இலக்கை நோக்கி பயணிக்க....
இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்
நாம் இந்த சமூகத்தில் நல்லதை செய்கின்ற போது, அதனை உணராத பலர் நம்மை உதாசீனப்படுத்தக் கூடும். இன்றைய நாளிலும் இயேசு செய்த அரும் செயல்களை கண்டும், பலர் அவரால் தங்களுக்கு பொருளாதார இழப்பு தான் ஏற்பட்டது என்று கருதி, ஆண்டவர் இயேசு செய்த நல்லதை உணர்ந்து கொள்ளாமல் ஆண்டவர் இயேசுவை தங்கள் பகுதியை விட்டு வெளியே செல்லுமாறு அனுப்புகின்றனர்.
தீய ஆவி பிடித்திருந்தது மனிதனை இயேசு குணப்படுத்துவதாக சமூகத்தோடும் தம்மோடும் உறவுகளோடும் ஒன்றிணைந்து வாழ அவனுக்கு வழிவகை செய்து கொடுக்கின்றார்.
சமூகத்தோடு ஒன்றிப்பு: இந்த மனிதன் தங்கியிருந்து இடம் கல்லறை என்று மாற்கு குறிப்பிடுகின்றார். மனித நடமாட்டத்தைவிட்டு ஒதுங்கி, ஊருக்கு வெளியே கல்லறையிலே தங்கியிருந்த மனிதரை இயேசு குணப்படுத்தி, ஊருக்குள் அனுப்பி வைக்கிறார்.
தம்மோடு ஒன்றிப்பு: இந்த மனிதர் "தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்" என்னும் செய்தி, அவர் தன்னிலை மறந்து, தாம் யார் என்பதையே உணராது வாழ்ந்து வந்ததைக் குறிக்கிறது. அதுமட்டுமல்ல, குணம்பெற்ற அவர் "ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன்" இருந்ததை மக்கள் கண்டனர் என்றும் பார்க்கிறோம். எனவே, இயேசு அம்மனிதரைத் தம்மோடு ஒருங்கிணையச் செய்தார்.
உறவினரோடு ஒன்றிப்பு: நலம் பெற்ற மனிதர் இயேசுவோடு இருக்கவேண்டும் என்னும் விருப்பத்தைத் தெரிவித்தபோது, "உம் உறவினருக்கு அறிவியும்" என்று சொல்லி அவரை உறவினர்களிடம் ஒன்றுசேர்க்கிறார்.
தீய ஆவியில் இருந்து குணம் பெற்ற மனிதன் சமூகத்தோடும் தம்மொடும் உறவுகளோடும் ஒன்றிணைந்தது போல மண்ணில் வாழுகின்ற மனிதர்களாகிய நாமும்ஒன்றித்து வாழ இன்றைய வாசகங்கள் வழியாக அழைக்கப்படுகின்றோம்...
ஒன்றித்து வாழ்வதற்கான முயற்சியில் நாம் ஈடுபடுகின்ற போதும் அல்லது பலர் ஒன்றித்து வாழ நாம் வழிகாட்டுகின்ற போதும் இயேசுவைப் போலவே நாமும் பலரின் எதிர்ப்புகளை சந்திக்க நேரலாம் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஒன்றித்து வாழ்வதே இறைவனது விருப்பம் என்பதை உணர்ந்தவர்களாக நாம் ஒன்று வாழவும் பலர் ஒன்றித்து வாழ வழிகாட்டும் இறைவன் அருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக ஜெபிப்போம்.
இயேசு இந்த மனிதரைத் தீய ஆவியிடமிருந்து மட்டும் விடுவிக்கவில்லை, மாறாக அவர் தம்மிடமிருந்தும், உறவினர், குடும்பத்தினரிடமிருந்தும், ஊர், சமூகத்தைவிட்டும் பிரிந்திருந்த நிலையை மாற்றி, மீண்டும் அவரை ஒரு முழு மனிதராக, சமூகத்தின் முழு உறுப்பினராக மாற்றி அனுப்புகிறார்.
மன்றாடுவோம்:
நாம் பல நேரங்களில் நல்ல பணிகளைச் செய்யும் போது, அங்கு அது நல்ல பணி என அறிந்திருந்தும், அந்த பணியை நாம் செய்து கொண்டிருப்பதால் அங்கு இருக்கக்கூடிய சிலர், தாங்கள் பாதிக்கப்படுவதாக உணர்ந்து எங்கள் பகுதியில் நீங்கள் உங்கள் நல்ல பணிகளைச் செய்ய வேண்டாமெனக் கூறி நம்மை அவ்விடத்தை விட்டு அகற்றக்கூடிய பணியில் ஈடுபடலாம். இத்தகைய நிகழ்வுக்கு உதாரணமாக, நாம் எத்தனையோ நிகழ்வுகளை குறிப்பிடலாம்.
இரோம் சர்மிளா என்ற பெண்மணியை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். இராணுவ அதிகாரிகளின் தவறான செயல்பாடுகளை எதிர்த்து, உண்ணாவிரதப் போராட்டத்தை பல ஆண்டுகளாக மேற்கொண்டவர். ஆனால் அவர் தேர்தலை சந்தித்தபோது, அவரை அந்த மக்கள் நிராகரித்தார்கள். இதுபோல எத்தனையோ நபர்களை நாம் பட்டியலிடலாம். இத்தகைய சூழ்நிலைகளை நாம் நமது வாழ்வில் சந்திக்கின்ற போது மனம் தளராது ஆண்டவர் இயேசுவைப் போல, செல்லக்கூடிய இடங்களில் எல்லாம் நன்மையை செய்வோம். ஓரிடத்தில் நாம் நிராகரிக்கப்பட்டால் அங்கேயே நாம் தேங்கி விடாது ஆண்டவரின் அருள் துணையை நாடி நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை உணர்ந்தவர்களாய் அடுத்த அடியை எடுத்து வைத்து தொடர்ந்து பயணிப்போம். நம்மை ஏற்றாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நன்மை செய்வது மட்டுமே நம் இலக்காக இருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி பயணிக்க இறையருள் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக