சனி, 30 ஏப்ரல், 2022

உயிர்த்த ஆண்டவருக்கு சான்று பகர...(1.5.2022)

உயிர்த்த ஆண்டவருக்கு சான்று பகர நாம் அழைக்கப்படுகின்றோம்!

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 
 இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்ததன் வழியாக மூதாதையருக்கு அளித்த வாக்குறுதியை அவர்கள் பிள்ளைகளாகிய நமக்கென நிறைவேற்றினார். இதுவே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி.
திருத்தூதர் பணிகள் 13:32

என்ற பவுலடியாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உயிர்த்தார். அந்த உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு சான்று பகர  நாம் ஒவ்வொருவரும் இன்றைய நாள் வாசகங்கள் வழியாக அழைக்கப்படுகிறோம். 

 இன்றைய முதல் வாசகத்தில் உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி நற்செய்தி அறிவித்த காரணத்தினால் பேதுருவும் யோவானும் தலைமைக் குருக்களின் முன்பாக நிறுத்தி விசாரிக்கப்படக் கூடிய நிகழ்வினை நாம் வாசிக்க கேட்டோம். இதே பேதுரு தான், இதே யோவானும் தான், ஆண்டவர் இயேசு கிறிஸ்து உயிர்த்தார் என்று அறிவிப்பதற்கு  அஞ்சியவர்களாய், இயேசுவின் இறப்பில் அச்சம் கொண்டவர்களாய், ஓடி ஒதுங்கி மறைந்து வாழ்ந்தவர்கள். 

ஆனால் தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் துணிச்சலோடு, இயேசுவைக் கொலை செய்ய, யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கு முன்பாகவே வந்து நின்று, இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் மனிதனாக வாழ்ந்த போது ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை தன் வாழ்வால் நமக்கு வெளிக்காட்டினாரோ அந்த இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து கொன்றீர்கள், ஆனால் கடவுள் அவரை உயிருடன் எழுப்பினார் என்று நற்செய்தி அறிவிக்க கூடியவர்களாக செயல்பட்டதை நாம் வாசிக்க
 கேட்டோம்.  

இந்த சீடர்களைப்  போலவே நாமும் செயல்பட இந்த நாளில் அழைக்கப்படுகிறோம்.  இயேசுவைப்பற்றிய நற்செய்தியை  அறிவித்த போது அவரைப் பற்றி அறிவிக்கக் கூடாது என தலைவர்கள் அச்சுறுத்திய சூழ்நிலையிலும் இயேசுவை குறித்து எங்களால் அறிவிக்காமல் இருக்க முடியாது என கூறக்கூடியவர்களாய் இயேசுவின் சீடர்கள் மாறிப் போனார்கள். இந்த சீடர்களைப் பின்பற்றியே நமது வாழ்வும் அமைய வேண்டும் என்பதுதான் இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்ற வாழ்வுக்கான பாடமாக இருக்கிறது. 

தொடக்கத்தில் இந்த சீடர்கள் இயேசுவின் உயிர்ப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைக்கவில்லை. இயேசு உயிர்த்தாரா? இல்லையா? இது யாரேனும் சொல்லுகின்ற வதந்தியா? அல்லது கட்டுக்கதையா என்ற எண்ணமானது தொடக்க காலத்தில் நிலவிக் கொண்டே இருந்தது.


ஆனால்  உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து பல முறை தம் சீடர்களுக்குத் தோன்றி ஆறுதல் தந்து,  அவர்கள் அச்சத்தை களைந்து, நம்பிக்கை கொள்ள வழிவகை செய்து கொடுத்தார். பலர் கூடியிருந்த போது அவர்கள் மத்தியில் தோன்றி அவர்களின் ஐயத்தை போக்கினார்.  தனியே அவர்கள் பயணம் சென்றபோது, அவர்கள் நடுவே தோன்றி, அவர்களோடு வழி நடந்து, அவர்களுக்கு இறை வார்த்தையை எடுத்துரைக்கக் கூடியவராக இருந்து, அவர்களின் அச்சத்தை களையக் கூடிய ஒரு நபராகவே இயேசு  இருந்தார் என்பதை விவிலியம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில்  கூட, மீன்பிடிக்கச் சென்ற பேதுருவுக்கு மீன் எதுவும் கிடைக்காமல் திரும்பி வந்த போது கடலில் சென்று வலப்புறம் வலையை வீசுங்கள் என இயேசு கூறுகிறார் . கூறியவரின் வார்த்தைகளை மட்டும் கேட்டு தங்கள் வலைகளை வீசியவர்கள், மிகுதியான மீன்பாட்டைக்  கண்டபோது உணர்ந்து கொண்டார்கள், இது போன்ற ஒரு நிகழ்வு அன்று தங்கள் வாழ்வில் இயேசுவால் நிகழ்த்தப்பட்டது என்று.

 தம்மை கடலில் சென்று வலப்புறம் வலையை வீசுங்கள் எனக் கூறியது அந்த இயேசு தான் என்பதை உணர்ந்து கொண்டவர்களாய் கடலில் இருந்து குதித்து கரையை நோக்கி நீந்தியவர்களாய் இயேசுவிடம் வந்து, சரணாகதி அடைகிறார்கள். தன்னைத் தேடி வந்த அந்த சீடர்களுக்கு இயேசு மீனை சுட்டு 
அப்பத்தையும் மீனையும் உணவாக உண்ணக் கொடுத்து அவர்களுடன் அவரும் அமர்ந்து உண்டார்.

 உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெறும் ஆவி அல்ல.   அவர் மனிதனைப் போலவே சதையும் எலும்பும் கொண்ட மனிதனாக இருந்தார்.  மனிதர்களோடு மனிதராக நடந்து வந்தார். மனிதர்களோடு அமர்ந்திருந்தார். மனிதர்களோடு இணைந்து உணவு உண்டார். ஆனால் அவர் மாட்சி பொருந்திய உடலை பெற்றிருந்தார். 
எனவே தான் பூட்டிய அறைக்குள் அவர் தோன்றினார் என விவிலியம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.  பூட்டிய அறைக்குள் உடலும் ரத்தமும் சதையும் கொண்ட ஒரு மனிதர் தோன்றினார்  என்பதுதான் மாட்சி பொருந்திய உடலாக இயேசுவின் உடலானது பார்க்கப்படுகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. 

 இந்த உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்பிக்கை அற்று இருந்த  தம் சீடர்களுக்கு மத்தியில்  பல நலமான காரியங்களை முன்னெடுத்தவராய், பலவிதமான அரும்அடையாளங்களை நிகழ்த்தியவராய், ஐயத்தோடு இருந்தவர்களின் ஐயங்களை களைய வைத்து, நம்பிக்கைக்குரிய மனிதர்களாக மாற்றினார்.

 அந்த இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் தான் 
இயேசுவின் சீடர்கள் அச்சத்தோடும் தயக்கத்தோடும் யாரைக் கண்டு அஞ்சி பயந்து ஒதுங்கி ஓடி ஒளிந்தார்களோ,  அவர்களுக்கு முன்னிலையிலேயே சென்று  ஆண்டவர் இயேசு கிறிஸ்து உயிர்த்தார் என்ற செய்தியை பறைசாற்றக் கூடிய மனிதர்களாக மாறினார்கள் என்பது வரலாறு நமக்கு கற்பிக்கின்ற பாடம். இந்த இயேசுவின் உயிர்ப்பை அறிவித்ததன் விளைவாக பலர் தங்களது இன்னுயிரையும் இழந்தார்கள் என்பதையும் வரலாற்றில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம். 

உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாய் அவர் இந்த மண்ணில் வாழ்ந்த போது  நாம் எப்படி வாழவேண்டும் என கற்பித்தாரோ அந்தக்  கற்பிதங்களுக்கு ஏற்றவர்களாய் நாமும் நமது வாழ்வை அமைத்துக் கொண்டு,  அவர் காட்டிய பாதையில் துணிவோடு இறையாட்சியை இம்மண்ணில் கட்டி   எழுப்புவதற்கான  கருவிகளாக நாம் மாறிட வேண்டும் என்பதை இன்றைய நாள் நமக்கு வலியுறுத்துகிறது. 
அதற்கு நாம் ஆண்டவரின் மீது ஆழமான நம்பிக்கை கொள்வோம்.  அவருக்கு சான்று பகரக் கூடிய நல்ல சாட்சிகளாக மாறுவோம்.

 இன்றைய இரண்டாம் வாசகமாகிய திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து  எடுக்கப்பட்ட இரண்டாம் வாசகத்தில் யோவான் தான் கண்ட காட்சியாக குறிப்பிடுகிறார். கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி  என்பது இங்கு இயேசு கிறிஸ்துவுக்கு சுட்டிக்காட்டப்படுகிறது, உருவகப்படுத்தி பார்க்கப்படுகிறது. சிலுவையிலே குற்றுயிரும் குலை உயிருமாக மூன்று ஆணிகளால் கொல்லப்பட்ட அந்த இயேசு கிறிஸ்துவே இந்த ஆட்டுக்குட்டி. 


பின்பு, விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும், அவற்றில் இருந்த ஒவ்வொன்றும்,“அரியணையில் வீற்றிருப்பவருக்கும் ஆட்டுக்குட்டிக்கும் புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன” என்று பாடக் கேட்டேன்.
          திருவெளிப்பாடு 5:13

 என்ற  திருவெளிப்பாட்டு நூலின் ஆசிரியர் யோவான் தான் கண்ட கனவுகளை தொகுத்துக் கொடுத்தார். அந்த கனவுகள் நனவாகும் நாள்  வெகு விரைவில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டவர்களாய் நாம் ஒவ்வொருவரும் உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு சான்று பகரக் கூடிய மக்களாக இம்மண்ணில் வாழ அழைக்கப்படுகிறோம். 

இயேசு கிறிஸ்து உயிர்த்தார்.  அந்த உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்பி நமது வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும், அவரின் வார்த்தைகளை வாழ்வாக்குவோம்.  அவரின் உயிர்ப்பை உலகிற்கு அறிவிக்கும் உன்னத சாட்சிகளாக வாழ இறைவனிடத்தில் அருள் வேண்டி   இந்த திருப்பலி  வழியாக  பக்தியோடு செபிப்போம்.

வெள்ளி, 29 ஏப்ரல், 2022

ஆண்டவரைக் கண்டு கொண்டு, அச்சம் களைவோம்!(30.4.2022)

ஆண்டவரைக் கண்டு கொண்டு, அச்சம் களைவோம்!


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் இருள் சூழ்ந்த மாலை வேளையில் படகில் ஏறிக் கப்பர்நாகூமுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பயணம் செய்து கொண்டிருக்கின்ற கடல் பகுதி என்பது தீய ஆவிகள் வாழும் இடமாக கருதப்படுகின்றது. இத்தகைய தீய ஆவிகளைப் பற்றிய அச்சத்தை சீடர்களிடம் நீக்கும் வண்ணமாகத் தான் இயேசு கடல்மீது நடந்து செல்கிறார். தம்மை நோக்கி வருகின்ற ஆண்டவர் இயேசுவை கண்டும், அவர் இயேசு தான் என்பதை உணர இயலாத நிலையில் சீடர்கள் இருக்கின்றார்கள். 

          அவரைப் பேய் எனக் கருதி சீடர்கள் அஞ்சுகின்ற பொழுது, "அஞ்சாதீர்கள்! நான்தான்" என்று இயேசு அவர்களிடம் கூறுகிறார். விவிலியம் முழுவதையும் புரட்டி பார்க்கின்ற பொழுது 365 முறை அஞ்சாதீர்கள் என்ற இந்த வார்த்தையானது விவிலியத்தில் இடம்பெறுகிறது. வருடம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஆண்டவர் இயேசு நம்மைப் பார்த்து "அஞ்சாதீர்கள்" என்று கூறுகிறார். 

இந்த வார்த்தையானது நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற பொழுது , வாழ்வில் எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் எதைக் கண்டும் அஞ்சாதவர்களாக நாம் இருக்க அழைக்கப்படுகிறோம். 

இயேசுவோடு உடன் இருந்தவர்கள்,  உடன் பயணித்தவர்கள், அவருடைய அரும் அடையாளங்களைக் கண்டவர்களான இயேசுவின் சீடர்கள் கூட, ஆண்டவர் இயேசுவை அவர்களது இருளின் வேலையில் மறந்து போனார்கள். 

ஆனால், ஆண்டவர் இயேசுவை நாம் மறந்தாலும் கூட,  நம்மை மறவாத ஆண்டவர், நமது இக்கட்டான சூழ்நிலையில் நமது அருகில் வந்து நின்று, "அஞ்சாதீர்கள்! நான்தான் உடன் இருக்கிறேன்" என்று அன்று சீடர்களிடம் கூறிய அதை வார்த்தைகளை நம்மிடமும் கூறுகிறார். 

நம்மை வழிநடத்த காத்திருக்கும் நம் ஆண்டவர் இயேசுவை கண்டு கொண்டு, நமது இன்னல் இடையூறுகளில் அவரது கரங்களைப் பற்றிக்கொண்டு, தீமைகளை வென்றெடுக்க இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

வியாழன், 28 ஏப்ரல், 2022

நின்று நிலைத்திடும் ஆண்டவரின் வல்லமை!(29.4.2022)

நின்று நிலைத்திடும் ஆண்டவரின் வல்லமை!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நாளில் ஆண்டவர் இயேசு பல்வேறு தேவைகளில் தன்னை நாடி வந்த மக்களை சந்திக்கிறார் ஆண்டவரின் வார்த்தைகளை கேட்கவும், உள்ளத்தில் ஆறுதல் பெறவும், திடன் கொள்ளவும், தம்முடைய பிணிகள் நீங்கி நலமுடன் வாழவும், ஆண்டவரை நோக்கி அன்று மக்கள் வந்தார்கள்.

ஆண்டவர் இயேசுவும் அவர்களது ஆழ்மனதின் ஆழமான ஏக்கங்களை உணர்ந்து கொண்டவராக, இன்றாவது நான் விடுதலை பெற மாட்டேனா? இன்றாவது எனது மன பாரங்கள் தீர்ந்துவிடாதா? இன்றாவது நான் ஆண்டவரின் வார்த்தைகளை கேட்பதன் வழியாக என்னை திடப் படுத்திக் கொள்வேனா? என்று நமது மனித வாழ்வின் பல்வேறு விதமான அன்றாட தேடல்களுடன் மக்கள் அன்று அவரை சந்திக்க ஆர்வத்தோடு தேடி வருகின்றார்கள். 

     ஆண்டவர் இயேசுவோடு உடனிருந்து, தமது தேடல்களையும் ஏக்கங்களையும் ஆண்டவர் பாதத்தில் சமர்ப்பித்து விட்டு மனதில் நிறைவோடு அமர்ந்திருக்கக் கூடிய மக்கள் ஒவ்வொருவருக்கும் தேவையான உணவளிக்க ஆண்டவர் இயேசு தம்முடைய சீடர்கள் அழைக்கின்றார்.

ஆண்டவரின் அழைத்தலுக்கு அன்புடன் செவிமடுத்த பிலிப்பு, மக்கள் திரளை பார்த்து வியந்த போது இத்தனை மக்களுக்கும் அப்பம் வாங்க இயலாதே! என்று உள்ளத்தில் கலக்கம் கொள்கிறார். 

ஆண்டவர் இயேசுவோ, தந்தை இறைவனின் வல்லமையை நோக்கியவராய் அண்ணாந்து பார்த்து செபித்து அவரது கையில் இருந்த அப்பங்களை ஆசீர்வதித்து, இறைவனுக்கு நன்றி கூறி, அதைப் பிட்டு மக்கள் அனைவருக்கும் கொடுக்கிறார்.  அனைவரும் வயிறார உண்டனர்.

இன்றைய வாசகத்தில் தனது கண் முன்னால் இருந்த மிகப்பெரிய மக்கள் திரளை பார்த்து இவர்களுக்கு எவ்வாறு உணவு அளிப்பது என்று பிலிப்பு சந்தேகத்தில் ஆழ்ந்தார். 
        ஆனால் ஆண்டவர் இயேசுவோ மக்கள் கூட்டத்தையும், அதன் பெரும் திரளையும் கண்டு பின்வாங்கவில்லை. மாறாக தந்தையின் வல்லமையை நாடி அன்று அந்த மக்களுக்கு தேவையான அனைத்தையும் பெற்றுக் கொடுத்தார். 

        நமது வாழ்விலும் நம்மை சுற்றி பல்வேறு வித ஈர்ப்புகள் நிறைந்த இந்த உலகத்தில் உணவு, உடை, உறைவிடம் என்று அனைத்து அடிப்படைத் தேவைகளையும் நமக்கு நிறைவேற்றித் தரும் நம் ஆண்டவர் இயேசு, நமது பணி வாழ்வின் பயணத்தில் நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மேலாகவே தமது வல்லமையை நம் மீது பொழிந்தருள்பவர், என்பதை உணர்ந்தவர்களாய், ஆண்டவரின் வல்லமையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு நமது வாழ்வு பயணத்தை மகிழ்வோடு தொடர்ந்திட இறையருள் வேண்டி இன்றைய நாள் திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

புதன், 27 ஏப்ரல், 2022

இயேசுவின் பெயருக்கான ஆற்றல் அறிவோம்....(28.4.2022)

இயேசுவின் பெயருக்கான ஆற்றல் அறிவோம்....

இயேசுவின் அன்பர்களே,

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ....

இயேசுவின் பெயருக்கு உள்ள ஆற்றலையும், பெருமையையும் இன்றைய நற்செய்தி வாசகத்தின் மூலம் அறிந்துகொள்ள அழைக்கப்பட வேண்டும் . 



"நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று வாக்களிக்கிறார் இயேசு.


அந்நாளில் நீங்கள் என் பெயரால் வேண்டுவீர்கள்” என்றும் இயேசு முன்  அறிவித்துள்ளார்.

 இயேசுவின் திருப்பெயரை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்? என சிந்திக்க இந்த நாளில் அழைக்கப்படுகிறோம்....

உலகில் உள்ள அனைத்துப் பெயர்களிலும் மேலான பெயர் இயேசுவின் திருப்பெயர்தான் ( பிலி 2:6-11). அந்தப் பெயருக்குத்தான் விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர். அந்தப் பெயரைக் கேட்டுத்தான் அலகைகள் அலறி அடித்துக்கொண்டு ஓடுகின்றன. அந்தப் பெயரால்தான் நோயாளர்கள் நலம் பெறுகின்றனர்;. அந்தப் பெயரில்தான் தந்தை இறைவன் பெருமை அடைகின்றார். 


பெருமை நிறைந்த இறைவனது பெயரை வீணாக பயன்படுத்துவதை தவிர்த்துநம்பிக்கையோடு இறைவனது திருப்பெயரை பயன்படுத்திஇறைவனின் ஆசி பெற்றுக் கொள்ள இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இன்றைய நாள்திருப்பணியில் ஜெபிப்போம்....




செவ்வாய், 26 ஏப்ரல், 2022

உண்மைக்கு ஏற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்!(27.4.2022)

உண்மைக்கு ஏற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ‌.
கடவுள் இவ்வுலகினை படைத்த போது ஆழத்தின் மீது இருள் பரவி இருந்தது. "ஒளி உண்டாகுக" என்ற இறைவனின் வார்த்தைக்கேற்ப  உலகில் ஒளி உண்டாயிற்று. வார்த்தையாம் இறைவன் ஒளியையே இவ்வுலகில் முதன்முதலாகப் படைத்தார். 

    அன்று தொடங்கிய ஒளியின் பயணம், இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, வார்த்தையான இறைவனின் பிரசன்னம்  வழியாக.  வார்த்தையான இறைவனை நாம் நாள்தோறும் திருப்பலியில் சந்திக்கிறோம்.  அவரது நற்கருணை பிரசன்னத்தில் "நானே உலகின் ஒளி" என்று கூறிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாபெரும் பேரொளியை நாம் சந்திக்கிறோம்.  

உண்மைக்கு ஏற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள் என்ற இன்றைய இறை வார்த்தைக்கு ஏற்ப, இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்ட நாமும், அவரது ஒளியின் கீற்றுகளாக படைக்கப்பட்ட நாமும், நாம் பெற்றிருக்கக் கூடிய பேரொளியினை பிரதிபலிக்கின்றோமா? என இன்றைய நாளில் சிந்திப்போம். 

ஒளியின் பண்புகளான உண்மையும், நன்மையும், திறந்த மனமும், நமது செயல்பாடுகளில் வெளிப்படுகின்ற மலர்ந்த முகத்தின் பேரொளியாம் புன்னகையும், தீமையின் பண்புகளை, அவற்றின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி களைந்திடக் கூடிய  வெளிப்படைத் தன்மையும் நம்மில் மிளிர, உலகின் ஒளியாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நாமும் பிரதிபலிக்க, உண்மைக்கு ஏற்ப வாழ்பவர்களாக, அகவொளி தீபத்தை ஏற்றி, ஆண்டவரின் மக்களாக வாழ இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து தொடர்ந்து செபிப்போம் !

மறுபடியும் பிறக்க வேண்டும்!(26.4.2022)

மறுபடியும் பிறக்க வேண்டும்!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் ஒவ்வொருவரும் மறுபடியும் பிறக்க வேண்டும் என இயேசு நமக்கு கற்பிக்கின்றார்.

 மனிதர்களாகப் பிறந்து இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு நாளும் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள் வழியாக புதிதாக பிறக்கின்றோம் என்பது முற்றிலும் உண்மை. 

நமது உடலில் இருக்கும் அனைத்து செல்களும் புதிது புதிதாகப் பிறந்து கொண்டே இருக்கின்றன என்பது அறிவியல் நமக்கு வெளிப்படுத்தும் உண்மை. இத்தகு புதிய செல்களின் பிறப்பே நமக்கு வாழ்வையும் வளர்ச்சியையும் தந்து கொண்டிருக்கின்றது. 

இன்று நம் உடலில் இருக்கும் செல்கள் நாளைக்கு புதியனவாக மாறிவிடுகின்றன. இன்று நம்மை தழுவிச் செல்லும் காற்று இயற்கையில் கரைந்து விடுகின்றது.  மறுநாள் புதிய காற்று தோன்றிவிடுகிறது. 

ஒவ்வொரு நாளும் புதிதாக தோன்றும் செல்களைப் போல, ஒவ்வொரு நாளும் புதிதாக வீசும் காற்றைப் போல, நமது வாழ்வும் புதிதாக பிறக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு குறிப்பிடுகிறார்.

ஆண்டவரை நோக்கிய நமது வாழ்க்கைப் பயணத்தில் நமது உடல் வளர்ச்சி மட்டுமல்லாது அதனோடு இணைந்த நமது உள்ளத்தின் நலமும் ஆன்மாவின் நலமும் அன்றாடம் நிகழ்ந்திட வேண்டுமென நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு அழைப்புத் தருகின்றார். 



புதிதாகப் பிறந்த குழந்தையானது தாயின் முகம் பார்த்து அவளின் குரல் கேட்டு அவளின் கைகளைப் பற்றிக் கொண்டு அவளைப் போலவே வளர்கின்றது. ஆம்! தாயைப் போல பிள்ளை!

அதுபோலவே நாமும் ஆண்டவரிடம் கொள்ளும் தெய்வ பயத்திலும்,
 நமது அயலாருக்கு செய்யும் அன்பு சேவையிலும், நமது கடமை உணர்ந்து செயலாற்றும் நமது பணிகளிலும், நம்மிடையே காணப்படும் தேவையற்ற கோபம், நான் என்ற ஆணவம்,
அதிகாரம் என் கையில் என்னும் மமதை, என்னால் செய்ய இயலாது என்ற சோம்பேறித்தனம், அனைத்தையும் இறந்து போகும் செல்களோடு அடக்கம் செய்து விட்டு, 

     இன்று புதிதாய் பிறந்தவர்களாக, இறைவனின் கொடையாம் மகிழ்வையும், அன்பையும், சகோதரத்துவத்தையும், நன்மைகளை ஆற்றும் நல்ல நம்பிக்கையையும், உற்சாகத்தையும், அன்றாடம் நமது உள்ளத்தில் பிறக்க செய்திட,  பிறக்கச் செய்வதோடு மட்டுமல்லாது அதனை இவ்வுலகில் பரவச் செய்திட,  ஆண்டவரின் இறையாட்சியை ஒவ்வொருநாளும் இம்மண்ணில் மலரச்  செய்திடும் கருவிகளாக இறைவன் நம்மை மாற்றிட இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்!

ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

நம்மில் செயலாற்றும் இறைவன் ...(25.4.2022)

நம்மில் செயலாற்றும் இறைவன் ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.



நற்செய்தியைப்பறைசாற்ற இயேசு தனது சீடர்களை அனுப்புகிற நிகழ்ச்சி இன்றை வாசகமாக நமக்குத்தரப்படுகிறது. 

இயேசு தனது சீடர்களை நற்செய்தி அறிவிக்க  அனுப்பியதோடு தனது கடமை நிறைவேறிவிட்டது என்று கருதவில்லை . மாறாக, சீடர்களோடு உடனிருந்து   செயலாற்றுகிறார். பல்வேறு சூழ்நிலைகளில்   அவர்களை உறுதிப்படுத்துகிறார். 

கடவுள் எங்கே இருக்கிறார்...? என கேட்டால் பலர் கூப்பிடும் தூரத்தில் என்பார்கள். கூப்பிடும் தூரத்தில் இருப்பதனால்தான் பலர் கடவுளை கூப்பிடுவது இல்லை.ஆனால் கடவுள் நம்மை விட்டு வெகுதூரம் இருக்கக்கூடிய கடவுள் அல்ல. மாறாக, நம்மில் ஒருவராக இருந்து செயலாற்றுகிறவர்.

இயேசுவின் பிரசன்னம் இந்த உலகத்தில் அவர் வாழ்ந்ததோடு முடிந்துவிடவில்லை. 

அவருடைய பணி உயிர்ப்போடு நிறைவுபெறவில்லை. 

அவருடைய கடமை விண்ணேற்றத்தோடு நின்றுவிடவில்லை.

இன்றும்  தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது அவர் ஏற்படுத்திய கிருத்துவத்தின் வழியாக ...

 அவர் ஒவ்வொரு நாளும்  தனது பணியைச்செய்யும் பணியாளர்களை  உறுதிப்படுத்துகிறார். துவண்டுபோகிறபோதெல்லாம் அவர்களைத் தாங்கிப்பிடிக்கிறார். தோளோடு தோள் கொடுக்கிறார். இயேசுவின் சீடர்களும் தங்களின் வாழ்க்கையில் இதனை அதிகமாக உணர்ந்தனர். எனவே அந்த இயேசுவுக்காக தங்களது என் உயிரையும் தியாகம் செய்யத் துணிந்தனர்.


 

இன்றைய இறைவார்த்தை பகுதி நமக்கு உணர்த்தும் வாழ்வுக்கான பாடம்.  இயேசுவின் பணியை நாம் அனைவருமே முன்னெடுத்துச்செல்ல வேண்டும். குருக்கள்   மட்டுமல்ல, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அறிக்கையிடுகிற அனைவருமே நற்செய்தியின் பணியாளர்கள்தான். இயேசு நம்மிலே தொடர்ந்து செயலாற்ற, நம்மையே முழுவதுமாக இயேசுவிடம் ஒப்படைக்க இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக ஜெபிப்போம் .

சனி, 23 ஏப்ரல், 2022

நானே உங்களை அனுப்புகிறேன்!...(24.4.2022)

நானே உங்களை அனுப்புகிறேன்!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடர் ஒளி உதித்துள்ளது.
                                      எசாயா 9:2
         
என்று கூறும் இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகள் இன்று உயிர்பெற்று
 செயல்படுவதை இன்றைய வாசகங்களின் வழியாக நாம் காண்கிறோம். 

              இன்றைய நற்செய்தி வாசகத்தில் யூதர்களுக்கு அஞ்சி கதவுகளை மூடி உள்ளத்தில் கலக்கம் கொண்டு, என்ன செய்வதென தெரியாது, தமக்குள்ளே திகைத்து தன்னையே ஒடுக்கிக் கொண்ட இவர்களுக்கு மத்தியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய பதினொரு சீடர்களுக்கும் தோன்றி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக"! என்று கூறினார். அவர்கள் மூடி வைத்திருந்த கதவுகளைத் திறக்கும் வண்ணமாக, "தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்" என்று கூறி, அவர்களை தமது இறையாட்சிப் பணிக்கு தயார்படுத்துகிறார். 

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசிக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்,  இறையாட்சி பணியினை ஆற்றிட, ஆண்டவரிடமிருந்து வல்லமை பெற்றவராக மக்களை நோக்கிப் புறப்பட்ட பேதுருவின் காலடி நிழல் படாதா?  என்று மக்கள் அவரது வருகைக்காக காத்திருப்பதை நாம் பார்க்கிறோம்.

     இன்றைய இரண்டாம் வாசகத்தில் இறைவார்த்தை வழியாக தந்தையாம் இறைவன் முதலும் முடிவும் நானே!  வாழ்வும் வழியும் நானே!  என அனைத்திற்கும் ஆதிகாரணராக, காலங்களை கடந்த இறைவனாக எக்காலமும் வாழ்பவராக அவர் இருக்கிறார் என்பதை இன்று நமக்கு வெளிப்படுத்துகிறார். 
                 இன்றைய இறைவார்த்தை பகுதியானது நமக்கு வெளிப்படுத்துகின்ற மகிழ்ச்சியூட்டும் செய்தி என்னவென்று
 நாம் பார்க்கின்ற பொழுது ஆண்டவரின் பிரசன்னம் இருக்கும் இடத்தில் அவரது அருள்செயல்களும் வல்லமைகளும் வெளிப்படுகின்றன. 

                     ஆண்டவருடைய பிரசன்னம் இருக்குமிடத்தில் மூடிய கதவுகள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. 

                 ஆண்டவரின் அருள் நம்மை ஆட்கொள்கிற போது, ஆண்டவரின் ஆற்றல் நம் வழியாக செயல்படுத்தப்படும் போது  நாமும் புனித பேதுருவைப் போல பிறரது துன்பங்களிலிருந்து அவர்களுக்கு வாழ்வு கொடுக்க முடியும். ஆண்டவரது அருள் பெற்றவரின் நிழல்கூட வாழ்வை இழந்து தவிப்பவர்களுக்கு, புதிய  ஆற்றலை, புதிய மாற்றத்தை கொடுக்க முடியும். 
            எனவே இன்றைய நாளில் நமது உடலிலும் உள்ளத்திலும் இருக்கும் ஆண்டவரின் பிரசன்னத்தை உணரவும், நமது நிழல் போல நம்மை தொடர்ந்து வரும் நமது வார்த்தைகளும், பணிகளும் பிறருக்கு வாழ்வு தர, "நான் உங்களை அனுப்புகிறேன்" என்று கூறிய ஆண்டவர் இயேசுவின் அன்புச் சீடர்களாக வாழ்ந்திட இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

துன்பத்தில் இறைவன் தெரிவாரா?...(23.4.2022)

துன்பத்தில் இறைவன் தெரிவாரா?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

    இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
     ஆண்டவர் இயேசு தம்மை எவ்வாறெல்லாம் வெளிப்படுத்துகிறார் என்பதை நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்க கேட்டோம்.  வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவுக்குத் ஆண்டவர் இயேசு தோன்றியபோது அவரைப் பணிந்து வணங்கிய மகதலா மரியா, அவரது கட்டளைக்கு ஏற்ப இயேசுவின் சீடர்களிடம் அதனை அறிவிக்க ஓடோடி செல்கிறாள். ஆனால் தங்களது உள்ளத்தின் கவலைகளிலேயே மூழ்கிப் போயிருந்த சீடர்கள் அன்று மரியா சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. 

      மீண்டுமாக இயேசு தன்னுடைய 72 சீடர்களுள் இருவர் வயல் வெளியில் நடந்து சென்றபோது வழிப்போக்கன் போல அவர்களோடு பேசி அவர்களுக்கு மறைநூலினை விளக்கி, ஆண்டவர் இயேசுவைப் பற்றிய மறைஉண்மைகள் அனைத்தையும் விளக்குகிறார்.  அவர்களோடு பந்தியில் அமர்ந்து அப்பத்தை பிட்ட வேளையில் தன்னை முழுமையாக வெளிப்படுத்தினார். ஆண்டவர் இயேசுவின் அனுபவம் பெற்ற அந்த இரண்டு சீடர்களும் ஆண்டவர் இயேசுவின் சீடர்கள் பதினொருவரையும்  சந்தித்து தாம் பெற்ற இயேசு அனுபவத்தை கூறிய போதும்
 அவர்களது துயரத்தின் கலக்கம் அவர்களை ஆண்டவர் இயேசுவைப் பற்றிய உண்மைக்கு செவி கொடுக்காதபடி அவர்களது செவிகளை மூடிவிட்டது. 

          தம்முடைய துயரத்தில் மூழ்கியிருந்த சீடர்களுக்கு இயேசு இறுதியில் தாமே சென்று அவர்களுக்கு தன்னை வெளிப்படுத்துகிறார்.  அவர்களது கடின உள்ளத்தினை கடிந்து கொள்கிறார். இறுதியில் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய உலகனைத்திற்குமான நற்செய்தி அறிவிப்பு பணியினை   அவர்களுக்கு அறிவிக்கின்றார்,  உணர்த்துகிறார். 

என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது.
திருப்பாடல்கள் 94:19

 என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப ஆண்டவர் இயேசுவின் பிரசன்னம் அவர்களுக்கு ஆறுதல் தந்து அவர்களது துயரத்தில் இருந்து விடுவித்தது. துயரத்தின் பிடியில் சிக்குண்டு மூழ்கிப் போய் வாழ்க்கையை முன்னோக்கி பார்க்க இயலாத பலவீனர்களாக மாறிவிட்டுப் போயிருந்த சீடர்களுக்கு, அன்று இயேசுவின் பிரசன்னம் துயரத்திலிருந்து விடுதலை அளித்தது. இந்த சீடர்களைப் போலவே நாமும் பல நேரங்களில் நம் கண் முன்னே ஆண்டவர் வைத்திருக்கின்ற மகத்தான வாழ்வினை மறந்துவிட்டு நமது உள்ளத்தில் இருக்கும் கவலையின் கறைகளை பற்றிப் பிடித்துக் கொண்டு அதிலேயே ஊறிப்போய் விடுகின்றோம்.   இதனால் நமது மனமும் உடலும் பலவீனம் அடைந்து மிகவும் மோசமான ஒரு நிலைக்கு தள்ளப்படுகிறோம் என்பதை இன்றைய நாளில் உணர்ந்து கொள்வோம். 

            ஆண்டவர் இயேசுவின் பிரசன்னம் நமக்கு ஆறுதலையும் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் முன்னோக்கிச் செல்லக்கூடிய தெளிவான பார்வையையும் துணிவினையும் தருகிறது என்பதை உணர்ந்தவர்களாய், ஆண்டவரின் பிரசன்னத்தை நாடிச் செல்வோம்.  உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம், நமது வாழ்வையும் பலவீனத்தில் இருந்து பலமாக மாற்றும் என்ற அவரது திரு இரத்தத்தின் வல்லமையில் நம்மை புதுப்பித்துக் கொள்வோம், புத்துயிர் பெறுவோம்.  ஆண்டவர் நமக்கு வைத்திருக்கின்ற அவரது அன்புப் பணிகளை ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் ஆற்றுவோம்.  உலகனைத்திற்கும் நற்செய்தி அறிவிக்கக்கூடிய ஆண்டவர் இயேசுவின் அன்பு சீடர்களாக மாறிட இறையருள் வேண்டி இணைவோம் இந்த தெய்வீக திருப்பலியில்.

வியாழன், 21 ஏப்ரல், 2022

நம்பிக்கையின் ஆணிவேர் எது?(22.4.2022)

நம்பிக்கையின்  ஆணிவேர் எது?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்


இன்றைய நற்செய்திப்பகுதி, இயேசு உண்மையிலே உயிர்த்தார் என்பதை வலியுறுத்திக்கூறுவதாக அமைந்திருக்கிறது. 


தொடக்க காலத்தில் ஆங்காங்கே உயிர்த்த இயேசுவை சீடர்கள் பார்த்ததாகக் கூறியதைப் பலவற்றுக்கு ஒப்பிட்டனர். 

சீடர்கள் ஏதாவது கனவு கண்டிருக்கலாம் அல்லது ஒருவிதமான பிரம்மையில் அவர்கள் இரு்ந்திருக்கலாம் அல்லது இயேசுவோடு நெருங்கி இருந்ததால், அவர்கள் பார்ப்பது எல்லாம் இயேசுவைப்போல இருக்கிறது என்று பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.

 இவையெல்லாம் தவறான விளக்கங்கள், உண்மையில் இயேசு உடலோடு உயிர்த்தார் என்பதற்குத்தான் இன்றைய நிகழ்ச்சி, யோவான் நற்செய்தியாளரால் எழுதப்படுகிறது.

உயிர்த்த இயேசுவின் உடல் எப்படிப்பட்டது என்பதை  நற்செய்தி வாசகம் நமக்கு விளக்குகிறது 

 இயேசு மீன்களை சமைத்து அவர்களுக்கு உண்ணக் கொடுக்கிறார். அவர்களோடு பேசுகிறார். அவர்களில் ஒருவராக இருக்கிறார். இவ்வாறு உடலோடு இருப்பதை அவர் உறுதிப்படுத்துகிறார். அவர் ஆவி அல்ல. 

இயேசு உயிர்த்தார், என்பது நமது நம்பிக்கையின்  ஆணிவேர். அந்த நம்பிக்கை  தான் கிறிஸ்தவ மறை இந்த அளவுக்கு வளர்வதற்கு அடித்தளமாக இருந்திருக்கிறது. அந்த நம்பிக்கையில்  நாம் ஒவ்வொருநாளும் வளா்வதற்கும், வளர்த்தெடு்ப்பதற்கும் அழைக்கப்படுகிறோம்.

உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை உள்ளத்தில் இருத்தி அவரது வார்த்தைகளை உள்வாங்கிக்கொண்டு உயிர்த்த ஆண்டவருக்கு சான்று பகரும் மனிதர்களாக மாறிட இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இத்திருப்பலி வழியாக செபிப்போம். 

புதன், 20 ஏப்ரல், 2022

இறையாட்சியின் பணியினை முன்னெடுக்கும் மனிதர்களாக...(21.4.2022)

இறையாட்சியின் பணியினை முன்னெடுக்கும் மனிதர்களாக...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
கலங்கிய உள்ளத்தோடு இருந்த சீடர்களுக்கு, கலக்கத்தைப் போக்கும் வண்ணமாய் இயேசு அவர்கள்  மத்தியில் தோன்றி அவர்களது குழப்பத்தை சரி செய்வதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு வெளிப்படுத்துகின்றது.  
               இங்கும் அங்குமாக, ஒருவருக்கும் இருவருக்குமாக தோன்றிக் கொண்டிருந்த இறைவன் இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் பார்க்கின்றபோது, சீடர்கள் குழாம்  முழுவதற்குமாக காட்சி தருகின்றார்.  தன்னுடைய சீடர்கள் குழப்பத்தில் இருந்த போது அந்த குழப்பத்தை   போகக் கூடிய நபராக உயிர்ப்பு பற்றிய தெளிவினை அவர்களுக்கு விளக்கக் கூடியவராக இயேசு செயல்பட்டதை இன்றைய வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்.  
              ஒரு மந்தையில் இருக்கின்ற நூறு ஆடுகளுள் ஒரு ஆடு காணாமல் தவறிப் போனால் தவறிப்போன ஒரு ஆட்டை ஒரு  நல்ல ஆயன் தேடிச் செல்வார் என இயேசு முன்மொழிந்த வார்த்தைகளின் அடிப்படையில்,  குழப்பத்தோடு இருந்த சீடர்கள் குழாம் முழுவதற்கும் குழப்பத்தை போக்கும் வண்ணம்,  வழிதவறியவர்கள் வாழ்வில் ஆண்டவரின் வாழ்க்கைப் பாதைக்கான தடத்தினை உணர்ந்து கொள்ளக்கூடிய வகையில்,  அவர்கள் மத்தியில் தோன்றி அவர்களுக்கு தெளிவைத் தந்து, அவர்களோடு உண்டு,  அவர்களுடைய அச்சத்தையும்,  கலக்கத்தையும்,  குழப்பத்தையும் நீக்கி, தெளிவுபடுத்தி அவர்களை இறையாட்சிப் பணி செய்வதற்கு தகுதி உள்ளவர்களாக மாற்றுகிறார். இந்த இறைவன் நமது வாழ்விலும் பல நேரங்களில் பல மனிதர்கள் வழியாக, நாம் குழம்பிய நேரங்களிலும்,  தயக்கத்தோடு தடுமாறுகின்ற நேரங்களிலும், நம் குழப்பத்தை நீக்குபவராக,  நம் தயக்கத்தை தகர்த்தெரியக்கூடிய நபராக செயல்படுகிறார்.

    இறைவன் அவ்வாறு செயல்படுகின்ற தருணங்களில், நம்மோடு உடன் இணைந்து பயணிக்கின்ற இறைவனின் உடனிருப்பை உணர்ந்து கொண்டவர்களாய், நாம் அச்சத்தையும் கலக்கத்தையும் தவிர்த்து,  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஆழமான புரிதலில் நாளும் வளரவும்,  அதன் வழியாக இறைவன் விரும்பும் இறையாட்சியின் பணியினை முன்னெடுக்கும் மனிதர்களாக இந்த சமூகத்தில் தொடரவும் இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இன்றைய நாள் திருப்பலி வழியாக  செபிப்போம்.

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

இறைவனை அடையாளம் காண்டிட...(20.4.2022)

இறைவனை அடையாளம் காண்டிட...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!


இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
இன்றைய நாள் இறை வார்த்தைகள் இறைவனை அடையாளம் கண்டு கொள்ள அழைப்பு தருகின்றன.  உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து, உறுதியற்ற நிலையில் இருந்த தனது சீடர்களுக்கு, நம்பிக்கையை தருகின்ற பணியினை தொடர்ந்து செய்தார். அவைகளுள் ஒன்றாக நாம் எம்மாவுஸ் பயணத்தையும்  பார்க்கலாம் . 
எம்மாவுஸை நோக்கி நடந்து கொண்டிருந்த இரு சீடர்களுக்கு, இயேசு வழிப்போக்கன் போல உடன் வந்து,  இயேசுவைக் குறித்து விவிலியத்தில் சுட்டிக்காட்டப்பட்டவைகளை எல்லாம் விளக்கிக் கூறுகிறார்.  சேர வேண்டிய இடத்தை நெருங்கியபோது அவர்கள் தங்களோடு தங்குமாறு கேட்கிறார்கள், அவரும் அவர்களுடன் தங்குகிறார். 

    அப்போது அப்பத்தை எடுத்து, பிட்டு கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுக்கின்ற போது தான், சீடர்கள் இதே நிகழ்வை, இவரைப்போன்றே  அன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செய்தாரே!  அந்த இயேசு கிறிஸ்து தான் இன்று நம்மோடு அமர்ந்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டவர்களாய், தங்களை முழுமையாக இறைவனிடத்தில் சரணாகதி ஆக்குகிறார்கள்.  இந்தச் சீடர்களைப் போல,  நமது வாழ்வில் நம்முடன் வருகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நாம் கண்டு கொள்ள இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். 

        இறைவன் எங்கே இருக்கின்றார் எனக் கேட்டால் பலரும் கூப்பிடும் தூரத்தில் இருக்கின்றார் என்பார்கள். கூப்பிடும் தூரத்தில் இருப்பதால் தான், பல நேரங்களில் நாம் கடவுளை கூப்பிடாமல் இருந்து கொண்டிருக்கிறோம். 

கடவுள் உறைந்திருப்பது நமக்குள்ளாகத் தான்.  நம்முள் இருந்து கொண்டு தான் நன்மைத் தனங்களை அவர் செய்து கொண்டு இருக்கிறார்.  தனக்குள் உறைந்து இருக்கக்கூடிய இறைமையை கண்டு கொள்ளுகிற  போது இந்தச் சமூகத்தில் நாம் நலமான பணிகளைச் செய்ய முடியும். 
                    இன்றைய முதல் வாசகத்தில் கூட தனக்குள் நிலையாக உறைந்திருப்பது இறைவன் இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே என்பதை பேதுரு ஆழமாக உணர்ந்து இருந்ததன் காரணத்தினால் தான், முடக்குவாதமுற்ற ஒருவனைப் பார்த்து, என்னிடம் பொன்னுமில்லை, பொருளும் இல்லை.  என்னிடம் இருப்பதை உனக்கு தருகிறேன்.  என்னிடம் இருப்பது ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒருவரே! அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் சொல்லுகிறேன், எழுந்து நட என்றார்.  அவனும் எழுந்து நடந்தான்.
                               நமக்குள் இருக்கின்ற இறைவனை நாம் கண்டு கொள்ளுகிற போது , 
நாமும் பலவிதமான நல்ல செயல்களை, நன்மைகளை  இச்சமூகத்தில் செய்ய முடியும் என்பதை பேதுருவின் வாழ்வு நமக்கு வலியுறுத்துகிறது. இறைவன் வலியுறுத்துகின்ற இந்த வாழ்வுக்கான பாடத்தை உணர்ந்து கொள்வோம்.  நமக்குள் இருக்கின்ற இறைவனைக் கண்டு கொள்வோம். நமக்குள் இருந்து கொண்டு நல்லதை செய்ய தூண்டுகிற இறைவனது இயல்புக்கு செவிகொடுத்தவர்களாய் , நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இறையருள் வேண்டி தொடர்ந்து செபிப்போம், இந்த திருப்பலியில்.

திங்கள், 18 ஏப்ரல், 2022

சாட்சிகளாய் மாறிட...(19.4.2022)

சாட்சிகளாய் மாறிட...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நாள் இறை வார்த்தையானது விழிப்போடு இருந்து இறைவனைக் கண்டு கொள்ள நமக்கு அழைப்பு தருகிறது.  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அதிகமாக அன்பு செய்த நபர்களில் ஒருவராக நாம் மகதலா மரியாவை அறிய முடியும்.  ஆனால் இந்த மகதலா மரியா, இறந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலைப் பார்ப்பதற்காக தன்னந்தனியே கல்லறைக்கு விரைந்து செல்லுகின்றார்.  கல்லறையில் இயேசுவின் உடல் இல்லாத காரணத்தினால், யாரோ ஒருவர் அதை எடுத்துச் சென்று விட்டார்கள் என்ற எண்ணத்தோடு கலங்கியவளாய், திகிலுற்றவளாய், என்ன செய்வதென அறியாது,  திகைத்துக் கொண்டிருந்தார்.  தன் முன்பாக நிற்கின்ற மனிதர் யார் என்பதைக் கூட அறிந்து கொள்ள இயலாத நிலையில், அந்தப் பெண்மணி இறந்த  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலை தேடிக்கொண்டிருந்தார்.  ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொன்னபடி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். 

உயிர்த்தெழுந்த இயேசுவை கண்டுகொள்ள மறுத்து,  இறந்துபோன இயேசுவின் உடலை தேடிக் கொண்டிருந்த அந்த மகதலா மரியாவுக்கு,  ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் வார்த்தைகளால் விழிப்படையச் செய்தார். 

ஆண்டவர் இயேசுவின் குரலைக் கேட்டு விழிப்படைந்த மகதலா மரியா, "ரபூனி" அதாவது, போதகரே என்று அழைத்து, உயிர்த்த ஆண்டவர் இயேசுவை தன் கண்களால் கண்டார். கண்ட இறைவனை தன்னுடன் இருந்தவர்களுக்கும், இயேசுவைப்பற்றி அறிந்தவர்களுக்கும் பறைசாற்றுவதற்காக இயேசுவால் அனுப்பி வைக்கப்பட்டார்.  அவரும் சென்று, தான் கண்டதை மற்றவருக்கு பகிர்ந்தார்.                
                இன்று பல நேரங்களில் நமது வாழ்வில் இந்த இறைவார்த்தைப் பகுதி  நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என்று சிந்திக்கின்ற போது,  பல நேரங்களில் இறைவன் நம்மோடு இருந்து நம் வழியாக பல நல்ல காரியங்களை இச்சமூகத்தில் முன்னெடுக்க விரும்புகிறார்.  ஆனால் பல நேரங்களில் மகதலா மரியாவைப் போல,  விழிப்பற்ற நிலையில் இருந்து கொண்டு, நாம் ஏதோ ஒன்றை மனம் போன போக்கில் செய்து கொண்டிருக்கிறோம்.  ஆனால் இறைவனது வார்த்தைகளின் அடிப்படையில் விழிப்படைந்து, மனிதர்களாகிய நாம் இந்த மண்ணில் இருப்பதன் நோக்கமே, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்வாக்குவதற்கு என்பதை உணர்ந்துகொண்டு, சக மனிதர்களான ஒருவர் மற்றவரை அன்புசெய்து இன்புற்று வாழ, அதன்வழி இயேசுவின் இறையாட்சியை இம்மண்ணில் நிலைநாட்டிட,  விழிப்படைந்த மக்களாக மாறிட,  இன்றைய நாளில் இறைவன் அழைப்பு தருகின்றார்.  இறைவன் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாய் விழிப்படைவோம்! ஆண்டவரின் மீது நம்பிக்கை கொள்வோம்! நாம் கொண்ட நம்பிக்கையை,  துணிவோடு அடுத்தவருக்கு அறிவிக்கும் இயேசுவின் சாட்சிகளாய் மாறிட இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்!

ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

அன்பு சீடர்களாகிட...(18.4.2022)

அன்பு சீடர்களாகிட...

உயிர்த்த ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
புதையலைக் கண்டுபிடித்த பொக்கிஷதாரரைப் போல இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவரை தேடிச்சென்ற பெண்களும் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் ஆண்டவரை சந்திக்கச் சென்றதையும், மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த ஆண்டவரைப் பற்றி அறிவிக்க ஆர்வ மிகுதியால் பெருமகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கிளம்பிய பொழுது, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அவர்களை சந்திக்கின்றார்,  அவர்களோடு உரையாடுகின்றார்.
          அன்று ஆண்டவரை சிலுவையில் அறைந்த போது எண்ணற்ற மக்கள் அவரை சூழ்ந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அவரை அடக்கம் செய்து விட்டு அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டார்கள். ஆண்டவரது இறப்பை காண வேண்டும், அவரை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள் எல்லாம்,  ஆண்டவரது உயிர்ப்புக்கு பிறகும்கூட அவரைப் பற்றிய பேச்சை நாம் எவ்வாறு நிறுத்தலாம், இன்னும் அவரைப் பற்றிய தவறான செய்திகளை எவ்வாறெல்லாம் பரப்பலாம் என்பதை தமது தீய இதயத்தின் கண் கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். 
            ஆனால் அதிகாலையிலேயே ஆண்டவரது உயிர்ப்பினை காண வேண்டும்; அவரடு உரையாட வேண்டும் என்று ஆர்வத்தோடு ஆண்டவரைத் தேடிச்சென்ற பெண்கள், இன்று அவரது மாட்சியை கண்டுகொண்டார்கள்.  ஆண்டவரின் குரலைக் கேட்கும் பேறு பெற்றார்கள் அடுத்த நொடியில் தமது வாழ்க்கையில் ஆண்டவர் செயல்படுத்தவிருகின்ற  நற்செய்தியை கண்டுகண்டார்கள். 

      நாமும் நமது வாழ்வில், நமது புரணி பேசுகின்ற நேரங்களையெல்லாம் குறைத்துக்கொண்டு ஆண்டவரை தேடக்கூடிய நேரங்களை வலுப்படுத்தி, ஆண்டவரை நோக்கி தொடர்ந்து முன்னேறிச் சென்று அவரைக் கண்டு கொள்ள, நமது வார்த்தையாலும் வாழ்வாலும் ஆண்டவரது உயிர்ப்பை அறிவிக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர்களாக தொடர்ந்து வாழ்ந்து, அவரது அன்பு சீடர்களாகிட இறையருள் வேண்டி இன்றைய நாளில் இணைந்து செபிப்போம்.

அன்பு சீடர்களாகிட...(18.4.2022)

அன்பு சீடர்களாகிட...

உயிர்த்த ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
புதையலைக் கண்டுபிடித்த பொக்கிஷதாரரைப் போல இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவரை தேடிச்சென்ற பெண்களும் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் ஆண்டவரை சந்திக்கச் சென்றதையும், மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த ஆண்டவரைப் பற்றி அறிவிக்க ஆர்வ மிகுதியால் பெருமகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கிளம்பிய பொழுது, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அவர்களை சந்திக்கின்றார்,  அவர்களோடு உரையாடுகின்றார்.
          அன்று ஆண்டவரை சிலுவையில் அறைந்த போது எண்ணற்ற மக்கள் அவரை சூழ்ந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அவரை அடக்கம் செய்து விட்டு அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டார்கள். ஆண்டவரது இறப்பை காண வேண்டும், அவரை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள் எல்லாம்,  ஆண்டவரது உயிர்ப்புக்கு பிறகும்கூட அவரைப் பற்றிய பேச்சை நாம் எவ்வாறு நிறுத்தலாம், இன்னும் அவரைப் பற்றிய தவறான செய்திகளை எவ்வாறெல்லாம் பரப்பலாம் என்பதை தமது தீய இதயத்தின் கண் கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். 
            ஆனால் அதிகாலையிலேயே ஆண்டவரது உயிர்ப்பினை காண வேண்டும்; அவரடு உரையாட வேண்டும் என்று ஆர்வத்தோடு ஆண்டவரைத் தேடிச்சென்ற பெண்கள், இன்று அவரது மாட்சியை கண்டுகொண்டார்கள்.  ஆண்டவரின் குரலைக் கேட்கும் பேறு பெற்றார்கள் அடுத்த நொடியில் தமது வாழ்க்கையில் ஆண்டவர் செயல்படுத்தவிருகின்ற  நற்செய்தியை கண்டுகண்டார்கள். 

      நாமும் நமது வாழ்வில், நமது புரணி பேசுகின்ற நேரங்களையெல்லாம் குறைத்துக்கொண்டு ஆண்டவரை தேடக்கூடிய நேரங்களை வலுப்படுத்தி, ஆண்டவரை நோக்கி தொடர்ந்து முன்னேறிச் சென்று அவரைக் கண்டு கொள்ள, நமது வார்த்தையாலும் வாழ்வாலும் ஆண்டவரது உயிர்ப்பை அறிவிக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர்களாக தொடர்ந்து வாழ்ந்து, அவரது அன்பு சீடர்களாகிட இறையருள் வேண்டி இன்றைய நாளில் இணைந்து செபிப்போம்.

சனி, 16 ஏப்ரல், 2022

கிறிஸ்து உயிர்த்தார்! அல்லேலூயா!...(17.4.2022)

கிறிஸ்து உயிர்த்தார்! அல்லேலூயா!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா நல்வாழ்த்துகளை அனைவருக்கும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
உயிர்த்தெழுதலே நம் கிறிஸ்தவத்தின் 
வேர். இன்று கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் நாம் அனைவரும் வாழ்வு பெற. 
       உயிர்த்தெழுதலைப் பற்றியும் நிலை வாழ்வு பற்றியும், இயேசு தம் சீடர்களிடம் பல்வேறு நேரங்களில் எடுத்துரைக்கின்றார். 

                          'இக்கோவிலை 
இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்" என்றார். (யோவான்:2:19-22)
அப்போது யூதர்கள், 'இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் 
கட்டி எழுப்பி விடுவீரோ?" என்று ஏளனம் பேசினார்கள்.                         ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார். அவர் இறந்து உயிருடன் 
எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை 
நினைவு கூர்ந்துமறைநூலையும் 
இயேசுவின் கூற்றையும் நம்பினர் என்று நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம். 

        யோனா மூன்று பகலும் 
மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் 
வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட 
மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் 
நிலத்தின் உள்ளே இருப்பார்.(மத்தேயு: 12:40) என்று இறைவார்த்தை நமக்கு எடுத்துரைக்கிறது. 

 
          'உயிர்த்தெழுதலும் 
வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்." என்று கூறிய ஆண்டவர் இன்று அதனை மெய்ப்பித்துக் காட்ட உயிர்த்தெழுந்தார். 
ஆண்டவரின் உயிர்ப்பு நம் 
அனைவருக்கும் ஒரு புதிய வாழ்வு கொடுக்கிறது. நாம்தான் இவ்வுலகில் 
மிகவும் துன்பப்படுகிறோம் என்று நினைத்தால், ஆண்டவரின் துன்பம், நமக்கு வாழ்வுக்கான பாடத்தைக் கற்றுத் தருகிறது. 

            எல்லா துன்பத்திற்கும் 
ஒரு முடிவு இருக்கிறது. நாம் 
எப்பொழுதெல்லாம் நமக்கு 
ஏற்படும் துன்பத்தை ஏற்று வாழ முயற்சிக்கிறோமோ அப்பொழுதெல்லாம் 
நமக்கு துன்பங்களை எதிர்க்கும் சக்தி 
கிடைக்கிறது. நாம் துன்பத்தைக் கண்டு 
பயந்து ஓடி சென்றோமானால் அதுவும் நம்மை பின் தொடரும். ஒரு மேன்மையான குறிக்கோளுக்காக நாம் அடைகின்ற துன்பங்கள் நமது வாழ்வில் நமக்கு மேன்மையை பரிசு அளிக்கின்றன.


நமது வாழ்வில் நாம் துன்பங்களை சந்திக்கின்ற நேரங்களில் நம்முடைய சுமைகளை நாம் ஒருவரே சுமப்பதாக நினைத்துக் 
கொண்டிருக்கிறோம். கடவுள் நம்மை விட்டு அகன்று போனவராக, நம்மிடையே இல்லாதவராக எண்ணி 
பல சமயங்களில் நம்மை நாமே வாட்டிக் கொள்கிறோம். ஆனால் நம் ஆண்டவர் 
நம்மோடு நமது சுமைகளை சுமக்கிறார்;  நம்மில் வாழ்கிறார்; நமக்கு வலுவூட்டுகிறார்
என்பதே உண்மை. 

     எனவே, நமது பாவத்தின், பலவீனத்தின், அச்சத்தின் சுமைகளை எல்லாம் ஆண்டவரின் பாதத்தில் ஒப்படைத்துவிட்டு, சிலுவையின் வழியாக நமக்கு மீட்பை பெற்றுத் தந்த நம் ஆண்டவரை உற்று நோக்குவோம். நமது பலவீனங்களின் சுமைகளை இறக்கி வைத்து விட்டு,  ஆண்டவரது சிலுவையின் ஆசியால் வலுவூட்டப்பட்டு, உயிரோட்டமுள்ள வாழ்வு வாழ, அவரைப்போல பிறரின் மகிழ்வில் நாமும் மகிழ, உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் வேண்டி இன்றைய நாளில் தொடர்ந்து செபிப்போம்.

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

இயேசு இன்று அடக்கம் செய்யப்படுகிறார்!...(16.4.2022)

இயேசு இன்று அடக்கம் செய்யப்படுகிறார்!

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் தான், மிகுந்த பலன் கொடுக்கும் என்று கூறிய இயேசு ஆண்டவர், அவரது வார்த்தையின் விதையாக இன்று மண்ணில் அடக்கம் செய்யப்படுகிறார். 
இயேசு இந்த மண்ணுலகிற்கு வந்தபோது,  அவருக்கு பிறக்க இடம் கிடைக்கவில்லை. ஏனெனில் அவர், அனைவரின் மனதிலும் பிறக்க வேண்டும் என்பதற்காக. அவர் மரித்த போது அவரை , அடக்கம் செய்ய ஒரு இடம் கிடைக்கவில்லை. காரணம் அவர், அனைவரின் வாழ்விலும் அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழ வேண்டும் என்பதற்காக.பிறர் வாழ வேண்டும் என்பதற்காக தன் ரத்தத்தையும், சதையையும் கொடுத்தவர் இயேசு.

லட்சியமுள்ள வாழ்வு அழிவதில்லை, இன்னொன்றாக வெளிப்படுவதற்காக அது மறைகிறது. ஆனால் அலட்சியமான வாழ்வு என்பது கல்லறைக்குள் அடங்கி அழிந்து போன வாழ்வு ஆகிறது. பிறரை வாழ வைப்பவருக்கு கல்லறையில் இடமில்லை. ஆம்! அவர், பிறரின் வாழ்வில் வாழ்கிறார். அதனால் கல்லறையே அவரை வைத்துக் கொண்டிருக்க முடியவில்லை. அனைவருக்கும் வாழ்வு தர மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் ‌‌.  

இன்றைய நாளில் பிறர் வாழ்வு பெற தன்னை அடக்கம் செய்த ஆண்டவர் இயேசுவை போல நாமும்,

 நமது சுய நலன்களை அடக்கம் செய்வோம்.

 நமது பொறாமைகளை அடக்கம் செய்வோம்.

நமது தற்பெருமைகளை அடக்கம் செய்வோம்.

 நமது கோபத்தை அடக்கம் செய்வோம்.

 நமது ஆணவத்தை அடக்கம் செய்வோம்.

பிறருக்கு உதவி செய்திட கரம் நீட்டாத நமது மனதினை அடக்கம் செய்வோம்.

 நான் மட்டுமே வாழவேண்டும் என்னும் தன்முனைப்பை அடக்கம் செய்வோம்.

அப்போது நலமான வாழ்வு துளிர்க்கட்டும். வெற்றி வைகறை  என மலரட்டும். மீண்டும் நல்வாழ்வு துளிர்க்கட்டும். 

விடியலுக்காய் காத்திருப்போம்...........

வியாழன், 14 ஏப்ரல், 2022

இன்று நமக்காக உயிர் துறந்தார் இயேசு!...(15.04.2022)

இன்று நமக்காக உயிர் துறந்தார் இயேசு!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்று ஆண்டவருடைய திருப்பாடுகளின் புனித வெள்ளி. கெத்சமனி தோட்டத்தில் இருந்து ஆண்டவரது பாடுகளின் பயணம் ஆரம்பமாகிறது. 
தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு யாரிடமும் இல்லை என்று அன்புக்கு
இலக்கணம் வகுத்த இயேசு,
இதோ இன்று தன்னுயிரை நமது பாவங்களுக்குக் கழுவாயாகக் கொடுத்து நாம் மீட்புப் பெற அழைப்பு
விடுக்கின்றார். அன்பின் உச்சகட்டமே தன் உயிரைக் கொடுப்பதுதான் என்று வார்த்தைகளால் மட்டுமல்ல
வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி,
அவமானத்தின் சின்னமாகக்
கருதப்பட்ட சிலுவையை, தம்முடைய தியாகப்பலியாக, மீட்பின் சின்னமாக
மாற்றுகிறார். ஆம் இன்று
திருப்பாடுகளின் புனித வெள்ளி. பழைய ஏற்பாட்டில் பாலைவனத்தில்
யாவே இறைவனுக்கு எதிராகப் பாவம் செய்து பாம்பின் கடியினால்
இறந்தவர்கள், உயர்த்தப்பட்ட
வெண்கலப் பாம்பை பார்த்து
உயிர் பிழைத்தார்கள். இன்று விண்ணிற்கும் மண்ணிற்கும்
இடையில் சிலுவையில் பலியான செம்மறியாக உயர்த்தப்பட்டிருக்கிற
இயேசுவைப் பார்த்து, அவரது அன்பு நிறைந்த இதயத்திலிருந்து பொங்கி வருகின்ற திருஇரத்தத்தினால் நமது நமது பாவங்கள் கழுவப்பட அருள் வேண்டியவர்களாய் இன்றைய நாளிலே இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் ஆழமாக சிந்திப்போம். 
       இயேசுவின் பாடுகள் சிலுவை மரணத்தோடு முடிந்து விடவில்லை. இன்றும் நம் மத்தியில் பல்வேறு இன்னல்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களின் வாழ்வில் தொடர்ந்து கொண்டிருக்கும் இயேசுவின் சிலுவை போராட்டத்தை காணும் கண்கள் நமக்கு இருக்கிறதா என்பதை சந்திப்போம். 
        ஆண்டவரது சிலுவை பாடுகள் வழியாக மீட்படைய காத்திருக்கும் நாம்,
 நமது அன்றாட வாழ்வில் அனுதினமும் பல்வேறு விதமான சிலுவை போராட்டங்களில் உழல்பவர்களை காண்கின்ற நாம், அன்று சிலுவையின் பயணத்தில் பங்கேற்ற சீமோனைப் போல, இயேசுவின் அன்பு சீடர்களாக, நமது கண்ணெதிரில் நாம் காணும் துன்புறும் இயேசுக்களுக்கு (மனிதர்களுக்கு) நாம் பெற்றுக்கொண்ட அருளை வழங்கக் கூடியவர்களாக,  அவரது திருச்சிலுவையை முத்தி செய்வதோடு மட்டுமல்லாமல், அவரது பாடுகளில் நாமும் பங்கேற்பவர்களாக, ஆண்டவர் இயேசுவுக்கு ஆறுதல் தரக்கூடியவர்களாக,  நமது வாழ்க்கை பயணத்தை தொடர இன்றைய நாளில் இறையருள் வேண்டி இந்த வழிபாட்டில் இணைந்து செபிப்போம்.

புதன், 13 ஏப்ரல், 2022

பணியின் நிறைவு! பகிர்வின் மேன்மை! ...(14.4.2022)

பணியின் நிறைவு! பகிர்வின் மேன்மை! 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
பெரிய வியாழன் என்றும்,  புனித வியாழன் என்றும்,  அழைக்கப்படுகின்ற இன்றைய நாள் நம் தாய்த்திரு அவையில் ஒரு சிறப்பான நாள். தன்னையே மனுக்குலத்திற்கு கையளித்த ஆண்டவர் இயேசு இன்று, 

1. நற்கருணையை ஏற்படுத்திய நாள்.

2. குருத்துவத்தை ஏற்படுத்திய நாள்.

3. மனுக்குலத்திற்கு தன்னையே கையளித்த மாபரன், மனுக்குல மீட்புக்காக சிறைப்பட்ட நாள். 


1. நற்கருணையை ஏற்படுத்திய நாள்:

                 மனிதன் இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ மனிதனுக்காக அனைத்தையும் படைத்த ஆண்டவர், இன்று அவனை மீட்க தன்னையே பலியாக, விருந்தாகப் படைக்கிறார். விருந்து அது உறவின் வெளிப்பாடு. விருந்து அது அன்பை மலரச் செய்யும். அன்பை வலுப்படுத்தும். இயேசு தன்னையே விருந்தாக கையளிப்பதன் மூலம், இந்த மனித குலத்திற்கும் இறைவனுக்கும் இடையேயான உறவை புதுப்பிக்கும் விதமாக இன்று நற்கருணையை ஏற்படுத்தியிருக்கிறார். நமது பாவங்களால், பலவீனங்களால் அவரை விட்டு வெகுதூரம் விலகிச் சென்று இருக்கும் நம்மோடு, தமது அன்பின் விருந்தாம், ஆன்மீக விருந்தாம், நற்கருணையின் வழியாக நம்மோடு உறவாடுகிறார். அவரது அன்பின் ஆழத்தை இன்று உள்ளத்தில் உணர்வோம். ஆண்டவரோடு உள்ள நமது உறவை இன்று மீண்டும் புதுப்பித்துக் கொள்வோம். 

2. குருத்துவத்தை ஏற்படுத்திய நாள்:
           ஆண்டவர் இயேசு, பாதம் கழுவும் தனது பணியின் வழியாக, அவரைப்போல பணிபுரிந்திட, இன்று குருத்துவத்தை ஏற்படுத்திய நாள். இன்றைய நாளில் சிறப்பாக நமது வாழ்வில் நாம் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கின்ற அனைத்து குருக்களையும் நன்றியோடு நினைத்துப் பார்த்து அவர்களுக்காக இறைவனிடத்தில் செபிப்போம். இன்று ஆண்டவரின் பிரதிநிதிகளாகத் திகழும் குருக்களுக்காக நாம் தினமும் செபிக்க கடமைப்பட்டிருக்கின்றோம். எனவே நமது அன்றாட செபத்தில் குருக்களை நினைவுகூர்வோம். அவர்களின் இறையாட்சிப் பணிகள் மென்மேலும் வளர இறைவனிடத்தில் தொடர்ந்து மன்றாடுவோம். அவர்கள் சந்திக்கின்ற இன்னல்கள், இடையூறுகள், போராட்டங்களில் இறையருளும் தூய ஆவியாரின் ஞானமும் அவர்களைத் தொடர்ந்து வழிநடத்த அவர்களுக்காக செபிப்போம்.

3. மனுக்குல மீட்புக்காக ஆண்டவர் இயேசு சிறைப்பட்ட நாள்: 

           எரிகின்ற நெருப்பை நோக்கி தன் கையை நீட்டிய குழந்தையை பாதுகாக்க, தன் கையை நெருப்பில் நீட்டி அதனை அணைத்து காயங்கள் முழுவதையும் தனது கையில் ஏற்றுக்கொண்ட, அன்பு மிகுந்த தாயைப் போல,  இன்று ஆண்டவர் இயேசு, இறைவனால் படைக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட மனுக்குலத்தை, சோதனையின் ஈர்ப்புகளில் விட்டில் பூச்சிகளாய் சிக்குண்ட மனுக்குலத்தை பாவத்தின் பிடியில் இருந்து மீட்கும் விதமாக, இன்று பலியாகும் செம்மறியாக, மனுக்குலத்தின் பாவங்கள் அனைத்தையும் தனது தோளில் சுமந்து கொண்டார். இன்றைய நாளில் சிறைப்பட்டிருக்கும் ஆண்டவர், அவரை நோக்கிப் பார்க்க நம்மை அழைக்கிறார். அவரது அன்பின் ஆழத்தை உணர நம்மை அழைக்கிறார். அவரது திரு இரத்தத்தால் கழுவப்பட்ட நம்மை அழைக்கிறார். அவரது உள்ளத்தின் ஆவலை நம்மோடு பகிர நம்மை அழைக்கிறார். 

                    இன்று ஆண்டவரின் திருச்சந்நிதியில் அவரது அருகில் அமர்வோம். நமக்காக தன்னை பலியாக்கிய ஆண்டவர் இயேசுவின் அன்பின் ஆழத்தை உள்ளத்தில் உணர்வோம். நமக்கான அவரின் ஏக்கங்களை கண்டுணர்வோம். அவரது அன்பின் உறவில் நம்மை இணைத்துக்கொள்ள, அவரைப்போல, அவருக்காக, இறையாட்சிப் பணியாற்ற, குருக்களுக்காக அனுதினமும் செபிக்க, இறையருள் வேண்டி இன்றைய நாள் திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.

செவ்வாய், 12 ஏப்ரல், 2022

என்ன கிடைக்கும் ...?(13.4.2022)

என்ன கிடைக்கும் ...?


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ...


யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து "இயேசுவை உங்களுக்குக் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். என்பதை இன்றைய நாள் இறைவார்த்தை வாயிலாக வாசிக்க கேட்டோம்...

"எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்புகொள்வார், அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது" (லூக் 16: 13)  வசனம் குறிப்பிடுகிறது.


இன்று நாம் வாசித்த வாசக பகுதியோடு இந்த இறைவார்த்தையை ஒப்பிட்டுப் பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம் செல்வத்துக்கும் இயேசுவுக்கும் இடையே பணிபுரிய துணிந்தான் ... யூதாசு ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவைப் புறக்கணித்து, முப்பது வெள்ளிக் காசுகளுக்கு ஆசைப்பட்டு, அடிமையாகிவிட்டான். இன்று பல நேரங்களில் இந்த யூதாசை போலவே நாமும் இச்சமூகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். பல நேரங்களில் நாமும் இந்த உலக இச்சைகளுக்கு அடிமையாகி உலக இச்சைகளுக்கும் கடவுளுக்கும் இடையே  யாரை சார்ந்து வாழ்வது என தெரியாத வண்ணம் பல நேரங்களில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணினாலும் உலக இச்சைகளும் உலக இன்பங்களும் நம்மை இயேசுவின் வார்த்தைகளின் படி வாழ விடாது தடுக்கக்கூடிய வகையில் செயல்படுகின்றன... இத்தகைய ஒரு நிலையே யூதாசு இயேசுவை புறக்கணித்து முப்பது வெள்ளிக் காசுகளை தனதாக்கிக் கொள்ள முயன்றான்.

பல நேரங்களில் நாமும் பரபரப்பான இந்த உலகத்தில் பல பணிகளுக்கு மத்தியில் எதிர்காலத் தேவைக்கான பணத்தை இருப்பதற்காகவே ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஓட்டத்தில் இறைவனது வார்த்தைகளை பின்பற்றுவதில் இருந்து நமது வாழ்வு நிறைவு பெறுகிறது இறைவார்த்தையை பின்பற்றுவதை விட எதிர்காலத் தேவைக்கான பணத்தை சேர்ப்பதே முதன்மையானது என எண்ணக்கூடிய மனிதர்களாக நாம் நம்மை அறியாமலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற எதார்த்த நிலை தான் இன்று தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையிலிருந்து நாம் ஒவ்வொருவரும் மாற்றம் பெற இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது 

நாம் யூதாசை போல செயல்படாமல் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் மீது அதிகமான நம்பிக்கை கொண்டவர்களாய் அவரது வார்த்தைகளை வாழ்வாக்கமவும் அதன் வழி ஆண்டவர் இயேசுவை நம்மவராக மாற்றிக் கொண்டு பயணிக்க இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் பக்தியோடு இணைவோம்.  

திங்கள், 11 ஏப்ரல், 2022

இயேசுவைப் போல வாழ சாத்தியமா?...(12.4.2022)

இயேசுவைப் போல வாழ சாத்தியமா?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது தம்மோடு இருப்பவர்களைப் பற்றி நன்கு அறிந்திருந்தார் உடன் பயணிக்கின்ற ஒருவன் தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்பது எப்போதும் எல்லா சூழ்நிலையிலும் உடன் பயணித்த ஒருவர் தன்னை தெரியவே தெரியாது என மறுத்து அளிப்பார் என்பதையும் உம்மோடு பின்தொடர்வது எங்கள் வாழ்வு என பின் தொடர்ந்தவர்கள் இயேசு கைது செய்யப்படுகின்ற சூழல் வரும்போது தங்களின் ஆடைகளை கூட விட்டு விட்டு ஓட கூடியவர்களாக மாறுவார்கள்  என்பதையும் இயேசு நன்கு அறிந்திருந்தார். ஆனாலும் இயேசு அவர்களோடு தொடர்ந்து பயணம் செய்தார்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு அன்பு செய்யப்பட்ட இருவரின் உண்மை முகமானது கிழிக்கப்படுகிறது. ஒருவர் யூதாசு, மற்றொருவர் பேதுரு. வயதில் முதிர்ந்தவர் பேதுரு, இளையவர் யூதாசு. அனைத்து நிகழ்வுகளிலும் இயேசுவோடு இருந்தவர் பேதுரு. அப்பப்பம் வந்து செல்பவர் யூதாசு.இந்த யூதாசிடம்தான் பலவிதமான பொறுப்புகளை இயேசு ஒப்படைத்திருந்தார். இந்து பேதுருவை தான் திருஅவையின் தலைவர் எனவும் இயேசு அறிவித்திருந்தார்...ஆனாலும் அவர்களோடு தனது இறையாட்சி  பயணத்தை மேற்கொண்டார்...
இந்த இயேசுவின் மனநிலை இன்று நம்மில் இருக்கிறதா? என்ற கேள்வியை நாம் நமக்குளாக எழுப்பிபார்ப்போம்....

சுயநலமிக்க மனிதர்களுக்கு மத்தியில் பொது நலத்தோடு செயல்படக்கூடிய இயேசுவின் மனநிலை கொண்ட மனிதர்களாக நாம் இந்த சமூகத்தில் செயல்பட இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக ஜெபிப்போம் ...

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

கிறிஸ்துவின் மனநிலை நமது மனநிலையாகிட...(11.4.2022)

கிறிஸ்துவின் மனநிலை நமது மனநிலையாகிட...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்

இயேசுவுக்கு தன்னுடைய சீடர்களைப்பற்றி முழுமையாகத் தெரிந்திருந்தது. யூதாஸ் எப்படிப்பட்டவர்? அவரை நம்பலாமா? அவர் என்ன செய்யப்போகிறார்? என்பதையும் இயேசு அறிந்திருந்தார். ஆனாலும் யூதாசோடு தன் பயணத்தை தொடர்கிறார்.

இவ்வளவுக்கு யூதாசைப்பற்றித் தெரிந்தவர், ஏன் யூதாசிடம் முக்கியமானப் பொறுப்பைக் கொடுக்க வேண்டும்? என்ற கேள்வி நமக்குள் எழலாம். 


இயேசு யூதாசுக்கு திருந்துவதற்கு பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி தருகிறார். ஆனால் யூதாசு கிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் சிறிது, சிறிதாக பயன்படுத்தி தன்னையே கறைபடித்துக்கொள்கிறார்.

அதுபோலவே பரிசேயர்களும் இலாசரை உயிர்த்தெழச்செய்த நிகழ்ச்சி வாயிலாக  ஏராளமான யூதர்கள் மனம் மாறினார்கள். அவர்கள் இயேசுவில் நம்பிக்கை வைக்க ஆரம்பித்தார்கள். இயேசுவிடம் பலர் நம்பிக்கை கொள்வது, அதிகாரவர்க்கத்தினருக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்த தொடங்கியது. அதற்காக அவர்கள் இலாசரை கொல்வதற்கும் துணிந்து விட்டார்கள். இயேசு செய்த அரும் அடையாளங்களைக் கண்டும், இயேசுவின் போதனை மற்றும் வாழ்வு அடிப்படையில் தங்கள் வாழ்வை சரியான பாதையில் அமைத்துக் கொள்வதற்கு பதிலாக கரை படுத்துக் கொள்ளக் கூடியவர்கள் ஆகவே பரிசேயர்களும் செயல்பட்டார்கள் என்பதை இன்றைய நாள் நற்செய்தி வாசகம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.


இந்த இறைவார்த்தை பகுதிகள் என்று நமது வாழ்வுக்கு தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது நாம் ஒவ்வொருவருமே இயேசுவின் மனநிலையை கொண்ட மனிதர்களாக இருக்க இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது தன்னோடு இருப்பவன் தன்னை காட்டிக் கொடுப்பான் என அறிந்திருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவனும் மீட்புப் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு இயேசு செயல்பட்டார். தனக்கு எதிராக எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருந்த பரிசேயர்களும் சதுசேயர்கள் மறைநூல் அறிஞர்களும் தங்கள் தவறான வாழ்வை மாற்றிக் கொண்டு இறைவனின் மக்களாக செயல்பட வேண்டும் என்பதே இயேசுவின் வாழ்வும் பணியும் நமக்கு வெளிப்படுத்துகிறது.

மரியாவின் திருத்தலம் பூசுதல் இயேசுவின் இறப்பை நினைவுத்துவது போல நம் வாழ்வில் நடக்கின்ற ஒவ்வொரு நன்மை தனங்களும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்னும் நம்மை அதிகமாக அன்பு செய்கிறார் என்பதை நமக்கு வலியுறுத்துகின்றன. வழிகாட்டும் இறைவனின் வாழ்க்கை வழித்தடத்தில் பயணம் செய்கின்ற நாம் ஒவ்வொருவருமே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மனநிலையை நமது மனநிலையாக கொண்டு வாழ இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் பக்தியோடு ஜெபிப்போம்.


சனி, 9 ஏப்ரல், 2022

திருமண திருப்பலிக்கன மன்றாட்டுக்கள்

திருமண திருப்பலிக்கன  மன்றாட்டுக்கள் 

1.  திருமணத்தில் ஒன்றிணைந்த இப்பதிய மணமகனும் மணமகளும் தங்கள் இல்லற வாழ்வில் சமாதானமாகவும் மகிழ்ச்சியாகவும் என்றும் வாழ்ந்திட வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. உலகிலும் திருச்சபையிலும் அமைதி நிலவ வேண்டுமென்றும், திருச்சபையின் ஒற்றுமை மேன்மேலும் வளர வேண்டுமென்றும் ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. கானாவூர் திருமணத்தில் மணமக்களுக்கு ஆசியளித்தது போல், இம்மணமக்களுக்கும் ஆசியளித்து , உம் அன்புக்கு அடையாளமாக மக்களைப் பெற்று அவர்கள்என்றும் மகிந்திருக்கச் செய்ய வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. இப்புதிய மணமக்கள் (பெயர்...) அமைக்கும் இல்லமும், மற்ற கிறிஸ்தவக் குடும்பங்கள் அனைத்துமே தம் திருமண அருளில் என்றும் நிலைத்து நிற்கவும், உம் திருப்பெயருக்கு ஏற்ற சாட்சிகளாயத் திகழவும் வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

வாழ்வை எதிர்க்க கொள்ள துணிவோம்… (10.04.2022)

 வாழ்வை எதிர்க்க கொள்ள துணிவோம்… 

    இயேசுவின் நண்பர்களே! 



    குருத்து ஞாயிறு என்றாலும் இன்றைய நாள் ஆண்டவரின் பாடுகளின் ஞாயிறு என்றுதான் அழைக்கப்படுகிறது. ஆண்டவருடைய துன்பங்களையும், இறப்பையும் பற்றி இந்த வாரம் முழுவதும் நாம் சிந்திக்க அழைக்கப்படுகிறோம்;.


    பொதுவாகவே, ஒரு மனிதர் எப்படி வாழ்கிறாரோ, அப்படித்தான் இறக்கிறார். இயேசுவும் அப்படியே! அவர் வாழ்ந்தபோது, தன்னை முழுமையாக இறைவனுக்குக் கையளித்தார். இறந்தபோதும் அவ்வாறே.


    இன்று இயேசு எருசலேம் நகரில் நுழைந்ததே தமதுப் சாவினை சந்திப்பதற்காகவே. இன்றைய முதல் இரண்டு வாசகங்களும் நற்செய்தியும் கிறிஸ்துவின் திருப்பாடுகளை நமக்கு நினைவூட்டுகின்றன. கிறிஸ்துவின் பாடுகளின் மறைபொருளை அறிந்து, நமது துன்பங்களை கிறிஸ்துவின் பாடுகளுடன் இணைத்து பார்க்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். இந்நாளில் இன்றைய வாசகங்கள் வழியாக நாம் கோட்ட வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை உணர முயல்வோம்.



ஏன் இயேசு எருசலேம் செல்ல வேண்டம்?

இதுவரை இறைவாக்கினர் யாரும் எருசலேமில் மடிவதில்லை என்பதை இயேசு நன்கு அறிந்திருந்தார். ஆனால் தன்னால் அந்நிலையை பரிசேயரும், சதுசேயரும், மறைநூல் அறிஞர்களும்  தங்களின் சுயலாபத்தால் மாற்ற வல்லவர்கள் என்பதை நன்றாக அறிந்தே எருசலேம் நகருக்குள் இயேசு நுழைகிறார்.


ஏன் இன்றைய நாளில் இயேசு எருசலேமுக்குள் நுழைய வேண்டும்?

    யூதர்களின் ஆண்டுகளில் ‘நிசான்’ என்னும் மாதம் மிகவும் முக்கியமானது. காரணம் அவர்களுக்கு இதுவே முதல்மாதம், இந்த மாதத்தின் பத்தாம் நாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் நாள், அந்த நாளில் தான் யூதர்கள் தங்கள் பாஸ்கா விழாவினைக் கொண்டாடுவார்கள்.( வி.ப 12:2) இதில் பலியிடுகின்ற ஆட்டினை நான்கு நாட்களுக்கு முன்பாக தேர்ந்தெடுப்பார்கள் (லேவி 23) அதாவது குருத்து ஞாயிறான இன்று தான் மாசற்ற ஆட்டுக்குட்டியினை தேர்ந்தெடுத்து புனித வெள்ளியன்று பலியிடுவர். இயேசுவும் தன்னையே பலியிடப்படுகின்ற செம்மறியாக இந்நாளில் கையளிக்கின்றார். இதனால் தான் இயேசு இன்று எருசலேமில் நுழைகிறார். 


ஏன் இயேசு கழுதை மீது பயணம் செய்ய வேண்டும்?

    இறைவாக்கினர் செக்கரியாவின் இறைவாக்கை நிறைவேற்றுகிற வகையில் கழுதையின் மீது இயேசு அமர்ந்து வருகிறார். 

    கழுதை தாழ்ச்சியின் அடையாளம், ஒதுக்கப்பட்டவர்களின் சின்னம், அடிமையின் விலங்கு, அமைதியின் சிகரம், பொதுவாக வெற்றிப் பெற்றவர்கள் தன்னை அரசனாகக் காண்பித்துக் கொண்டவர்கள் குதிரையின்மீது தான் பவனி வருவார்கள் ஆனால் இயேசு அனைத்தையும் தலைகீழாக்க மாற்றப்போட்டவார். அதன் விளைவே கழுதை பயணம். மேலும் விரைவில் தாம் பலரால் எள்ளி நகையாடப்படுவதன் உருவகம். 


ஏன் மக்கள் ஓசன்னா கீதம் இசைத்தனர்?

    இயேசுவின் மீது நம்பிக்கைக் கொண்டு பின் தொடர்ந்த மக்கட்கூட்டம் அவரை அரசராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தனார். அவரை ஓர் அரசராக ஏற்றுக் கொண்டதை அவர்களின் செயல்கள் வெளிப்படுத்துகின்றன. வழிகளில் தங்கள் மேலுடைகளை விரித்து அரசருக்கு தங்கள் மரியாதையை செலுத்துகின்றனர். 

ஏன் ஒலிவமரகிளை பயன்படுத்தப்பட்டது?

ஒலிவமரம் என்றாலே வெற்றியின் அடையாளம். அதன் கிளைகளைத் தறித்து வெற்றிக்கீதம் பாடுகின்றனர். இதோ எம் அரசர் எருசலேமுக்குள் நுழைந்து விட்டார் என்று புகழ்கின்றனர். எனவே ஓசான்னா! ஓசான்னா என ஆர்ப்பரிக்கிறார்கள். இதை அனைத்தையும் பார்க்கின்ற பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர்கள் அதனை ஜீரணிக்க முடியவி;ல்லை.


    இந்நிலையில் இயேசுவின் மனநிலை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என சிந்திக்கின்ற போது… 

இந்த வெற்றியின் ஆர்பரிப்பு, இன்னும் சில நாட்களில் புலம்பலாக மாறும்…. என்பதையும், 

இந்த ஓசான்னா கீதம், ஒழிக என்ற குரலாக மாறி ஒழிக்கும்… என்பதையும், 

இந்த ஒலிவ மரத்தின் இலைகள், கிளைகள் அனைத்தும் முள்முடியாக மாறும்…. ஏன்பதையும், 

இவர்களின் ஆடைவிரிப்பு அனைத்தும் அவரின் ஆடையையே கழற்றிவிடுவதாக மாறும்… என்பதையும்,  

கூட்டமாக பின் தொடர்ந்தவர்கள், தான் கைதுச் செய்யப்பட்ட பின்பு தம் பின்னால் ஒருவரும் நிற்கா வண்ணம் ஓடி மறைவாhர்கள்… என்பதையும், 

மக்களின் மத்தியில் அரசராக பவனி வந்தவர், இரு கள்வர்களின் நடுவில் அசைய முடியாமல் அறையப்பட்டு விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே சிலுவையில் தொங்குவார்… என்பதையும் இயேசு நன்றே அறிந்திருந்தார். மரணத்தைக் கண்முன் கொண்டிருந்தாலும், தான் அடைய இருந்த இலக்கினை மிகத் தெளிவாக கடந்து சென்றாhர் இயேசு. இயேசு தன் வாழ்வில் போற்றலையும் தூற்றலையும் சமமாக எடுத்துக் கொண்டாhர். மனிதத்தின் பாவத்தின் விளைவாக கிடைத்த சாவினை வெற்றிக்கொள்ள சாவினை ஏற்க துணிந்தார்.

இந்த இயேசுவின் வாழ்வு இன்று நமக்கு தரும் பாடம் இயேசு  வாழ்வின் எதார்த்தங்களை துணிவோடு சந்தித்து சாதித்ததுப்  போல வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை இறைத்திட்டம் எனக்கருதி துணிந்து ஏற்க சிலுவையில் தொங்கும் இயேசுவை நமது மனக்கண்முன் இருத்தி வாழ்வை எதிர்க்க கொள்ள இறையருள் வேண்டுவோம். 



வெள்ளி, 8 ஏப்ரல், 2022

பலருக்கு வாழ்வு கொடுப்போம்....(9.4.2022)

பலருக்கு வாழ்வு கொடுப்போம்....


அன்பார்ந்த இணையதள நண்பர்களே!


"ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது" (யோவா 11:50) தலைமைக்குரு கயபாவின் இவ்வறிக்கை ஒரு இறை வாக்கு. அறிவுள்ள விவாதம். உண்மையின் வெளிப்பாடு. ஒரு முன்னறிவிப்பு. ஆதாம் என்னும் ஒரு மனிதனால் வந்த பாவத்தையும் சாபத்தையும்,இயேசு தன் இறப்பால் அழிக்க இருப்பதை, கயபா தலைமைக்குரு தன்னை அறியாமல் முன்னறிவிக்கிறார். பவுலடியார் இதை உறுதிசெய்கிறார். "ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது".( உரோ5 :12)

ஒரு மனிதனின் பாவத்தால் மனிதன் சிதறினான். நாடுகள் சிதறின. பல மொழிகள் உண்டாயின. ஆனால் இயேசு என்ற ஒற்றை மனிதனின் வாழ்வு இவை அனைத்தையும் மாற்றிக் கொடுத்தது ...இன்னும் பலவிதமான பிரிவினைகளுக்கு மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

இன்றைய நடைமுறை இதுதான். ஒருசில நல்லவர்களின் இறப்புதான் பலருக்கு வாழ்வைக் கொடுக்கிறது. ஒருவருடைய தவறான வாழ்வு பலருக்கு அழிவைக் கொண்டுவருவதும் உண்மையே. நல்லவர் ஒருவர் இன்று அறிதாக உள்ளது. பொல்லாதவர் கூட்டம் பெரிதாக உள்ளது. நல்லவர் ஒருவராக நாமிருப்போம். பலருக்கு வாழ்வு கொடுப்போம். 


வியாழன், 7 ஏப்ரல், 2022

கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்களே தெய்வங்கள் எனப்படுகிறார்கள்.....(8.4.2022)

கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்களே தெய்வங்கள் எனப்படுகிறார்கள்.

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்கள் தெய்வங்கள் ஆகிறார்கள் என்று இன்றைய வாசகத்தில் இயேசு குறிப்பிடுகிறார்.

" வாக்கு மனிதர் ஆனார் நம்மிடையே குடிகொண்டார்" என்று யோவான் நற்செய்தியாளர் கூறுவது போல, நம் மத்தியில் குடிகொள்ள வந்த வார்த்தையான இறைவன், நாம் ஒவ்வொருவரும் அவரது தெய்வீக தன்மையில் பங்கு பெற வேண்டும் என விரும்புகிறார். 

இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எரேமியா உலகின் யதார்த்த நிலையை சுட்டிக் காட்டி, அவைகளின் மத்தியிலும் ஆண்டவரின் உடனிருப்பை உணர்த்துகிறார் . 

               சுற்றி இருக்கின்ற சூழல் திகிலை ஏற்படுத்தினாலும், மனிதர்கள் நம்மை தீமையிலும் பொறாமையிலும் வீழ்த்த நினைத்தாலும்,   இறைவன் இருக்கிற இடத்தில் அவரை வெற்றி கொள்ள யாருமில்லை. அவரே வலியவரின் கையினின்று வறியவரை மீட்கக் கூடியவர். 

       எனவே, இமைகள் மூடாது நம்மை கண்ணின் மணி போல காத்திடும் நம் இறைவனின் வார்த்தையில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக, அவரது வார்த்தைகளை இதயத்தில் நிறைத்தவர்களாக, அவரது அன்பில் நம்மை இணைத்துக் கொண்டவர்களாக, அவரது தெய்வீக தன்மையில் நாமும் பங்கு பெற இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இத்திருப்பலயில் செபிப்போம்.

புதன், 6 ஏப்ரல், 2022

நிலை வாழ்வை நமதாக்கிக்கொள்ள...(7.4.2022)

நிலை வாழ்வை நமதாக்கிக்கொள்ள...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நீங்கள் என் வார்த்தையைக் கடைபிடித்தால் என்றுமே  சாக மாட்டீர்கள் என்று கூறுகிறார்.
ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டுக் கொண்டிருந்த யூதர்கள், அவற்றுக்கு செவி கொடுக்க, ஆண்டவரது வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள மனம்  இல்லாதவர்களாக இருந்தார்கள். 

          ஆனால் வார்த்தையான இறைவன் இவ்வுலக படைப்பின் முதல் முதல் பொழுதில் இருந்தே நம்மோடு உரையாடிக் கொண்டே இருக்கிறார். இந்த உலகை படைப்பதற்கும் அவரது வார்த்தைகளே அடித்தளமாக இருந்தன. தான் தேர்ந்து கொண்ட இஸ்ரேல் மக்கள் பாவத்தில் மூழ்கிய போதும் அவர்களது பாவத்தை சுட்டிக்காட்டி, மன்னித்து அவரது வார்த்தைகளை உடன்படிக்கையாக இஸ்ரயேல் மக்களுக்கு வழங்குகிறார். 
"நானே உங்கள் கடவுள், நீங்கள் என் மக்கள்" என்று தனக்கும் இஸ்ராயேல் மக்களுக்கும் உள்ள உறவின் பிணைப்பை வெளிப்படுத்துகிறார்.

 அதே வார்த்தையான இறைவன் இன்றும் நம்மோடு உரையாடுகிறார். அவர் படைத்த இயற்கையின் இன்னொலியின் வழியாகவும், நமது ஆன்மாவின் ஆழத்தில் எழும் மெல்லிய குரலோசை வழியாகவும், நாம் வாழ தம்மையே இழக்கும் நமது பெற்றோரின் வார்த்தைகள் வழியாகவும்,  அன்றாட வாழ்வில் எதிர்வரும் சவால்களில் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க நமக்கு வழிகாட்டும் நல்ல மனிதர்கள் வழியாகவும் ஆண்டவர் நம்மோடு உரையாடுகிறார்.  அவரது குரலுக்கு செவிமடுக்க, அவரது வார்த்தைகளை கடைபிடிக்க, நிலை வாழ்வை நமதாக்கிக்கொண்டு ஆண்டவரின் அன்புப் பிள்ளைகளாக வாழ அருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2022

பாவத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான அழைப்பு...(6.4.2022)

பாவத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான அழைப்பு .... 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


இன்றைய வாசகத்தில் இயேசுவுக்கும் யூதர்களுக்கும் இடையே விடுதலை குறித்தும் அடிமைத்தனம் குறித்தும் விவாதம் நடக்கிறது 

 கடவுளின் வார்த்தை அவர்களுக்கு விடுதலை அளிக்கும் என்கிறார் இயேசு. அவர்களோ "நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை என்கின்றனர்.  இயேசுவோ "பாவம் செய்யும் எவரும் பாவத்துக்கு அடிமை" என்று சொல்லி, அவர்களின் அறிவுக்கு  கண்களைத் திறக்க முயல்கிறார்.

ஆபிரகாமின் வழிமரபினரான யூதர்கள் பல ஆண்டுகள் எகிப்தில் அடிமைகளாய் இருந்தனர், பின்னர், பாபிலோனுக்கு அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டனர். இயேசுவின் காலத்தில்கூட அவர்கள் உரோமைப் பேரரசின் அடிமைகளாய்த்தான் இருந்தனர். இந்த உண்மையை ஒத்துக்கொள்ள மறுத்ததே அவர்களின் பொய்மையின் அடிமை என்பதைக் காட்டுகிறது.

 எனவேதான், இயேசு அவர்களுக்கு நினைவூட்டுகிறார், "பாவம் செய்யும் எவரும் பாவத்துக்கு அடிமை" என்று. அந்தப் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அளிக்கவே இயேசு இந்த உலகிற்கு வந்தார்.

ஆனால் யூதர்கள் இயேசு கொண்டு வந்த விடுதலையை அறியவுமில்லை, அதனைப் பெற  விரும்பவுமில்லை. ஆனால், கிறித்தவராகிய நாம் இயேசு சொன்ன வார்த்தைகளை அறிந்திருக்கிறோம். ஆனால் பல நேரங்களில்  பாவங்களுக்கும், அடிமைகளாய் வாழ்ந்து வருகிறோம். இந்த உண்மையை அறிக்கையிட்டு, இயேசுவின் மன்னிப்பையும், விடுதலையையும் இத்தவக்காலத்தில் பெற்றுக் கொள்ள முயல்வோம் அதற்கான அருளை வேண்டி இறைவனிடத்தில் இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். 

திங்கள், 4 ஏப்ரல், 2022

ஆண்டவரின் வழிகள் செம்மையானவை...(5.4.2022)

ஆண்டவரின் வழிகள் செம்மையானவை

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
முகத்தில் இரண்டு கண்கள் இருந்தாலும் அவை பார்க்கும் பார்வை ஒன்று தான். இரண்டு காதுகள் இருந்தாலும் அவை கேட்கும் செய்தி ஒன்று தான். இறைவனும் மனிதனும் இருந்தாலும் ஆன்மாவை ஆட்சி செய்பவர் இறைவன் மட்டும் தான். 

ஆம் அன்புக்குரியவர்களே!
               நான் போன பின் என்னை தேடுவீர்கள். நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் இயேசு கூறுகிறார். ஆண்டவர் இருக்கும் இடத்தில் ஆனந்தம் இருக்கும்.  ஆண்டவர் இருக்குமிடத்தில் அமைதி இருக்கும். ஆண்டவர் இருக்குமிடத்தில் அன்பு நிலைத்திருக்கும். ஆண்டவர் குடிகொள்ளும் ஆன்மாவை கொண்ட மனிதன் அவரைப் போலவே மேன்மையான வழிகளை நாடக் கூடியவனாக இருப்பான். ஆண்டவராம் இறைவன் நமது பெயர் ஒவ்வொன்றையும் தனது உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளார். நமது வாழ்வுக்கான நல்வாழ்வின் திட்டங்களை வகுத்தவராக இருக்கின்றார். அந்த நல்வாழ்வின் பாதையில் நம்மை நாளும் கரம் பற்றி வழி நடத்துகின்றார். 
                   நமது பாதையில் கற்களும் முட்களும் குறுக்கிட்டாலும் நம்மைத் தமது கரங்களில் ஏந்தக் கூடியவராக இருக்கிறார். இதை உணரும் உள்ளம் சோர்ந்து போவதில்லை, மனமுடைந்து போவதில்லை. 
               எனவே ஒரே பார்வையை காணும் நமது இரண்டு கண்களைப் போல நாமும் ஆண்டவரோடு இணைந்து அவர் நமக்கென்று வகுத்திருக்கின்ற நல்வாழ்வினை கண்டு கொள்வோம்.  நம்மை பலமிழக்கச் செய்யும் தேவையற்ற பழக்கங்களில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்வோம். செம்மையான பாதையினைக் கண்டுகொண்டு அப்பாதையில் புது வாழ்வின் பயணத்தை தொடர்ந்திட இன்றைய திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

தன்னையறிதல்...(4.4.2022)

தன்னையறிதல்...


தன்னை  பற்றிய ஆழமான புரிதலே இந்த தரணியில் ஆண்டவர் இயேசுவை அறிந்து கொள்ள வழிவகுக்கும்!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
          இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னை பற்றியும் தனது தந்தையைப் பற்றியும் ஆழமாக அறிந்திருந்தார். தன்னை பற்றி அவர் கொண்டிருந்த நலமான,  ஆழமான புரிதலே தந்தையின் மீதான நம்பிக்கையில் நிலைத்திருக்க வைத்தது.

            மனிதர்களாகிய நாமும் நம்மை பற்றி ஆய்ந்து அறிந்து கொள்ளவே இந்த தவக்காலம் நமக்கு தரப்படுகிறது. இந்த தவக் காலத்தில் நம்மை குறித்து நாம் ஆய்வு செய்கின்ற போது,  நமது செயல்கள், நமது சொற்கள், நமது எண்ணங்கள் வழியாக நம்மை நாம் அறிந்து கொள்வதன் வழியாக இறைவனை அறிந்து கொள்ள இன்றைய நாள் நமக்கு அழைப்பு தருகிறது. 


தன்னை அறிந்து கொள்வதே
கடவுளை அறிந்து கொள்வதற்கான வழி.  இயேசு தன்னை அறிந்து இருந்தார். எனவே, தந்தையாம் இறைவனின் விருப்பத்தை அறிந்து கொண்டார். அதை நிறைவேற்றக் கூடியவராக இயேசு செயல்பட்டார்.  

    இந்த இயேசுவைப் போல நாமும் இறைவனின் விருப்பத்தை அறிந்து செயல்பட வேண்டுமாயின்,  நம்மைப் பற்றிய ஆழமான புரிதல் இருக்கவேண்டும்.  நம்மைப் பற்றிய ஆழமான புரிதல் நம்மிடம் இருக்கும்போது இந்த சமூகத்தில் நாம் சந்திக்கக் கூடிய சவால்கள் எதுவானயினும் அனைத்திற்கு மத்தியிலும் நாம் ஆண்டவருக்கு உகந்த மக்களாக இருக்க முடியும்.                                    இன்றைய முதல் வாசகத்தில் செய்யாத குற்றத்தை சூசன்னாவின் மீது சுமத்தி மரண தண்டனைக்கு இழுத்துச் செல்லப்பட்ட நேரத்தில் கூட சூசன்னா மனிதர்களை நம்பவில்லை.  ஆண்டவரை நம்பினாள்.  நான்  நேர்மையானவள். நான் எத்தவறும் செய்யவில்லை.  ஆனால் இந்த மக்கள் என்னை தவறாக தீர்ப்பிட்டு
 எனக்கு மரண தண்டனை விதிக்க இழுத்துச் செல்கின்றார்கள்.   இந்நேரத்திலும் நான் நேர்மையானவள் என்பதை அறிந்த  ஒரே நபர் இறைவன் ஒருவரே.  அந்த இறைவன் என்னை காத்தருள்வார் என்று நடக்கக்கூடிய நிகழ்வுக்கு தன்னை முழுவதும் கையளிக்கின்றார் அந்த சூசன்னா. சூசன்னா தன்னைப் பற்றி அவர் கொண்டிருந்த ஆழமான புரிதல், தான் நம்புகிற இறைவன் மீது அவர் கொண்டிருந்த ஆழமான புரிதல், அன்று தானியில் இறைவாக்கினர் மூலமாக, 
உண்மை மெய்ப்பித்து காண்பிக்கப்பட்டு, தவறான தீர்ப்பிட்ட மனிதர்கள் தண்டனைக்கு உள்ளானார்கள்.  சூசன்னா பாதுகாக்கப்பட்டார் என்பதை முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்.  இந்த இறைவார்த்தை பகுதிகள் இன்று நமக்கு உணர்த்துகின்ற வாழ்வுக்கான பாடம்,  நாம் கடவுளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதற்கு நாம் நம்மைப் பற்றிய ஆழமான புரிதலில் வளர வேண்டும்.  நம்மை பற்றி நாம் கொண்டிருக்கக் கூடிய ஆழமான புரிதலே இந்த அகிலத்தில் ஆண்டவர் இயேசுவின் இறையாட்சியின் மதிப்பீடுகளை உணர்ந்து கொள்ள நமக்கு வழிவகுத்து தருகிறது. நம்மைப் பற்றிய ஆழமான புரிதலில் நாளும் வளருவோம். அதன் வழியாக இறைவனோடு உள்ள உறவில் இன்னுமாக தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவரின் மக்களாக, அவர் காட்டும் பாதையில், பயணம் செய்வோம். அதற்கு நம்மை நாம் அறிந்து கொள்ள, இன்றைய நாளில் இறையருள் வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலியில் செபிப்போம்.

சனி, 2 ஏப்ரல், 2022

புதிய பாதையில் புதிய வாழ்வு வாழ....(3.4.2022)

புதிய பாதையில்  புதிய வாழ்வு வாழ

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றையநாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் புதிய 
வாழ்வை வாழ நமக்கு அழைப்பு தருகின்றன.  இன்றைய முதல் வாசகத்தில் பாபிலோனிய  அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரயேல் மக்களை பற்றி நாம் வாசிக்க கேட்டோம்.  இனி இந்த அடிமைத்தனத்திலிருந்து தங்களால் மீள முடியாது என்ற எண்ணம் கொண்டவர்களாக அனைத்து விதமான நம்பிக்கையையும் இழந்து போயிருந்த சூழ்நிலையில் இறைவாக்கினர் எசாயா வழியாக அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை இறைவன் முன் மொழிகின்றார். 

       கடந்தவைகளை நினைவூட்டி, எதையும் செய்ய ஆற்றலுள்ள ஆண்டவர் உங்களோடு இருக்கிறார் என்பதை அவர்களுக்கு உணர்த்துகின்றார்.  எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்த நேரத்தில், ஒரு புறம் கடல், மறுபுறம் எகிப்திய படையினர் சூழ்ந்திருக்க,  கடலை இரண்டாகப் பிரித்து இந்த மக்கள் பாதுகாப்புடன் வெளியேற பாதை அமைத்துக்கொடுத்த அந்த கடவுள், இன்று அடிமைத்தனத்திலிருந்து அவர்களை மீட்டு வருவார்; புதிய வாழ்வைத் தருவார்; புதிய பாதையை காட்டுவார்; புது செயல்களை  நீங்கள் முன்னெடுக்க உங்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்ற செய்தியினை இறைவன் வலியுறுத்துகிறார். 

 இதையே இன்றைய முதல் வாசகம் ஆக நாம் வாசிக்க கேட்டோம்.  இந்த முதல் வாசகம் நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம், வாழ்வில் பல விதமான இன்னல்களையும் இடையூறுகளையும்  நாம் சந்தித்து இருந்தாலும் அந்த இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் மத்தியிலும் நம்மோடு இருந்து நம்மை மீட்டு வரக் கூடியவராக இறைவன் இருந்திருக்கிறார் என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது. 

        பல நேரங்களில் நம்மோடு இருந்து நமது துன்ப நேரத்தில் நமது துன்பத்தில் இருந்து நம்மை மீட்டு வந்த இறைவனை நாம் உணர்ந்திருக்கிறோமா?  சில நேரங்களில் அந்த இறைவனை உணர மறந்திருக்கிறோம்.  ஆனால் கடவுள் எந்நாளும் நம்மோடு இருக்கிறார். நமது துன்பங்களிலிருந்து நம்மை மீட்க கூடியவராக இறைவன் இருக்கிறார் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது. 

     இந்த வாசகங்கள் வலியுறுத்துகின்ற வார்த்தைகளின் அடிப்படையில்,  ஆண்டவர் நம்மோடு துணை  இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து துணிவோடு ஆண்டவர் இயேசுவுக்கு உகந்த ஒரு வாழ்வை வாழக்கூடிய மனிதர்களாய் நீங்களும் நானும் இருக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். 

     இத்தகைய ஒரு அழைப்பை திருத்தூதர் பவுலும் தன் வாழ்வில் பெற்றார்.  இயேசு கிறிஸ்துவின் பெயரை அறிக்கையிடுபவர்களை எல்லாம் கொன்று குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆணையினைப் பெற்றுக் கொண்டு புறப்பட்ட ஒரு மனிதன், ஆண்டவர் இயேசுவின் பால் ஈர்க்கப்பட்டவராய்,  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தனக்கு உரிமையாக்கிக் கொள்ள அனைத்தையும் குப்பை என கருதுகிறேன் எனக் கூறி தன்னை முழுவதுமாக தன்னிடமிருந்த தன்னுடைய அடையாளங்களான, தான் ஒரு உரோமை குடிமகன் என்பதை, தான் ஒரு படித்த மேதை என்ற அனைத்து விதமான பட்டங்களையும் அடையாளங்களையும் புறந்தள்ளிய ஒரு மனிதனாக, ஆண்டவரை தன் உரிமைச் சொத்தாக மாற்றிக் கொள்ள வேண்டுமென தனது வாழ்வை மாற்றிக் கொண்டார். 

     கடந்த காலங்களை மறந்தவராய் கடந்த கால தவறுகளை எல்லாம் விட்டொழித்து,  எந்த மனிதர்களை, எந்த இயேசு கிறிஸ்துவின் பெயரை அறிக்கையிடுபவர்களை கொல்ல வேண்டுமென புறப்பட்டாரோ, அந்த இயேசு கிறிஸ்துவை அறிவிக்கக் கூடியவராக, பல மைல் தூரம் சென்று அறிவிக்கக் கூடியவராக, அவருக்காக தனது உயிரையும் இழக்கக் கூடிய ஒரு மனிதராக பவுல் மாறினார்.  இந்தப் பவுலை போலவே நீங்களும் நானும் மாறிட இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.  

            ஆனால் பல நேரங்களில் நாம் இயேசுவைப்போல மாறுவதை விட, இயேசுவைப் போல  மாற முயற்சிப்பவர்களை விமர்சனம் செய்பவர்களாகவும்,  இயேசுவுக்காக தன்னுடைய இன்ப துன்பங்களை தியாகம் செய்பவர்களை விமர்சனம் செய்யக் கூடியவர்களாகவும், இயேசுவின் பொருட்டு நல்லது செய்கின்ற நபர்களின் நல்ல உள்ளங்களை உணராத மனிதர்களாகவும் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். 

       இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்மணியை இயேசுவின் முன்னிலையில் வந்து நிறுத்தி,  இந்த பெண்ணை மோசேயின் சட்டப்படி கல்லால் எறிந்து கொல்ல வேண்டும். நீர் என்ன சொல்லுகிறீர்?  என்ற கேள்வியை இயேசுவின் முன்னிலையில் நாங்கள் ஓசையும் சட்டத்தை பின்பற்ற வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வியை இயேசுவின் முன்னிலையில் எழுப்புகிறார்கள். 

 ஒரு பெண் தவறு செய்தால் அவளுக்கு தண்டனை வழங்குவதற்கு முன்பாக இயேசுவிடம் வந்து  கருத்து கேட்க வேண்டிய அவசியம் அங்கு இல்லை.  ஆனால் அன்று அவர்கள் அதை செய்தார்கள்.  ஏன் செய்தார்கள் என்று சிந்திக்கின்ற போது,  இயேசுவின் மீது குற்றம் சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருந்தது. 

              ஒருவிதத்தில் இயேசு கிறிஸ்து, இந்த பெண்ணை கல்லால் எறிந்து கொல்லுங்கள் என்று சொல்லியிருந்தால், 
மோசேயின்  சட்டத்தைப் பின்பற்றுகிற நபராக இருந்திருப்பார். 

      அதே சமயம் அன்றைய காலகட்டத்தில் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் கொண்டது உரோமை ஆட்சி அதிகாரம். ஆட்சியாளர்களுக்கு மத்தியில் உரோமை ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்பட்டார் என கூறி குற்றவாளியாக நிறுத்திவிட முடியும் என்ற எண்ணத்தோடு அவர்கள் அக்கேள்வியை எழுப்பினார்கள். 

    ஒருவேளை இயேசு இந்த பெண்மணியை மோசேயின் சட்டப்படி கல்லால் எறிந்து 
 கொல்ல வேண்டாம் என குறிப்பிட்டிருந்தால், இவர் மோசேயின் சட்டத்தை  மீறினார் எனக் கூறி, யூத சமயங்கள் கற்பிக்கின்ற  சட்டங்களுக்குப் புறம்பாக செயல்படுகின்ற நபர் இவர்  எனக் குற்றம்சாட்டி அவரை கைது செய்யலாம் என்ற எண்ணத்தோடு முன் வந்து அவர்கள் அந்த பெண்மணியை நிறுத்தினார்கள். 

     இயேசு அந்த பெண்மணியை உற்று நோக்கினார்.  பொதுவாகவே யூத சமூகத்தில் பெண்ணை ஒரு பகடைக் காயாகவும் பெண்களை இழிவாகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும்,  பல விதமான கொடுமைகளையும் நிகழ்த்தக்கூடிய மனிதர்களாகத் தான் யூதர்கள் இருந்தார்கள்.  அப்படிப்பட்ட ஒரு நிகழ்வையும் அங்கு இயேசு படம்பிடித்துக் காட்டுகின்றார். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் என்று கொண்டு வந்து நிறுத்தினார்கள். இருவர் நிற்க வேண்டிய இடத்தில் பெண் மட்டுமே குற்றம் செய்த பெண்ணாக நிறுத்தப்பட்டு இருந்தாள். 

            அந்தப் பெண்ணின் சார்பாக இயேசு பேசவில்லை. மாறாக, உங்களுள் பாவம் செய்யாதவர் முதல் கல்லை எறியட்டும் எனக் கூறியவராய், தன் போக்கில் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். இயேசுவின் இந்த வார்த்தைகள் சுற்றியிருந்தவர்கள் என் இதயத்தில் குத்தியது.  குற்றம் இல்லாத மனிதர்கள் அங்கு எவரும் இல்லை.  எனவே தான்
பெரியவர் தொடங்கி சிறுவர் வரை அனைவரும் அவ்விடத்தை விட்டு அகன்றார்கள் என விவிலியம் குறிப்பிடுகிறது.  

       அனைவரும் குற்றம் சுமத்த வந்தவர்கள் எல்லாம் எதுவும் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு, குற்றம் சுமத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு, இயேசுவை எப்படியாவது குற்றவாளியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு, அங்கு நின்ற அவர்களெல்லாம் ஒன்றும் சொல்லாமல் கலைந்து சென்றார்கள். 

       இயேசு அந்த பெண்ணை பார்த்து, "அம்மா! யாரும் உன்னை தீர்ப்பிட வில்லையா? என்று கேட்கிறார். அவரும் இல்லை ஐயா என்கிறார்.  நானும் உன்னை தீர்ப்பிடவில்லை. நீர் போகலாம்.  இனி பாவம் செய்யாதீர் என்று கூறி அந்தப் பெண்மணியை அனுப்பி வைக்கின்ற நிகழ்வினை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கலாம். 

          இந்த நற்செய்தி வாசகம் நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் பல நேரங்களில் கடவுள் நமக்கு செய்த அளப்பரிய காரியங்களை மறந்தவர்களாக, கடவுளின் இருப்பை உணராதவர்களாக, பல நேரங்களில் துன்பங்கள் வருகின்ற போது, நாம்
கடவுளுடைய பராமரிப்பை உணர்ந்திராத மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நமக்கு இறைவன் உணர்த்துகின்ற பாடம், எல்லாச் சூழ்நிலையிலும் இறைவன் நம்மோடு இருக்கிறார்.  நம்முடைய இன்ப துன்பங்களில் துணை இருந்து நம்மை வழிநடத்துகிறார்.  பல நேரங்களில் அவரை விட்டு விலகிச் செல்லக் கூடிய நிலையில் நாம் இருந்தாலும்,  நாம் செல்லும் பாதை தவறு என்பதை சுட்டிக்காட்டி நம்மை நல்வழிப்படுத்தக்  கூடிய நபராக இறைவன் இருக்கிறார்.  அந்த இறைவனின் உடனிருப்பையும், அவரின் பராமரிப்பையும் நாம் உணர்ந்து கொள்ள நம்மைக் குறித்து நாம் சுய ஆய்வு செய்து பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம்.  நாம் செல்லுகின்ற பாதை இயேசுவுக்கு உகந்த பாதையா?  நாம் செய்கின்ற செயல்கள் இயேசுவுக்கு உகந்த செயலா? நாம்
எண்ணுகின்ற எண்ணங்கள் எல்லாம் இறைவனுக்கு உகந்த எண்ணங்களா? என சீர்தூக்கிப் பார்த்து,  இறைவனுக்கு புறம்பான எண்ணங்களும் செயல்களும் சொல்லும் நம்மிடத்தில் இருக்குமானால் அதையெல்லாம் சரி செய்து கொண்டு, ஆண்டவரின் உடனிருப்பை நம்பி, அவர் நமக்குத் தருகின்ற புதிய வாழ்வினை உணர்ந்து கொண்டவர்களாக ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்குத் தந்து கொண்டிருக்கக் கூடிய புதிய நாளில்,  நாம் இயேசுவைப் போல மாறக்கூடிய, புதுப் பிறப்பு அடைந்த மனிதர்களாக மாறிட அழைக்கப்படுகிறோம். 

              நாம் ஒவ்வொருவருமே கடந்த கால நிகழ்வுகளை மறந்து, தவறிப்போன தருணங்களை மறந்து,  இனி வருகின்ற நாட்களில் இறைவனின் உடனிருப்பை உணர்ந்து கொள்ளக் கூடியவர்களாக, அவரின் உடனிருப்பில்  தொடர்ந்து பயணம் செய்யக் கூடிய மனிதர்களாக, புதிய மனிதர்களாக, புதிய பாதையில், புதிய வாழ்வை நோக்கி  பயணிக்க, இறைவன் அழைக்கின்றார். 

        இறைவன் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாக, இயேசு கற்பிக்கின்ற புதிய பாதையில் புது வாழ்வைத் தொடங்கிட இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலியில் செபிப்போம்.

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...