பொதுக் காலத்தின் 4-ஆம் ஞாயிறு3-ஆம் ஆண்டு
நாள் : 30.01.2022
திருப்பலி முன்னுரை
இறைமகன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! உங்கள் அனைவரையும் இக்கல்வாரி பலிக்கு அருள்பணியாளர்கள் மற்றும் வளன் அன்பியத்தின் சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்;..
இன்றைய திருவழிபாட்டின் மையக்கருத்தாக இருப்பது அன்பு. நமது செயல்கள் அனைத்திலும் அன்பே முதன்மையானதாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. பவுலடியாரும் அன்பின் பரிமணங்களை இன்றைய வாசகங்களில் அடுக்கிக்கொண்டே செல்கிறார். அன்புத் தான் இந்த உலகிலேயே மிகச் சிறந்த பண்பு என்றும் அவர் நமக்கு விளக்குகிறார்.
அன்பை அடிப்படையாகக் கொண்டு நற்செய்தி அறிவிக்கும் இறைவாக்கினர்களுடைய பணி எவ்வளவு துன்பங்கள் நிறைந்ததாக இருந்தாலும் அன்பின் அடிப்படையில் துன்பங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து அன்பு பணியினை நாம் முன்னெடுத்துச் செல்ல அழைக்கப்படுகிறோம்.
அழைக்கும் இறைவனுடைய குரலுக்கு செவிக் கொடுத்தவர்களாய் நம் வாழ்வில் அன்பின் அழைப்பை ஏற்றுக் கொண்டு அனைவரையும் அன்பு செய்து வாழ இறையருளை வேண்டி இன்றைய திருப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம்.
மன்றாட்டுக்கள்
1. அன்பே உருவான இறைவா! திருத்தந்தை. ஆயர்கள், அருள்தந்தையர்கள், அருள்சகோதரிகள், பொதுநிலையினர் அனைவருக்காக மன்றாடுகிறோம். இவர்கள் அனைவரும் நீர் விடுத்த அழைப்பை நன்கு உணர்ந்து உமது அன்பும், உடனிருப்பே எங்களுக்கு இவ்வுலகில் எல்லா வெற்றிகளையும் தேடித்தரும் என்பதை உணர்ந்துச் செயலாற்ற அவர்களுக்கு தேவையான ஆற்றலை தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பின் அரசரே எம் இறைவா! எம் நாட்டுத் தலைவர்களும் மக்களும் அன்பே அனைத்திற்கும் முதன்மை என்பதை உணர்ந்திடவும்; பொறுமை, பரிவு போன்ற அன்பின் விழுமியங்களைத் தங்கள் வாழ்வில் பெற்றுச் சமத்துவச் சமுதாயத்தை அமைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்பின் நாயகனே எம் இறைவனே! எங்கள் குடும்பங்கள் உமது அன்பை நிறைவாய் பொழிந்து, நாங்கள் உம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பதை உணர்ந்தவர்களாக வாழவும், உமது அன்பின் சாட்சிகளாக இவ்வுலகில் வலம் வரவும், இறையரசை அறிவிப்பவர்களாகவும் வாழவேண்டிய அருள்வரங்களை நிறைவாய் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அன்பை விதைத்த இயேசுவே, உலகமெங்கும் நிலவும் போட்டிகளுக்கும், பயங்கரவாதத்திவிற்கும் முக்கியக் காரணமான அன்பில்லாமையைப் போக்கிடவும், அன்பால் எல்லோரையும் நாங்கள் எங்கள் சகோதர சகோதரிகளாய் ஏற்றுக்கொள்ள நல் எண்ணங்களை அருளவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை
இயேசுவில் அன்புக்குரியவர்களே!
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருமே இந்த உலகத்தில் அன்பை விதைக்கவே அழைக்கப்படுகிறோம். நாம் கண்ணில் காணுகின்ற ஒவ்வொருவரையும் அன்பு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். பல நேரங்களில் நாம் பலரால் புறக்கணிக்கப்படலாம், பலரின் எதிர்ப்புகளுக்கு ஆளாகலாம். ஆனால் அன்பு செய்வதை மட்டுமே நாம் நம் இலக்காக கொண்டுச் செயல்பட அழைக்கப்படுகிறோம்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் எரேமியாவை அழைப்பதையும், அவரை தம் இறைவாக்குப் பணிக்கு தகுதிபடுத்தியதையும் வாசிக்க கேட்டோம். எரேமியாவின் அழைப்பு இறைவனது வார்த்தைகளை யூதாவின் தலைவர்களுக்கும், அரசர்களுக்கும், குருக்களுக்கும் எடுத்துரைப்பதாகும். அதிலும் குறிப்பாக யூதாவின் தலைவர்களும் அரசர்களும், குருக்களும் இறைவனுடன் செய்த உடன்படிக்கைக்கு எதிராக செய்கின்ற தவறுகளையும், தவறான சிலைவழிபாட்டையும் சுட்டிக்காட்டும் ஒரு உயரியப் பணி. இத்தவறுகளில் இருந்து தங்களை சரி செய்யவில்லை என்றால் அது எருசலேம் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை எடுத்துரைக்கின்ற பணி. இதனால் எரேமியா சந்தித்த இடர்பாடுகள் ஏராளம். தங்களிடம் குற்றம் காண இவர் யார்? இவரது வார்த்தையை இறைவனது வார்த்தை என்று நாங்கள் எப்படி ஏற்பது? ஏங்களை விட வலிமையானவரா இவர்? என்ற கோணத்தில் பலவிமான இன்னல்களை சந்திக்க நேர்ந்தது. எனவே பலரின் ஏளனத்திற்கும், கேலிப் பேச்சிற்கும், வன்முறைக்கும், சிறைத்தண்டனைக்கும் ஆளானர். ஆனாலும், இறைவாக்கினர் எரேமியா தன் இறைவாக்குப் பணியிலிருந்து பின்வாங்கவே இல்லை. ஏளனம் செய்து எள்ளி நகையாடிய மக்களையும் இறைவனது அன்பு மக்களாக மாற்றிட தொடர்ந்து இறைவாக்கு பணியாற்றியவர் இந்த இறைவாக்கினர் எரேமியா. இவரை போலவே அன்பால் அனைவரையும் இறைவனிடம் அழைத்துச் செல்ல நாம் அழைக்கப்படுகின்றோம்.
இந்த அன்பையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் வலியுருத்துகிறார். இந்த உலகத்தில் உயரிய நெறி என்றால் எது என்பு மட்டுமே இந்த அன்பின் அடிப்படையில் தான் இயேசு தன் உயிரை நமக்காக தந்தார். பவுல் கொரிந்து நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தில் இந்த அன்பை அதிகமாக வலியுருத்துகிறார். காரணம் இந்த கொரிந்து நகரம் ஒரு வியபார நகரமாகும். பலதரப்பட்ட மக்கள் வியாபார நோக்கத்தில் குடியேரிய செவ்வம் படைத்தவர்களின் கூடாரமாக திகழ்ந்த இடம் அது. பணம் பத்தும் செய்யும் என்பதற்கு ஏற்ப தாங்களே உயர்ந்தவர்கள்., தங்களுக்கு அனைத்து திறமைகளும் உண்டு என்ற மமதையில் வாழ்ந்தவர்கள் அவர்கள். ஆனால் திருத்தூதர் பவுல் அனைத்தும் இருந்தாலும் அடிப்டையானது அன்பு என்பதை அவர்களுக்கு வலியுருத்துகிறார். அதைத்தான் இன்றைய வாசகங்கள் நமக்கும் வலியுருத்துகின்றன. பவுலின் இத்தகைய போதனை அவர்களிடையே காணப்பட்ட போட்டி, பெறாமை, நான் என்ற மமதையை சுட்டிக்காட்டியது. எனவே கொரிந்து நகர மக்களின் எதிர்ப்பை பவுல் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும் தன் பணியிலிருந்து பின்வாங்கவில்லை பவுல். இவரது வாழ்வு நமக்கு நம்பிக்கையோடு அன்பின் பணியை அகிலத்தில் முன்னெடுக்க அழைப்பு தருகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட இயேசு எசாயா இறைவாக்கினரின் சுருளேட்டை வாசித்த பிறகு இன்று வாசிக்க கேட்ட இறைவாக்கு தன்னில் நிறைவேரியது என்று கூறிய போது அதை அங்கு இருந்தவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. மெசியாவை பற்றி இக்கூற்று மெசியாவை எதிர்நோக்கும் யூதர்களுக்கானது பிற இனத்தாரோடு இணைந்து சொல்லும் இவருக்கு எப்படி இது பொருந்தும் என எண்ணி கோபம் கொண்டே இவர் யோசேப்பின் மகன் தானே! என்று இயேசுவின் பிறப்பை சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் இயேசு தான் யாருக்காக, எதற்காக அனுப்பப்பட்டிருக்கிறேன் என்பதை, தெளிவு படுத்துகிறார். எலியா மற்றும் எலிசா போல தன்னுடைய இறைவாக்குப் பணியும் எல்லாருக்கும் உரியது என்பதை ஆணித்தரமாக வலியுருத்துகிறார். ஏனெனில் கடவுள் அனைவரையும் ஒன்றென கருதினார். அனைவருக்கும் நலமானதை முன்னெடுத்தார். இந்த ஆண்டவரின் அடிச்சுவட்டை பின்பற்றுகின்ற நாமும் அன்பின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள அழைக்கப்படுகிறோம். இன்று நமது நாட்டில் நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள சிறையில் உள்ள அருள்சகோதரி சகாய மேரியின் வாழ்வும் இந்த அன்பின் பதையில் அமைந்ததே. 153 வருடங்களாக பெண்களுக்கான கல்வி பணியை தொடரும் அருள்சகோதரிகளின் வாழ்வில் அவர்கள் சந்தித்துவந்த சவால்களுல் இதுவும் ஒன்று. அன்பின் பாதையில் பயணம் செய்து துன்பங்களை சந்திக்கும் நபர்களுக்காக நாம் செபிக்க கடமைப்பட்டுள்ளோம். எப்படி இறைவாக்கினர் எரேமியாவும், திருத்தூதர் பவுலும், இயேசுவும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அன்பின் பாதையில் பயணம் செய்து அனைவருக்கும் வழிகாட்டினார்களோ அவர்களைப் போல நாமும் சவால்களுக்கு மத்தியிலும் நாம் ஆண்டவரின் அன்பு பதையில் பயணம் செய்து, பகைப்பவரையும் மன்னித்து அன்பு செய்து வாழ அழைக்கப்படுகிறோம். இதற்கான அருளை இறைவன் நமக்கு தர இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து செவிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக