சனி, 1 ஜனவரி, 2022

திருக்காட்சி பெருவிழா... (2.1.2022)

திருக்காட்சி பெருவிழா 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
      இன்று நாம் மூன்று அரசர்கள் பெருவிழாவினை,  மூன்று ஞானிகள் இயேசுவைத் தேடி வந்து வணங்கிய திருக்காட்சி பெருவிழாவை சிறப்பிக்கின்றோம்.  இந்த நல்ல நாளில் இந்த திருக்காட்சி பெருவிழா வழியாக நாம் நமது வாழ்வுக்கான பாடத்தை உணர்ந்துகொள்ள அழைக்கப்படுகிறோம். இயேசுவைத் தேடி வந்த ஞானிகள் மூவர்.

 வரலாற்று அடிப்படையில் பார்க்கின்றபோது சிலர் ஆறு ஞானிகள் சிலர் ஒன்பது ஞானிகள் தேடி வந்தார்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் நமது திருஅவையானது அதிகாரபூர்வமாக மூன்று ஞானிகள் தேடி வந்தார்கள் என்பதை நெடுநாட்களாக காலம் காலமாக நமக்கு வலியுறுத்தி வருகின்றன.  அவ்வடிப்படையில் அந்த மூன்று ஞானிகளின் பெயர்கள் கஸ்பார், பல்தசார், மெல்கியோர் என்பதாகும். இவர்கள் மூவருமே பாலன் இயேசுவுக்கு பரிசுகளை கொண்டு வந்தார்கள்.  ஒருவர் பொன்னையும், மற்றவர் தூபத்தையும், மற்றவர் வெள்ளைப் போளத்தையும் கொண்டு வந்தார்கள்.  இந்த மூன்றும் நமக்கு உணர்த்துகின்ற பாடங்கள் ஏராளம்.

 பொன் என பார்க்கின்ற போது இந்த உலகத்தில் விலை உயர்ந்தது எனக் கருதப்படக் கூடிய ஒன்றாக அன்றும் இன்றும் தொடர்வது இந்த பொன். இந்த பொன்னானது இருக்கின்ற இடம் உயர்ந்த இடமாக இருக்கும்.  அகிலத்தில் உள்ள அனைத்து செல்வங்களும் இருக்கும் இடமாக அரசனின் இல்லம் இருக்கும் என்பார்கள். அவ்வடிப்படையில் விலை உயர்ந்ததாக கருதப்படுகின்ற இந்த பொன் இருக்க வேண்டிய இடம் அரசிடமே என்ற அடிப்படையில் ஞானிகள் பிறந்திருக்கின்ற பாலன்  இயேசுவுக்கு இந்த பொன்னை காணிக்கையாக அர்ப்பணிக்கிறார்கள்.  அதே சமயம் மற்றொரு ஞானி தூபத்தை, சாம்பிராணியை காணிக்கையாக அர்ப்பணிக்கின்றார்.  சாம்பிராணி என்பது இறைவனுக்கு மட்டுமே ஆரத்தி செய்யப்படக் கூடிய ஒன்றாகும்.  நாம் திருப்பலியில் கூட தூபம் இடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். 

 அன்றைய காலகட்டத்திலும் எருசலேம் தேவாலயத்தில் பத்துக் கட்டளைகள் வைத்து, அதனை ஒரு திரைச் சீலையால் மறைத்து வைத்து இருப்பார்கள். கையில் தூபத்தை எடுத்துக் கொண்டு, மணி கையில் எடுத்துக்கொண்டு,  அந்த மணி ஓசையோடு தூபத்தைக் காட்டக் கூடிய பணியினையே குருக்கள் அன்று செய்து வந்தார்கள். இந்தப் பணியை செய்வதற்கு குலுக்கல் சீட்டு போடப்படும். அதில் எவர் பெயர் வருகிறதோ அவரே அன்று கடவுளுக்கு முன்பாக சென்று, தூபம் காட்ட வேண்டும் என்பது அன்றைய வழக்கமாக இருந்தது. 

இந்த வழக்கத்தை பின்பற்றியவராகத் தான் திருமுழுக்கு யோவானின் தந்தை செக்கரியாவை நாம் நினைவு கூரலாம். இத்தகைய ஒரு குருத்துவ பணியையே அவர் செய்து வந்தார். இந்த தூபமானது இறைவனுக்கு பயன்படுத்தக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. திருப்பலியில் கூட தூபத்தை நாம் பயன்படுத்துகிறோம். 

எங்கெல்லாம் இந்தத் தூபத்தை நாம் பயன்படுத்துகிறோம் என சிந்திக்கின்ற போது, முதல் முறையாக அருள்பணியாளர் பீடத்தை சுற்றி தூபத்தை காட்டுவார். பீடம் என்பது கடவுள் பலியிடக் கூடிய இடம். இந்த பலிபீடம் கடவுளின் பிரசன்னத்தை வெளிப்படுத்துகிறது. எனவே அவருக்கு தூபம் இடப்படுகிறது. இரண்டாவதாக இறைவார்த்தைக்கு தூபம் காட்டப்படுகிறது. இறைவன் தமது வார்த்தைகள் வழியாக நம்மோடு உரையாடுகிறார். வார்த்தையின் வடிவில் நம் மத்தியில் பிரசன்னமாகின்ற இறைவனுக்கு தூபம் இடப்படுகிறது. 

அதனைத் தொடர்ந்து காணிக்கை பொருட்களின் மீது தூபம் காட்டப்படுகிறது. சாதாரண காணிக்கை பொருட்களான அப்பமும் இரசமும் கிறிஸ்துவின் திருவுடலாகவும் திருஇரத்தமாகவும் மாறுகிறது. கடவுளின் பிரசன்னமாக மாறுகின்ற அந்த அப்ப ரச காணிக்கைகளுக்கு தூபம் இடப்படுகிறது. 

அதனைத் தொடர்ந்து அருள் பணியாளருக்கு தூபம் காட்டுகிறோம். ஏனெனில் திருப்பலி நிறைவேற்றுகின்ற இந்த அருள்பணியாளர், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பிரதிபலிக்கின்றார். இயேசு கிறிஸ்துவாக நின்று இந்த பணியினை செய்கின்றார். இந்த அருள் பணியாளரின் வழியாக பிரசன்னமாகின்ற ஆண்டவர் இயேசுவுக்கு நாம் தூபம் காட்டும் வண்ணமாகத் தான் அருள் பணியாளருக்கு தூபம் காட்டுகிறோம். 

மேலும் நாம் மக்களுக்கு தூபம் காட்டுகிறோம். மக்களுக்கு தூபம் காட்டுவதன் நோக்கம் என்ன என பார்க்கின்ற போது, மக்கள் மத்தியில் தான் கடவுள் இணைந்திருக்கிறார். மக்கள்  முன்பாக மக்கள் சமூகத்தினரோடு அவரும் தன்னை இணைத்துக் கொண்டு, பிரசன்னமாகிறார். 
எனவேதான் மக்களுக்கு தூபம் காட்டும் வழக்கமும் இருக்கிறது. ஏதோ கடமைக்கு ஒரு சடங்காக தூபம் காட்டுகிறார்கள் என்று எண்ணுவதில்லை.  எங்கெல்லாம் கடவுளின் பிரசன்னம் இருக்கிறதோ அங்கெல்லாம் தூபம் காட்டப்படுகிறது.  தூபம் என்பது கடவுளுக்கு உரிய ஒன்று இதை உணர்ந்த ஞானிகள் இந்தத் தூபத்தை அன்று கடவுளுக்கு காணிக்கையாக, பிறந்த பாலகனை கடவுள் என  உணர்ந்தவண்ணமாய் அவருக்கு காணிக்கையாக சாம்பிராணியை ஒப்படைத்தார்கள்.

 மூன்றாவதாக வெள்ளைப் போளத்தை ஒப்படைத்தார்கள்.  வெள்ளைப்போளம் என்பது நறுமணப் பொருள்.  இறந்த ஒருவரின்  உடலுக்கு இந்த நறுமணப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. நறுமணப் பொருளை பூசி இறந்த உடலை அடக்கம் செய்வார்கள். பிறந்திருக்கின்ற இந்த பாலன் இயேசு, அரசனாக இருந்தாலும், கடவுளாக இருந்தாலும், இவர் மனிதனாக நம்மைத் தேடி வந்திருக்கிறார்.  இவர் மரணத்தை சந்திக்க கூடும் என்பதை அறிவிக்கும் விதமாக  அன்று பிறந்த பாலன் இயேசுவுக்கு அன்று ஞானிகள் வெள்ளைப் போளத்தை பரிசளித்தார்கள். 

 இந்த ஞானிகளின் வாழ்வு நமக்கு தருகின்ற பாடம்- என்ன என்று நாம் சிந்திக்கின்ற போது, நாம் இந்த உலகத்தில் விலை மதிப்பு மிக்கது என்று எண்ணக்கூடிய அனைத்துமே எப்போதும் நம்மைப் பின் தொடரக் கூடியது அல்ல என்பதை  உள்ளத்தில் உணர்ந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும். நாம் ஒவ்வொருவருமே இந்த சமூகத்தில்,  கடவுளின் பிரசன்னத்தை வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும். 

கண்ணுக்கு தெரிகின்ற சகமனிதன் ஒருவனை அன்பு செய்யாத ஒருவரால், கண்ணுக்கு தெரியாத கடவுளை அன்பு செய்ய இயலாது என்பார்கள். 

  நம் கண் முன்பாக இருக்கின்ற சக மனிதரை அன்பு செய்து அவர் நலனில் அக்கறை காட்டுவதன் வழியாகத்தான் நாம் கடவுள இந்த சமூகத்தில் பிரதிபலிக்க முடியும். 

 இந்த சமூகத்தில் நாம் கடவுளை பிரதிபலிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதை இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது.  மேலும், மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மரணத்தை சந்திக்க வேண்டும் என்பது, நாம் அறிந்த ஒன்றே! நெடுங்காலமாக  மனித இன வரலாற்றில் ஏன் உலக வரலாற்றில் தொடரக் கூடியது இந்த பிறப்பும் இறப்பும்.  பிறந்த மனிதன் இறப்பை சந்திக்க நேரிடும்.  பிறந்த எந்த உயிராக இருந்தாலும் அது இறப்பை சந்திக்க நேரிடும் என்பதை மனதில் இருத்தியவர்களாய், நிலையற்ற இந்த உலகத்தில், நிலையான பணிகளான இரக்கச் செயல்களையும் அன்புச் செயல்களையும் அடுத்தவர் நலன் பேணும் செயல்களையும் செய்து, இந்த சமூகத்தில் ஒவ்வொரு நாளும் இறைவனை பிரதிபலிக்கக் கூடியவர்களாக நாம் மாற வேண்டும் என்பதைத்தான் அன்று பாலன் இயேசுவுக்கு காணிக்கையாக கொடுத்த மூன்று ஞானிகளின் பரிசுப் பொருள்களும் நமக்கு வலியுறுத்துகின்றன.  இறைவன் வலியுறுத்துகின்ற இந்தச் சிந்தனைகளை உள்ளத்தில் இருத்திக் கொண்டவர்களாய் நமது வாழ்வில் நாம் ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை கொள்ளக் கூடியவர்களாக நிலையற்றவைகளை நிலையானது என எண்ணி பயணிப்பதைத் தவிர்த்து நிலையான இறைவனை அனுதினமும் நமது வாழ்வால் வெளிக்காட்ட இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக ஜெபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...