உண்மைக்கு ஏற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் .
கடவுள் இவ்வுலகினை படைத்த போது ஆழத்தின் மீது இருள் பரவி இருந்தது. "ஒளி உண்டாகுக" என்ற இறைவனின் வார்த்தைக்கேற்ப உலகில் ஒளி உண்டாயிற்று. வார்த்தையாம் இறைவன் ஒளியையே இவ்வுலகில் முதன்முதலாகப் படைத்தார்.
அன்று தொடங்கிய ஒளியின் பயணம், இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, வார்த்தையான இறைவனின் பிரசன்னம் வழியாக. வார்த்தையான இறைவனை நாம் நாள்தோறும் திருப்பலியில் சந்திக்கிறோம். அவரது நற்கருணை பிரசன்னத்தில் "நானே உலகின் ஒளி" என்று கூறிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாபெரும் பேரொளியை நாம் சந்திக்கிறோம்.
உண்மைக்கு ஏற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள் என்ற இன்றைய இறை வார்த்தைக்கு ஏற்ப, இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்ட நாமும், அவரது ஒளியின் கீற்றுகளாக படைக்கப்பட்ட நாமும், நாம் பெற்றிருக்கக் கூடிய பேரொளியினை பிரதிபலிக்கின்றோமா? என இன்றைய நாளில் சிந்திப்போம்.
ஒளியின் பண்புகளான உண்மையும், நன்மையும், திறந்த மனமும், நமது செயல்பாடுகளில் வெளிப்படுகின்ற மலர்ந்த முகத்தின் பேரொளியாம் புன்னகையும், தீமையின் பண்புகளை, அவற்றின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி களைந்திடக் கூடிய வெளிப்படைத் தன்மையும் நம்மில் மிளிர, உலகின் ஒளியாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நாமும் பிரதிபலிக்க, உண்மைக்கு ஏற்ப வாழ்பவர்களாக, அகவொளி தீபத்தை ஏற்றி, ஆண்டவரின் மக்களாக வாழ இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து தொடர்ந்து செபிப்போம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக