நிறைகளை ஏற்று வாழ...
பழமைக்கும் புதுமைக்கும் இடையே எப்போதும் பலவிதமான முரண்பாடுகள் இருந்து கொண்டுதான் இருக்கும். ஒவ்வொன்றும் தனித்துவமானவை. ஒரு காலத்தில் சரி எனப்படுவதை இன்னொரு காலத்திலும் சரி என எதிர்பார்ப்பது தவறு. ஒரு காலத்தில் தவறெனப்பட்டது இன்னொரு காலத்தில் தவறாகவே இருக்கும் என எண்ணுவதும் தவறு. காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ற வகையில் அனைத்தும் மாறக்கூடியது தான். இன்றைய நாளில் பழைய வழக்கங்களை முன்னிறுத்தி இயேசுவின் மீது குற்றம்சாட்டக் கூடிய செயலில் பலர் ஈடுபடுகிறார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து அவர்களுக்கு பழமையைப் பின்பற்றுவது தவறு இல்லை, ஆனால் அதில் இருக்கக்கூடிய உண்மையான அர்த்தம் என்ன? மகத்துவம் என்ன? என்பதை உணர்ந்து கொண்டு அதை பின்பற்றுவதே சரியானது என்பதை சுட்டிக் காட்டுகிறார்.
இயேசுவின் சீடர்கள் நோன்பு இருக்காதிருந்ததை குற்றம் சாட்டக் கூடியவர்களுக்கு இயேசு, நோன்பிருத்தலின் உண்மை நோக்கம் என்ன? என்பதை எடுத்துரைக்கும் வகையில் அவர்களுக்கு தெளிவுபடுத்துகிறார். ஏன் இத்தகைய வழக்கம் உருவானது? இன்று அந்த வழக்கம் அவசியம்தானா? என்ற கேள்வியை எழுப்பி பார்க்கும் வகையில் இயேசுவின் உரையாடல் அமைகிறது. நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் பெரும்பாலான நேரங்களில் மூத்தவர்களும் இளையவர்களும் ஒருவர் மற்றவர் காலத்தைப் பற்றி குறை கூறிக்கொண்டும், ஒருவரை ஒருவர் வழக்கங்களைப் பற்றி மாறி மாறி முரண்பாடான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டும் பயணிப்பதை நிறுத்திவிட்டு சூழலுக்கு ஏற்ற வகையில் எது உகந்தது? என்பதை உணர்ந்து, அதன் உண்மை தன்மையை உணர்ந்து, மகத்துவத்தை உணர்ந்து, அதனை பின்பற்றக் கூடியவர்களாக நாம் சமூகத்தில் வலம் வரவேண்டும். பழமையிலும் புதுமையிலும் உள்ள முரண்பாடுகளை பேசிக் கொண்டிருப்பதால் எதுவும் இச்சமூகத்தில் நடந்து விடாது. மாறாக, பழமையிலும் புதுமையிலும் இருக்கக்கூடிய நிறைகளை ஏற்றுக் கொண்டு அதனை வாழ்வில் செயலாக்கப்படுத்தும் போது வாழ்வு செழிப்பாக அமையும். நமது வாழ்வு செழிக்க நாம் பழையது புதியது என்று வேறுபாடுகளை கடந்து, நல்லது எது என்பதை மட்டும் முன்னிறுத்தி அந்த நலமானவற்றை செய்யக்கூடியவர்களாக மாறிட அருள் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக