பரிவு கொண்டவர்களாய் செயல்பட...
சமீபத்தில் வீதியோரம் அமர்ந்திருந்தவர்களுக்கு, உணவு வழங்கக்கூடிய செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு நபர் பகிர்ந்து கொண்ட ஒரு செய்தி. உணவு வழங்குவதற்காக ஒரு இடத்திற்குச் சென்றேன். அங்கு வீதியோரம் அமர்ந்திருந்த ஏழைகளுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தேன். என்னிடமிருந்தது குறைவான உணவு. அதை நான் அவர்களிடம் பகிர்ந்து கொண்ட போது, பலர் "அவனுக்கு தரீங்க. எனக்கு தர மாட்டீர்களா?" என்றவாறு என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் இது போன்ற சூழ்நிலையை, பல நல்ல காரியங்களை நாம் முன்னெடுக்கும் போது சந்திப்பது உண்டு. இயேசுவும் இதற்கு விதிவிலக்கல்ல. இயேசு நம்பிக்கை கொண்ட ஒருவரின் நோயினை குணப்படுத்துகிறார். அவர் தன் நோய் குணம் பெற்றதை அடுத்தவருக்கு அறிவிக்கும் போது, பலரும் ஆண்டவர் இயேசுவை நெருங்கினார்கள். எங்களையும் குணப்படுத்தும் என்று கத்தினார்கள், ஓடிவந்தார்கள். இயேசுவை விடாது தொந்தரவு செய்தார்கள். ஆனால் இயேசு அவர்களிடத்தில் முகம் சுளிக்கவில்லை. தேவையில் இருப்பவர்கள் கேட்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டவராய், தன்னால் முடிந்த மட்டும் அவர்களுக்கு குணமாக்கும் பணியினை செய்து கொண்டிருந்தார். அவரைப் போல இந்த சமூகத்தில் நாமும் வாழ கடமைப்பட்டிருக்கிறோம்.
வாழ்வில் பல நேரங்களில் நல்லது செய்யும் போது நாம் செய்கின்ற உதவியின் பொருட்டு நாம் துன்பங்களை அனுபவிக்கும் போது, நம்பிக்கையை இழந்து விடாது, ஆண்டவர் இயேசுவை இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டு அவரைப்போல இந்த சமூகத்தில் தேவையில் இருக்கும் மக்கள் மீது பரிவு கொண்டவர்களாய், செயல்பட இறையருளை வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக