திங்கள், 31 ஜனவரி, 2022

நம்பிக்கைக்குரிய மனிதர்களை ஊக்கப்படுத்தவும் ...(1.2.2022)

நம்பிக்கைக்குரிய மனிதர்களை ஊக்கப்படுத்தவும்


இயேசுவில் அன்புக்குரியவர்களே!





    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    நம்பிக்கை இருந்தால் எதிலும் நம்பி, கை வைக்க முடியும் எனக் கூறுவார்கள்.  இரண்டு நம்பிக்கைக்குரிய நபர்களை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்க கேட்டோம்.  இருவரும் தங்களிடம் இருப்பதை எல்லாம் வைத்து நல்ல உடல் நலனை பெற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பியவர்கள்.  அதில் ஒருவர் தனது மகளின் நலனை விரும்பினார். ஒரு பெண்மணி தன்னுடைய நலனை விரும்பினாள்.  ஆனால் தங்களிடம் இருந்த எதுவும் அவர்களுக்கு நலனைத் தரவில்லை. ஆனால் ஆண்டவரிடம் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை  அவர்களுக்கு உடல் நலனை தந்தது.  நாமும் இந்த உலகத்தில் நிலையானது என எண்ணி எதை எதையோ பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் பிடித்துக் கொண்டு இருப்பவை எல்லாம் நமக்கு எப்போதும் கை கொடுப்பதல்ல.

    நாம் ஆண்டவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையே,  நமக்கு எல்லா நேரத்திலும் கைகொடுக்கும். அந்த நம்பிக்கையோடு இந்த சமூகத்தில் நல்ல பணிகளை செய்வோம். நம்பிக்கைக்குரிய மனிதர்களை உருவாக்கவும், நம்பிக்கைக்குரிய மனிதர்களை ஊக்கப்படுத்தவும் இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம்.  





ஞாயிறு, 30 ஜனவரி, 2022

இலக்கை நோக்கி பயணிக்க.... (31.01.2022)

 இலக்கை நோக்கி பயணிக்க....

இயேசுவில் அன்புக்குரியவர்களே!





    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்

நாம் இந்த சமூகத்தில் நல்லதை செய்கின்ற போது,  அதனை உணராத பலர் நம்மை உதாசீனப்படுத்தக் கூடும்.   இன்றைய நாளிலும் இயேசு செய்த அரும் செயல்களை கண்டும், பலர் அவரால் தங்களுக்கு பொருளாதார இழப்பு தான் ஏற்பட்டது என்று கருதி, ஆண்டவர் இயேசு செய்த நல்லதை உணர்ந்து கொள்ளாமல்  ஆண்டவர் இயேசுவை தங்கள் பகுதியை விட்டு வெளியே செல்லுமாறு அனுப்புகின்றனர்.  

தீய ஆவி பிடித்திருந்தது மனிதனை இயேசு குணப்படுத்துவதாக சமூகத்தோடும் தம்மோடும் உறவுகளோடும் ஒன்றிணைந்து வாழ அவனுக்கு வழிவகை செய்து கொடுக்கின்றார்.

சமூகத்தோடு ஒன்றிப்பு: இந்த மனிதன் தங்கியிருந்து இடம் கல்லறை என்று மாற்கு குறிப்பிடுகின்றார். மனித நடமாட்டத்தைவிட்டு ஒதுங்கி, ஊருக்கு வெளியே கல்லறையிலே தங்கியிருந்த மனிதரை இயேசு குணப்படுத்தி, ஊருக்குள் அனுப்பி வைக்கிறார்.

தம்மோடு ஒன்றிப்பு: இந்த மனிதர் "தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்" என்னும் செய்தி, அவர் தன்னிலை மறந்து, தாம் யார் என்பதையே உணராது வாழ்ந்து வந்ததைக் குறிக்கிறது. அதுமட்டுமல்ல, குணம்பெற்ற அவர் "ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன்" இருந்ததை மக்கள் கண்டனர் என்றும் பார்க்கிறோம். எனவே, இயேசு அம்மனிதரைத் தம்மோடு ஒருங்கிணையச் செய்தார்.

உறவினரோடு ஒன்றிப்பு: நலம் பெற்ற மனிதர் இயேசுவோடு இருக்கவேண்டும் என்னும் விருப்பத்தைத் தெரிவித்தபோது, "உம் உறவினருக்கு அறிவியும்" என்று சொல்லி அவரை உறவினர்களிடம் ஒன்றுசேர்க்கிறார்.

தீய ஆவியில் இருந்து குணம் பெற்ற மனிதன் சமூகத்தோடும் தம்மொடும் உறவுகளோடும் ஒன்றிணைந்தது போல மண்ணில் வாழுகின்ற மனிதர்களாகிய நாமும்ஒன்றித்து வாழ இன்றைய வாசகங்கள் வழியாக அழைக்கப்படுகின்றோம்...


ஒன்றித்து வாழ்வதற்கான முயற்சியில் நாம் ஈடுபடுகின்ற போதும் அல்லது பலர் ஒன்றித்து வாழ நாம் வழிகாட்டுகின்ற போதும் இயேசுவைப் போலவே நாமும் பலரின் எதிர்ப்புகளை சந்திக்க நேரலாம் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஒன்றித்து வாழ்வதே இறைவனது விருப்பம் என்பதை உணர்ந்தவர்களாக நாம் ஒன்று வாழவும் பலர் ஒன்றித்து வாழ வழிகாட்டும் இறைவன் அருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக ஜெபிப்போம்.

இயேசு இந்த மனிதரைத் தீய ஆவியிடமிருந்து மட்டும் விடுவிக்கவில்லை, மாறாக அவர் தம்மிடமிருந்தும், உறவினர், குடும்பத்தினரிடமிருந்தும், ஊர், சமூகத்தைவிட்டும் பிரிந்திருந்த நிலையை மாற்றி, மீண்டும் அவரை ஒரு முழு மனிதராக, சமூகத்தின் முழு உறுப்பினராக மாற்றி அனுப்புகிறார்.

மன்றாடுவோம்: 

நாம் பல நேரங்களில் நல்ல பணிகளைச் செய்யும் போது, அங்கு அது நல்ல பணி என அறிந்திருந்தும்,  அந்த பணியை நாம் செய்து கொண்டிருப்பதால் அங்கு இருக்கக்கூடிய சிலர், தாங்கள்  பாதிக்கப்படுவதாக உணர்ந்து எங்கள் பகுதியில் நீங்கள் உங்கள் நல்ல பணிகளைச் செய்ய வேண்டாமெனக் கூறி நம்மை அவ்விடத்தை விட்டு அகற்றக்கூடிய பணியில் ஈடுபடலாம். இத்தகைய நிகழ்வுக்கு உதாரணமாக, நாம் எத்தனையோ நிகழ்வுகளை குறிப்பிடலாம்.

    இரோம் சர்மிளா என்ற பெண்மணியை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம்.  இராணுவ அதிகாரிகளின் தவறான செயல்பாடுகளை எதிர்த்து,  உண்ணாவிரதப் போராட்டத்தை பல ஆண்டுகளாக மேற்கொண்டவர். ஆனால் அவர் தேர்தலை சந்தித்தபோது, அவரை அந்த மக்கள்  நிராகரித்தார்கள். இதுபோல எத்தனையோ நபர்களை நாம் பட்டியலிடலாம். இத்தகைய சூழ்நிலைகளை நாம் நமது வாழ்வில் சந்திக்கின்ற போது மனம் தளராது ஆண்டவர் இயேசுவைப் போல, செல்லக்கூடிய இடங்களில் எல்லாம் நன்மையை செய்வோம். ஓரிடத்தில் நாம் நிராகரிக்கப்பட்டால் அங்கேயே நாம் தேங்கி விடாது ஆண்டவரின் அருள் துணையை நாடி நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை உணர்ந்தவர்களாய் அடுத்த அடியை எடுத்து வைத்து தொடர்ந்து பயணிப்போம்.  நம்மை ஏற்றாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நன்மை செய்வது மட்டுமே நம் இலக்காக இருக்க வேண்டும்.   அந்த இலக்கை நோக்கி பயணிக்க இறையருள் வேண்டுவோம்.





சனி, 29 ஜனவரி, 2022

பொதுக் காலத்தின் 4-ஆம் ஞாயிறு 3-ஆம் ஆண்டு (30.01.2022)

 

பொதுக் காலத்தின் 4-ஆம் ஞாயிறு
3-ஆம் ஆண்டு



நாள் : 30.01.2022


திருப்பலி முன்னுரை
இறைமகன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! உங்கள் அனைவரையும் இக்கல்வாரி பலிக்கு அருள்பணியாளர்கள் மற்றும் வளன் அன்பியத்தின் சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்;.. 
இன்றைய திருவழிபாட்டின் மையக்கருத்தாக இருப்பது அன்பு. நமது செயல்கள் அனைத்திலும் அன்பே முதன்மையானதாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. பவுலடியாரும் அன்பின் பரிமணங்களை இன்றைய வாசகங்களில் அடுக்கிக்கொண்டே செல்கிறார். அன்புத் தான் இந்த உலகிலேயே மிகச் சிறந்த பண்பு என்றும் அவர் நமக்கு விளக்குகிறார்.
அன்பை அடிப்படையாகக் கொண்டு நற்செய்தி அறிவிக்கும் இறைவாக்கினர்களுடைய பணி எவ்வளவு துன்பங்கள்  நிறைந்ததாக இருந்தாலும் அன்பின் அடிப்படையில் துன்பங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து அன்பு பணியினை நாம் முன்னெடுத்துச் செல்ல அழைக்கப்படுகிறோம். 
அழைக்கும் இறைவனுடைய குரலுக்கு செவிக் கொடுத்தவர்களாய் நம் வாழ்வில் அன்பின் அழைப்பை ஏற்றுக் கொண்டு அனைவரையும் அன்பு செய்து வாழ இறையருளை வேண்டி இன்றைய திருப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம்.

மன்றாட்டுக்கள்

1. அன்பே உருவான இறைவா! திருத்தந்தை. ஆயர்கள், அருள்தந்தையர்கள், அருள்சகோதரிகள், பொதுநிலையினர் அனைவருக்காக மன்றாடுகிறோம். இவர்கள் அனைவரும் நீர் விடுத்த அழைப்பை நன்கு உணர்ந்து உமது அன்பும், உடனிருப்பே எங்களுக்கு இவ்வுலகில் எல்லா வெற்றிகளையும் தேடித்தரும் என்பதை உணர்ந்துச் செயலாற்ற அவர்களுக்கு தேவையான ஆற்றலை தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்பின் அரசரே எம் இறைவா! எம் நாட்டுத் தலைவர்களும் மக்களும் அன்பே அனைத்திற்கும் முதன்மை என்பதை உணர்ந்திடவும்; பொறுமை, பரிவு போன்ற அன்பின் விழுமியங்களைத் தங்கள் வாழ்வில் பெற்றுச் சமத்துவச் சமுதாயத்தை அமைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


3. அன்பின் நாயகனே எம் இறைவனே! எங்கள் குடும்பங்கள் உமது அன்பை நிறைவாய் பொழிந்து, நாங்கள் உம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பதை உணர்ந்தவர்களாக வாழவும், உமது அன்பின் சாட்சிகளாக இவ்வுலகில் வலம் வரவும், இறையரசை அறிவிப்பவர்களாகவும் வாழவேண்டிய அருள்வரங்களை நிறைவாய் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பை விதைத்த இயேசுவே, உலகமெங்கும் நிலவும் போட்டிகளுக்கும், பயங்கரவாதத்திவிற்கும் முக்கியக் காரணமான அன்பில்லாமையைப் போக்கிடவும், அன்பால் எல்லோரையும் நாங்கள் எங்கள் சகோதர சகோதரிகளாய் ஏற்றுக்கொள்ள நல் எண்ணங்களை அருளவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



மறையுரை

இயேசுவில் அன்புக்குரியவர்களே!
    மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருமே இந்த உலகத்தில் அன்பை விதைக்கவே அழைக்கப்படுகிறோம். நாம் கண்ணில் காணுகின்ற  ஒவ்வொருவரையும் அன்பு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். பல நேரங்களில் நாம் பலரால் புறக்கணிக்கப்படலாம், பலரின் எதிர்ப்புகளுக்கு ஆளாகலாம். ஆனால் அன்பு செய்வதை மட்டுமே நாம் நம் இலக்காக கொண்டுச் செயல்பட அழைக்கப்படுகிறோம்.
  இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் எரேமியாவை அழைப்பதையும், அவரை தம் இறைவாக்குப் பணிக்கு தகுதிபடுத்தியதையும் வாசிக்க கேட்டோம். எரேமியாவின் அழைப்பு இறைவனது வார்த்தைகளை யூதாவின் தலைவர்களுக்கும், அரசர்களுக்கும், குருக்களுக்கும் எடுத்துரைப்பதாகும். அதிலும் குறிப்பாக யூதாவின் தலைவர்களும் அரசர்களும், குருக்களும் இறைவனுடன் செய்த உடன்படிக்கைக்கு எதிராக செய்கின்ற தவறுகளையும், தவறான சிலைவழிபாட்டையும் சுட்டிக்காட்டும் ஒரு உயரியப் பணி. இத்தவறுகளில் இருந்து தங்களை சரி செய்யவில்லை என்றால் அது எருசலேம் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை எடுத்துரைக்கின்ற பணி. இதனால் எரேமியா சந்தித்த இடர்பாடுகள் ஏராளம். தங்களிடம் குற்றம் காண இவர் யார்? இவரது வார்த்தையை இறைவனது வார்த்தை என்று நாங்கள் எப்படி ஏற்பது? ஏங்களை விட வலிமையானவரா இவர்? என்ற கோணத்தில் பலவிமான இன்னல்களை சந்திக்க நேர்ந்தது. எனவே பலரின் ஏளனத்திற்கும், கேலிப் பேச்சிற்கும், வன்முறைக்கும், சிறைத்தண்டனைக்கும் ஆளானர். ஆனாலும், இறைவாக்கினர் எரேமியா தன் இறைவாக்குப் பணியிலிருந்து பின்வாங்கவே இல்லை. ஏளனம் செய்து எள்ளி நகையாடிய மக்களையும் இறைவனது அன்பு மக்களாக மாற்றிட தொடர்ந்து இறைவாக்கு பணியாற்றியவர் இந்த இறைவாக்கினர் எரேமியா. இவரை போலவே அன்பால் அனைவரையும் இறைவனிடம் அழைத்துச் செல்ல நாம் அழைக்கப்படுகின்றோம்.
    இந்த அன்பையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் வலியுருத்துகிறார். இந்த உலகத்தில் உயரிய நெறி என்றால் எது என்பு மட்டுமே இந்த அன்பின் அடிப்படையில் தான் இயேசு தன் உயிரை நமக்காக தந்தார். பவுல் கொரிந்து நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தில் இந்த அன்பை அதிகமாக வலியுருத்துகிறார். காரணம் இந்த கொரிந்து நகரம் ஒரு வியபார நகரமாகும். பலதரப்பட்ட மக்கள் வியாபார நோக்கத்தில் குடியேரிய செவ்வம் படைத்தவர்களின் கூடாரமாக திகழ்ந்த இடம் அது. பணம் பத்தும் செய்யும் என்பதற்கு ஏற்ப தாங்களே உயர்ந்தவர்கள்., தங்களுக்கு அனைத்து திறமைகளும் உண்டு என்ற மமதையில் வாழ்ந்தவர்கள் அவர்கள். ஆனால் திருத்தூதர் பவுல் அனைத்தும் இருந்தாலும் அடிப்டையானது அன்பு என்பதை அவர்களுக்கு வலியுருத்துகிறார். அதைத்தான் இன்றைய வாசகங்கள் நமக்கும் வலியுருத்துகின்றன. பவுலின் இத்தகைய போதனை அவர்களிடையே காணப்பட்ட போட்டி, பெறாமை, நான் என்ற மமதையை சுட்டிக்காட்டியது. எனவே கொரிந்து நகர மக்களின் எதிர்ப்பை பவுல் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும் தன் பணியிலிருந்து பின்வாங்கவில்லை பவுல். இவரது வாழ்வு நமக்கு நம்பிக்கையோடு அன்பின் பணியை அகிலத்தில் முன்னெடுக்க அழைப்பு தருகிறது.
    இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட இயேசு எசாயா இறைவாக்கினரின் சுருளேட்டை வாசித்த பிறகு இன்று வாசிக்க கேட்ட இறைவாக்கு தன்னில் நிறைவேரியது என்று கூறிய போது அதை அங்கு இருந்தவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. மெசியாவை பற்றி இக்கூற்று மெசியாவை எதிர்நோக்கும் யூதர்களுக்கானது பிற இனத்தாரோடு இணைந்து சொல்லும் இவருக்கு எப்படி இது பொருந்தும் என எண்ணி கோபம் கொண்டே இவர் யோசேப்பின் மகன் தானே! என்று இயேசுவின் பிறப்பை சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் இயேசு தான் யாருக்காக, எதற்காக அனுப்பப்பட்டிருக்கிறேன் என்பதை, தெளிவு படுத்துகிறார். எலியா மற்றும் எலிசா போல தன்னுடைய இறைவாக்குப் பணியும் எல்லாருக்கும் உரியது என்பதை ஆணித்தரமாக வலியுருத்துகிறார். ஏனெனில் கடவுள் அனைவரையும் ஒன்றென கருதினார். அனைவருக்கும் நலமானதை முன்னெடுத்தார்.  இந்த ஆண்டவரின் அடிச்சுவட்டை பின்பற்றுகின்ற நாமும் அன்பின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள அழைக்கப்படுகிறோம். இன்று நமது நாட்டில் நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள சிறையில் உள்ள அருள்சகோதரி சகாய மேரியின் வாழ்வும் இந்த அன்பின் பதையில் அமைந்ததே. 153 வருடங்களாக பெண்களுக்கான கல்வி பணியை தொடரும் அருள்சகோதரிகளின் வாழ்வில் அவர்கள் சந்தித்துவந்த சவால்களுல் இதுவும் ஒன்று. அன்பின் பாதையில் பயணம் செய்து துன்பங்களை சந்திக்கும் நபர்களுக்காக நாம் செபிக்க கடமைப்பட்டுள்ளோம்.   எப்படி இறைவாக்கினர் எரேமியாவும், திருத்தூதர் பவுலும், இயேசுவும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அன்பின் பாதையில் பயணம் செய்து அனைவருக்கும் வழிகாட்டினார்களோ அவர்களைப் போல நாமும் சவால்களுக்கு மத்தியிலும் நாம் ஆண்டவரின் அன்பு பதையில் பயணம் செய்து, பகைப்பவரையும் மன்னித்து அன்பு செய்து வாழ அழைக்கப்படுகிறோம். இதற்கான அருளை இறைவன் நமக்கு தர இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து செவிப்போம். 


எல்லாச் சூழலிலும் நல்லதை செய்ய...(30.01.2022)

 எல்லாச் சூழலிலும் நல்லதை செய்ய...




இயேசுவில் அன்புக்குரியவர்களே!

    கடவுள் நாம் பிறப்பதற்கு முன்பாகவே நம்மை அறிந்தவர். நம்மை இவ்வுலகத்தில் அவர் பிறக்க வைத்ததற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கத்தை கண்டுகொண்டு இச்சமூகத்தில் பயணம் செய்ய நாம் அழைக்கப்படுகின்றோம். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருமே இந்த உலகத்தில் அன்பை விதைக்கவே அழைக்கப்படுகிறோம். நாம் கண்ணில் காணுகின்ற  ஒவ்வொருவரையும் அன்பு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். பல நேரங்களில் நாம் பலரால் புறக்கணிக்கப்படலாம். 


    இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவை அவரது சொந்த ஊரில் உள்ளவர்கள் புறக்கணிக்கிறார்கள்.  ஆனால் இயேசு நலமானதை செய்தார்.  நாமும் அவரைப் போலவே  நலமானதை செய்ய வேண்டும்.  அன்போடு அனைவரிடத்திலும் பழக வேண்டும். நம்மை புறக்கணிப்பவர்களையும் அன்பு செய்ய வேண்டும்.  அதற்காகத்தான் இறைவன் நம்மை அழைத்தார். அன்று எரேமியாவை  அழைத்தது போல, நம்மை அழைத்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டு, வாழ்வில் எப்போதும், எல்லாச் சூழலிலும் நல்லதை செய்ய இறையருள் வேண்டுவோம்.






வெள்ளி, 28 ஜனவரி, 2022

இக்கரைக்கு அக்கரை பச்சை...(29.01.2022)

இக்கரைக்கு அக்கரை பச்சை...



    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    இக்கரைக்கு அக்கரை பச்சை என்று கூறுவது போல, பல நேரங்களில் ஊருக்கு அதிகமாக உபதேசம் செய்யக்கூடிய நபர்கள் எல்லாம், தங்கள் வாழ்வில் ஒரு இன்னல் என்று வருகின்றபோது, தடுமாறக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இத்தகைய மனிதர்களாகத் தான் இயேசுவின் சீடர்களை இன்றைய நாள் வாசகங்களில்  காணமுடிகிறது.  இயேசுவோடு இந்த சமூகத்தில் அவர்களும் பயணம் செய்தவர்கள்.

    இயேசு செய்த அரும் அடையாளங்களைக் கண்டவர்கள். இயேசு செய்த புதுமைகளை எல்லாம் கண்டு வியந்து போனவர்கள். ஆனால் தங்கள் வாழ்வில் ஒரு துயரம் வருகின்றபோது, என்ன செய்வது என தெரியாது உயிரை காத்துக் கொள்ள வேண்டுமென அஞ்சி நடுங்குகிறார்கள். அவர்களின் நடுக்கத்தையும் அச்சத்தையும் அறிந்த இயேசு அவர்களுக்கு நம்பிக்கையை தருகிறார். அங்கு இருக்கக்கூடிய இன்னலையும் அகற்றுகிறார்.  

    நாம் நமது வாழ்வில் பல நேரத்தில் நம்பிக்கையை பற்றி பேசுகிறோம். ஆனால் வாழ்வில் இக்கட்டான சூழலை சந்திக்கின்ற போதெல்லாம் நாம் நமது நம்பிக்கை எவ்வாறு உள்ளது என்பதை சிந்திக்கவும், அதனை சீர் தூக்கிப் பார்த்து ஆழமான நம்பிக்கையோடு பயணிக்கவும் இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம்.



வியாழன், 27 ஜனவரி, 2022

இறையாட்சி என்பது என்ன?(28.01.2022)

 இறையாட்சி என்பது என்ன?



    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்

    இறைவனது விருப்பம் நிறைவேறுவது தான் இறையாட்சி. இறைவனது விருப்பம் எப்படி நிறைவேறும்? இறைவன் இது நடக்க வேண்டும், அது நடக்க வேண்டும் எனச் சொல்லி நிறைவேறுவது அல்ல இறையாட்சி.  இறைவனது விருப்பங்கள் அனைத்தும் இம்மண்ணில் உள்ள ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும், பிரதிபலிக்கப்படுவது தான் இறைவனது இறையாட்சி ஆகும்.


    ஒரு சிறிய கடுகு விதை வளர்ந்து பல  பறவைகள் வந்து தங்கக் கூடிய வகையில் பயன்படுகிறது என்றால், கடவுளின் படைப்பின் சிகரமான மனிதர்களாகிய நாம் நமது செயல்பாடுகளால், இந்த அகிலம் முழுவதும் மகிழும் வண்ணம், இந்த அகிலத்தில் பல நன்மைகளை செய்யக்கூடியவர்களாய் இருக்க வேண்டும் என்பதுதான் இறைவனது விருப்பம். அந்த விருப்பம் நிறைவேறுவது தான்  இறையாட்சியின் மதிப்பீடாக மாறுகிறது. சமத்துவத்தோடும், அன்போடும், நீதியோடும், நேர்மையோடும் நாம் வாழுகின்ற சமூகத்தில் ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொண்டு, தோள் கொடுத்து, எப்போதும் ஒருவர் மற்றவருக்கு துணையாக இருந்து பயணிக்கக் கூடியவர்களாக நாம் மாறுவதும், இவ்வுலகத்தில் உள்ள ஒட்டுமொத்த நன்மைகளையும் உள்ளத்தில் இருத்துவதோடு நிறுத்தி விடாமல், அதனை நமது வாழ்வு மூலம் வெளிப்படுத்துவதுமே இறைவனது ஆட்சி. அதுவே இறைவன் விரும்புவது. இறைவன் விரும்பும் இறையாட்சியின் மதிப்பீடுகளை நாம் நமது வாழ்வில் செயலாக்கப்படுத்த இறையருளை வேண்டுவோம்.




புதன், 26 ஜனவரி, 2022

ஒளிவிளக்காகிட...(27.01.2022)

     ஒளிவிளக்காகிட...

    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    இருளைப் பழிப்பதை விட ஒளியை ஏற்றுவது மேல் எனக் கூறுவார்கள். நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் ஆண்டவரது இறைவார்த்தையை அதிகம் கேட்டிருக்கிறோம்.  அதனை வாழ்வாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறோம்.  ஆனால் அதனை நாம் செயல்படுத்துகிறோமா?  என்ற கேள்வி வரும்போது அங்குதான் தடுமாற்றமும் அமைதியும் நிலவுகிறது.

    ஆண்டவரின் வார்த்தைகள் வெறும் கேட்பதற்கானது  மட்டுமல்ல.  அவை செயலாக்கப்படுத்தப்பட வேண்டியவை.  ஏற்றப்பட்ட ஒரு விளக்கானது, விளக்குத் தண்டின் மேல் இருக்கும் போதுதான் அதன் பயனானது அனைவருக்கும் கிடைக்கும்.  மாறாக அதனைக் கொண்டு போய் ஒரு மரக்காலுக்கு அடியில் வைத்தால், அதன் ஒளியானது  பலருக்கு கிடைக்காது. அது போலத்தான், ஆண்டவரின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டேயிருந்தால் அவை நமக்கோ அடுத்தவருக்கோ பயன் தராது. கேட்ட வார்த்தைகள் நமது வாழ்வில் செயலாக்கப்படுத்தப் படும் போது தான், நாம் இந்த சமூகத்தில் பலருக்கு ஒளி வீசக்கூடிய, ஏற்றப்பட்ட ஒரு ஒளியாக, அதுவும் விளக்குத் தண்டின் மீது வைக்கப்பட்ட ஒரு ஒளியாக, நம்மால் இருக்க முடியும்.

    நாம் இறைவார்த்தைகளைக் கேட்டு விட்டு நகர்ந்து விடாமல், கேட்ட இறைவார்த்தைகளை வாழ்வாக்கி, பலருக்கு ஒளி தரக்கூடிய விளக்குத் தண்டின் மீது வைக்கப்பட்ட ஒளிவிளக்காகிட இறையருள் வேண்டுவோம்.









செவ்வாய், 25 ஜனவரி, 2022

நாம் விழுந்திருக்கும் நிலம் எது ?(26.01.2022)

    
நாம் விழுந்திருக்கும் நிலம் எது ?





    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்


    மண்ணில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவருமே இந்நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகள் தான்.  இந்த நிலத்தில் நாம் படைக்கப்பட்டதன் நோக்கம், நாம் விருட்சமாக வளர்ந்து பலன் தர வேண்டும் என்பதற்காகவே.  ஆனால் பல நேரங்களில் நாம் எந்த நிலத்தில் விழுந்திருக்கிறோம் என்பதை அலசிப் பார்ப்பது வாழ்க்கையில் அவசியமான ஒன்றாகும். 

    விதைக்கப்பட்ட விதை ஒன்று தான். அது விழுந்த இடமோ மாறுபடுகிறது. விழுந்த இடத்திற்கு ஏற்ற வகையில் விருட்சம் உருவாகிறது. நாம் எந்த நிலத்தில் விழுந்து இருக்கிறோம்  என யோசித்துப் பார்ப்போம். பாலை நிலமா? பாதையோரமா? பாறையின் மேல் தளமா? அல்லது நல்ல நிலமா? எங்கு நாம் விழுந்து கிடக்கிறோம்?  விழுந்து கிடக்கிறோம் என்றால் நாம் பிறந்திருப்பது அர்த்தம் அல்ல.

    ஆண்டவரின் வார்த்தையானது நமது உள்ளத்தில் விதைக்கப்பட்டது. அந்த இறை வார்த்தை நமது உள்ளத்தில் இருந்து எத்தகைய செயல்பாட்டை நம்மை செய்ய வைத்திருக்கிறது? பாலை நிலத்தில் விழுந்த விதை போல நமது செயல்பாடுகள் இருக்கிறதா? அல்லது பாறை மீது விழுந்த விதை போல நமது செயல்பாடு உள்ளதா? முட்களிடையே விழுந்த விதை போல நமது செயல்பாடு உள்ளதா? அல்லது நல்ல நிலத்தில் விழுந்த விதை போல நமது செயல்பாடு உள்ளதா? நல்ல நிலத்தில் விழுந்த விதை போல நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதே இறைவனது விருப்பம். அவரது விருப்பம் நம்மில் நிறைவேற நாம், விழுந்திருக்கும் நிலம் எது என்பதை கண்டு கொண்டு, ஆண்டவருக்கு விளைச்சலைத் தரக்கூடிய, அவரது விருப்பப்படி செயல்படக்கூடிய,  நல்ல பணியாளர்களாக இறை அருள் வேண்டுவோம்.






திங்கள், 24 ஜனவரி, 2022

பவுலின் மனமாற்றப் பெருவிழா (25.01.2022)

வுலின் மனமாற்றப் பெருவிழா 



இயேசுவில் அன்புக்குரியவர்களே!

    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்

    இன்று நாம் பவுலின் மனமாற்றப் பெருவிழாவை கொண்டாடுகிறோம். இந்த நல்ல நாளில் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொண்டு பயணிக்க அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்பிக்கையோடு பயணிக்க நமக்கு அழைப்பு தருகின்றார்.


உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர். என்ற வார்த்தைகளை வாழ்வாக்கியவர் பவுல்.

    நம்பிக்கையோடு பயணிக்கும் போது நாம் மகத்துவமான பல பணிகளை செய்ய முடியும் என்பதை எடுத்துரைக்கிறது பவுலின் வாழ்வு. பவுலும் ஆண்டவர் இயேசுவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மனிதனாக மாறியதற்கு பிறகு, பலவிதமான அரும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தார். குறிப்பாக, கடவுளை அறியாத புறவினத்தாரை தேடிச்சென்று ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவித்தார்.

    நாமும் அவரைப் போல, நற்செய்தியை நம்பக்கூடிய நல்ல பணியாளர்களாக மாறுவோம். ஆண்டவர் இயேசுவைப் பற்றிய செய்தியை  அகிலத்தில் உள்ள அனைவரிடத்திலும் அறிக்கையிட, இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.



ஞாயிறு, 23 ஜனவரி, 2022

விமர்சிப்பவர்களுக்கு முன்னால், நாம் பயணம் செய்வோம்...(24.01.2022)

விமர்சிப்பவர்களுக்கு முன்னால், நாம் பயணம் செய்வோம்... 


இயேசுவில் அன்புக்குரியவர்களே!

    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.


எப்படியாவது இயேசுவை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற வேட்கை கொண்ட, மறைநூல் அறிஞர்கள் அடிப்படை இல்லாத ஒரு குற்றச்சாட்டை இயேசுவின் மேல் சுமத்துகிறார்கள். 

இயேசு வாழ்ந்த காலத்தில் பேய்களை ஓட்டக்கூடிய மந்திரவாதிகள் எத்தனையோ பேர் இருந்தனர். பேய் பிடித்திருந்தால் இவர்களை மக்கள் நாடிச்செல்வது சாதாரணமான செயல். இயேசுவிடமும் அந்த நம்பிக்கையோடு தான் மக்கள் பேய்பிடித்தவர்களை அழைத்து வந்திருந்தனர். ஆனால், இயேசு ‘பேய்களின் தலைவன் பெயல்செபுலைக்கொண்டே பேய்களை ஓட்டுகிறான்’ என்ற குற்றச்சாட்டப்பட்டது. 

ஒரு அரசன் தன்னுடைய வீரர்களைப்பயன்படுத்தி தன்னுடைய அரசை விரிவுபடுத்தத்தான் முயற்சி எடுப்பான். தன்னுடைய வீரர்களைக்கொல்வது தன்னையே அழிப்பதற்கு சமம் என்பதைப்புரியாதவன் பைத்தியக்காரனாகத்தான் இருக்க முடியும். அப்படி இருக்கும்போது பேய்களின் அரசை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிற பெயல்செபூலைக்கொண்டு எப்படி அவனுக்கு உதவிசெய்கிற தீய ஆவிகளை அழிக்க முடியும்? என்பதுதான் இயேசுவின் கேள்வி.


    நாம் வாழ்கின்ற இந்த உலகத்தில், நாம் நமது கடமையை செய்து கொண்டிருக்கும்போது, பல நேரங்களில் நாம் நம் கடமையை செய்வது அடுத்தவரின் பாராட்டைப் பெற வேண்டும் என்பதற்காகவும், அடுத்தவர் பார்த்து நம்மை புகழ வேண்டும் என்பதற்காகவும் என்று எள்ளி நகையாடக் கூடிய மக்கள் ஏராளமானோர் இவ்வுலகில் உண்டு.  ஆனால் அவர்களிடத்தில், எதற்காக நாம் இப்பணியை செய்கிறோம்? நாம் நம் கடமையை தான் செய்து கொண்டிருக்கிறோம் என்பதையெல்லாம் எடுத்துரைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நாம் நமது பணியை தொடர்ந்து, நமது கடமையை உணர்ந்து இயேசுவைப் போல செய்து கொண்டிருக்க அழைக்கப்படுகிறோம்.


    நம்மை எள்ளி நகையாடுபவர்கள் எல்லாம்,  நேரமும் காலமும் வரும்போது, தாங்கள் செய்தது தவறு என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். இயேசுவின் செய்கையை பலர் குற்றம் சாட்டினார்கள். ஆனால், இயேசு அவர்களிடத்தில் அவர்களின் தவறான எண்ணங்களையும் வார்த்தைகளையும், அவர்களது வார்த்தைகளை கொண்டே அவர்களுக்கு பாடம் கற்பித்தார்.  நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் கடமையைச் செய்யும்போது எள்ளி நகையாடப்படக்கூடிய நேரங்களில் நாம் நம் கடமையை செய்வோம். அக்கடமையை செய்வதன் வழி,  நம்மைப் பார்ப்பவர்கள், நம்மை எள்ளி நகையாடுபவர்கள், நமது பணியின் உண்மையையும் மகத்துவத்தையும் உணர்ந்து கொள்ள, இறைவன் அவர்கள் உள்ளத்தை தூய ஆவியால் தூண்ட  வேண்டும் என இறைவனிடத்தில் மன்றாடுவோம்.  அந்த தூய ஆவியானவரை மனதில் இருத்திக்கொண்டு,  நமக்கு பின்னால் நின்று நம்மை விமர்சிப்பவர்களுக்கு முன்னால், நாம் பயணம் செய்வோம், கடமையை செய்வோம், கடவுள் நம்மை காத்தருள்வார் என்ற நம்பிக்கையோடு.






சனி, 22 ஜனவரி, 2022

வார்த்தைகள் உயிருள்ளவை...(23.01.2022)

வார்த்தைகள் உயிருள்ளவை...




இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இறைவனது வார்த்தைகள் உயிருள்ளவை. ஆற்றல் வாய்ந்தவை. எந்த பக்கமும் வெட்டக்கூடிய இருபுறமும் கூரான வாள் போன்றவை.


கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.

எபிரேயர் 4:12


இந்த இறைவார்த்தையினை இயேசு கிறிஸ்து எடுத்து வாசித்த போது அவரது பணியானது என்ன என்பதைக் கண்டுகொண்டார்.  ஏழைகளுக்கு நற்செய்தியும், சிறைப்பட்டோருக்கு விடுதலையும்,  பார்வையற்றோருக்கு பார்வையும் என அவரது பணி இந்த சமூகத்தில் எது? என்பதை உணர்ந்து கொள்ள அவருக்கு வழிகாட்டிய வகையில் அமைந்தது எசாயாவின் சுருளேடு.  நாம் நமது கையில் வைத்திருக்கும் திருவிவிலியத்தை ஒவ்வொரு நாளும் எடுத்து வாசிக்கும் பொழுது, நமது வாழ்வின் நோக்கத்தையும் பணியையும் நாம் கண்டுகொள்ள முடியும். நாம் அனைவரும் ஆண்டவர் இயேசுவோடு இணைந்திருக்கிறோம். அந்த இயேசு இவ்வுலகத்தில் நம்மோடு வார்த்தையின் வடிவில் இருக்கிறார். அவரது வார்த்தைகள் நமது வாழ்வோடு பின்னிப் பிணைந்தவையாக இருக்க வேண்டும். உடல் உறுப்புகள் இணைந்து இருப்பது போல ஆண்டவரின் வார்த்தைகள் நம்மோடு இணைந்து இருக்க வேண்டும். அவரது வார்த்தைகள் நமது வாழ்வில் செயலாக்கப்பட வேண்டும். அவ்வாறு இருப்போமாயின், நாம் இறைவன் இயேசுவுக்கு உரியவர்களாக அவரது இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழ்பவர்களாக இச்சமூகத்தில்  இருக்க முடியும். எஸ்ரா ஆண்டவரின் வார்த்தைகளை வாசித்தது போல, நாமும் ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் வார்த்தையை நமது குடும்பத்தில் வாசிக்கவும், சிறுவர் பெரியோர் என ஒவ்வொருவரையும் வாசிக்க ஊக்கமூட்டவும், அவ்வாறு இறைவனது வார்த்தைகளை வாசிப்பதன் வழி, இந்த சமூகத்தில் நாம் செய்ய வேண்டிய பணி எது? என்பதை கண்டு கொண்டு அதனை செயலாக்கிடவும் இறைவன் இன்றைய நாளில் அழைக்கின்றார். அழைக்கும் இறைவனுக்கு கொடுப்போம்.





வெள்ளி, 21 ஜனவரி, 2022

இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்வாக...(22.01.2022)

 இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்வாக...



அன்புக்குரியவர்களே!

    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.


    பல நேரங்களில் நாம் இந்த சமூகத்தில், நேரம் தெரியாத அளவிற்கு பல விதமான பணிகளில் மூழ்கிக்கிடக்கிறோம்.  அவ்வாறு மூழ்கிக் கிடக்கின்ற நேரங்களிலெல்லாம் பலர் நம்மைப் பற்றி பலவற்றை பேசலாம்.


    ஆனால் நாம் எடுத்துக்கொண்ட பணியினை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே நாம் கவனம் செலுத்துகிறோம். அதுபோலவே நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் ஆண்டவர் இயேசுவின் இறையாட்சியின் மதிப்பீடுகளை, நமது வாழ்வாக மாற்றிக்கொண்டு  எல்லா நேரமும் அதனை சிந்தித்து அந்த பணிகளை சிறப்புடன் செய்ய இறையருளை வேண்டுவோம்.



வியாழன், 20 ஜனவரி, 2022

புனித செபஸ்தியார் திருநாள்...(20.1.2022)

புனித செபஸ்தியார் திருநாள்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே உங்கள் அனைவரையும் இன்றையநாள் கல்வாரி திருப்பலிக்கு அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


 கி.பி.257 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் பிறந்த  செபஸ்தியாரின் திருநாளை சிறப்பிக்க திருஅவை இன்று நமக்கு அழைப்பு தருகிறது. இந்த நல்ல நாளில் செபஸ்தியாரின் நாமத்தை தங்கியிருக்கின்ற அனைவருக்கும் நாம விழா வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கின்றேன்.


  பிரான்ஸ் நாட்டில் பிறந்தாலும்  இத்தாலியில் உள்ள மிலன் நகரில் வளர்ந்த இவர்  உரோமை இராணுவத்தில் படைவீரராகச் சேர்ந்தவர் இவர். இராணுவத்தில் பொறுப்போடு செயல்பட்டு  படைத்தளபதியாக உயர்த்தவர் இவர். இவருடைய காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வேதகலாபனைகள் அதிகமாக நடந்தன. ஒவ்வொருநாளும் கிறிஸ்தவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள், கொடுமைப்படுத்தப்பட்டார்கள், சித்ரவதை செய்யப்பட்டார்கள். இதனால் நிறைய கிறிஸ்தவர்கள் தங்களுடைய கிறிஸ்தவ நம்பிக்கையை துறந்து வாழத்தொடங்கினார்கள். 

நம்பிக்கையை துறந்த மக்களைத் தேடிச் சென்று , நம்பிக்கையில் உறுதிபடுத்தியவர் நம் புனித செபஸ்தியார் . பலரை கிறிஸ்துவுக்காக உயிர்துறக்கும் அளவிற்கு நம்பிக்கையூட்டியவர் இவர்.   ஆளும் அரசனை விட அஞ்ச வேண்டியது ஆண்டவர் ஒருவருக்கே என்பதை உணர்ந்தவராய் கிறிஸ்தவ நம்பிக்கையில் நிலைத்திருந்து மறை சாட்சியாக மரித்தவர். பலரும் மறை சாட்சியாக மாறிட வழிகாட்டியவர். இந்த புனிதரை நினைவு கூறுகின்ற இந்த நல்ல நாளிலே நாமும் நம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையில் நிலைத்து இருந்து ஆண்டவர் இயேசுவுக்கு உகந்த ஒரு சீடத்துவ வாழ்வை வாழக்கூடியவர்களாய் அஞ்சா நெஞ்சத்தோடு  இயேசுவின் நற்செய்தியை நமது வாழ்வாக்கிட  இறை அருள் வேண்டி இணைந்து  இந்த திருப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம் 

ஆசிகளை மற்றவரோடு பகிர்ந்து வாழ்வோம்...(21.01.2021)

    ஆசிகளை மற்றவரோடு பகிர்ந்து வாழ்வோம்...



    ஆண்டவர் இயேசு கிறிஸ்து, தாம் விரும்பியவர்களை தம்மிடம் வரவழைத்தார். தாம் வரவழைத்தவர்களுக்கு அதிகாரத்தை வழங்கினார்.  அந்த அதிகாரத்தைக் கொண்டு அவர்கள் பலவிதமான நற்செயல்களில் ஈடுபட்டார்கள். 

    இன்று நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரைத் தேடி வந்திருக்கிறோம் என்றால்,  நாம் அனைவரும் அவர் விரும்பக் கூடியவர்கள். நம்மை அவர் அழைத்திருக்கிறார். அவரது அழைத்தலை உணர்ந்திருக்கிறோம். 

    எனவே இன்று அவரைத் தேடி நாம் வந்திருக்கிறோம். இன்றைய நாளில் அவரிடத்தில் நாம் பலவிதமான ஆசிகளைப் பெற்றுக் கொள்வோம். பெற்றுக்கொண்ட ஆசிகளை மற்றவரோடு பகிர்ந்து, இச்சமூகத்தில் இயேசுவின் சீடர்களை போல விளங்கிட அருள் வேண்டுவோம்.



புதன், 19 ஜனவரி, 2022

அன்பின் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க...(20.01.2022)

 

அன்பின் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க...




அன்புக்குரியவர்களே!


    நல்லது செய்யும்போது பலர் நம்மை தேடி தான் வருவார்கள். பலர் நம்மை தேடி வரும்போது நாம் கவனத்தோடு இருந்து, நல்ல பணிகளை தொடர்ந்து இச்சமூகத்தில் முன்னெடுக்கவேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் தீய ஆவிகள் இயேசு முன்னால் வந்து, ‘இறைமகன் நீரே’ என்று கத்தியபோது, இயேசு தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக்கண்டிப்பாய்ச்சொன்னதாக வாசிக்க கேட்டோம்.


 எதற்காக இயேசு தன்னுடைய அடையாளத்தை மறைக்க வேண்டும்? அவர் ஏன் தீய ஆவிகளை தம்மை இறைமகன் என வெளிப்படுத்த வேண்டாம் என்கிறார் என சிந்திக்க அதன்வழி வாழ்வுக்கான பாடம் கற்க  இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம்.

 இயேசுவின் காலத்திலே மக்கள் உரோமையர்களுக்கு அடிமைகளாக இருக்கின்றனர். தங்களை மீட்க கடவுள் மெசியாவை அனுப்புவார், அவர் வந்து நம்மை அடிமைத்தளையிலிருந்து மீட்பார் என்ற நம்பிக்கை மக்களிடையே அதிகமாக இருந்தது. மெசியாவைப்பற்றிய அவர்களின் புரிதலும் ‘வலிமையுள்ள அரசர்’ என்ற பார்வையாகவே இருந்தது. 


இயேசுதான் மெசியா என்ற செய்தி பரவினால், அவர் பின்னால் அணிவகுத்து நிற்க, போரிட மக்கள் தயாராக இருந்திருப்பார்கள். இது தேவையில்லாத பிரச்சனைகளை, குழப்பங்களை நாட்டிலே உருவாக்கும். இயேசு மெசியா தான். ஆனால், மக்கள் எதிர்பார்ப்பது போன்ற மெசியா அல்ல: அவர் அன்பின் மெசியா, மன்னிப்பு வழங்கும் மெசியா, இரக்கத்தை வெளிப்படுத்தும் மெசியா. தவறான வழியில் செல்பவனுக்கு தவறை சுட்டிக்காட்டி அவன் தானாக தன்னை சரி செய்து கொள்ள வழிகாட்டுகின்ற மெசியா இவர் எனவேதான் தீய ஆவிகளையும் தன்னிடமிருந்து நலன்களை பெற்றவர்களையும்  தன்னை வெளிப்படுத்த வேண்டாம் என இயேசு கண்டிப்பாக கூரியதாக மறைநூல் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இயேசுவின் இத்தகைய செயல் நமக்குத் தருகின்ற வாழ்க்கைக்கான பாடம் என்ன என் சிந்திக்கின்ற போது நாம் பின்பற்றுகின்ற நமது இயேசு ஆண்டவரின்பாதை என்பது அன்பின் பாதையாக அரவணைக்கும் பாதையாகஇருப்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். இந்த அன்பின் பாதையில் பயணம் செய்து ஒருவர் மற்றவரை உறவுகளாக எண்ணி அடுத்தவர் நலனில் அக்கறை காட்டக் கூடிய மனிதர்களாக இருக்க அதன்வழி எடுத்துக்காட்டான மக்களாக இச்சமூகத்தில் பல நல்ல பணிகளை செய்து கொண்டே செல்ல நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.

  அழைப்பவர் குரலுக்கு செவி கொடுத்துச் செயல்பட முயலுவோம். அன்பின் பாதையில் பயணித்து  அனைவரையும் நம்மவர்கள் ஆக்கிட இறைவனது அருள் வேண்டுவோம் 


செவ்வாய், 18 ஜனவரி, 2022

எதைச் செய்வது சிறந்தது?(19.01.2022)

 எதைச் செய்வது சிறந்தது?



இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாளின் முதல் வாசகத்தில் சிறுவன் தாவீது கோலியாத்தை என்ற மிகப்பெரிய மனிதனை கடவுளின் துணை கொண்டு எதிர்கொண்டு வெற்றி பெற்றதை குறித்து நாம் வாசிக்கின்றோம்.


இன்றைய நற்செய்தி வாசகத்தில் உன்கூட ஆண்டவர் இயேசு கிறிஸ்து கை தூக்கிய நிலையில் இருந்த ஒரு மனிதனை பலருக்கு முன்பாக எழுப்பி நிறுத்தி போய் நாளில் நன்மை செய்வதால் தீமை செய்வதால் என தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் கேள்வி எழுப்புகிறார் அவர்கள் பதில் ஏதும் கூறாத நிலையில் நன்மை செய்வதற்கு நேரமும் காலமும் அவசியம் அல்ல என்பதை தனது செயலால் உணர்த்தக்கூடிய வகையில் அந்த கை சூம்பிய மனிதனுக்கு நலம் தருகிறார்.



இன்று நாம் வாசிக்கக் கேட்ட இந்த நற்செய்தி பகுதிகள் நமக்குத் தருகின்ற வாழ்க்கை பாடம் என சந்திக்கின்ற போது மனிதர்களாக மண்ணில் பிறந்துள்ள நாம் ஒவ்வொருவருமே நல்லது செய்வதற்கு நேரமும் காலமும் கூடி வரும் என காத்திருக்க வேண்டிய அவசியம் அல்ல ...ஒவ்வொரு நாளும் நாம் நலமான நல்ல பணிகளை முன்னெடுத்து கொண்டு செல்ல இந்த நாள் அழைப்பு தருகிறது .



சமூகத்தில் நாம் நலமான ஒரு பணியைச் செய்ய விரும்புகிறோம். ஆனால் அதனை செய்யும் போது பலர் நம் செய்கையை குற்றம் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு நமக்கு முட்டுக்கட்டையாக வாழ்வில் பலர் இருப்பார்கள். அவர்களுக்கு மத்தியில், அவர்களுக்கு அஞ்சி, நாம் செய்ய நினைத்த நலமான பணிகளை செய்யாமல் விட்டு விட்டுச் செல்வது முறையா? அல்லது அந்தப் பணிகளை செய்வது முறையா? என்ற கேள்வியினைத் தான் இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்குள் எழுப்பி பார்க்க அழைப்பு தருகிறார்.


    கை சூம்பிய ஒருவனை எழுப்பிய போது இயேசுவும் இதுபோன்ற சூழல்களை சந்திக்கின்றார். ஆனால் மற்றவர்களைப் பற்றி அவர் மனதில் கொள்வதை விட, எது நலமானதோ அந்தப் பணியினை அவர் முன்னெடுக்கிறார். அந்த இயேசுவைப் போலத் தான் நாமும் இந்த சமூகத்தில், நம்மைக் குறை கூறுபவர்கள், நம்மீது குற்றம் சாட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை எல்லாம் மனதில் கொண்டு, நல்லது செய்வதை நிறுத்தி விடாது, நல்லது செய்வது தான் முதன்மை என்பதை மனதில் கொண்டு அதனை செய்யக் கூடியவர்களாக வாழ இறையருள் வேண்டுவோம்.


இறைவன் தருகின்ற இந்த அழைப்பை உணர்ந்தவர்களாக மண்ணில் வாழும் ஒவ்வொரு நாளும் நலமான பல நல்ல பணிகளை முன்னெடுத்துச் செல்ல தாவீது கொண்டிருந்த துணிவை நாமும் பெற்றுக்கொண்டு வாழ இறையருள் வேண்டுவோம்.


திங்கள், 17 ஜனவரி, 2022

மனித நேயச் செயல்களில் ஈடுபடுங்கள்...(18.01.2022)

மனித நேயச்  செயல்களில் ஈடுபடுங்கள்...



சட்டம் மனிதனுக்காக. சட்டத்திற்காக அல்ல மனிதன். இன்று சட்டத்தின் பெயரால் மனிதனை அடக்கியாளும் நிகழ்வுகள் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் சட்டங்கள் எல்லாம் எதற்காக உருவானது என்று சிந்திக்கின்ற போது, அறநெறியோடு நாம் இந்த சமூகத்தில் வாழ வேண்டும் என்பதற்காக மனிதன் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்டது தான் சட்டங்கள்.


    அந்த சட்டங்களை இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டு,  மனித நேயமற்ற செயல்கள் இச்சமூகத்தில் அரங்கேற நாம் காரணமாக இருத்தல் ஆகாது என்பதை இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் உணர்த்துகிறார். பசியால் வாடுபவனுக்கு, உணவு வைத்திருப்பவன் உணவு தருவது தான் மனித நேயப் பண்பு. ஆனால் அதனை செய்வதை விட்டுவிட்டு, நாம் பல நேரங்களில் சட்டங்களை மட்டுமே இறுகப் பிடித்துக் கொண்டு, அடுத்தவர் செய்கின்ற செயல்களில் குறைகளை காண்கின்றவர்களாக இருக்கின்றோம்.


    ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, குறைகள் காண்பதை தவிர்த்து மனித நேயச்  செயல்களில் ஈடுபடுங்கள் என்று இன்றைய வாசகங்கள் வழியாக உணர்த்துகிறார். இறைவன் உணர்த்துவதை உணர்ந்து கொண்டு வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிட இணைவோம் இன்றைய நாளில்.




ஞாயிறு, 16 ஜனவரி, 2022

நிறைகளை ஏற்று வாழ...(17.01.2022)

நிறைகளை ஏற்று வாழ...



    பழமைக்கும் புதுமைக்கும் இடையே எப்போதும் பலவிதமான முரண்பாடுகள் இருந்து கொண்டுதான் இருக்கும். ஒவ்வொன்றும் தனித்துவமானவை. ஒரு காலத்தில் சரி எனப்படுவதை இன்னொரு காலத்திலும் சரி என எதிர்பார்ப்பது தவறு. ஒரு காலத்தில்  தவறெனப்பட்டது இன்னொரு காலத்தில் தவறாகவே இருக்கும் என எண்ணுவதும் தவறு. காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ற வகையில் அனைத்தும் மாறக்கூடியது தான். இன்றைய நாளில் பழைய வழக்கங்களை முன்னிறுத்தி இயேசுவின் மீது குற்றம்சாட்டக் கூடிய செயலில் பலர் ஈடுபடுகிறார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து அவர்களுக்கு பழமையைப் பின்பற்றுவது தவறு இல்லை, ஆனால் அதில் இருக்கக்கூடிய உண்மையான அர்த்தம் என்ன? மகத்துவம் என்ன? என்பதை உணர்ந்து கொண்டு அதை பின்பற்றுவதே சரியானது என்பதை சுட்டிக் காட்டுகிறார். 


    இயேசுவின் சீடர்கள் நோன்பு இருக்காதிருந்ததை குற்றம் சாட்டக் கூடியவர்களுக்கு இயேசு,  நோன்பிருத்தலின் உண்மை நோக்கம் என்ன? என்பதை எடுத்துரைக்கும் வகையில் அவர்களுக்கு தெளிவுபடுத்துகிறார். ஏன் இத்தகைய வழக்கம் உருவானது? இன்று அந்த வழக்கம் அவசியம்தானா? என்ற கேள்வியை எழுப்பி பார்க்கும் வகையில் இயேசுவின் உரையாடல் அமைகிறது. நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் பெரும்பாலான நேரங்களில் மூத்தவர்களும் இளையவர்களும் ஒருவர் மற்றவர் காலத்தைப் பற்றி குறை கூறிக்கொண்டும், ஒருவரை ஒருவர் வழக்கங்களைப் பற்றி மாறி மாறி முரண்பாடான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டும் பயணிப்பதை நிறுத்திவிட்டு சூழலுக்கு ஏற்ற வகையில் எது உகந்தது? என்பதை உணர்ந்து,  அதன் உண்மை தன்மையை உணர்ந்து, மகத்துவத்தை உணர்ந்து, அதனை பின்பற்றக் கூடியவர்களாக நாம் சமூகத்தில் வலம் வரவேண்டும்.   பழமையிலும் புதுமையிலும் உள்ள முரண்பாடுகளை பேசிக் கொண்டிருப்பதால் எதுவும் இச்சமூகத்தில் நடந்து விடாது. மாறாக, பழமையிலும் புதுமையிலும் இருக்கக்கூடிய நிறைகளை ஏற்றுக் கொண்டு அதனை வாழ்வில் செயலாக்கப்படுத்தும் போது வாழ்வு செழிப்பாக அமையும். நமது வாழ்வு செழிக்க நாம் பழையது புதியது என்று வேறுபாடுகளை கடந்து, நல்லது எது என்பதை மட்டும் முன்னிறுத்தி அந்த நலமானவற்றை  செய்யக்கூடியவர்களாக மாறிட அருள் வேண்டுவோம்.




சனி, 15 ஜனவரி, 2022

பொதுநல பணியைச் செய்ய...(16.01.2022)

பொதுநல பணியைச் செய்ய



கடவுளால் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் சக மனிதர்கள் மீது அக்கறை கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும், அடுத்தவர் துயரத்தை  கண்டுகொள்ள வேண்டும், அடுத்தவர் துன்பத்தில் துணை நிற்க வேண்டும், அடுத்தவருக்கு நம்மாலான உதவிகளை செய்ய வேண்டும், இவ்வாறு அனைத்திலும் அடுத்தவர் நலனை முன்னிறுத்துவதே இன்றைய நாளின் மையச் செய்தியாக அமைகிறது. 

    இயேசு செய்த முதல் புதுமையே  கானாவூர்  திருமணத்தில்  தண்ணீரை இரசமாக மாற்றியது.  இயேசு செய்த இந்த முதல் புதுமை பலருக்கு மகிழ்வைத் தந்தது.  பலரை வாழ வைத்தது. உணவு சார்ந்த புதுமையாகவும் அது அமைந்திருந்தது.

    இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், இயேசுவைப் போல நாமும் பொது நல நோக்கோடு பணிசெய்ய அழைக்கப்படுகிறோம். இன்று நம்மில் பலரும் அடுத்தவர் நமக்கு உதவி செய்ய வேண்டும் என எண்ணுகிறோம். ஆனால் நாம் அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை மறந்து போகிறோம்.


    நாம் பொதுநல நோக்கோடு அடுத்தவரை முன்னிலைப்படுத்தி, அடுத்தவரின் நலனை முன்னிறுத்தக் கூடிய, நலமான பணிகளைச் செய்கின்ற போது, ஆண்டவர் இயேசுவுக்கு உரியவர்களாக மாறுகிறோம். அவ்வாறு மாறவே இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். இத்தகைய பொதுநலப் பணியினை நாம் செய்யும் போது, நாம் ஆண்டவரின் பார்வையில் அழகிய மணிமுடியாகத் திகழ முடியும். இந்த பொதுநல பணியைச் செய்யவே தூய ஆவியானவர் நம்முள் இருந்து நம்மை தூண்டுகிறார். தூய ஆவியானவரின் தூண்டுதலை உணர்ந்து கொண்டு பொது நலப் பணி செய்ய இறையருளை வேண்டுவோம்.



வெள்ளி, 14 ஜனவரி, 2022

நன்மைகள் செய்து கொண்டே...(15.01.2022)

 நன்மைகள் செய்து கொண்டே...




இயேசுவில் அன்புக்குரியவர்களே!

    நல்லது செய்ய எண்ணும் போது நம்மிடம் குறை காண்பவர்கள் அதிகமாக தென்படுவார்கள். குறை கூறுபவர்கள் குறை கூறுகிறார்கள் என்பதை மனதில் இருத்தி, நாம் நல்லது செய்தலை நிறுத்திவிடலாகாது என்ற பாடத்தை இறைவன் இன்றைய நாளில் நமக்கு கற்பிக்கிறார்.


    இயேசு அன்று சமூகத்தில் பாவிகளாக கருதப்பட்டவர்கள் அருகில் அமர்ந்து உணவு உண்டதை தவறு என சுட்டிக்காட்டியவர்கள் மத்தியில், அவர் அதை பொருட்படுத்தாது அவர்களும் கடவுளின் பிள்ளைகள், கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்த்தும் வகையில், அவர்களோடு விருந்தினில் பங்கேற்பதை நாம் இன்றைய நாளில் வாசிக்க கேட்டோம்.


    நாமும் பல நேரங்களில் நல்லது செய்யும் போது, பலர் நம் மீது குறை கூறக் கூடியவர்களாக இருந்தாலும், அவர்கள் கூறும் குறையை மனதில் கொண்டு நாம் செய்யும் நன்மையை நிறுத்தி விடாது தொடர்ந்து நன்மைகள் செய்து கொண்டே பயணிக்க இறையருளை இறைஞ்சி வேண்டுவோம்.



வியாழன், 13 ஜனவரி, 2022

பொங்கல் திருநாள் : "உறவின் பாலம் அமைந்திட"(14.01.2022)

பொங்கல் திருநாள் : "உறவின் பாலம் அமைந்திட"

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 உங்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக் கொள்கிறேன்!
 தை முதல் நாள் பொங்கல் திருவிழாவினை உழவனின் திரு நாளை நாம் கொண்டாடுகிறோம்.  இந்த நல்ல நாளை நன்றியின் நாளாகவும் நாம் கொண்டாடலாம்.  
நமக்கும் - கடவுளுக்கும், நமக்கும் - இயற்கைக்கும், நமக்கும் - சகமனிதனுக்கும் இடையேயான உறவுகளை நினைவு கூர்ந்து, ஒருவருக்கு ஒருவர் நன்றி கூறவும், இழந்து போன உறவுகளை சரிசெய்து கொண்டு,  இணைந்து வாழவும் இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.  எனவே இந்த நல்ல நாளில் "உறவின் பாலம் அமைந்திட" என்ற சிந்தனையின் கீழ்   உங்களோடு என் கருத்துக்களை, சிந்தனைகளை, இறைவனது வார்த்தைகளை, பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

 இறைவன் படைத்த இந்த அழகிய உலகு,  மிகவும் அதிசயமானது.  உருண்டையான இந்த உலகத்தில் கொட்டாத மழைநீர் அதிசயமாக பார்க்கப்படுகிறது. பார்வைக்குள் அடங்காத இந்த பிரபஞ்சமே ஒரு அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.  இந்தப் பிரபஞ்சத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன.  தெரிந்தோ தெரியாமலோ இறைவன் படைத்த இந்த உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொன்றும், ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டதாக இருக்கிறது.  நமது நல வாழ்விற்கு இயற்கை தன்னையே தியாகம் செய்கிறது.  இயற்கையை வளர்த்திட நாம் பல தியாகங்களை செய்கின்றோம்.  நமக்கும் இயற்கைக்கும் இடையேயான உறவு எப்போதும் இணைந்து செல்ல வேண்டும் என்பதில் இறைவன் படைப்பின் தொடக்கத்தில் இருந்தே நமக்கு உறவு பாலத்தை அமைத்திருக்கிறார்.  நாம் சுவாசிக்கின்ற காற்றும்,  நாம் பருகுகின்ற நீரும், நாம் பயன்படுத்துகின்ற பொருட்களும்,  நாம் சார்ந்து இருக்கின்ற அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.  மனிதன் ஒரு சமூகப் பிராணி என்பார்கள்.  ஒருவரோடு ஒருவர், ஒன்றோடு ஒன்று என மனிதன் தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறான்.  தொடர்பில் இருக்கின்றவரை தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.  நமக்கும் இயற்கைக்கும் இடையேயான உறவு, தொடர்பு, துண்டிக்கப்படும் போது, நாம் இயற்கை எய்தியவர்கள் ஆக மாறுகின்றோம்.  மனிதர்களாகிய நாம் மகிழ்வோடு வாழ இறைவன் இயற்கையை தந்தார்.

                              இந்த இயற்கையை நன்றியோடு நினைவு கூருகின்ற நன்னாளாக இந்த நாள் அமைகிறது.  "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பார்கள். இந்த வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. கதிர்கள் வளர்ந்து சாய்ந்து இடையில் இருக்கின்ற வழிகளை மறைத்து கிடக்கும்.  தை மாதம் வந்தால் அறுவடை செய்வார்கள். அப்போது மறைக்கப்பட்ட பாதைகள் எல்லாம் மீண்டும் பார்வையில் தென்படக் கூடியதாக மாறும்.  இதன் அடிப்படையில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.

 இன்னொரு பார்வையும் உண்டு.  தை மாதம் பிறந்தால் நெற்பயிர்களை அறுக்கலாம், விற்கலாம், பணம் கிடைக்கும்.  அதைக் கொண்டு பல நல்ல செயல்களை செய்யலாம் என்ற அர்த்தமும் உண்டு.  தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஒருபுறமிருக்க, தை பிறந்தால் நமது பொருளாதாரம் உயர்கிறது.  பொருளாதாரம் உயர்ந்து விட்டது என எண்ணி, வந்த வழியை மறந்தவர்களாக நாம் செயல்படாது,  நமக்கு இந்த  முன்னேற்றத்தைத் தந்த இயற்கையை நன்றியோடு நினைவு கூர்ந்து இறைவனுக்கு பொங்கலிட்டு இயற்கைக்கு வணக்கம் செலுத்தி, இயற்கையோடு இணைந்து இன்புற்று வாழ இந்த பொங்கல் திருநாள் நமக்கு ஒரு நல்ல நாளாக அமைகிறது. 

         ஆண்டவர் படைத்த இந்த அழகிய உலகத்தில் நமக்கும், இயற்கைக்கும், இறைவனுக்கும் இடையே உள்ள உறவுகளை நினைவு கூர இந்த உறவுகளுக்குள் ஏற்பட்டு இருக்கின்ற விரிசல்களை கண்டுகொள்ள இந்த நாள் அழைப்பு தருகிறது. 

 ஏதோ பொங்கல் திருநாள் வருகிறது, எம் முன்னோர் எல்லாம் பொங்கலிட்டு இறைவனை வழிபட்டார்கள். சூரியனுக்கு பொங்கலிட்டு சூரியனை புகழ்ந்தார்கள்.  ஆடு மாடுகளுக்கு பொங்கல் வைத்து ஆடு மாடுகளை புகழ்ந்தார்கள்.  காணும் பொங்கலன்று காணுகின்ற மனிதர்களுக்கு இடையே எல்லாம் வாழ்த்தை பரிமாறி விட்டுச் சென்றார்கள் என்று சொல்லிவிட்டு நகர்பவர்களாக நாம் இல்லாது,  நமது முன்னோர்கள் உருவாக்கி வைத்த இவையெல்லாம் உறவின் பாலங்களை இணைத்து அமைத்துக் கொள்ள வழிவகை செய்கின்றன என்பதை உணர்ந்தவர்களாய் செயல்பட, இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது. 

                          வேறு எந்த ஒரு இனத்திலும் இல்லாத ஒரு தனிப்பெருமை,  நம் தமிழர்களாகிய நமக்கு உண்டு. தை முதல் நாள் ஆண்டின் முதல் நாளாக கொண்டாடுவதற்கு முன் தினத்தை நாம் போகிப் பண்டிகை என கொண்டாடுகிறோம்.  இந்த நாளில் நாம் நம்மிடம் இருக்கும் தேவையற்றவைகளைக்  கண்டு கொண்டு,  தேவையானதை வைத்துக்கொண்டு, தேவையற்றவைகளை அகற்றிவிட்டு,  புதிய ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றோம்.  அப்படி எடுத்து வைத்த நாள் தான் இந்த தை திங்கள் முதல் நாள்.  இந்த நாளை கடந்து வரக் கூடிய மறுநாள் நாம் நமக்கு எப்போதும் உதவியாக இருக்கின்ற இயற்கையையும் பிற உயிர்களையும் மதித்து நேசித்து அவைகளோடு நமது உறவை வளர்த்துக்கொள்ள, அமைத்துக் கொள்ள, வழிவகை செய்யும் விதமாகத் தான் மாட்டுப் பொங்கலை நாம் கொண்டாடுகின்றோம். 

          அதனைத் தொடர்ந்து வருகின்ற நாட்களில், நாம் காணும் பொங்கலை கொண்டாடுகின்றோம்.  காணும் பொங்கல் என்றால் காணுகின்ற மனிதனோடு மட்டும் வாழ்த்தினை  பரிமாறிக் கொள்வது அல்ல.  அல்லது சொந்தங்களோடு மட்டும் பரிமாறிக் கொள்வது அல்ல.  மாறாக நமக்காக உழைக்கக்கூடிய, நமது வீடுகளில் வேலை செய்யக்கூடிய, நமது அலுவலகங்களில் வேலை செய்யக் கூடியவர்களை சந்தித்து, அவர்களோடு நமது மகிழ்வைப்  பகிர்ந்து கொள்ளுகின்ற ஒரு நன்னாளாக அமைகிறது. ஒட்டுமொத்தத்தில் இந்த பொங்கல் திருநாள் என்பது, இயற்கையோடும், இறைவனோடும், ஐந்தறிவு ஜீவன்களோடும், ஆறறிவு ஜீவன்களோடும், இணைந்து இன்புற்று, உறவின் பாலத்தை அமைத்துக் கொண்டு, பயணம் செய்வதற்கான ஒரு நல்ல நாளாகும். இந்த நல்ல நாளில் நாம் 

நமக்கும் - கடவுளுக்கும், நமக்கும் -சக மனிதர்களுக்கும்,
நமக்கும் - இறைவனுக்கும் இடையிலான உறவுகளை இணைத்துக் கொண்டு, இன்புற்று வாழ, இறையருள் வேண்டுவோம். 

1 தெசலோனிக்கர் புத்தகம், ஐந்தாம் அதிகாரம்,  16, 17 வசனங்கள் கூறுகிறது,  "எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்.  இடைவிடாது ஜெபியுங்கள். என்ன நேர்ந்தாலும்,  எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்"

 இந்த வார்த்தைகளின் அடிப்படையில்,  இந்த பொங்கல் திருநாளாம் இந்த நல்ல நாளில்,  நாம் மகிழ்வோடு இருக்கவும், நன்றி கூறவும்,  ஒருவர் மற்றவருக்காக தொடர்ந்து ஜெபிக்கவும், எல்லா சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி கூறக் கூடிய மக்களாக இருக்கவும்,  இறைவனது அருள் வேண்டுவோம். இத்தகைய செயல்களால் நாம் நமது உறவுகளை இணைத்து கொண்டு உறவின் காலங்களாக இச்சமூகத்தில் பயணம் செய்ய இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...