செபமும் நம்பிக்கையும் வாழ்வின் இரு கண்கள்.
இரண்டு கண்கள் எப்படி உடலுக்கு அவசியமாகவும் வழிகாட்டக் கூடியதாகவும் இருக்கிறதோ, அது போல வாழ்வில் செபமும் நம்பிக்கையும் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கவேண்டும் என்ற செய்தியினை இன்றைய வாசகங்கள் நமக்கு தருகின்றன. நம்பிக்கையோடு ஒருவன் ஆண்டவரிடத்தில் சென்று வேண்டுகிறான். "நீர் விரும்பினால் என்னை குணப்படுத்தும்" என்று. அவனது நம்பிக்கையை கண்டு, அவனது வேண்டுதலுக்கு இயேசு செவி கொடுக்கிறார். அவனுக்கு வேண்டியதை, அவன் கேட்டதை நிறைவேற்றுகிறார்.
இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நாம் பல நேரங்களில் செபிப்பது உண்டு. ஆனால் நம்பிக்கையோடு செபிக்கின்றோமா? என்ற கேள்வியை இன்றைய நாளில் எழுப்பிப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். இன்று செபிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. ஆனால் விவிலியத்தில் இன்று நாம் வாசிக்கக் கேட்டோம், இயேசு தனிமையான இடத்திற்கு சென்று செபித்தார். பல மக்கள் அவரை சூழ்ந்து கொண்டே இருந்த போதும் கூட, தனிமையான இடத்தை நோக்கிச் சென்றார், இறைவனோடு செபித்தார்.
இன்று அனைவரோடும் உரையாடும் நாம், ஆண்டவரோடு உரையாடுகிறோமா? என்ற கேள்வியை எழுப்புவோம். நாம் ஆண்டவரோடு உரையாடும்போது, கடமைக்கு உரையாடுகிறோமா? அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் உரையாடுகிறோமா? என சிந்தித்துப் பார்ப்போம். செபமும் நம்பிக்கையும் வாழ்வின் இரு கண்கள். இந்த இரண்டு கண்களும் வாழ்வுக்கு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து கொண்டு தொடர்ந்து பயணிக்க இறையருளை வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக