நானே உங்களை அனுப்புகிறேன்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடர் ஒளி உதித்துள்ளது.
எசாயா 9:2
என்று கூறும் இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகள் இன்று உயிர்பெற்று
செயல்படுவதை இன்றைய வாசகங்களின் வழியாக நாம் காண்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் யூதர்களுக்கு அஞ்சி கதவுகளை மூடி உள்ளத்தில் கலக்கம் கொண்டு, என்ன செய்வதென தெரியாது, தமக்குள்ளே திகைத்து தன்னையே ஒடுக்கிக் கொண்ட இவர்களுக்கு மத்தியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய பதினொரு சீடர்களுக்கும் தோன்றி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக"! என்று கூறினார். அவர்கள் மூடி வைத்திருந்த கதவுகளைத் திறக்கும் வண்ணமாக, "தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்" என்று கூறி, அவர்களை தமது இறையாட்சிப் பணிக்கு தயார்படுத்துகிறார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசிக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், இறையாட்சி பணியினை ஆற்றிட, ஆண்டவரிடமிருந்து வல்லமை பெற்றவராக மக்களை நோக்கிப் புறப்பட்ட பேதுருவின் காலடி நிழல் படாதா? என்று மக்கள் அவரது வருகைக்காக காத்திருப்பதை நாம் பார்க்கிறோம்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் இறைவார்த்தை வழியாக தந்தையாம் இறைவன் முதலும் முடிவும் நானே! வாழ்வும் வழியும் நானே! என அனைத்திற்கும் ஆதிகாரணராக, காலங்களை கடந்த இறைவனாக எக்காலமும் வாழ்பவராக அவர் இருக்கிறார் என்பதை இன்று நமக்கு வெளிப்படுத்துகிறார்.
இன்றைய இறைவார்த்தை பகுதியானது நமக்கு வெளிப்படுத்துகின்ற மகிழ்ச்சியூட்டும் செய்தி என்னவென்று
நாம் பார்க்கின்ற பொழுது ஆண்டவரின் பிரசன்னம் இருக்கும் இடத்தில் அவரது அருள்செயல்களும் வல்லமைகளும் வெளிப்படுகின்றன.
ஆண்டவருடைய பிரசன்னம் இருக்குமிடத்தில் மூடிய கதவுகள் அனைத்தும் திறக்கப்படுகின்றன.
ஆண்டவரின் அருள் நம்மை ஆட்கொள்கிற போது, ஆண்டவரின் ஆற்றல் நம் வழியாக செயல்படுத்தப்படும் போது நாமும் புனித பேதுருவைப் போல பிறரது துன்பங்களிலிருந்து அவர்களுக்கு வாழ்வு கொடுக்க முடியும். ஆண்டவரது அருள் பெற்றவரின் நிழல்கூட வாழ்வை இழந்து தவிப்பவர்களுக்கு, புதிய ஆற்றலை, புதிய மாற்றத்தை கொடுக்க முடியும்.
எனவே இன்றைய நாளில் நமது உடலிலும் உள்ளத்திலும் இருக்கும் ஆண்டவரின் பிரசன்னத்தை உணரவும், நமது நிழல் போல நம்மை தொடர்ந்து வரும் நமது வார்த்தைகளும், பணிகளும் பிறருக்கு வாழ்வு தர, "நான் உங்களை அனுப்புகிறேன்" என்று கூறிய ஆண்டவர் இயேசுவின் அன்புச் சீடர்களாக வாழ்ந்திட இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக