்த இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிற நாம் ஒவ்வொருவரும் அவர் மீது நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை இழந்து விடாது பார்வையற்ற பார்த்திமேயு போல நம்பிக்கையோடு பயணித்து பார்வை பெற்ற புதிய மனிதர்களாக இச்சமூகத்தில் பிறந்திட பலருக்கு பார்வை பெற்ற மனிதர்களாக பாதை காட்டிட ஜெபத்தால் ஆண்டவரோடு இணைந்து வாழ அருள்வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக ஜெபிப்போம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக