அன்பின் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க...
அன்புக்குரியவர்களே!
நல்லது செய்யும்போது பலர் நம்மை தேடி தான் வருவார்கள். பலர் நம்மை தேடி வரும்போது நாம் கவனத்தோடு இருந்து, நல்ல பணிகளை தொடர்ந்து இச்சமூகத்தில் முன்னெடுக்கவேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் தீய ஆவிகள் இயேசு முன்னால் வந்து, ‘இறைமகன் நீரே’ என்று கத்தியபோது, இயேசு தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக்கண்டிப்பாய்ச்சொன்னதாக வாசிக்க கேட்டோம்.
எதற்காக இயேசு தன்னுடைய அடையாளத்தை மறைக்க வேண்டும்? அவர் ஏன் தீய ஆவிகளை தம்மை இறைமகன் என வெளிப்படுத்த வேண்டாம் என்கிறார் என சிந்திக்க அதன்வழி வாழ்வுக்கான பாடம் கற்க இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம்.
இயேசுவின் காலத்திலே மக்கள் உரோமையர்களுக்கு அடிமைகளாக இருக்கின்றனர். தங்களை மீட்க கடவுள் மெசியாவை அனுப்புவார், அவர் வந்து நம்மை அடிமைத்தளையிலிருந்து மீட்பார் என்ற நம்பிக்கை மக்களிடையே அதிகமாக இருந்தது. மெசியாவைப்பற்றிய அவர்களின் புரிதலும் ‘வலிமையுள்ள அரசர்’ என்ற பார்வையாகவே இருந்தது.
இயேசுதான் மெசியா என்ற செய்தி பரவினால், அவர் பின்னால் அணிவகுத்து நிற்க, போரிட மக்கள் தயாராக இருந்திருப்பார்கள். இது தேவையில்லாத பிரச்சனைகளை, குழப்பங்களை நாட்டிலே உருவாக்கும். இயேசு மெசியா தான். ஆனால், மக்கள் எதிர்பார்ப்பது போன்ற மெசியா அல்ல: அவர் அன்பின் மெசியா, மன்னிப்பு வழங்கும் மெசியா, இரக்கத்தை வெளிப்படுத்தும் மெசியா. தவறான வழியில் செல்பவனுக்கு தவறை சுட்டிக்காட்டி அவன் தானாக தன்னை சரி செய்து கொள்ள வழிகாட்டுகின்ற மெசியா இவர் எனவேதான் தீய ஆவிகளையும் தன்னிடமிருந்து நலன்களை பெற்றவர்களையும் தன்னை வெளிப்படுத்த வேண்டாம் என இயேசு கண்டிப்பாக கூரியதாக மறைநூல் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இயேசுவின் இத்தகைய செயல் நமக்குத் தருகின்ற வாழ்க்கைக்கான பாடம் என்ன என் சிந்திக்கின்ற போது நாம் பின்பற்றுகின்ற நமது இயேசு ஆண்டவரின்பாதை என்பது அன்பின் பாதையாக அரவணைக்கும் பாதையாகஇருப்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். இந்த அன்பின் பாதையில் பயணம் செய்து ஒருவர் மற்றவரை உறவுகளாக எண்ணி அடுத்தவர் நலனில் அக்கறை காட்டக் கூடிய மனிதர்களாக இருக்க அதன்வழி எடுத்துக்காட்டான மக்களாக இச்சமூகத்தில் பல நல்ல பணிகளை செய்து கொண்டே செல்ல நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.
அழைப்பவர் குரலுக்கு செவி கொடுத்துச் செயல்பட முயலுவோம். அன்பின் பாதையில் பயணித்து அனைவரையும் நம்மவர்கள் ஆக்கிட இறைவனது அருள் வேண்டுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக