பொதுநல பணியைச் செய்ய
கடவுளால் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் சக மனிதர்கள் மீது அக்கறை கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும், அடுத்தவர் துயரத்தை கண்டுகொள்ள வேண்டும், அடுத்தவர் துன்பத்தில் துணை நிற்க வேண்டும், அடுத்தவருக்கு நம்மாலான உதவிகளை செய்ய வேண்டும், இவ்வாறு அனைத்திலும் அடுத்தவர் நலனை முன்னிறுத்துவதே இன்றைய நாளின் மையச் செய்தியாக அமைகிறது.
இயேசு செய்த முதல் புதுமையே கானாவூர் திருமணத்தில் தண்ணீரை இரசமாக மாற்றியது. இயேசு செய்த இந்த முதல் புதுமை பலருக்கு மகிழ்வைத் தந்தது. பலரை வாழ வைத்தது. உணவு சார்ந்த புதுமையாகவும் அது அமைந்திருந்தது.
இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், இயேசுவைப் போல நாமும் பொது நல நோக்கோடு பணிசெய்ய அழைக்கப்படுகிறோம். இன்று நம்மில் பலரும் அடுத்தவர் நமக்கு உதவி செய்ய வேண்டும் என எண்ணுகிறோம். ஆனால் நாம் அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை மறந்து போகிறோம்.
நாம் பொதுநல நோக்கோடு அடுத்தவரை முன்னிலைப்படுத்தி, அடுத்தவரின் நலனை முன்னிறுத்தக் கூடிய, நலமான பணிகளைச் செய்கின்ற போது, ஆண்டவர் இயேசுவுக்கு உரியவர்களாக மாறுகிறோம். அவ்வாறு மாறவே இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். இத்தகைய பொதுநலப் பணியினை நாம் செய்யும் போது, நாம் ஆண்டவரின் பார்வையில் அழகிய மணிமுடியாகத் திகழ முடியும். இந்த பொதுநல பணியைச் செய்யவே தூய ஆவியானவர் நம்முள் இருந்து நம்மை தூண்டுகிறார். தூய ஆவியானவரின் தூண்டுதலை உணர்ந்து கொண்டு பொது நலப் பணி செய்ய இறையருளை வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக