புதன், 30 ஜூன், 2021

தந்தையின் விருப்பம் நமது விருப்பமாக... (1.7.2021)

தந்தையின் விருப்பம் நமது விருப்பமாக...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
                  இன்றைய நாளில் வாசிக்கப்பட்ட வாசகங்களின் அடிப்படையில் சிந்திக்கின்ற பொழுது நாம், ஈசாக்காக வாழ இந்த மண்ணில் அழைக்கப்படுகின்றோம். தன்னைத்தான் தன் தந்தை பலியிடப் போகிறார் என அறியாதவனாய் தன் பலிக்குத் தேவையான விறகு கட்டைகளை சுமந்து கொண்டு, தந்தையின் பின்னால் பயணிக்கின்றார்.  தந்தை ஆபிரகாம்,  பலிபீடத்தில் விறகுகளை அடுக்கி வைத்துவிட்டு, தன் மகனின் கைகளையும் கால்களையும் கட்டி அந்த பலிபீடத்தின் மீது வைத்த போது, ஈசாக்கின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

 ஈசாக்கு நினைத்திருந்தால் வயதான தன் தந்தையை தள்ளிவிட்டுவிட்டு ஓடியிருக்கலாம். ஆனால், தந்தைக்கு கீழ்ப்படிந்தார். தந்தை தன் உயிரைப்பறிக்கப் போகிறார் என அறிந்தும் கத்தாத செம்மறி போல தன்னையே பலியாக்க தந்தையின் விருப்பத்திற்கு கையளித்தார். இந்த ஈசாக்கை போலத்தான் இயேசுவும் இந்த உலகத்தில் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற தன்னையே பலியாகக் கொடுத்தார் சிலுவையிலே.

 இவர்களிடம் காணப்பட்ட நற்பண்புகள் தான் நமது வாழ்வில் செயலாக்கப்பட வேண்டும். ஆனால் பல நேரங்களில்,  நாம் குறை காணும் நோக்கத்தோடு அடுத்தவர் செயலை குறை கூறிக் கொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதைத் தான் இன்றைய நற்செய்தி வாசகம் விளக்குகிறது. முடவனை எழுந்து நட  என்பதா? உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்பதா?  எது அவனுக்கு நிறைவைத் தரும் என்ற கேள்வியை இயேசு எழுப்பி,  எழுந்து நட என்பதைவிட, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்ற வார்த்தைகள் தான், அவனுக்கு நிறைவைத் தரும், அவனுக்கு மகிழ்வைத் தரும் என்பதை உணர்ந்து, அதனை செய்யக்கூடிய பணியில் ஈடுபடுகிறார். ஒருவேளை நாம் முடக்குவாதமுற்றவனாக இருந்திருந்தால்,  நாமும் அதை தான் விரும்பி இருப்போம்.

        நமக்கு என்றால் ஒன்று,  அடுத்தவருக்கு என்றால் மற்றொன்று என்று எண்ணி வாழாது, தந்தையின் விருப்பத்தை நமது விருப்பமாகக் கொண்டு,  நம்மையே முழுமையாக கையளிக்க கூடியவர்களாய் மாறுவோம். இந்த சமூகத்தில் நடக்கும் அவலங்களில் எல்லாம் நம்மையே அந்த அவலங்களில் பாதிக்கப்பட்ட நபராக சித்தரித்துக் கொண்டு,  வாழ்வில் நலமான பணிகளை முன்னெடுக்க, நலமான பாதையில்  பயணிக்க இறையருளை வேண்டுவோம்.

செவ்வாய், 29 ஜூன், 2021

நிராகரிப்பு.... (30.6.2021)

நிராகரிப்பு....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 
இன்றைய முதல் வாசகத்தில் சாராவால் நிராகரிக்கப்பட்ட நபராக தாமார் மாறுகிறாள். நற்செய்தி வாசகத்தில் ஊர் மக்களால்  நிராகரிக்கப்படக் கூடிய நபராக இயேசு மாறுகிறார்.  நமது வாழ்வில் நாமும் நிராகரிப்பை சந்திப்பது உண்டு.  அது ஒரு தனிப்பட்ட நபரிடத்திலோ, அல்லது ஒரு குடும்பத்திலோ ஒரு பெரிய நிர்வாகத்திலோ சந்திக்க நேரலாம்.  நாம் நிராகரிக்கப்படும் போது எத்தகைய மனநிலை நமக்குள் இருக்கும் என்பதை இன்றைய நாளில் நினைவு கூர்ந்து பார்ப்போம்.  அதுபோலத்தான் நாம் நிராகரிக்கக் கூடிய நபர்களுடைய மனநிலையும் இருக்கும் என்பதை உணர்ந்து கொள்வோம்.

சாராள் தாமாரை தாமாக முன்வந்து தன் கணவனுக்கு கொடுத்தாள்.  பிறகு தாமாக முன்வந்து அவளை நிராகரிக்கவும் செய்கின்றாள்.  இதுதான் மனித இயல்பு. நாம் பல நேரங்களில் நமது சுயநலத்தை மட்டுமே முன்னிறுத்தி அடுத்தவரின் மனநிலையை புரிந்துகொள்ள தவறிப் போகின்றோம். எனவேதான் அடுத்தவரைப் பற்றி எண்ணாமல்,  அவரது மனவோட்டத்தை அறிந்து கொள்ளாமல் அவர்களை நிராகரிக்க கூடியவர்களாக இருக்கின்றோம். 

              இன்றைய சமூகத்தில் பெரும்பாலான மனிதர்கள் அடுத்தவரை  தேவைக்கு பயன்படுத்தி விட்டு பிறகு நிராகரிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். சிலர் இதை பிழைக்கத் தெரிந்த தந்திரம் என்று நியாயப்படுத்தக் கூடியவர்களுமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆண்டவர் இயேசு நமக்கு செல்லக்கூடிய வார்த்தை, நிராகரிப்பு என்பதை நாம் யாருக்கும் எப்போதும் எந்த நேரத்திலும் கொடுக்கக் கூடாது என்பதுதான். இயேசுவை மக்கள் நிராகரித்தார்கள். அவரை அந்த ஊரை விட்டு சென்று விடுமாறு வேண்டினார்கள். ஆனால் இயேசு அவர்களை  நிராகரிக்கவில்லை. அவர்களுக்கு நலமானது எது என்பதை அறிந்திருந்தார். எனவே நலமானதை அங்கு செய்தார் அவர். அந்த மக்களுக்காக தன் உயிரையும் கொடுத்தார். அந்த மக்களிடையே நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பேய் பிடித்தவர்கள் எனப் பலரை குணமாக்கினார். இயேசு தன்னை நிராகரித்தவர்களையும் அரவணைக்க எண்ணினார்.  நாமும் இந்த சமூகத்தில் நம்மை நிராகரித்தாலும் கூட, நாம் யாரையும் நிராகரிக்காது அனைவரையும் அரவணைத்து ஒன்றித்து வாழ இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.

திங்கள், 28 ஜூன், 2021

அனைவரும் சமம்...(29.6.2021)

அனைவரும் சமம்...(29.6.2021)

இறைவன் இயேசுவின் அன்புக்குரியவர்களே!
 இன்று நாம்தாய்த்திரு அவையாக இணைந்து புனித பேதுரு, புனித பவுல் ஆகியோரின் திருநாளை சிறப்பித்துக் கொண்டிருக்கிறோம். எப்போதுமே யாராவது ஒரு நபரை முன்னிறுத்தி, விழாவினை எடுத்து அவர்களை நினைவு கூருவது வழக்கம். ஆனால் இன்று நாம் இருவரை ஒரே நாளில் நினைவு கூருகிறோம். ஏன்? என்று கேள்வி எழுப்பும் போது, திருஅவையில் இருவரும் முடியாத நபர்கள் என்பதுதான் முற்றிலும் உண்மை. ஒருபுறம் புனித பேதுரு, இன்னொருபுறம் புனித பவுல்.  பேதுரு இயேசுவின் சீடர். பவுல் இயேசுவின் சீடர் அல்ல, இயேசுவால் ஆட்கொள்ளப்பட்டு இயேசுவின் சீடராக மாறியவர். இயேசுவுடன் பேதுரு உடன் பயணித்தவர். பவுல் இயேசுவுடன் பயணிக்கவில்லை. இயேசுவின் குரலோசையை கேட்டு தன் வாழ்வை மாற்றியவர். படிக்காத மேதை தான் பேதுரு. படித்த மேதை தான் பவுல்.  ஆட்சி அதிகாரங்களை பற்றி அறிந்தவர் பவுல். அதையெல்லாம் பற்றி அறியாத சாதாரண மீனவர் பேதுரு. கமாலியேலிடம் கல்வி கற்றவர் பவுல். எந்த கல்வியும் கற்காதவர் பேதுரு. பேதுரு திருமணமான ஒருவர். பவுல் திருமணம் ஆகாதவர். திரு அவையின் தலைவராக இயேசுவால் நியமிக்கப்பட்டவர் பேதுரு. பிற இனத்தாருக்கு நற்செய்தி அறிவிப்பாளராக மாறியவர் புனித பவுல். 

      இவர்கள் இருவருக்கும் இடையே பல விதமான வேறுபாடுகள் இருக்கலாம். ஒருவர் அறிவில் சிறந்தவர் ஒருவர் அறிவில் குறைந்தவர், என்று நாம் எண்ணலாம். ஆனால் இருவரிடத்திலும் இருந்த ஒற்றுமை, இயேசு என்ற ஒற்றை மனிதர். இந்த இயேசு என்ற ஒற்றை மனிதரைப் பிடித்துக் கொண்டுதான் படித்தவரும் படிக்காதவரும் முன்னோக்கிச் சென்றார்கள். இந்த இருவரையும் ஆண்டவர் தம் பணிக்கு அழைத்தார். தம் பணிக்காக அவர்களை தயார்படுத்தினார். அவர்கள் வழியாக இச்சமூகத்தில் இறையாட்சியின் மதிப்பீடுகளை விதைத்தார். கடவுளின் பார்வையில் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை தான், இவர்களின் திருநாளானது நமக்கு உணர்த்துகிறது. நான் உயர்ந்தவன், அவன் தாழ்ந்தவன். நான் படித்தவன், அவன் படிக்காதவன். நான் செல்வன் அவன் ஏழை என பலவித பாகுபாடுகளுக்கு மத்தியில் பயணிக்கின்ற இந்த உலகத்தில், எல்லாவற்றையும் கடந்து நாம் அனைவரும் மனிதர்கள் என்பதுதான் உண்மை. அந்த அடிப்படையில் தான் அனைவரும் ஒன்றித்து, இணைந்து வாழவேண்டும் என்ற செய்தியினை,  இவர்கள் வழியாக இறைவன் இச்சமூகத்தில் வெளிப்படுத்துகிறார். இவர்கள் இருவரையும் தன் பணிக்கென அழைத்துக்கொண்டார். இருவருக்கும் திருஅவை உரிய மரியாதையைக் கொடுத்தது. இருவரையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக திருஅவை இவர்களை வைத்திருக்கிறது. எனவே தான் படித்த மேதையையும் படிக்காத மேதையையும் பிரித்துப் பார்த்திட முடியாது என்ற அடிப்படையில், இருவரையும் ஒரே நாளில் திருஅவை நினைவு கூருகிறது. இவர்களை நினைவு கூருகின்ற நாம் இவர்களிடமிருந்து நமது வாழ்வுக்கான பாடம் என்ன? என்பதை கண்டுகொள்ள வேண்டும். 
          சமூகத்தில் மற்றவரை விட நாம் உயர்ந்தவர் எனக் கருதினாலும், மற்றவரை விட தாழ்ந்தவர் எனக் கருதினாலும், கடவுளின் பார்வையில் நாம் அனைவரும் சமமானவர்கள். நாம் அனைவரும் அவரது பிள்ளைகள். அவரால் படைக்கப்பட்டவர்கள். நமக்கென பல தனித்தன்மைகள் உண்டு. நமது தனித்தன்மைகளை நாம் ஏற்றுக்கொண்டு, அத்தகைய தனித்தன்மைகளின் வழியாக ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி மதிப்பீடுகளை பவுலையும் பேதுருவையும் போல, இந்தச் சமூகத்தில் உள்ளவர்களோடு பகிர்ந்துகொள்ளவும், பகிர்ந்து கொள்வதன் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளவும் இன்றைய நாளில் இறையருளை வேண்டி இணைந்து செபிப்போம்.

ஞாயிறு, 27 ஜூன், 2021

மனித நேய செயல்களை கட்டி எழுப்புவோம்... (28.6.2021)

மனித நேய செயல்களைhykjnyjjjgvt g ghgnhtthhm hkhgjjyhbbgbgtggggtbtttgtbgbggtbgbtgbtbbttbtvvtvtvgggtttttftvtttvttggggggggtgtgtfrvrfrrvftgfrfbfbtgvtt htggtggggtgtggtgvttvvtvtvghythhhgbtggygggnnn hjgtbvggngngnytrg கட்sxடிiyhnjumhh எழுப்புவோம்.u..zcznhjkhyim mu 
ஊஐரகx

இறைவன் இயேசுவில்a அன்புக்குரியவர்களே! இன்றைய நாudவ்ய்ய்ஹ்ட்ள் இறை வார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். Yzua
ச்ம் hjgr

மானிட மகனுக்கு தலைசாய்க்க இடமில்லை என்றவருக்கு தரணி முழுவதும் பலவிதமான ஆலயங்களும், அவரின் பெயரால் பல விதமான கட்டிடங்களும் இன்று நாளுக்கு நாள் உதயமாகிக் கொண்டுதான் இருக்கின்றன.  தன்னுடைய பெயரால் கட்டிடங்கள் கட்டுவதையும் ஆலயங்கள் எழுப்புவதையும் இறைவன் விரும்புவதில்லை. மாறாக ஆண்டவரின் பெயரால் ஒவ்வொருவரும் உள்ளத்தில் மனித நேயச் செயல்களை முன்னெடுப்பதை தான்  ஆண்டவர் இயேசு கிறிஸ்து விரும்புகிறார். இன்றைய முதல் வாசகத்தில், பாவ நிலையில் இருந்த சோதோம் கொமோரா நகர மக்களுக்காக பரிந்து பேசுகின்றார் ஆபிரகாம். 

           நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், நாம் நலமாக இருந்தால் போதும் என்று நம்மை மையப்படுத்தி நமது நலனையே மையப்படுத்தி சென்று கொண்டிருக்க கூடிய இந்த  உலகத்தில் அடுத்தவர் நலனில் அக்கறை கொள்பவர்களாகவும் அடுத்தவருக்காக ஆண்டவரிடத்தில் பரிந்து பேசுபவர்களாகவும் நாம் இருப்பதற்கு இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.  இத்தகைய பணியினை தான் இறைவன் விரும்புகிறார்.  இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட அத்தகைய பணியை ஆற்றுவதற்கு தான் அவர் ஒவ்வொருவரையும் அழைக்கின்றார்.  ஆனால் அழைக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான காரணங்களை சொல்லி விட்டு,  அவரை விட்டு நகர்ந்து செல்லக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பதை நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்.  இன்று நம்மில் பலரும் அடுத்தவருக்கு என சொல்லிவிட்டு நமது நலனை மட்டுமே முன்னிறுத்தி  இன்று ஆண்டவரின் பணியை ஆற்றுகிறோம்.  எனவே தான் ஆண்டவரின் பெயரில் அதிகமான ஆலயங்களும், கட்டிடங்களுமே இன்றைய சமூகத்தில் உதயமாகின்றன. ஆனால்,  ஆண்டவரின் பெயரால் உள்ளங்கள் கட்டி எழுப்பப்படுவதில்லி. இன்றைய நாளில் ஆண்டவரின் பெயரால் ஆலயங்களையோ கட்டிடங்களையோ உருவாக்குவதை விட, ஒவ்வொருவர் உள்ளத்திலும் மனித நேயச் செயல்களை விதைப்போம்.  மனித நேய செயல்களை கட்டி எழுப்புவோம். அதற்கு நமது செயல்கள் முன்னுதாரணமாக இருக்கட்டும். அதற்கான அருளை இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம்.

சனி, 26 ஜூன், 2021

நம்பிக்கையோடு நலமா பணிகளை முன்னெடுப்போம்... (27.6.2021)

நம்பிக்கையோடு நலமா பணிகளை முன்னெடுப்போம்...

இன்று சட்டமன்றங்களிலும் சரி, சாலையோரங்களிலும் சரி, அதிகமாக கேட்கக் கூடிய வார்த்தைகள் சமத்துவம், சமநீதி என்பதாகும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற வார்த்தைகள் ஆளுநரின் உரைகளில் மட்டும் இருத்தல் ஆகாது, நம் அனைவரின் உள்ளங்களிலும் இந்த சிந்தனை இருக்க வேண்டும். அனைத்தையும் அனைவரிடமும் பகிர்வதற்கு சமத்துவமும் சமநீதியும் நமது மனதில் இருக்க வேண்டும். இன்று பலரின் உள்ளத்திலும் இந்த சிந்தனை பதியப்பட்டு இருப்பதனால் தான், சாலையோரங்களில் இருப்பவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பதை பகிரக் கூடியவர்களாக நம்மிள் பலர் இருக்கிறார்கள்.   இருப்பதை இல்லாதவரோடு பகிர முயற்சிக்கும் போது, நம்மிடம் இருப்பது குறைவுபடுவது போன்ற எண்ணம் உருவாகும். நம்மிடம் இருப்பது குறைவுபடும் போதெல்லாம் நம்மால் அதனை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்குமானால் நமது வாழ்வு நலமான வாழ்வாக அமையும். அந்த நம்பிக்கை தான் இன்று பலரின் வாழ்வில் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த நம்பிக்கையோடு நாம் பயணிக்க வேண்டும் என்ற செய்தியைத் தான் இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு வலியுறுத்துகிறார். 

       ஒரு நியாய விலை கடையில் பொருட்கள் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.  அப்போது அங்கு வந்த ஒரு மனிதர் எவ்வளவு பெரிய கூட்டம் நாம் சீக்கிரமாக முன்னே சென்று விட வேண்டும் என நினைத்துக் கொண்டு வேகவேகமாக முன்னே சென்றார். அப்போது அங்கிருந்த சில நபர்கள் அந்த மனிதரை பிடித்துக்கொண்டு வந்து கடைசியில்  நிற்க வைத்தார்கள். இந்த கூட்டத்திற்குள் நுழைய முடியவில்லையே. சற்றுநேரம் காத்து நிற்போம், என்று எண்ணியபடியே அந்த மனிதன் நின்று கொண்டிருந்தான். கூட்டத்தினர் சற்று அமைதி அடைந்தவுடன், இப்பொழுது முன்னே செல்லலாம் என்று அந்த மனிதன் முன்னோக்கி சென்றான். மீண்டும் ஆக அந்தக் கூட்டத்தினர் அந்த மனிதனைப் பிடித்து கொண்டு வந்து இறுதியில் நிற்க வைத்தனர். தம்பி, "எங்களுக்கு அப்புறம் தான் உனக்கு எல்லாம் கிடைக்கும்" என்று கூறினார்கள். உடனே அந்த மனிதன் அவர்களைப் பார்த்து எனக்கு அப்புறம்தான் நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும். ஏனென்றால் நான் தான் இந்த கடையின் பொறுப்பாளர்.  நான் சென்று கதவை திறந்தால் தான் பொருள்களை எடுக்க முடியும் என்று கூறினாராம்.

நமது வாழ்வில்  நம்பிக்கை என்பது முன்னோக்கிச் செல்லும்போது மட்டுமே வாழ்வில் நலமான பணிகளை நாம் முன்னெடுக்க  முடியும். வாழ்வில் நம்பிக்கையை புறம்தள்ளிவிட்டு, எதிர்பார்த்துக் கொண்டே இருப்பதால் எதுவும் கிடைத்து விடாது. 
நம்பிக்கை ஒவ்வொரு மனிதருக்கும் அவசியமான ஒன்று.   நம்பிக்கையோடு பல பணிகளை முன்னெடுக்க வேண்டும். இத்தகைய மையச் செய்தியைத் தரக்கூடிய இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் சிந்திக்கின்ற பொழுது இன்றைய நற்செய்தி செய்தி வாசகத்தில் இரண்டு விதமான  நம்பிக்கையுடைய மனிதர்களை நாம் காண்கின்றோம். 

ஆண்டவர் இயேசுவின் ஆடையைத் தொட்டாலே குணம் பெறுவேன் என்று எண்ணக்கூடிய ஒரு பெண்மணி.  

இன்னொருவரோ,  என்னுடைய மகள் நோயுற்று இருக்கிறாள்.  அதுவும் இறக்கும் தருவாயில் இருக்கிறாள்.  நீர் வந்து தொட்டால் அவள் குணம் பெறுவாள் என்று நம்பிக்கையோடு  இருவர் இயேசுவை நோக்கிச் செல்லக் கூடிய ஒரு நிகழ்வினை நாம் வாசிக்கக் கேட்டோம். 

 இவர்களைப் போல நாமும் நம்பிக்கையோடு வாழ அழைக்கப்படுகின்றோம். 
நமது வாழ்வில் நம்பிக்கை என்பது இருக்க வேண்டும். 

ஒரு உணவில் எப்படி உப்பு அவசியமாக இருக்கிறதோ, அது போல வாழ்வில் நம்பிக்கை அவசியமாக இருக்க வேண்டும். "உப்பில்லா பண்டம் குப்பையிலே"  என்று கூறுவார்கள். உணவில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக இருப்பது தான் இந்த உப்பு.  அது போல வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது தான் நம்பிக்கை. நம்பிக்கை இருக்கும் பொழுது நம்மால் நலமான நல்ல பணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியும்.  நாம் நலமான நல்ல பணிகளை முன்னெடுத்துச் செல்லும் பொழுது,  வாழ்வில் வரக்கூடிய ஒரு மிகப்பெரிய கேள்வி, பல நல்ல பணிகளை முன்னெடுத்துச் செல்கிறேன். ஆனால் துன்பத்தையே பரிசாகப் பெறுகிறேன். பலவிதமான இன்னல்கள் இக்கட்டான சூழ்நிலைகளை நான் சந்திக்கிறேன். ஏன் எனக்கு மட்டும் இவ்வாறு நடக்கிறது?  என்ற கேள்வி நமது உள்ளத்தில் இயல்பாக எழக்கூடிய ஒன்று தான்.
    இந்த கேள்விக்கு விடை தரும் வகையில் தான் இன்றைய முதல் வாசகம் அமைகிறது. ஆண்டவர் அழிவிலும், துன்பத்திலும் மகிழ்பவர் அல்ல.  ஆனால் அழிவும் துன்பமும் இவ்வுலகத்தில் இருக்கிறதே.  அதை எப்படி எடுத்துக் கொள்வது? என்ற கேள்வி உள்ளத்தில் எழலாம். 

மனித வாழ்வில் எது எப்போது நடக்கும் என தெரியாத வண்ணம் கடவுள் அனைத்தையும் மாறி மாறி வரச் செய்கிறார்  என சபை உரையாளர் புத்தகத்தில் நாம் வாசிக்கின்றோம். ஒரு துன்பம் நமக்கு நேரிடுகிறது என்றால், அந்த துன்பத்தின் வழியாக நாம் ஒன்றை கற்றுக் கொள்கிறோம். நம்பிக்கையோடு, அந்த துன்பத்தை எதிர்கொள்ளவும், தாங்கிக் கொள்ளவும் நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்கவும் அழைக்கப்படுகிறோம். என் வாழ்வில் துன்பம் நேர்ந்து விட்டது. எனவே இனி இதை செய்ய மாட்டேன் என ஒதுங்கி செல்வதற்காக அல்ல. மாறாக இது போன்ற சூழ்நிலையில் எத்தனையோ நபர்கள் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் உன்னை போல துன்புறுகிறார்கள். அவர்களின் துன்பத்தில் நீ பங்கெடுக்க கூடியவனாக மாற வேண்டும் என்பதற்காகவே....
சுவாமி விவேகானந்தர் கடவுள் மீது தான் கொண்ட நம்பிக்கை பற்றி கூறும் போது இவ்வாறு கூறுவார்.

கடவுளிடம் வலிமை கொடுங்கள் எனக் கேட்டேன்.
அவர் கொடுத்ததோ நெருக்கடியான சூழ்நிலைகள். 

மகிழ்ச்சி கொடுங்கள் எனக் கேட்டேன்.
மகிழ்ச்சியற்ற மனிதர்களை அறிமுகப்படுத்தினார்.

அறிவு கொடுங்கள் எனக் கேட்டேன்.
அவர் கொடுத்ததோ வாழ்வின் புதிர்கள்.

மன நிம்மதி கேட்டேன்.
மற்றவர்களுக்கு உதவச் சொன்னார்.

சலுகைகள் கேட்டேன். வாய்ப்புகள் கொடுத்தார்.

நான் விரும்பியது எதையும் கொடுக்கவில்லை. ஆனால் எனக்குத் தேவையானவை எல்லாவற்றையும் அவர் கொடுத்தார். என்று......

நமது வாழ்வில் நாம் சந்திக்கும் துன்பங்கள் நமக்கு கற்பிக்கும் பாடங்களும் இவைகள்தான்...

நமக்கு ஒரு துன்பம் நேரும் போது அடுத்தவர் வந்து  நம்பிக்கை தரக்கூடிய வகையில் அருகில் இருக்க வேண்டும் என எண்ணக் கூடிய நாம், இதேபோன்றதொரு துன்பத்தில் மற்றவர் இருக்கும் பொழுது, அவர்களுக்கு நம்பிக்கை தரும் மனிதர்களாக நாம் இருக்கின்றோமா? என்ற கேள்வியை இன்றைய நாளில் நமக்குள்ளாக எழுப்பிப் பார்க்க இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார்.சிறுமி இறக்கவில்லை உறங்குகிறாள் என்று இயேசு கூறிய வார்த்தைகளைக் கேட்டு நகைத்த  நம்பிக்கையற்ற மனிதர்களின் வாழ்வில் நம்பிக்கை விதையை இயேசு விதைக்கிறார்.

இயேசுவைப் போல நாமும் இந்த  அறச் செயலைச் செய்ய இன்றைய இரண்டாம் வாசகமும் நம்மை ஊக்கப்படுத்துகிறது. அறச்செயல் என்றாலே  பொருட்களை பகிர்வதை  மட்டுமே பலர் எண்ணுகிறோம்.

     பொருளை பகிர்வது மட்டுமல்ல அறச்செயல். ஆறுதலான வார்த்தைகளை பகிர்வதும் அறச்செயல் தான். துன்பத்தில் இருப்பவரின் துன்பத்தைக் கண்டு அவரது துன்பத்தைத் துடைப்பதற்கான ஆறுதலான வார்த்தைகளை தருவதும், நம்பிக்கையற்ற மனிதர்களுக்கு நம்பிக்கையை விதைப்பதும் அறச்செயல் தான். இத்தகைய அறச்செயலை செய்வோர் இன்று குறைந்து கொண்டே போகிறார்கள்.  ஊக்கப்படுத்துபவர்களை விட, உதாசீனப்படுத்துபவர்கள் தான் இன்று அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள் இந்த உலகத்தில். நாம் உதாசீனப்படுத்துபவர்களாக அல்ல, ஊக்கப்படுத்தும் மனிதர்களாக மாறிடவே இன்றைய நாளில்  அழைக்கப்படுகிறோம்.

நம்பிக்கையோடு இயேசுவை நோக்கி பயணித்தவர்கள் அவரிடமிருந்து நல்லவைகளை பெற்றுக் கொண்டார்கள் என நற்செய்தியில் வாசிக்க கேட்டோம். நாமும் நம்பிக்கையோடு ஆண்டவரை நோக்கி பயணிப்போம்.  நம்பிக்கையற்றவர்களின் வாழ்விலும் நம்பிக்கையை உருவாக்குவோம்.  நலமானவைகளை ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்ளவும், நம்பிக்கையின் வழியாக நல்ல பணிகளை முன்னெடுத்துச் செல்லவும், இறையருள் வேண்டி இணைந்து ஜெபிப்போம்....

வெள்ளி, 25 ஜூன், 2021

இறைவனுக்கும் அடுத்தவர்க்கும் மகிழ்வைத்தர... (26.6.2021)

 இறைவனுக்கும் அடுத்தவர்க்கும் மகிழ்வைத்தர...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 



ஒரு ஊரில் ராஜா ரவி என்ற இரு நண்பர்கள் தமது பள்ளி பருவத்திலிருந்தே நல்ல நண்பர்களாக இருந்தனர். இருவரும் ஒன்றாக படித்து ஒரே இடத்தில் வேலைக்கும் சேர்ந்தனர். வழக்கமாக ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து மாலையில் அவரவர் வீட்டுக்கு வந்தவுடன் மனைவி தருகின்ற காப்பியை குடிப்பது வழக்கம். அன்று ராஜாவின் மனைவி அவனுக்கு காபி கொடுத்த பொழுது, அதில் ஒரு  எறும்பு இறந்து கிடந்தது. உடனே ராஜா மனைவியை பார்த்து உனக்கு ஒரு காப்பி கூட போட தெரியாதா? இதில் ஒரு  எறும்பு செத்து கிடைக்கிறது. இதை உனக்கு கவனிக்கத் தெரியாதா? என்று கத்தத் துவங்கினான். உடனே மனைவியும் பதிலுக்கு கத்த அங்கே மிகப் பெரிய சண்டை நடந்தது.

      அது போலவே ரவி தன் மனைவியிடமிருந்து காப்பியை பெற்றுக் கொண்டவுடன் கவனித்தான், அவனது காப்பியிலும் ஒரு எறும்பு  இறந்து கிடந்தது. உடனே ரவி தன் மனைவியைப் பார்த்து சொன்னான். நான் தான் உனது காப்பிக்கு மிகப்பெரிய ரசிகன் என்று நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு முன்பாகவே ஒரு ரசிகன் உனது காப்பிக்கு மயங்கி தனது உயிரை விட்டான். இதோ பார் என்று கூறி காப்பியை காண்பித்தான். மனைவியும் சிரித்துக்கொண்டே அந்த எறும்பை எடுத்து வெளியே போட்டாள். அன்று முதல் என்றுமே அவளது காப்பியில் எறும்பு ஏதும் சாகவில்லை.

       இரண்டு பேரின் நோக்கமும் ஒன்றுதான். இருவரும் தங்கள் மனைவியிடம் சொல்ல வந்த கருத்து எதிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் இருவரும் சொன்ன விதம்தான் வேறு. ராஜா பயன்படுத்திய வார்த்தைகளால் குடும்பத்தில் பிளவு உண்டானது. ரவி பயன்படுத்திய வார்த்தைகளால் மகிழ்ச்சி இரட்டிப்பாக மாறியது. வார்த்தைகளுக்கு வலிமை மிகவும் அதிகம். நமது வார்த்தைகளை குறித்து சிந்திக்க இன்றைய வாசகங்கள் வழியாக அழைக்கப்படுகிறோம். 

     ஆண்டவர் இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது பலவித வார்த்தைகளைப் பேசினார். அவரது வார்த்தைகள் ஆறுதல் அற்றவர்கள் அனைவருக்கும் ஆறுதலைத் தந்தன.      இன்றைய முதல் வாசகத்தில் கூட வயது முதிர்ந்த நிலையில் குழந்தையின்றி தவித்த ஆபிரகாமுக்கும் சாராவுக்கும், கடவுளின் வார்த்தைகள் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தந்தது.       

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் பலர், தங்களுக்காகவும், தங்கள் குழந்தைகளுக்காகவும், ஆண்டவர் இயேசுவிடம் உதவி வேண்டி வந்த போது, தன் வார்த்தைகளால் அவர்களுக்கு ஆறுதலைத் தந்தவர் இயேசு. இயேசுவின் வார்த்தைகள் ஆறுதலைத் தந்த போதும், இயேசுவும் அடுத்தவரின் வார்த்தைகளால் ஆறுதல் அடைந்தார் என்பதே உண்மை. நூற்றுவர் தலைவன், இயேசுவிடம் என் மகனை குணமாக்கும் என்று கேட்ட  போது, நான் உனது வீட்டிற்கு வருகிறேன்" என்றார் இயேசு. ஆனால் நூற்றுவர் தலைவன் சொன்னான், நான் பணியாளனை வா என்றால் வருகிறான், போ என்றால் போகிறான். நீர் இங்கிருந்து ஒரு வார்த்தை சொல்லும். என் மகன் குணம் அடைவான் என்றார். அவரது நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளை கேட்ட போது ஆண்டவர் இயேசு உள்ளம் பூரிப்படைந்தவராய், இஸ்ரயேலில் உன்னை போன்ற நம்பிக்கை நிறைந்த ஒருவரை நான் கண்டதில்லை என்று அவனை பாராட்டியதோடு, அவனது நம்பிக்கையின் பொருட்டு தன் வார்த்தைகளால் அவனது தேவையை நிறைவு செய்கின்றார் இயேசு கிறிஸ்து.

     ஆண்டவரின் வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை.  வல்லமை நிறைந்தவை. நமது வார்த்தைகளும் பல நேரங்களில் வலிமையானதாகவும் வல்லமை நிறைந்ததாகவும் இருக்கிறது. அந்த வார்த்தைகளை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது குறித்து சிந்திப்போம். நூற்றுவத் தலைவன் மற்றும் இயேசுவின் வார்த்தைகளைப் போல நமது வார்த்தைகள் இறைவனுக்கும் அடுத்தவர்க்கும் மகிழ்வைத்தர இன்றைய நாளில் இறையருளை இணைந்து வேண்டுவோம். 

வியாழன், 24 ஜூன், 2021

நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்க... (25.6.2021)

 

நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்க...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 



          கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கும் பொழுது கடவுள் அனைத்தையும் நிறைவேற்றுவார். அந்த கடவுளால் முடியாதது என்பது இந்த உலகில் எதுவும் இல்லை, என்ற வார்த்தைகளுக்கு ஏற்ற வகையில் தான், இன்றைய முதல் வாசகத்தில் முதிர்ந்த வயதில் இருந்த ஆபிரகாமுக்கும் சாராவுக்கும் குழந்தைப் பேறு நிச்சயம் என்ற வாக்குறுதியை இறைவன் தருகிறார். இறைவன் கொடுத்த வாக்குறுதியை ஆழமான நம்பிக்கையோடு, தங்கள் உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு, அந்த நம்பிக்கையோடு தொடர்ந்து பயணித்ததன் அடிப்படையில், ஆண்டவரின் வார்த்தைகள் அவர்களின் வாழ்வில் செயலாக்கப்படுகிறது. அவர்களுக்கு இஸ்மாயேல் என்ற குழந்தையானது பிறக்கிறது. கடவுளால் ஆகாதது எதுவுமில்லை. கடவுளால் எதையும் செய்ய இயலும். அதற்கு நமக்கு ஆழமான நம்பிக்கை அவசியமாகிறது. 

         இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இந்த இயேசுவால் என்னை குணப்படுத்த முடியும் என்று நம்பியதன் அடிப்படையில் ஒரு தொழுநோயாளர் இயேசுவிடம் வந்து, நீர் விரும்பினால் என்னை குணப்படுத்தும் என்கிறார். அவரது நம்பிக்கையை கண்டு இயேசுவும் நான் விரும்புகிறேன் எனக்கூறி, அவரை குணமாக்குகிறார். இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், எந்த ஒரு செயலையும் நாம் செய்வதற்கு முன்பாக, இதையெல்லாம் நம்மால் செய்ய இயலாது என்ற எண்ணத்தோடு நாம் பயணிப்போம் என்றால், கண்டிப்பாக நம்மால் அச்செயலில் வெற்றியை ஈட்ட முடியாது. 

இந்த உலகத்தில் நம்மால் முடியாது என்று சொல்லிக் கொண்டிருப்பதை எங்கு யாரோ ஒருவர் செய்து கொண்டிருக்கிறார். யாரோ ஒருவர் செய்து கொண்டிருப்பதை ஏன் என்னால் செய்ய முடியாது? என்ற கேள்வியை உங்களுக்குள் எழுப்புங்கள் என்ற அப்துல் கலாம் அவர்களுடைய வார்த்தைகளின் அடிப்படையில் நாம் முடியாது என்ற எண்ணத்தை புறம் தள்ளிவிட்டு, எந்த ஒரு செயலையும் நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு பயணிப்போம். நாம் நம்பிக்கையோடு பயணிக்கும் பொழுது கடவுள் நமது நம்பிக்கையின் பொருட்டு நமது உள்ளத்து எண்ணங்களை அறிந்தவராய், அதனை அடைவதற்கான வழியில் நம்மை அழைத்துச் செல்வார். அந்த ஆண்டவரால் அனைத்தையும் இவ்வுலகத்தில் செய்ய முடியும். அதற்கு நமது நம்பிக்கை என்பது அவசியமான ஒன்றாகும். 

இன்றைய நாளில் நம்பிக்கையோடு நமது வாழ்வை நகர்த்தவும் நலமான பணிகளை முன்னெடுத்துச் செல்லவும் உள்ளத்தில் உறுதி ஏற்போம். நமது உள்ளத்தில் நிறைந்திருக்கும் நம்பிக்கையை காணுகின்ற இறைவன், நமது நம்பிக்கையின் அடிப்படையில் நம்மை வாழ்க்கை பாதையில் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வார். ஆண்டவர் இயேசு அழைத்துச் செல்லக்கூடிய பாதையில்  நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்க, இறையருளை இணைந்து வேண்டுவோம்.




புதன், 23 ஜூன், 2021

திருமுழுக்கு யோவான் வழியாக வழிகாட்டுவோம்... (24.6.2021)

 திருமுழுக்கு யோவான் வழியாக வழிகாட்டுவோம்.


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.




        இன்று நம் தாய்த் திருஅவையாக இணைந்து புனித திருமுழுக்கு யோவானை நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறோம். திருமுழுக்கு யோவான் என்றாலே எதையும் நேரடியாக சரி என்றால் சரி எனவும் தவறு என்றால் தவறு எனவும் சொல்லக் கூடியவர் என்ற பண்பு தான் முதலில் மனதில் வந்து நிற்கின்றது. இந்த திருமுழுக்கு யோவானின் பெயரை தாங்கி இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் இன்றைய நாளில் நாம விழா வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன். பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் இணைக்கின்ற ஒரு பாலமாக இருந்த இறைவாக்கினர் யார் என்றால், அவர் திருமுழுக்கு யோவான் ஆவார். அந்த திருமுழுக்கு யோவானிடமிருந்து நாம் வாழ்க்கைக்கான பல பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். 

எளிமையான வாழ்வு. ஆண்டவர் இயேசுவை எதிர்பார்த்த ஒரு வாழ்வு. ஆண்டவருக்காக வழியை தயாரித்து வைக்கக்கூடிய ஒரு வாழ்வு. தன்னை மெசியா என்று  ஒரு கூட்டம் நம்பிய போதும் கூட, நான் அல்ல மெசியா. எனக்குப்பின் வருபவர்தான் மெசியா என்று, உண்மையை துணிவோடு எடுத்துரைக்க கூடிய ஒரு பண்பு. அவரது மிதியடி வாரை அவிழ்க்கக் கூட நான் தகுதியற்றவன் என தாழ்ச்சியின் உருவமாகவும் இவரை நாம் காண முடியும். இன்னும் எத்தனையோ நற்பண்புகளை இவரிடத்தில் நாம் கூறிக்கொண்டே செல்லலாம். இந்த திருமுழுக்கு யோவானிடம் காணப்பட்ட நற்பண்புகள் நமது வாழ்வில் வெளிப்பட வேண்டும் என்பது தான் இன்றைய நாள் நமக்கு உணர்த்தக் கூடிய செய்தி. 

     பொதுவாகவே நம்மை யாராவது ஒருவர் புகழ்ந்து பேசினால் வெறும் புகழ்ச்சியை கேட்டு மயங்கி விடாது, நமது வாழ்வில் உண்மையை நோக்கி நகரக் கூடியவர்களாக, சரியை சரி என்றும் தவறை தவறு என்றும் சுட்டிக்காட்டக் கூடியவர்களாக வாழ திருமுழுக்கு யோவானின் வாழ்வு நமக்கு வலியுறுத்துகிறது. 

         திருமுழுக்கு யோவானை திருஅவை இன்று நினைவு கூருகிறது என்று கூறிவிட்டு, நாமும் இன்றைய நாளை வழக்கம் போல கடந்து செல்லாமல், திருமுழுக்கு யோவானிடத்தில் காணப்பட்ட நற்பண்புகளுள் ஏதேனும் ஒன்றை நமது வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு, அதைப் பின்பற்றக் கூடியவர்களாக நாம் மாறிட முயல்வோம். இதற்காகவே இந்நாளில் திருஅவை திருமுழுக்கு யோவானை நினைவு கூருகிறது. திருமுழுக்கு யோவானிடம் காணப்பட்ட நற்பண்புகளை நமது பண்புகளாக மாற்றிக் கொள்ளவும், இவரின் நற்பண்புகளின் அடிப்படையில் நமது குழந்தைகள் வளர்ந்திடவும் வழிகாட்டுவோம். இதன்வழி இயேசுவின் உண்மை சீடர்களாக இச்சமூகத்தில் பயணிக்க இறையருளை இணைந்து வேண்டுவோம்.

செவ்வாய், 22 ஜூன், 2021

உண்மை பணியாளர்களாக மாறிட... (23.6.2021)

 உண்மை பணியாளர்களாக மாறிட...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.



       இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமது சொல்லையும் செயலையும் சீர்தூக்கி பார்க்க நமக்கு அழைப்பு தருகின்றார். இன்று நாம் வாழ்கின்ற இந்த உலகத்தில் பலர் பலவற்றை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லுவது எல்லாம் வாழ்வில் செயலாக்கப்படுத்தப் படுகிறதா? என்று சிந்தித்துப் பார்க்கும் பொழுது, அதை நீரில் எழுதப்பட்ட வார்த்தைகளாகத் தான் பெரும்பாலும் இருந்து கொண்டிருக்கின்றன என்பது வெள்ளிடை மலையாக உள்ளது.     

             ஒருமுறை ஒரு  மேடையில் ஒருவன் தர்மம் செய்வது பற்றி பேசிக் கொண்டிருந்தான். உங்களிடம் இருப்பதில் பகிர்ந்து கொடுங்கள் என்றான். சற்று நேரம் கழித்து உங்களிடம் இருப்பதையே கொடுத்துவிடுங்கள் என்று கூறினான். மிகவும் அருமையாக பகிர்தலை பற்றி உரையாற்றிய அவனது உரையைக் கேட்டு, பலரும் வியந்து போனார்கள். உரையாற்றியவன் உரையாற்றிய பின்பு வெளியே வந்தான். அவனிடம் ஒரு பெண்மணி, ஐயா, பசிக்கிறது! என்றாள். உனக்கு கை கால் நன்றாகத்தானே இருக்கிறது. உழைத்து சாப்பிடு என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்றான்.

         பகிர்தலை பற்றிப் பேசிய மனிதனால், இருப்பதில் பகிரவும், இருப்பதை பகிரவும், மனம் இல்லாதவனாக, கடந்து சென்றான். இதுதான் இன்றைய எதார்த்த நிலை. பல நேரங்களில் பல அறிவுரைகளை நாம் வழங்குகிறோம். ஆனால் நாம் அவைகளை பின்பற்றுகிறோமா என கேள்விகளை எழுப்பும்போது தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகளாகத் தான் நமது வார்த்தைகளும் பல நேரங்களில் இருக்கின்றன. 

      ஆனால் இன்றைய நாளில் இயேசு கிறிஸ்து போலி இறைவாக்கினர்களைக் குறித்து பேசுகின்றார். போலி இறைவாக்கினர் என்பவர்கள் சொல்வார்கள் ஆனால் செயலில் காட்ட மாட்டார்கள். அவர்கள் செய்கின்ற செயல்களைக் கொண்டே அவர்கள் உண்மையான இறைவாக்கினர்களா? அல்லது போலியான இறைவாக்கினர்களா? என்பதைக் கண்டுகொள்ள முடியும் என இயேசு கற்பிக்கிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் மரத்தை உவமையாக இயேசு பயன்படுத்துகிறார். ஒரு மரத்தின் கனியை கொண்டு அந்த மரத்தின் தன்மை அறியப்படுகிறது.

இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் மரத்தின் கனி கொண்டு மரத்தின் தன்மை அறியப்படுவது போல, நமது செயல் கொண்டே நமது வார்த்தையின் உண்மை தன்மை அறியப்படுகிறது. நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நல்லதைச் சொல்வோம். நல்லதைச் சொல்வதோடு நிறுத்திவிடாமல் சொல்வதை செயலாக மாற்றுவோம். அவ்வாறு மாற்றும்பொழுது ஆண்டவர் இயேசுவின் உண்மையான இறைவாக்கினர்களாக இந்த உலகத்தில் நாம் விளங்க முடியும். நமது செயல்களால் நமது சொல்லுக்கு வடிவம் கொடுத்து, நாம் இயேசுவின் உண்மை பணியாளர்களாக மாறிட இறையருளை இணைந்து வேண்டுவோம்.



திங்கள், 21 ஜூன், 2021

நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள்... (22.6.2021)

 நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள்...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.



பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதையே நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள். இதுவே இன்றைய நாளின் மையச் செய்தியாக அமைந்திருக்கிறது.


ஒரு கிராமத்திலே சிறுவன் ஒருவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான்.  மலையடிவாரத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த அவனுக்கு தனக்கு எதிரே இருக்கக்கூடிய மலையில் யாரோ இருப்பது போன்ற ஒரு உணர்வு. எனவே அவன் இருந்த மலையின் உச்சிக்கு ஏறி, அந்த மலையில் இருந்த வண்ணம் தனக்கு எதிரே இருந்த மலையை நோக்கி அழைத்தான். யாராவது இருக்கிறீர்களா? என்று குரல் எழுப்பினான். அதே குரலோசை மீண்டும் அவனுக்கு கேட்டது. ஆஹா நமக்கு யாரோ ஒருவர் பதில் தருகிறார் என்ற எண்ணத்தில், நீ நன்றாக இருக்கிறாயா? எனக் கேட்டான். உடனே அந்த மலையிலிருந்து நீ நன்றாக இருக்கிறாயா? என்று பதில் குரல் வந்தது. உடனே பெருமிதத்தின் மிகுதியால் அவன், நான் சொன்னதையே திரும்ப சொல்கிறாயே உனக்கு அறிவு இருக்கிறதா? எனக் கேட்டான். மீண்டுமாக உனக்கு அறிவு இருக்கிறதா? என்ற வார்த்தைகளே மீண்டும் அவனது காதுகளை வந்தடைந்தன. கோபத்தின் உச்சிக்குச் சென்றவனாக கத்த துவங்கினான். அவன் கத்திய வார்த்தைகள் திரும்பவும் அவனிடத்திலே வந்து சேர்ந்தன. தாயிடம் வேகமாக ஓடிச்சென்று சொன்னான், அந்த மலையில் இருக்கின்ற ஒருவன் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டான் என்று.


தாய் அங்கு நடந்ததை புரிந்து கொண்டவளாய், அந்த மகனைப் பார்த்து சொன்னாள், நாளைக்கு மீண்டும் அதே மலைக்குச் சென்று உன்னிடம் பேசியவனிடம் நன்றாக இருக்கிறாயா? எனக்கேள். என் வீட்டிற்கு உணவருந்த வா என அழைத்து வா என்றாள். உடனே தாயின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்தவனாய் மலைக்கு ஓடினான். நன்றாக இருக்கிறாயா? எனக் கேள்வி எழுப்பினான். அதே வார்த்தைகள் அவனுக்குத் திரும்பக் கிடைத்தன. மீண்டும் என் வீட்டிற்கு உணவருந்த வா என்று அழைத்தான். அதே குரலோசை மீண்டும் அவனுக்கு கேட்க, மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றவனாய், தாயிடம் வந்து, இன்று அவன் என்னை வீட்டிற்கு உணவருந்த அழைத்தான் என்று கூறினான். அப்போது தாய் அவனுக்கு விளக்கினாள். அழைத்தது அடுத்த மலையில் இருந்தவர்கள் அல்ல. நீ எந்த வார்த்தைகளை பயன்படுத்தினாயோ அதே வார்த்தைகள் தான் உனக்கு எதிரொலியாக திரும்பி வந்தது என்ற உண்மையையும் கற்பித்தாள். நீ எதை இந்த சமூகத்தில் விதைக்கின்றாயோ, அதைத்தான் அறுவடை செய்வாய் என்ற பாடத்தையும் அந்த சிறுவனுக்கு அந்த தாய் கற்பித்தாள்.


    இறைவனால் அழைக்கப்பட்டு, அவரது வார்த்தைக்கு செவி கொடுத்து வழி நடந்தவர் தான் ஆபிரகாம். ஆபிரகாமின் பணியாளர்களுக்கும் லோத்தின் பணியாளர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. ஆனால் ஆபிரகாம் லோத்துக்கு தீங்கு செய்ய வேண்டும் என எண்ணவில்லை. எனவே தான் லோத்திடம் சென்று, நீ இடப்பக்கம் சென்றால்,  நான் வலப்பக்கம் செல்கிறேன். நீ வலப்பக்கம் சென்றால் நான் இடப்பக்கம் செல்கிறேன் நம்மிடையே உறவு தொடர வேண்டும். பிரிவு வரக்கூடாது, சண்டை வரக்கூடாது என்பதை, இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்க கேட்டொம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட


பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். மத்தேயு 7: 13; வாசிக்கின்றோம்.


 



          நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நாம் எதை விதைக்கிறோமோ அதை தான் அறுவடை செய்ய முடியும். நாம் பிறருக்கு என்ன செய்கிறோமோ அதையே தான் திரும்ப அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறோம். எப்போதுமே மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவருமே பிறர் நமக்கு நல்லது செய்ய வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் பிறர் நல்லது செய்ய வேண்டும் என விரும்பக்கூடிய நாம் நமது வாழ்வில் நாம் செய்கின்ற  செயல்கள் அனைத்தும், அடுத்தவர் நன்மையை மையப்படுத்தியதாக அமைந்திருக்க வேண்டும். நாம் அடுத்தவருக்கு தீங்கு செய்துவிட்டு, அடுத்தவர் மட்டும் நமக்கு நன்மையே செய்ய வேண்டும், என எதிர்பார்க்க கூடியவர்களாக இருந்தால், அது ஒரு அர்த்தமற்ற வாழ்வாக கருதப்படுகிறது. ஒரு மாமரத்தின் விதையை நிலத்தில் விதைத்து விட்டு பலா மரம் முளைக்க வேண்டுமென எதிர்பார்ப்பது எவ்வாறு முறையற்றதோ, அதுபோலத்தான் நாம் தீமையை விதைத்துவிட்டு நன்மையை எதிர்பார்ப்பதும்.

         நாம் நல்லதை விதைக்கவும் நல்லதை அறுவடை செய்யவும் அழைக்கப்படுகின்றோம். இதையே இயேசு கிறிஸ்து, "பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதை நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள்" என்கிறார். இயேசுவின் வார்த்தைகளை நமது வாழ்வாக மாற்றிக் கொண்டு, இன்றைய நாளிலே அடுத்தவர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என எண்ணுகிறோமோ அதையெல்லாம் அடுத்தவருக்கு நாம் செய்யக்கூடியவர்களாக மாறிட இறையருளை வேண்டுவோம்.




ஞாயிறு, 20 ஜூன், 2021

நல்ல அளவையால் பிறரை அளப்போம்... (21.6.2021)

  நல்ல அளவையால் பிறரை அளப்போம்...

    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.


உளவியல் அறிஞரான ஜோ ஹாரி  என்பவர்,  மனிதர்களை நான்கு வகையில் வகைப்படுத்தி ஒரு உளவியல் கொள்கையை உருவாக்கினார்;.  

முதல் வகை மனிதர்கள், நான் சரி. அடுத்தவர் தவறு என சொல்லக் கூடியவர்கள்.

இரண்டாம் வகை மனிதர்கள் அடுத்தவர் சரி. நான் தான் தவறு என சொல்லக் கூடியவர்கள்.

மூன்றாம் வகை மனிதர்கள் நானும் தவறு, அடுத்தவர்களும் தவறு என சொல்லக் கூடியவர்கள்.

நான்காம் வகை மனிதர்கள் நானும் சரி, அவர்களும் சரி என சொல்லக் கூடியவர்கள்.

இந்த நான்கு வகையில் எந்த வகையைச் சார்ந்தவர்களாக நாம் இருக்கிறோம் என்பதைக் குறித்து சிந்திக்க இன்றைய நாள் வாசகங்கள் வழியாக அழைக்கப்படுகிறோம்.  இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை பிறரை தீர்ப்பிடாது வாழ அழைக்கின்றார்.  நாம் எந்த அளவையால் பிறரை அளக்கின்றோமோ, அதே அளவையால் நமக்கும் அளக்கப்படுவோம் என்பதை இயேசு சுட்டிக் காட்டுகின்றார்.

       இன்றைய நாளின் முதல் வாசகத்தில் கூட ஆபிரகாம் ஆண்டவருடைய  வார்த்தைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு அவருடைய வார்த்தைகளின்படி தன் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்டவர் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட மனிதனாக ஆண்டவர் கூறிய வார்த்தைகளின் அடிப்படையில் தனது பயணத்தை தொடர்கின்றார். 

    தன்னுடைய வார்த்தைகளை நம்பிக்கையோடு ஏற்றுக் கொண்டு பயணிக்கின்ற ஆபிரகாமின் நம்பிக்கையைக் கண்டு இறைவனும் வியந்து போனவராய், அவருக்கு தருவதாகக் கூறிய அனைத்து விதமான ஆசிகளையும், நிறைவேற்றுகிறார். நாம் எந்த அளவையால் அளக்கின்றோமோ, அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும். நாம் எப்படி பிறரை மதிக்கின்றோமோ, அதே அளவையால் நாமும் மதிக்கப்படுவோம்.  பல நேரங்களில் கோபத்தில் நாம் கூறுவோம், "மரியாதை கொடுத்து மரியாதை பெற்றுக்கொள்" என்று. மனிதர்களுள் பலர் தன்னை எப்படி அடுத்தவர் நடத்துகிறார்களோ, அப்படியே அவர்களையும் தாங்கள் நடத்த வேண்டும் என இயல்பாக எண்ணி பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.  

     இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், பலவிதமான போட்டிகளும் பலவிதமான இன்னல்களும் இடையூறுகளும் நிறைந்து இருக்கக்கூடிய இந்த உலகத்தில் நிதானத்தோடு அடுத்தவரை ஊக்கப்படுத்தவும், அடுத்தவரை ஏற்றுக் கொள்ளவும், பாராட்டவும் கூடிய மனிதர்களாக நாம் பயணிக்க வேண்டும். அவ்வாறு நாம் பயணிக்கின்ற போது, நம்மைச் சுற்றி இருக்கின்ற நபர்களும் நம்மை பாராட்டக்கூடிய நல்வழிப்படுத்தக்கூடிய ஊக்கமூட்டக்கூடிய நபர்களாக இருப்பார்கள். 

  நல்ல அளவையால் பிறரை அளப்போம், நாமும் நல்ல அளவையால் அளக்கப்படுவோம். எனவே அடுத்தவரை நேர்மறையான எண்ணங்கள் கொண்டு அணுகவும், நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நம்மை நேர்மறையான எண்ணத்தோடு அணுகவும், நமது சொல்லும் செயலும் அதற்கு ஏற்ற வகையில்  அமைந்திடவும், இன்றைய நாளில் இறையருளை வேண்டி தொடர்ந்து பயணிப்போம்.



சனி, 19 ஜூன், 2021

நம்பிக்கையோடு பயணிக்க... (20.6.2021)

 

நம்பிக்கையோடு பயணிக்க...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.



ஒரு அரங்கத்தில் கைத்தட்ட கூடிய போட்டி நடைபெற்றது. அங்கு யார் அதிக நேரம் விடாமல் கைதட்டிக் கொண்டே இருக்கிறார்களோ அவர்களுக்கு பரிசு தருவதாக அறிவிக்கப்பட்டது. அங்கு அதிக நபர்கள் வந்திருந்தார்கள். அந்த போட்டியில் கலந்து கொள்ள வந்த நபர்களால் அந்த அரங்கமே நிறைந்திருந்தது. கதவுகளை எல்லாம் சாத்திவிட்டு விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டார்கள். மேலே ஒரு சூழல்விளக்கு மட்டும் எரிந்து சுடர்விட்டுக் கொண்டிருக்கும். இறுதிவரை யார் விடாமல் கைதட்டி கொண்டிருந்தார்களோ அந்த நபர்களை நோக்கியதாக அந்த விளக்கின் ஒளி செல்லும். இதுவே போட்டியின் நடைமுறைகள். போட்டி ஆரம்பமானது. அனைவரும் கை தட்டினார்கள். ஐந்து மணி நேரம் கழித்து இறுதியாக அந்த ஒளி ஒரு குறிப்பிட்ட பகுதியில் வந்து நின்றதாம். இறுதியில் நடுவர்கள் அந்த நபரை நோக்கி வாழ்த்துக்கள் நீங்கள் மேடைக்கு வாருங்கள் என்று அழைத்தார்கள். அப்போது இருவர் மேடையை நோக்கி வரத் துவங்கினார்கள். அந்த இருவரையும் பார்க்கும் பொழுது அரங்கத்தில் சூழ்ந்திருந்த அனைவருக்கும் ஆச்சரியம் காத்திருந்தது. அந்த இருவரில் ஒரு நபருக்கு வலதுகை இல்லை மற்றொரு நபருக்கு இடதுகை இல்லை. ஆனால் இருவரும் சேர்ந்து கரங்களில் தட்டியதால் இறுதியில் வெற்றி பெற்றார்கள். கைத்தட்டல் போட்டியில் கரங்கள் இல்லாத ஒரு நபர் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்ததே அவரது வெற்றியின் அடையாளம். அது, பாராட்டுதலுக்குரியது. இவர்களின் முயற்சி இன்று நமக்கு கூறுவது நமது வாழ்வில் வலதுகை இல்லாவிட்டாலும் அல்லது இடது கை இல்லாவிட்டாலும் நம்பிக்கை மட்டும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதே. இந்த நம்பிக்கையே அவர்களை கைத்தட்டும் போட்டிக்கு அழைத்துச் சென்றது, மிகப்பெரிய வெற்றியையும் தேடித் தந்தது.

மனிதர்களாகிய நம்  ஒவ்வொருவரிடமும் நம்பிக்கை என்பது இருக்கிறது. நமது வாழ்க்கைப் பயணம் வெற்றியடைய நம்பிக்கை அவசியமாகிறது. என்றும் நம் உள்ளத்தில் நம்பிக்கை மட்டும் உறுதியாக இருந்தால், எதிலும் நம்பி, கை வைக்கலாம்.

இயேசு தந்தையின் மீது அதீத நம்பிக்கை கொண்டு தம் பணியைத் தொடர்ந்தர்.இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளின் மீதும், நலம் தரும் நல்ல செயல்கள் மீதும், அவர் ஆற்றிய புதுமைகள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இயேசுவின் காலத்தில் இயேசுவோடு உடன் பயணித்தவர்களே இயேசுவின் சீடர்கள். அவர்கள் இயேசுவோடு இணைந்து வாழ்ந்தவர்கள். அவரைப்பற்றி முற்றிலுமாக அறிந்தவர்கள். இரவு பகல் என்று எல்லா நேரத்திலும் இயேசுவுடனே தங்கி இருந்தவர்கள். இயேசு சென்றவிடமெல்லாம் அவரைப் பின்பற்றி சென்றவர்கள். ஆனால் அவர்கள் வாழ்விலும் நம்பிக்கையின்மை காணப்பட்டது.

நம்மிடம் இருக்கும் பொழுது எதையும் பொதுவாக நாம் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இயேசுவின் சீடர்கள் இயேசுவின் புதுமைகளையும், அருஞ்செயல்களையும், அற்புதங்களையும் கண்டிருந்தாலும் கூட, ஒரு துன்பம் என்று வருகின்ற பொழுது நம்பிக்கை இழந்தவர்களாக இயேசுவின் சீடர்கள் இருந்தார்கள் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்.

இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்து கப்பலிலேயே பயணம் செய்கிறார். கீழ்தளத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார். புயல் காற்று வீசுகிறது. கப்பல் அலைக்கழிக்கப்படுகிறது. என்ன செய்வதென தடுமாற்றம். இயேசுவை எழுப்பிய சீடர்கள், ஆண்டவரே இதை சரி செய்ய முடியுமா என்று கேட்கவில்லை. மாறாக, ஆண்டவரே! நாங்கள் எல்லாம் சாகப் போகிறோமே! உமக்கு கவலை இல்லையா? இவ்வாறு உறங்கிக் கொண்டிருக்கிறீரே என்றார்கள்.

      இந்த சீடர்கள் எல்லாம் இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது இயேசுவின் அரும் செயல்களை உடனிருந்து பார்த்தவர்கள். பல ஆண்டுகளாக முடக்குவாதமுற்றிருந்த ஒருவரை கட்டிலோடு தூக்கி வந்து இயேசுவின் முன் கிடத்தி அவரை நலம் தரச் சொல்லி வேண்டிய போது அவர் நலமளித்ததை கண்ணார கண்டவர்கள். பல ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் அவதிப்பட்ட ஒரு பெண்மணி, இயேசுவின் ஆடையைத் தொட்டாலே நான் குணம் பெறுவேன் என்று நம்பிக்கையோடு இயேசுவிடம் வந்து குணம் பெற்று சென்றாதை உடனிருந்து அறிந்தவர்கள். சமூகத்தால் புறம்தள்ளப்பட்ட கானானியப் பெண்ணும் கூட, மேசையில் இருந்து விழும் துண்டுகளை நாய்கள் உண்ணுமே. ஏன்று கூறி தன்னை தாழ்த்திக்கொண்டு  எங்களுக்கு நீர் உதவ வேண்டும் என்று கூறி தன் மகளின் நோயிலிருந்து விடுதலை பெற்றுச் சென்றதை கண்கூடக கண்டவர்கள். இப்படி எத்தனையோ நபர்கள் நம்பிக்கையோடு இயேசுவைத் தேடி வந்த போதும். இந்த சீடர்களை இயேசு தம் பணிக்கென தேர்ந்தெடுத்தார். தான் தேர்ந்தெடுத்த சீடர்கள், தன்னோடு பயணிப்பவர்களின நம்பிக்கை இன்று உடைபடுகிறது. தங்கள்; வாழ்வில் துன்பம் என்று வந்தபோது, அவரை மறந்து போனார்கள். அவர் செய்த புதுமைகளை மறந்தார்கள். அவர் கற்பித்ததை மறந்தார்கள். அனைத்தையும் மறந்துவிட்டு அவரையே எழுப்பி, ஆண்டவரே! நாங்கள் சாகப் போகிறோம். உமக்கு கவலை இல்லையா? என்றார்கள்.

பல நேரங்களில் நாமும் நமது வாழ்வில் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.  நம்பிக்கையை பற்றி பலருக்கு பாடம் எடுத்திருப்போம். நம்பிக்கையோடு பயணியுங்கள்.  துன்பத்தைக் கண்டு துவண்டு விடாதீர்கள் என வீரவசனம் பேசி இருப்போம். ஆனால் நமது வாழ்வில் துன்பம் நேரும் போது, நமது வாழ்வில் சோகங்கள் உருவாகும் போதும் நாம் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்து விட்டு, நாம் நம்பிக்கையற்றவர்களாக இருந்திருப்போம் பல நேரங்களில். இது மனித வாழ்வில் எதார்த்தமாக நடக்கக்கூடிய ஒன்று. ஆனால் நாம் நமது துன்ப நேரத்தில் நம்பிக்கையோடு பயணிக்க அழைக்கப்படுகிறோம்.

இயேசுவின் சீடர்கள் அன்று தடுமாறினார்கள். ஆனால்   இயேசு அவர்களுக்கு பாடம் கற்பித்தார். இன்னும் என்னை நம்பவில்லையா?  என்ற கேள்வி எழுப்பினார். காற்றையும் கடலையும் அதட்டினார். அவரது வார்த்தைகளைக் கேட்டு காற்றும் கடலும் அமைதியாக இருந்தன என்று இறை வார்த்தையை வாசிக்க கேட்டோம்.  அந்த இயேசு கிறிஸ்துவின் வார்த்தையினால் வலிமை பெற்றவர்களாக, ஆண்டவர் இயேசுவின் மீது தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையை புதுப்பித்துக் கொண்டவர்களாக, அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அனைத்தையும் சரி செய்யக் கூடியவர்களாக, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் தம் பணியைத் தொடர்ந்தார்கள். எப்படி இன்றைய நற்செய்தி வாசகத்தில், துன்புற்று அஞ்சி நடுங்கிய சீடர்களுக்கு இயேசு தம் வார்த்தைகளால் துணிவை கற்றுக் கொடுத்தாரோ, அதுப்போல நமக்கும் கற்றுத்தருகிறார். அந்தத் துணிவை கற்றுக்கொண்ட சீடர்கள் அதன்பிறகு ஆண்டவர் இயேசுவை பற்றிய நற்செய்தியை அறிவித்த போது எத்தனையோ இன்னல்கள,; இடர்பாடுகளை சந்தித்தபோது, துன்பத்தைக் கண்டு அஞ்சவில்லை. மாறாக புயலுக்கு பின் அமைதி என்பது போல துன்பத்திற்குப் பின் இன்பம் என்ற செய்தியை கண்டு கொண்டார்கள்.


ஆனால், இன்று நிலவும் தொற்றுநோய் காரணமாக  உலகமே உச்சத்தில் இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு சில தன்னார்வ பணியாளர்களும், மருத்துவர்களும், செவிலியர்களும் தங்கள் உயிரைத் துச்சமென கருதாது போராடிக் கொண்டிருக்கிறார்கள். நமக்காக பணியாற்றுகிறார்கள் அவர்களது நம்பிக்கையின் பொருட்டு, நம்பிக்கையோடு உழைத்துக் கொண்டிருக்கின்ற அவர்களது ஓயாத பணியின் பொருட்டு தான் இன்று பலரும் குணம் பெறுகிறார்கள் என்றால் அது மிகையில்லை.



இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கப்பட்ட யோபு துன்பத்தில் துவளாத மனிதர். விவிலியத்தில் நம்பிக்கை இழக்காத  நபராக நாம் பலரை காணலாம்.  அவர்களுள் ஒருவர்தான் யோபு. ஏராளமான சொத்துக்களோடு இருந்தவர், அனைத்தையும் இழந்த நிலையிலேம் கூட கடவுள் மேல் கொண்டிருந்த நம்பிக்கையில் அசைவுறாதவராக இருந்தார். நமது வாழ்வில் துன்பம் வரும்போது நமது நம்பிக்கையை நாம் இழந்துவிடக்கூடாது நம்பிக்கை இழக்கும்போது பயம்  ஒன்றுகூடிக் கொள்கிறது. அந்த பயம் தான் நம்மை நிலைகுலையச் செய்து விடுகிறது. ஆனால்,

இந்த யோபுவை போல நாமும் நமது துன்ப நேரங்களில் நமது நம்பிக்கையை சீர்தூக்கி பார்க்க அழைக்கப்படுகிறோம். துன்பம் நேரும் போது துவண்டு விடாமல் ஆண்டவர் மீது அதீத நம்பிக்கை கொண்டு செயல்பட வேண்டுமென்ற பாடத்தை இறைவன் நமக்கு கற்றுத் தருகிறார். அவர் கற்பிக்கும் இந்த பாடத்தை நம் வாழ்வில் ஏற்றுக்கொண்டு துன்பம் ஏற்படுகின்ற நேரங்களில் எல்லாம் துவண்டு போய் விடாது, அந்த ஆண்டவரை இறுகப்பிடித்துக்கொண்டு யோபுவைப்போல அனைத்தையும் பல மடங்கு பெறக் கூடியவர்களாக நாம் மாற வேண்டும்.

இயேசுவின் சீடர்கள் தம் பணி வாழ்வில், பல துன்பங்களை ஏற்றுக்கொண்டாலும் ஆண்டவர் இயேசுவை அறியாதவர்கள் அறிந்து கொண்டார்கள் என்ற மன நிறைவோடு பயணித்தார்கள். இன்றைய நாளில் நாமும் நமது வாழ்வில் பலவிதமான இன்னல்களை துன்பங்களை சந்திக்கின்ற பொழுது, நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை இழந்து விடாது உறுதியான நம்பிக்கையோடு பயணிக்க அழைக்கப்படுகின்றோம். எனவே வாழ்வில் துன்பம் வருகின்ற நேரங்களில் எல்லாம் நம்பிக்கையை இழக்காது 1 பேதுரு 5:6-7

“கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார். உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்”.

1 பேதுரு 5:6-7 இந்த இறைவார்த்தைகளை மனதில் இருத்துங்கள். நம்பிக்கை என்பது வேறு எங்கும் இல்லை. நமது கைகளில் தான் இருக்கிறது. துன்பம் வரும்போது நமது கவலைகளை தாங்குபவராக ஆண்டவர் இயேசு இருக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டு நம்பிக்கையோடு பயணிக்க இறையருளை இறைஞ்சி வேண்டுவோம்.


 


வெள்ளி, 18 ஜூன், 2021

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து! (19.6.2021)

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

        மனித மனம் எப்போதும் எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் விரும்புகிறது.  சேர்த்துக் கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் துடிக்கின்ற மனம், அதை பகிர்ந்து கொள்ளவோ மறுக்கின்றது. ஆனால் இன்றைய நாளில் இறைவன் இருப்பதை மற்றவரோடு பகிர்ந்து வாழ அழைப்பு தருகின்றார். சேர்த்து வைப்பதால் எதுவும் நடப்பதல்ல. சேர்த்து வைக்கும்போது நாம் நம்மிடம் அதிகமாக பொருள்கள் இருக்கின்றன என எண்ணலாம். ஆனால், அதில் பயன் இல்லை.  ஒவ்வொரு நாளும் என்ன தேவை என்பதை இறைவன் அறிந்திருக்கிறார். எனவே ஒவ்வொருவரும் அன்றன்றைய நாளுக்கு உரியதை பெற்றுக்கொண்டு வாழ அழைப்பு தருகிறார். நம் தேவைக்கு அதிகமாக சேர்த்துக் கொண்டிருக்கும் பொழுது யாரோ ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய ஒன்றை அவருக்கு கிடைக்கவிடாமல் செய்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மையாக இருக்கிறது. நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் இப்படிப்பட்ட மனிதர்கள் தான் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். இருப்பதை பகிர்வதை விட இருப்பதை பதுக்குவதில் தான் இன்று பல உள்ளங்கள் நாட்டம் கொண்டிருக்கின்றன. ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, அன்றன்றைய நாளுக்கு அன்றைய கவலை போதும் என்கிறார். 

நமது எதிர்காலத்தை முன்னிறுத்தி பலரின் எதிர்காலத்தை சாகடிப்பதை தடுத்திட இறைவன் விரும்புகிறார். எனவேதான் ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதை நாம் கேட்பதற்கு முன்பாகவே அறிந்த இறைவன் அதை நமக்கு தருகிறார். அதைக்கொண்டு நிறைவோடு வாழ இந்த சமூகத்தில் இன்று நாம் அழைக்கப்படுகிறோம். அவ்வாறு வாழாது அடுத்தவருக்கு உரியதையும் பதுக்கி கொண்டு, நாம் வாழும் போது மற்றவர் அங்கு வாழ்வை இழக்கின்றார். அடுத்தவர் வாழ்வை இழப்பதற்கு நாம் காரணமாக அமைவது, தூய ஆவியின் செயல்பாடாக இருத்தலாகாது. தூய ஆவியானவர் ஒவ்வொருவருக்கும் உள்ளிருந்து நன்மை தீமையை வெளிப்படுத்துகிறார். எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை வெளிப்படுத்துகிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றலையும் வரங்களையும் கனிகளையும் தந்துள்ளார். 

இந்தத் தூய ஆவியானவர் உள்ளிருந்து உணர்த்திக் கொண்டு இருக்கக்கூடிய நல்லவைகளுக்கு செவிகொடுக்காது நாம், அடுத்தவருக்கு உரியத்தையும் பதுக்கிக் கொண்டு நமது எதிர்காலம் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, அடுத்தவரின் எதிர்காலத்தை புதைக்கக் கூடியவராக இருப்போமாயின், தூய ஆவியின் துணையோடு அவரது வழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்படுபவர்கள் நாம் எனக் கூறுவதில் அர்த்தம் இல்லை. 

தூய ஆவியின் செயல்பாடு அன்றன்றைய நாளுக்குரியதை நாம் பெற்றுக் கொண்டு, இன்பத்தோடு வாழ வழிகாட்டக் கூடியதாகும். இவ்வாறு வாழவே இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக இறைவனும் அழைக்கின்றார். அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய், பதுக்கும் மனப்பான்மையில் இருந்து விடுபட்டு, பகிரும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு, போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதை உணர்ந்தவர்களாய், இருப்பதில் நிறைவு காண இறையருளை வேண்டி இன்றைய நாளில் இணைந்து செபிப்போம்.

வியாழன், 17 ஜூன், 2021

செல்வம் எங்கே! உள்ளம் அங்கே!...(18.6.2021)

செல்வம் எங்கே! உள்ளம் அங்கே!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள்  இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
இன்றைய நாள் வாசகங்கள் நாம் நமது செல்வத்தை எங்கு சேர்த்து வைத்திருக்கிறோம்? என்பதை குறித்து சிந்திக்க அழைக்கின்றன. செல்வம் சேர்த்து வைப்பதை குறித்து ஏன் சிந்திக்கின்றோம்? என்ற கேள்வியை எழுப்பினால், நாம் எதை சேர்த்து வைத்தாலும் எதிர்காலத்திற்கு என்று கூறுவோம். எதிர்காலம் வளமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நாம் பலவற்றை சேமிக்கின்றோம். அது பொருளாக இருக்கலாம், உறவுகளாக இருக்கலாம், அல்லது புண்ணியங்களாக இருக்கலாம். அனைத்தையும் எதிர்காலத்திற்கு என சேமிக்கின்றோம். நாம் சேமித்து வைக்கக்கூடிய செல்வம் எங்கு இருக்கிறதோ அங்கு தான் நமது உள்ளமும் இருக்கும் என இயேசு இன்றைய நாளில் தெளிவுபடுத்துகிறார்.

 

 வருங்காலம் வளமானதாக அமையும் என்று எண்ணாதவர் இந்த உலகத்தில் இல்லை.

 "வருங்காலம் வளமானதாக அமைய வரும் ஒரு காலம்" என எண்ணக் கூடியவர்கள் இன்றைய உலகில் ஏராளம். 

இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் பல நேரங்களில் பலவற்றை நாம் எதிர்காலத்திற்கென சேர்த்து வைக்கிறோம். ஆனால் நாம் இம்மண்ணில் சேர்த்து வைக்கக் கூடிய எதுவும் நம்மை பின் தொடரப் போவதில்லை. வெற்று உடம்போடு இவ்வுலகத்தில் பிறந்த நாம் மீண்டும் அவ்வாறே குழிக்குள் அடக்கம் செய்யப் படுகிறோம். வெற்று உடம்போடு இந்த உலகத்தில் உதித்த நாம் மீண்டும் வெற்று உடம்போடே  மீண்டும் இறைவனிடம் சொல்லுகின்றோம். வந்த இடத்திற்கு மீண்டும் செல்கின்றோம்.  எதையும் நாம் கொண்டுவரவில்லை. ஆனால் இந்த உலகத்தில் இருக்கும் நாட்களெல்லாம் எதையாவது நம்முடனே வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என எண்ணுகிறோம். 

 எதையும் கொண்டு வராத நாம், அனைத்தையும் நம்மிடம் இருக்க வேண்டுமென எண்ணக்கூடியவர்களாய் இந்த உலகத்தில் செல்வங்களைச் சேர்க்கின்றோம்.  ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நமது செல்வங்களை விண்ணகத்தில் சேர்க்கச் சொல்கிறார். விண்ணகத்தில் எப்படி செல்வம் சேர்ப்பது? என்ற கேள்வி உள்ளத்தில் எழும்போது கண்ணுக்குத் தெரியக்கூடிய சின்னஞ்சிறு சகோதரர்களுக்கு நாம் செய்யக்கூடிய நல்ல பண்புள்ள உதவிகளும், நல்ல செயல்களும் தான் விண்ணகத்தில் செல்வமாக கருதப்படுகின்றன.  இந்த உலகத்தில் நாம் செல்வம் என கருதக் கூடிய அனைத்தும் நிலையானது அல்ல. அவை நிலையற்றவை. அவை நம்மோடு வரப்போவதும் இல்லை. ஏனென்றால் நாம் இந்த மண்ணிற்கு வரும்போது இவற்றைக் கொண்டு வரவில்லை. இவ்வுலகத்தில் இருந்ததை நாம் இங்கேயே விட்டுவிட்டு தான் செல்லப் போகின்றோம். ஆனால் நாம் விண்ணகத்திற்குச் செல்லும்போது நமது செல்வமாக இருப்பது, இந்த மண்ணில் நாம் சேர்த்துக் கொண்ட புண்ணியங்கள் தான். இந்த புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்வதைத் தான் இறைவன் விரும்புகிறார். இந்த புண்ணியங்கள் மட்டுமே விண்ணகத்தில் சேர்க்கப்படக் கூடிய  செல்வங்களாக இருக்கிறது.

 இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பவுல் மக்களுக்கு நல்லது செய்வதற்காகவும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிவித்து அவரது  வாழ்வை முன்னிறுத்தி அவர் கற்பித்த விழுமியங்களுக்கு ஏற்றபடி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளவும்  வேண்டும் என்ற நோக்கத்தில் பலவிதமான இன்னல்களையும் துன்பங்களையும் துயரங்களையும் தாங்கிக் கொண்டார். அவர் அடைந்த வேதனைகளையும் அவர் அனுபவித்த இன்னல்களையும் தான் இன்றைய முதல்  வாசகம் அழகாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறது. இத்தனை துன்பங்களை அவர் இந்த மண்ணில் ஏற்றுக் கொண்டதன் காரணம் என்ன? என சிந்திக்கும் போது அவர் மண்ணக செல்வத்தை விட விண்ணக செல்வத்தை சேர்க்க வேண்டும் என எண்ணினார்.

 இன்று நாமும் சேர்க்க வேண்டும் என எண்ணுகின்றோம். நாம் மண்ணக செல்வத்தைச் சேர்க்கிறோமா?  விண்ணக செல்வத்தை சேர்க்கிறோமா? நாம் சேர்க்கின்ற செல்வம் எங்கு இருக்கிறதோ? அந்த செல்வம் இருக்கும் இடத்தில்தான் நமது உள்ளமும் இருக்கும். நாம் நமது செல்வத்தை விண்ணகத்தில் சேர்ப்போம். அப்போது நமது உள்ளம் விண்ணகத்தை நோக்கியதாக இருக்கும். உயர்ந்த இடத்தை நோக்கி உள்ள உள்ளம், உயர்வான மகத்துவமான நல்ல பணிகளை நாம் முன்னெடுக்க வழிகாட்டும்.

 இன்றைய நாளில்  நமது உள்ளமானது இறைவனை நோக்கி இருக்கவும், இறைவனை நோக்கி செல்வங்களைச் சேர்த்து வைப்பவர்களாக மாறி, எப்போதும் நமது உள்ளம் இறைவனது இருப்பிடத்தையும் இறைவனையும் சார்ந்திருக்க வேண்டும் என்றும், எப்போதும் நமது உள்ளமானது இறைவனது இல்லத்தில் செல்வம் சேர்த்து வைப்பதில் மட்டுமே கவனமாயிருக்கவும் இறையருளை வேண்டி இணைந்து செபிப்போம்.

புதன், 16 ஜூன், 2021

தந்தையிடம் தயக்கம் ஏன்? (17.6.2021)

தந்தையிடம் தயக்கம் ஏன்?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில்  பவுல் தந்தையின் பணியை செய்கிறார். தந்தையின் பணி கண்டிப்பது போல இருக்கும். ஆனால் அந்த கண்டிப்பிற்குள் ஒரு அன்பும் ஒரு அறநெறியும் அடங்கி இருக்கும் என்பதை இன்றைய முதல் வாசகத்தில் பவுலடியாரின் வார்த்தைகளில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே தந்தையிடம் ஏதாவது அனுமதி பெறுவதற்கு அல்லது எதையாவது கேட்பதற்கோ குழந்தைகளிடம் தயக்கம் இருக்கும். ஆனால் இன்றைய இறைவார்த்தையின் வழியாக தந்தையிடம் உரிமையோடு கேட்க ஆண்டவர் இயேசு நமக்கு கற்றுத் தருகின்றார். நாம் தாயிடம் கேட்டால்,  தாய் தந்தையிடம் கேட்டுத் தான் பெற்றுத் தருகிறாள். நேரடியாக தந்தையும் கேட்பதில் ஏன் தயக்கம் என்ற கேள்வியை எழுப்பும் போது, நமது வாழ்வு தான் ஒரு மிகப் பெரிய தயக்கமாக இருக்கிறது. நமது வாழ்வு நேர்மறையான எடுத்துக்காட்டான நல்ல வாழ்வாக அமையும்போது தந்தை நாம் கேட்பதை தருகிறார்.


இன்றைய நற்செய்தி வாசகத்தில் அதைத்தான் வாசிக்கிறோம். தந்தையிடம் ஜெபிக்க சொல்கின்ற இறைவன், பிறருடைய குற்றங்களை மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும் என்று  செபிக்க சொல்கிறார். நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை பொறுத்துதான் நாம் கேட்பதை தந்தை நமக்கு தருகிறார். இன்று தந்தையிடம் தயக்கம் தேவையில்லை. தன்னம்பிக்கையோடு வாழும் எடுத்துக்காட்டான வாழ்வே தந்தையின் விருப்பம். அந்த வாழ்வு அமையும் போது நாம் கேட்பதற்கு முன்பாகவே நமது தேவை அறிந்திருக்கிற  தந்தை அதை செய்து வைப்பார். 

தனக்கு உணவு இல்லை என்றாலும் தன் வீட்டில் உள்ளவர்கள் உண்ண வேண்டும் என்பதற்காக வெயில் மழை என பாராது பணியாற்றக்கூடிய தந்தையின் தியாகம் இன்று பலருக்கு தெரிவதில்லை. பொதுவாகவே அம்மா செய்யும் தியாகங்கள் அனைவரும் அறிந்ததே. ஏனென்றால் அம்மா செய்யக்கூடிய தியாகங்களை சொல்லி சொல்லி வளர்ப்பாள். ஆனால் தந்தையின் தியாகம் யாருக்கும் தெரியாது, காரணம், தந்தை எதையும் சொல்வதில்லை. 

பெண்ணை திருமணம் முடித்துக் கொடுக்கும் போது ஒற்றை வார்த்தையில், ஒற்றை கண்ணசைவில் தனது சந்தோஷத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து விடக்கூடிய திறமை கொண்டவர் தான் ஒரு தந்தை. 

 எப்போதுமே தந்தை என்றாலே ஒரு அச்சம் இருக்கும். அச்சத்தை புறம்தள்ளி அன்போடு நம் தந்தையைப் புரிந்து கொள்ள முயலுவோம். தந்தை விரும்பும் எடுத்துக்காட்டான வாழ்வை நமது வாழ்வாக மாற்றிக் கொள்ள முயலுவோம். அப்போது நமது வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்கும். நமது தேவையை பார்த்து பார்த்து செய்யக்கூடிய நமது பெற்றோரை போல, நம் தந்தையாம் இறைவனும் நாம் கேட்பதற்கு முன்பாக நமது தேவைகளை அறிந்து நிவர்த்தி செய்வார். எனவே இந்த தந்தையிடம் தயக்கம் தேவையில்லை. தன்னம்பிக்கையோடு தன்னார்வத்தோடு எடுத்துக்காட்டான வாழ்வு வாழ முயற்சிப்பதே தந்தையின் நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவு செய்ய இறையருளை வேண்டுவோம்.

செவ்வாய், 15 ஜூன், 2021

அறுவடை செய்ய.... (16.6.2021)

அறுவடை செய்ய....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!
        இன்றைய நாள் வாசகங்கள் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து விதைத்ததை அறுவடை செய்ய நம் ஒவ்வொருவரையும்  அழைக்கின்றார். மனிதனாக இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவருமே ஏதோ ஒரு விதத்தில் நாம் இவ்வுலகில் எதையோ விதைத்துக்கொண்டே செல்கிறோம். நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம் என்று கூறுவார்கள். 

இன்று நமது வாழ்வை சற்றுத் திரும்பிப் பார்ப்போம். இந்நாள் வரை நாம் எதையெல்லாம் விதைத்து வந்து இருக்கிறோம் என சிந்திப்போம்.பல நேரங்களில் நாம் கோபத்தோடு உறவுகளைப் பிரிந்து செல்கின்ற விதையினை வைத்திருப்போம் பலநேரங்களில் இக்கட்டான சூழ்நிலையிலும் நம்பிக்கை எனும் விதையினை விதைத்தவர்களாய், முன்னோக்கிச் சென்று கொண்டிருப்போம். பல நேரங்களில் அடுத்தவரின் துயரத்தை கண்டும் காணாமல் இருக்கும் விதையினை விதைத்துவிட்டு கண்டு கொள்ளாதவர்களாய் இருந்திருப்போம். பல நேரங்களில் நமது வாழ்வில் பலர், நாம் துன்புறும் போது நமது துன்பத்தில் பங்கெடுக்கக் கூடிய விதையினை விதைத்தவர்களாய் இருக்கலாம். நாமும் அவ்வாறு பிறர் வாழ்வில் செயல்பட்டிருக்கலாம். 

நாம் எந்த விதையை விதைத்தோமா அந்த விதைதான் வளரும். மா விதையை விதைத்து விட்டு அதில் அத்திப் பழத்தையோ அல்லது பலாப்பழத்தையோ, எதிர்பார்ப்பது ஏற்புடைமை ஆகாது. 
        அதுபோல நாம் இந்த உலகத்தில் நல்ல விதைகளான நற்பண்புகளை விதைத்திருந்தால், நற்பண்புகளை நாம் பிறரிடத்தில் இருந்து எதிர்பார்க்காமலேயே நம்மை வந்தடையும். அதனை அறுவடை செய்ய முடியும். ஆனால் அவ்வாறு நாம் செய்யாது, நற்பண்புகளை இச்சமூகத்தில் விதைக்காதவர்களாய் இருந்து விட்டு, அதை விளைவிக்கும் நல்ல பலன்களை மட்டும் எதிர்பார்ப்போமாயின் அவை நமக்கு கிடைக்காது என்பது இன்றைய வாசகங்கள் வழியாக அறிவுறுத்தப்படுகின்றது. 

                   நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கின்றோம். மண்ணில் வாழக் கூடிய காலம் கொஞ்சமே. இந்த கொஞ்ச நாட்களில் அன்பையும், அரவணைப்பையும், இரக்கத்தையும், நேசத்தையும், விதைக்க தயாராவோம். அதனை  இம்மண்ணில் விதைப்போம். அந்த விதைத்த விதைகள் பலனளிக்க தயாராகும்போது அதனை அறுவடை செய்யக் கூடியவர்களாக மாறுவோம். அதற்கு இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகின்றார்.
அழைக்கின்ற இறைவனின் குரலுக்கு செவிகொடுத்தவர்களாய், அவரது பாதையில் நல்ல விதைகளை விதைப்பதற்கான பணியில் நாம் ஈடுபட நோக்கிச் சென்றாலும், நாம் விதைக்கின்ற விதைகளில் பெருமை பாராட்டிக் கொண்டும் தம்பட்டம் அடித்துக் கொண்டு செல்வதை இறைவன் விரும்புவதில்லை. போகிற போக்கில் நல்லதே செய்து கொண்டே நகர்ந்து செல்ல இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம்.
             இயேசு தனது பணி வாழ்வில் சென்றவிடமெல்லாம் நன்மையே செய்து கொண்டு சென்றார் என விவிலியத்தில் நாம் பல இடங்களில் வாசிக்கின்றோம். அந்த வார்த்தைகளுக்கு ஏற்ற வகையில் நாமும் நல்ல விதைகளை இச்சமூகத்தில் விதைத்துக்கொண்டே செல்லவும், விதைத்த விதைகள் விளைந்து நிற்கும் பொழுது அதனை அறுவடை செய்யக் கூடியவர்களாக நாம் மாறிட இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். 
       வீண் பெருமைக்கும், தம்பட்டத்திற்கும் இடம் கொடுக்காமல், தன்னலத்தை முன் நிறுத்தாது, பிறர் நலத்தை முன்னிறுத்தி,  பொது நலத்தை முன்னிறுத்தி, பல நல்ல விதைகளை மண்ணில் விதைத்து தழைத்தோங்கச் செய்ய, வளரச் செய்ய, இறையருளை இன்றைய நாளில் இறைஞ்சி வேண்டுவோம்.

திங்கள், 14 ஜூன், 2021

இழக்கக்கூடிய மக்களாக மாறுவோம்... (15.6.2021)

இழக்கக்கூடிய மக்களாக மாறுவோம்....

விண்ணகத் தந்தையின் மக்களாகிய என் அன்பு உறவுகளே...

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்பம் அது உண்மையில் பெறுவதில் அல்ல. மாறாக நம்மிடமிருந்து ஒன்றைக் கொடுக்கும் பொழுது தான் இன்பம் ஊற்றெடுக்கிறது. 

 இந்த மண்ணில் புதிதாக விதைக்கப்படுகின்ற விதையானது, மண்ணை முட்டி கொண்டு வெளியே வருவது மிகப் பெரிய விருட்சமாக வளரத் தான். மிகப் பெரிய விருட்சமாக வளர்ந்த பின்னர் தன்னை கொடுக்கத்தான். ஆம்! மரங்கள் ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய கனிகளை தன்னில் இழந்து நமக்கு வழங்குகின்றன. அவை நமது வாழ்வுக்கு வலிமை தருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய இலைகளை எல்லாம் இழந்து விடுகின்றன. அவை வயலுக்கு உரமாகின்றன. மரத்திலிருந்துஉதிர்ந்து விழும் மட்டைகள் கூட ஏழையின் வீட்டில் விறகாக பயன்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் தன்னை இழப்பதினால் மரம் இறைவனால் மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றது. தன்னிடமிருக்கும் அத்தனையையும் இழந்தாலும் கூட மரம் என்றும் மகிழ்வோடு தலையசைத்து கொண்டு பிராணவாயுவை நமக்குத் தந்து கொண்டிருக்கிறது. 

         ஆம்! அன்புக்குரியவர்களே! இன்றைய முதல் வாசகத்தில்  புனித பவுலடியார் தன்னை இழக்க ஆர்வத்தோடு முன்வரும் மக்களைப் பற்றியே இன்று குறிப்பிடுகின்றார். கடுமையான துன்பங்களுக்கும் வறுமைக்கும் உள்ளான போதும் அவர்களது உள்ளத்தின் ஆழத்தில் இறைவனால் ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்படுகின்றன மகிழ்ச்சியைத் ஊற்றெடுக்கின்றது என்பதை குறிப்பிடுகின்றார். அந்த மகிழ்வில் மிகுதியாய் அவர்கள் ஆண்டவருக்கு தங்களை அர்ப்பணித்தார்கள். அறப்பணியில் தாங்களும் இணைந்துகொள்ள வேண்டுமென ஆர்வத்தோடு முன்வந்தார்கள். 

காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!’
புலம்பல் 3:23

             என்ற இறைவார்த்தைக்கேற்ப மற்றவர்களுக்காக தம்மையே வழங்கி வெறுமை ஆகும்பொழுது அவர்களது உள்ளமாகிய பாத்திரம் இறையருளால் நிரம்பி வழிகின்றது என்பதை இன்றைய நாளில் புனித பவுலடியார் குறிப்பிடுகின்றார்.
            இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நமது அன்பினை இன்னும் ஆழப்படுத்த அழைப்பு தருகின்றார். நமது அன்புக்குரியவர்களையும் கடந்து, நம்மைத் துன்புறுத்துவோருக்காகவும் ஜெபிக்க அழைப்பு தருகின்றார். நமது உள்ளத்திலே மற்றவரின் வார்த்தைகள் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் நமக்கு துன்பத்தை கொடுத்தாலும் அவற்றை எல்லாம் தந்தையின் பாதத்தில் இழந்து விட்டு, அவரது அருளால் நமது உள்ளத்தை நிறைத்துக் கொள்ள ஆண்டவர் இயேசு அழைக்கின்றார். 

         எனவே இன்றைய நாளில் ஆண்டவர் இயேசுவின் அருள் வாக்கிற்கிணங்க நமது அன்பை ஆழப்படுத்தவும், அகலப்படுத்தவும், நம்மை இழக்க துணிவு கொள்ளவும், அதன் வழியாக நிறைவான விண்ணகத் தந்தையின் அன்பு மக்களாக வாழவும் இறையருளை வேண்டி இணைந்து ஜெபிப்போம்.ஜெபிப்பதோடு நின்றுவிடாமல் இழக்கக்கூடிய மக்களாக மாறுவோம்.... 

ஞாயிறு, 13 ஜூன், 2021

நீங்கள் எதை விட்டு விட்டு எதை தூக்கிச் செல்கிறீர்கள்?....(14.6.2021)

நீங்கள் எதை விட்டு விட்டு எதை தூக்கிச் செல்கிறீர்கள்?


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
உடல் சுகவீனமுற்று இருந்த சிறுவன் ஒருவனுக்கு அவனுடைய பாட்டி ஒரு மாத்திரையை கையில் கொடுத்து சிறிது தண்ணீரையும் குடிக்க சொல்லி கொடுத்தார். மாத்திரையை வாயில் வைத்த சிறுவன் அது கசப்பாக இருக்கிறது என்று அதனை துப்பிவிட்டு தண்ணீரை மட்டும் குடித்தான். உடனே பாட்டி அவனுக்கு ஒரு மாத்திரையை கொடுத்து ஒரு டம்ளர் நிறைய பாலை கொடுத்தாள். அப்போதும் அந்த சிறுவன் பாலை குடித்துவிட்டு மாத்திரை கசக்கிறது என்று துப்பிவிட்டான். இவனை எப்படியாவது இந்த மாத்திரையை சாப்பிட வைக்க வேண்டும் என்று நினைத்தார், அந்த பாட்டி. ஒரு வாழைப்பழத்தை எடுத்து அதனுள் இந்த மாத்திரையை வைத்து அந்த சிறுவனுக்கு உண்ணக் கொடுத்தார். அந்த சிறுவனும் வேகமாக வாழைப்பழத்தை ஆர்வத்தோடு சாப்பிட்டான். அவன் வாழைப் பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் பேராண்டி! வாழைப்பழம் எப்படி இருந்தது? என்று கேட்டார் பாட்டி. உடனே அச்சிறுவன், வாழைப்பழம் மிகவும் இனிப்பாகவும் ருசியாகவும் இருந்தது பாட்டி. ஆனால் அதன் விதைகள் தான் கசப்பாக இருந்தது. அதனை நான் துப்பி விட்டேன் என்று கூறினான். 

               இன்று இந்த உலகத்தில் நிறையபேர் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு கசப்பாக படக்கூடியவை, அது எந்த வழியில் வந்தாலும் சரி, அது நமது நலனுக்கு உரியதாக இருந்தாலும் சரி, அதை நாம் ஏற்றுக் கொள்ள தயங்குகிறோம். 
       மாத்திரை கசப்பானது தான். ஆனால் அந்த மாத்திரை உடலுக்குள் சென்று உடலை நலமாக்க கூடிய பணியைச் செய்கிறது. ஆனால் அந்த கசப்பினை ஏற்றுக்கொள்வதற்கு அந்த சிறுவனிடத்தில் ஒரு தயக்கம் காணப்பட்டது. 

           அதுபோலத்தான் இன்று நாம் வாழும் இந்த உலகில். எத்தனையோ விதமான பிரச்சினைகள் இருந்தாலும்,  சின்னச் சின்ன கசப்பான அனுபவங்களை முன்னிறுத்தி நாம் பலவற்றை விட்டுவிடுகிறோம். இந்த கசப்பான அனுபவங்கள் நமது வாழ்வில் பலவிதமான வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கும். அந்த வாழ்க்கைப் பாடத்தை எல்லாம் விட்டுவிட்டு, ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மட்டுமே தூக்கிக்கொண்டு பயணம் செய்பவர்களாக தான் நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

         இன்றைய நாளில் கூட பவுலடியார் தான் வாழ்வில் சந்தித்த இடர்பாடுகள், வேதனைகள்,  துன்பங்கள் என்ற கசப்பான அனுபவங்களை எல்லாம் அந்த கசப்பு என்ற உணர்வோடு பார்க்காமல்,  அதற்கு பின்னால் கிடைக்க கூடிய அனுபவம்,  தைரியம்,  முயற்சி, உழைப்புக்கு ஏற்ற பலன், என்ற வகையில் மறைந்திருக்கக் கூடியவற்றை கண்டு கொள்கிறார். அதனைப் பெற்றுக் கொண்டதை தன்னைச் சார்ந்தவர்களுக்கும் அறிவிக்கிறார். உங்கள் வாழ்க்கையில் துன்பங்களை சந்தித்தாலோ அல்லது இன்னல்கள் நேர்ந்தாலோ துவண்டு விடாதீர்கள். அதன் வழியாக கடவுள் உங்களை உயர்த்துகிறார். அதன் வழியாக கடவுள் உங்களுக்கு நல்லதை சொல்லித்தருகிறார் என்ற செய்தியை இன்று நமக்கு சொல்லித் தருகிறார். 
        பல நேரங்களில் நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், பல்லுக்குப் பல் கண்ணுக்குக் கண் என்றவாறு தான் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். நமக்கு ஒருவர் தீங்கு செய்தால் அவருக்கு நான் பதில் தீமை செய்து விட வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான்கு பேர் மத்தியில் நம்மை அவமானப்படுத்தி விட்டார் என்பதற்காக இன்னும் நான்கு பேர் மத்தியில் அவனை எப்படி அவமானப் படுத்தலாம் என்ற எண்ணத்தோடு தான் பல நேரங்களில் நாம் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நாளில் நமக்குத் தருகின்ற செய்தி, கசப்பான அனுபவங்களையும் வாழ்வில் வரக்கூடிய துன்பங்களையும், வாழ்வில் ஏற்படக்கூடிய சோதனைகளையும் கண்டு மனம் தளர்ந்து விடாமல் நமக்குத் தீமை செய்தவனுக்கு பதில் தீமை செய்ய வேண்டும் என எண்ணுவதை விட அந்த தீங்கின் வழியாக நாம் கற்றுக் கொண்ட பாடம் என்ன என்பதை உணர்ந்து பார்ப்போம். அடுத்தவர் நமக்கு எதிராகச் செய்த கசப்பான அனுபவங்கள், அடுத்தவரால் நம் வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், நமக்கு எவ்வளவு வலியும் வேதனையும் தந்ததோ அது போலத்தான் நாம் அடுத்தவர் வாழ்வில் செய்யும் போது கிடைக்கிறது. எனவே, அத்தகையதொரு காரியத்தை செய்யாதிருக்க, இறைவன் இன்று அழைப்பு தருகிறார். கசப்பான நிகழ்வுகளும் துன்பங்களும் தோல்விகளும் வாழ்வில் வரும் பொழுது அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக் கூடிய பாடம் என்ன என்பதை முன் நிறுத்துவோம். அதனைக் கொண்டு வந்தவர்கள் யார்? நம்மை தோல்வியுறச் செய்தவர்கள் யார்? நமக்கு கசப்பான அனுபவங்கள் யார் மூலமாக கிடைத்தது என எண்ணி அவரைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படாமல் வாழ்வில், வாழ்வுக்கான பாடத்தைக் கற்றுக் கொண்டு, நாம் பிறர் வாழ்வில் ஒளியேற்றக் கூடியவர்களாகவும், நலமான நல்லவிதமான உணர்வுகளை பிறர் பெற்றுக் கொள்ளவும், நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். அடுத்தவரின் செயல்பாடுகள் நமது வாழ்வில் கசப்பான அனுபவங்களை தந்து இருந்தாலும், நமது செயல்பாடுகள் அடுத்தவரின் வாழ்வில் கசப்பான அனுபவங்களை தரக்கூடாது என்பதில் நாம் உறுதியோடும் தெளிவோடும் இருக்க வேண்டும். அவ்வாறு நாம் உறுதியோடும் தெளிவோடும் இவ்வுலகில் பயணிக்கப் போகிறோம் என்றால், நாம் முதிர்ச்சி பெற்ற நல்ல மனிதர்களாக விளங்க முடியும். ஆண்டவர் இயேசுவைப் பின்தொடர விரும்புகின்ற நாம் ஒவ்வொருவருமே, எப்போதும் அடுத்தவர் நலனை முன் நிறுத்துவோம். நாம் துன்பப்பட்டாலும் அடுத்தவர் துன்பப்படக்கூடாது என்ற கருத்தை நம் உள்ளத்தில் இருத்துவோம். நம்மால் பலர் வாழ்ந்தார் என்ற பெயர் இருக்க வேண்டுமே தவிர நம்மால் பலர் வீழ்ந்தார் என்ற பெயர் உருவாகாத வண்ணம் நமது சொல்லும் செயலும் அமைந்திட வேண்டும். எனவே இன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க கூடிய இந்த உலகத்தில், ஒரு நிமிடம் அமைதியாக நமது வாழ்வை சற்று அலசிப் பார்ப்போம். நாம் பிறரது வாழ்வில் கசப்பான அனுபவங்களை அதிகமாக விதைத்திருக்கிறோமா? அல்லது மகிழ்வான தருணங்களை விதைத்து வந்திருக்கிறோமா என சிந்திப்போம். எனவே இனி வரக்கூடிய காலங்களில் கசப்பான எண்ணங்களை அடுத்தவர் வாழ்வில் விதைப்பதை விட்டுவிட்டு, மகிழ்ச்சியான நலமான காரியங்களை அடுத்தவர் வாழ்வில் விதைக்கக் கூடியவர்களாய் வளர்ந்திட இறையருளை வேண்டுவோம்.

சனி, 12 ஜூன், 2021

வாழ்க்கை அர்த்தமுள்ள வகையில்.... (13.6.2021)

 வாழ்க்கை அர்த்தமுள்ள வகையில்....

    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!


    ஒருமுறை ஆசிரியர் ஒருவர் தன்னுடைய வகுப்பில் வாழ்க்கை என்றால் என்ன? என்ற கேள்வியை கேட்டார். அப்பொழுது மாணவன் ஒருவன் எழுந்து நின்று சார் ஒரு அறை விட்டு மற்றொரு அறைக்கு அழைத்துச் செல்வது தான் வாழ்க்கை என்று கூறினான். உடனே ஆசிரியர் அவனை பார்த்து இந்த ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு அழைத்துச் செல்வது தான் வாழ்க்கையா? என்று கேட்டார். உடனே அந்த மாணவன் இல்லை சார் கருவறையிலிருந்து கல்லறை செல்வது தான் வாழ்க்கை என்று கூறினான். அடுத்தபடியாக ஒரு மாணவி எழுந்து நின்று நம்பிக்கை தான் வாழ்க்கை என்று கூறினாள். மற்றொரு மாணவன் எழுந்து நின்று பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட இடைவெளி தான் வாழ்க்கை என்று கூறினான். இவ்வாறு வாழ்க்கையை பற்றி பலர் பலவிதமான புரிதல்களை கொண்டிருந்தாலும் வாழ்க்கை வாழுவதற்க்காகவே…. ஆனால் நாம் யாருக்காக வாழ்கிறோம் நமக்காக வாழ்கிறோமா? அல்லது மற்றவருக்காக வாழ்கிறோமா? நம் வாழ்வின் நோக்கம் என்ன? என்பதை சிந்திக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன. பொதுவாக வாழ்க்கையை பத்து பத்தாக பிரிப்பர்….

10 வயதில் குழந்தை 

20 வயதில் இளைஞன்

30 வயதில் முறுக்கு

40 வயதில் பொறுப்பு

50 வயதில் ஆசை

60 வயதில் ஓய்வு

70 வயதில் ஏக்கம்

80 வயதில் எதிர்ப்பார்ப்பு

90 வயதில் நடுக்கம் 

100 வயதில் அடக்கம்

ஏன்பார்கள் ஆனால் இன்று 60 தொடுவதே அபுற்வமாக பார்க்கப்படுகிறது. வாழும் வரை நாம் இவ்வுலகில் எப்படி வாழ்கிறோம்? 

           இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து நமக்கு முன்மாதிரியாக காண்பித்து சென்றார். இன்றைய நாள் வாசகங்களில் விதையையும் அந்த விதையிலிருந்து உருவாகக்கூடிய மரத்தையும் உவமையாகக் கொண்டு  வாழ்க்கை  பாடம் கற்பிக்கிறார்கள். மரம் என்பது பலன் தருவதற்காக. அது நிழலாக இருக்கலாம், அல்லது கனியாக இருக்கலாம், அல்லது அதிலிருந்து கிடைக்கும் மருந்து பொருளாக இருக்கலாம், அல்லது அது காய்ந்தபின் எரிப்பதற்கு பயன்படும் விறகாக இருக்கலாம். ஏதோ ஒரு விதத்தில் அந்த மரமானது தான் வளர்க்கப்பட்டதின் நோக்கத்தை நிறைவு செய்கிறது.அதுபோலவே மரத்தை விட மகத்துவமான மனிதனும் தான் இம்மண்ணில் பிறந்த நோக்கத்தை கண்டுகொள்ள அழைக்கப்படுகின்றோம்.ஆனால் அதை கண்டுகொள்ள முயலாமல் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என  வாழ்ந்து கொண்டு இருப்போமானால் அது அர்த்தமற்ற வாழ்வாகும். இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் கூறுகிறார், “உயர்ந்த கேதுரு மரத்தின் கிளை ஒன்றை எடுத்து வந்து நானே அதை நடுவேன் என்கிறார். அது தளைத்து கனி தந்து சிறந்த கேதுரு மரமாகத் திகழும்” என்கிறார். 

    நம்மையும் இம்மண்ணில் இறைவன் படைத்திருக்கிறார் என்றால் நாம் மகத்துவமான தலை சிறந்த மனிதர்களாக விளங்க வேண்டும்.  குழந்தை ஒன்று இவ்வுலகத்தில்  பிறக்கிறது என்றால், அது கடவுள் இந்த உலகத்தை மீண்டும் மீண்டும் அன்பு செய்து கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம் என்று கூறுவார்கள். நெடுங்காலமாகவே இந்த உலகத்தில் தொடரக்;கூடியது எது? எனக் கேட்டால் பிறப்பும் இறப்பும் தான் என்பார்கள்.  இது நெடுங்காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இனியும் தொடரக் கூடியது தான்.  பிறந்த ஒவ்வொருவரும் ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இறப்புக்கு முன்பாக நாம் எதை செய்தோம்? எதை இந்த சமூகத்தில் விட்டுச் செல்கிறோம்? என்ற கேள்வியை நாம் எழுப்பி பார்க்க வேண்டும். நட்டு வைக்கக் கூடிய மரமானது தனது பணியை செய்கிறது என்றால், மரத்தை விட மேன்மை வாய்ந்த மனிதர்களாகிய நாம், நமது படைப்பின் நோக்கத்தை கண்டுக்கொண்டு அதை இவ்வுலகத்தில் செய்தாக வேண்டும் என்பது இன்றைய நாளில் நமக்குத் தரப்படுகின்ற அழைப்பாக இருக்கின்றது.  விதை மண்ணில் விழுந்து மடிந்தால் தான் அது கனி தரமுடியும் என இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூறப்படுகிறது. 

    ஒரு சிறிய கடுகு  விதையானது மண்ணில் விழுந்து மடிந்து முளைத்து மிகப்பெரிய விருச்சமாக வளரும். அதிலிருந்து பல பறவைகள் வந்து பயனடைகின்றன என்ற ஒர் உருவகத்தை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கிறோம். ஒரு சிறிய கடுகு விதை ஒரு பெரிய விருட்சமாக மாறி பல உயிரினங்களுக்கு வாழ்வு தருகிறது என்றால், படைப்பின் சிகரமான  மனிதர்களாகிய  நம்மால் பலன் தர முடியாதா? என்ன? நமது சொல்லிலும் செயலிலும்; நாம் பிறந்ததன் நோக்கம் என்ன? என்பதை ஆராய தொடங்குவோம்.  நமது வாழ்வில் நாம் இறப்பதற்குள்ளாக ஏதேனும் ஒன்றை இச்சமூகத்துக்கு விட்டுச்செல்ல முயற்சிகளில் ஈடுபடுவோம்.



        அப்துல் கலாம் அவர்கள் கூறுவார், "வாழ்வது ஒரு முறை! வாழ்த்தட்டும் தலைமுறை" என்று. அந்த வார்த்தைகளை சற்று மாற்றிக் "வாழ்வது ஒருமுறை! வாழவைப்போம் ஒரு தலைமுறையையாவது"  என்று நமது சொல்லிலும் செயலிலும் இயேசுவைப் போல பிறர் நலனை முன்னிறுத்தும் செயல்களில் ஈடுபடுவோம். மனிதனாக இம்மண்ணில் நாம் மலர்ந்ததன் பலனை இம்மண்ணில் விதைத்திட முயல்வோம்.

              இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நம்மை பார்த்து வளரக்கூடிய குழந்தைகளுக்கும், நமது அருகாமையில் உள்ளவர்களுக்கும், அவர்கள் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு நல்ல செயல்களைச் செய்யவும், அவர்கள் நலமான வாழ்வை அடையவும் நாம் வழிகாட்டக் கூடியவர்களாக மாறுவோம். வழிகாட்டுதல் என்றால், அறிவுரை கூறுவது என்று அர்த்தம் அல்ல. மாறாக நமது வாழ்வைக் கண்டு அவர்கள் வாழ்வை அமைத்துக்கொள்ள முயல வேண்டும் என்பதே அர்த்தமாகும்.

           இன்று உலகில் பலருக்கு சொல்பவர்களை விட செய்து காட்டுபவர்கள் தான் அதிகம் தேவைப்படுகிறார்கள். இப்படி இரு! அப்படி இரு என சொல்வதைவிட, எப்படி பிறர் இருக்க வேண்டும் என நாம் எண்ணுகிறோமோ அவ்வாறாக நாம் இருப்போம். விவிலியத்திலும் இறைவன் இதனை அழகாகக் கூறுவார், “பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என எண்ணுகிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்பார். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருமே அடுத்தவரைச் சார்ந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அடுத்தவர் நமக்கு உதவ வேண்டும்  என எண்ணுகிறோம். நமது தேவையில் நம்முடன் இருக்க வேண்டும் என எண்ணுகிறோம். நாம் செய்கின்ற சின்னஞ்சிறு செயல்களையும் அடுத்தவர் பாராட்ட வேண்டும் என எண்ணுகிறோம். நாம் தோல்வியுறும் போதும், துன்பத்தில் வாடும் போதும், வந்து நம்மை தட்டிக்கொடுக்க வேண்டும், ஆறுதல் கூற வேண்டும் என எண்ணுகிறோம். ஆனால் எண்ணுகின்ற எல்லாவற்றையும் நாம் அடுத்தவருக்கு செய்கின்றோமா? என்ற கேள்வியை எழுப்புவோம். இதுவே நமது பிறப்பின் நோக்கமாக இருக்கலாம்.  தேவையில் இருப்பவரை தேடிச்சென்று உதவுவதும், ஆறுதல் தருவதும், அன்பாக பேசுவதும், அர்த்தமுள்ள வகையில் வாழ்ந்து காட்டுவதும் தான் நமது பிறப்பின் நோக்கமாக இருக்கலாம். நம் பிறப்பின் நோக்கம் என்ன? என்பதை ஆராய்ந்து பார்ப்போம். இந்த சமூகத்தில் இயேசு கற்பித்த விழுமியங்களை நமது வாழ்வாக மாற்றிக் கொண்டு, அந்த  விழுமியங்களின் படி நமது வாழ்வை அமைத்துக் கொள்வது தான் நமது வாழ்வின் நோக்கம் என்பதை கண்டு கொள்வோம். மனிதர்களாகிய நாம்,  இம்மண்ணில் வாழுகின்ற காலத்தில்,  பலன் தரக் கூடியவர்களாக மாறுவோம். 

ஜெயந்திஸ்ரீ பாலகிருஷ்ணன் என்னும் தன்னம்பிக்கை பேச்சாளரான் அடிக்கடிச் சொல்லுவார், எந்த ஒரு நாட்டில், தான் வைக்கக்கூடிய மரத்தின் கனியை தான் உண்ண இயலாது என்று தெரிந்தும் ஒருவன் மரம் வைக்கிறானோ, அப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கும் வரை இந்த உலகம் இயங்கிக் கொண்டே இருக்கும் என்று கூறுவார்.

 இறைவனின் படைப்பின் சிகரமாகிய மனிதர்களாகிய நாம், நமது சொல் செயல் வழியாக அடுத்தவருக்கு எடுத்துக்காட்டான வாழ்வை வாழுவோம். அந்த வாழ்வு  பிறருக்கு பயன் தரக் கூடிய வாழ்வாக அமைய நமது சொல்லும் செயலும் இருக்க வேண்டும் என்ற சிந்தனையை இன்றைய நாளில் இறைவன் நமக்குத் தருகிறார்.   

 இறைவன் தருக்கின்ற சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டவர்களாக இதுவரை எப்படியோ வாழ்ந்திருந்தாலும் அதையெல்லாம் புறந்தள்ளி,  இனி இருக்கின்ற நாட்களில்  அர்த்தமுள்ள வகையில் அடுத்தவருக்கான ஒரு வாழ்வை வாழ உள்ளத்தில் உறுதியேற்போம். அதற்கு இறைவன் தாமே நம்மோடு இருந்து நம்மை வழிநடத்த வேண்டும் என இறைவனிடம் மன்றாடி இந்த திருப்பலியில் தொடர்ந்து ஜெபிப்போம்.



வெள்ளி, 11 ஜூன், 2021

ஏன் என்று கேள்... (12.6.2021)

ஏன் என்று கேள்... 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!



இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவிற்குப் பின் வருகின்ற சனிக்கிழமை மரியாவின் மாசற்ற திருஇருதய விழாவினை நாம் சிறப்பிக்கின்றோம். மரியாவைப் பற்றி விவிலியத்தில் பல இடங்களில் நாம் பலவற்றை வாசித்திருக்கலாம். இயேசுவின் பயணத்தில் மரியாவின் பங்கு இன்றியமையாத ஒன்று. இயேசு இந்த உலகத்தில் என்னவெல்லாம் செய்யப் போகிறார்? என்பதை எல்லாம் அறிவதற்கு முன்பாகவே அந்த இயேசுவுக்கு வயிற்றில் இடம் கொடுத்தவர். இயேசுவுக்கு வயிற்றில் இடம் கொடுத்ததன் காரணம் தனது இதயத்தில் அந்த கடவுளின் மேல் ஆழமான நம்பிக்கையும் அன்பும் கொண்டிருந்தாதே. கடவுளின் தூதர் மங்களச் செய்தி அறிவித்தபோது சமூகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான இன்னல்களையும் அறிந்திருந்த போதும்,  அனைத்தையும் புறம்தள்ளி ஆண்டவரின் தூதர் கூறிய வார்த்தைகளுக்கு ஆம் என  பதில் கூறியவர் இந்த அன்னை மரியா. இயேசுவின் பிறப்பின் போது வியந்து போனார் அன்னை மரியா. பெற்றெடுக்கப் போவது கடவுளின் மகன் என்பதை அறிந்திருந்தாலும்,  அந்த மகன் பிறப்பதற்கு ஒரு இடம் கிடைக்காத நிலை, ஏன் என்ற கேள்வியை  உள்ளத்தில் எழுப்பி  பார்த்திருப்பார் அன்னைமரியா. மிகப்பெரிய ஞானிகள் மூவர் வந்து குழந்தையான பாலன் இயேசு முன்பு மண்டியிட்டு வணங்கிய போது என்ன நடக்கிறது? என்ற கேள்வியை உள்ளத்தில் எழுப்பிப் பார்த்திருப்பார் அன்னை மரியா. குழந்தையை கோவிலில் ஒப்புக் கொடுக்க போகும் போது குழந்தையைக் கையில் ஏந்திய சிமியோன் கூறிய வார்த்தைகளான  "உன்னுடைய உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்" என்ற வார்த்தைகளை தன் உள்ளத்தில் இருத்தி சிந்தித்திருப்பார், ஏன் என்ற கேள்வியை உள்ளத்தில் எழுப்பி இயேசு சென்ற இடமெல்லாம் அவரோடு பயணித்து அவர் செய்கின்றவற்றை எல்லாம் கண்டு,  அதனடிப்படையில் ஏன் என்ற கேள்விக்கான விடையைத் தேடியவரும் அன்னை மரியா.  உலகத்தை மீட்க வந்த ஒரு இறைவன்,  உலகிலுள்ள பலரின் சூழ்ச்சிகளால் குற்றுயிரும் குலை உயிருமாக சிலுவையில் தொங்க விடப்பட்டிருப்பதைக் கண்டு உள்ளம் உடைந்து போகிறார் அந்த அன்னை மரியா. இத்தகைய நிகழ்வுகளின் போதெல்லாம் அன்னை மரியாள் ஏன் என்ற கேள்வியை உள்ளத்தில் எழுப்பி பார்த்தார்.  அந்த கேள்விகள் தான் அவரை ஆண்டவர் இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கையில் வளரத் தூண்டியது. எந்த ஒரு நிகழ்வையுமே அன்னை மரியா உள்ளத்தில் இருத்தி சந்திக்காமல் இருந்ததில்லை.

               இன்று நாம் ஒவ்வொருவருமே உள்ளத்தில் பலவற்றை இருத்தி சிந்திக்கின்றோம்.  உள்ளத்தில் இருத்தி ஒன்றை சந்திக்கும் போது இது சரி, இது தவறு என்பதை உணர்ந்து கொண்டு நல்லவற்றை  முன்னெடுத்துச் செல்லக்கூடிய நபர்களாய் நம் சமூகத்தில் வாழ வேண்டும்.  அவ்வாறு செய்யாமல் ஏதோ நான் சிந்திக்கின்றேன் என்ற பெயரில் அனைத்தையும் கொண்டு போய் இதயத்தில் வைத்து விட்டு அதை செயலாக்கப்படுத்தாமல் இருக்கும் பொழுது அது அர்த்தமற்ற ஒன்றாக மாறுகிறது. மரியா ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றி பல கேள்விகளை தன் உள்ளத்தில் எழுப்பினார்;. தான் உள்ளத்தில் இருத்தி சிந்தித்தவைகளை செயலாக்கப்படுத்தும் வகையில் அனைத்து விதமான சூழ்நிலையிலும் ஆண்டவர் இயேசுவை பின் தொடரக் கூடிய தாயாக இருந்தார். ஏன் என்னை தேடுகிறீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா? என்ற சிறுவன் இயேசுவின் கேள்விகள் மரியாவை சிந்திக்கத் தூண்டியது.  தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவது இவரது பணி என்றால் இவர் செய்கின்ற அனைத்துமே கடவுள் விரும்பக்கூடிய ஒன்று என்று எண்ணினார்.  எனவே தன் மகனை பின்பற்றினார். என்னை பின்பற்று எனக் கூறி பிள்ளைகளை வளர்க்க கூடிய பெற்றோருக்கு மத்தியில்,  தன்னுடைய மகனின் செயல்பாடுகளை பின் நின்று கவனித்தவராக பயணித்தவர்தான் இந்த அன்னை மரியா.  

 எந்தக் குழந்தையும்  நல்ல குழந்தைதான் இம்மண்ணில் பிறக்கையிலே!

அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே!  

              என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ற வகையில், இயேசு அடுத்தவருக்காக தன் வாழ்வை இழந்தார் என்றால் அது, மனுக்குல மீட்பிற்காக அன்னைமரியா முதலில் இயேசுவைத் தன் வயிற்றில் ஏற்றுக் கொண்ட அன்பின் அடிப்படையில் நிகழ்ந்த ஒன்றாகத்தான் அதை கருத முடியும். இன்று நாம் வாழுகின்ற இக்கட்டான சூழ்நிலையில் நாம் நமது உள்ளத்தில் பலவற்றை இருத்தி சிந்தித்தாலும்,  தூய ஆவியாரின் துணையோடு சரியானது எது என்பதை கண்டு கொண்டு மரியாவைப் போல அதனைச் செயலாக்கப்படுத்த கூடிய நல்ல மனிதர்களாக உருவாக இன்றைய நாளில் இறையருளை இறைஞ்சி வேண்டுவோம்.



இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...