தெளிவான பார்வையும் துணிவும் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது.
இன்றைய வாசகத்தில் இயேசு வல்ல செயல் ஒன்றை சீடர்கள் முன்பாக நிகழ்த்துகிறார். கடல்மீது நடந்து செல்வதுதான் அந்த வல்ல செயல். ஆனால் தெளிவற்ற பார்வை கொண்டிருந்ததனால் சீடர்களால் இயேசு செய்கின்ற அருஞ்செயலை இயேசு செய்கிறார் எனப் புரிந்து கொள்ளாது, ஏதோ ஒரு தீய ஆவி நிகழ்த்துவதாகப் புரிந்து கொள்கிறார்கள்.
ஒரு விதத்தில் அத்தகைய கால கட்டத்தில், கடல் என்பது தீய ஆவிகள் உறைந்திருக்கும் இடம் என கருதப்பட்டது. எனவே அந்தச் சூழ்நிலை கூட அவர்கள் தவறாக புரிந்து கொள்வதற்கான ஒரு காரணமாக இந்நிகழ்வு அமைந்து இருந்திருக்கலாம். ஆனால், எந்த ஒரு செயலிலும் தெளிவான பார்வையும் ஆழமான நம்பிக்கையும் இருக்க வேண்டும் என்ற பாடத்தை தான் இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் உணர்த்துகிறார்.
அவர்கள் பார்வை தெளிவு பெற்றபோது, கடல்மீது நடந்து வந்தது தீய ஆவி அல்ல, ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்பதைக் கண்டு கொண்டார்கள். ஆண்டவர் இயேசுவும் அவர்களிடம் "நம்பிக்கையோடு இருங்கள்" என்று கூறுகிறார். அதை வார்த்தைகளைத்தான் இன்று நமக்கும் தருகிறார். அவரது வார்த்தைகளை நமது வாழ்வாக மாற்றிக்கொண்டு, தெளிவான பார்வையும் நம்பிக்கையும் கொண்ட மனிதர்களாக பயணிக்க இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக