உயிர்த்த ஆண்டவருக்கு சான்று பகர நாம் அழைக்கப்படுகின்றோம்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்ததன் வழியாக மூதாதையருக்கு அளித்த வாக்குறுதியை அவர்கள் பிள்ளைகளாகிய நமக்கென நிறைவேற்றினார். இதுவே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி.
திருத்தூதர் பணிகள் 13:32
என்ற பவுலடியாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உயிர்த்தார். அந்த உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு சான்று பகர நாம் ஒவ்வொருவரும் இன்றைய நாள் வாசகங்கள் வழியாக அழைக்கப்படுகிறோம்.
இன்றைய முதல் வாசகத்தில் உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி நற்செய்தி அறிவித்த காரணத்தினால் பேதுருவும் யோவானும் தலைமைக் குருக்களின் முன்பாக நிறுத்தி விசாரிக்கப்படக் கூடிய நிகழ்வினை நாம் வாசிக்க கேட்டோம். இதே பேதுரு தான், இதே யோவானும் தான், ஆண்டவர் இயேசு கிறிஸ்து உயிர்த்தார் என்று அறிவிப்பதற்கு அஞ்சியவர்களாய், இயேசுவின் இறப்பில் அச்சம் கொண்டவர்களாய், ஓடி ஒதுங்கி மறைந்து வாழ்ந்தவர்கள்.
ஆனால் தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் துணிச்சலோடு, இயேசுவைக் கொலை செய்ய, யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கு முன்பாகவே வந்து நின்று, இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் மனிதனாக வாழ்ந்த போது ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை தன் வாழ்வால் நமக்கு வெளிக்காட்டினாரோ அந்த இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து கொன்றீர்கள், ஆனால் கடவுள் அவரை உயிருடன் எழுப்பினார் என்று நற்செய்தி அறிவிக்க கூடியவர்களாக செயல்பட்டதை நாம் வாசிக்க
கேட்டோம்.
இந்த சீடர்களைப் போலவே நாமும் செயல்பட இந்த நாளில் அழைக்கப்படுகிறோம். இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அறிவித்த போது அவரைப் பற்றி அறிவிக்கக் கூடாது என தலைவர்கள் அச்சுறுத்திய சூழ்நிலையிலும் இயேசுவை குறித்து எங்களால் அறிவிக்காமல் இருக்க முடியாது என கூறக்கூடியவர்களாய் இயேசுவின் சீடர்கள் மாறிப் போனார்கள். இந்த சீடர்களைப் பின்பற்றியே நமது வாழ்வும் அமைய வேண்டும் என்பதுதான் இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்ற வாழ்வுக்கான பாடமாக இருக்கிறது.
தொடக்கத்தில் இந்த சீடர்கள் இயேசுவின் உயிர்ப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைக்கவில்லை. இயேசு உயிர்த்தாரா? இல்லையா? இது யாரேனும் சொல்லுகின்ற வதந்தியா? அல்லது கட்டுக்கதையா என்ற எண்ணமானது தொடக்க காலத்தில் நிலவிக் கொண்டே இருந்தது.
ஆனால் உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து பல முறை தம் சீடர்களுக்குத் தோன்றி ஆறுதல் தந்து, அவர்கள் அச்சத்தை களைந்து, நம்பிக்கை கொள்ள வழிவகை செய்து கொடுத்தார். பலர் கூடியிருந்த போது அவர்கள் மத்தியில் தோன்றி அவர்களின் ஐயத்தை போக்கினார். தனியே அவர்கள் பயணம் சென்றபோது, அவர்கள் நடுவே தோன்றி, அவர்களோடு வழி நடந்து, அவர்களுக்கு இறை வார்த்தையை எடுத்துரைக்கக் கூடியவராக இருந்து, அவர்களின் அச்சத்தை களையக் கூடிய ஒரு நபராகவே இயேசு இருந்தார் என்பதை விவிலியம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட, மீன்பிடிக்கச் சென்ற பேதுருவுக்கு மீன் எதுவும் கிடைக்காமல் திரும்பி வந்த போது கடலில் சென்று வலப்புறம் வலையை வீசுங்கள் என இயேசு கூறுகிறார் . கூறியவரின் வார்த்தைகளை மட்டும் கேட்டு தங்கள் வலைகளை வீசியவர்கள், மிகுதியான மீன்பாட்டைக் கண்டபோது உணர்ந்து கொண்டார்கள், இது போன்ற ஒரு நிகழ்வு அன்று தங்கள் வாழ்வில் இயேசுவால் நிகழ்த்தப்பட்டது என்று.
தம்மை கடலில் சென்று வலப்புறம் வலையை வீசுங்கள் எனக் கூறியது அந்த இயேசு தான் என்பதை உணர்ந்து கொண்டவர்களாய் கடலில் இருந்து குதித்து கரையை நோக்கி நீந்தியவர்களாய் இயேசுவிடம் வந்து, சரணாகதி அடைகிறார்கள். தன்னைத் தேடி வந்த அந்த சீடர்களுக்கு இயேசு மீனை சுட்டு
அப்பத்தையும் மீனையும் உணவாக உண்ணக் கொடுத்து அவர்களுடன் அவரும் அமர்ந்து உண்டார்.
உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெறும் ஆவி அல்ல. அவர் மனிதனைப் போலவே சதையும் எலும்பும் கொண்ட மனிதனாக இருந்தார். மனிதர்களோடு மனிதராக நடந்து வந்தார். மனிதர்களோடு அமர்ந்திருந்தார். மனிதர்களோடு இணைந்து உணவு உண்டார். ஆனால் அவர் மாட்சி பொருந்திய உடலை பெற்றிருந்தார்.
எனவே தான் பூட்டிய அறைக்குள் அவர் தோன்றினார் என விவிலியம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. பூட்டிய அறைக்குள் உடலும் ரத்தமும் சதையும் கொண்ட ஒரு மனிதர் தோன்றினார் என்பதுதான் மாட்சி பொருந்திய உடலாக இயேசுவின் உடலானது பார்க்கப்படுகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
இந்த உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்பிக்கை அற்று இருந்த தம் சீடர்களுக்கு மத்தியில் பல நலமான காரியங்களை முன்னெடுத்தவராய், பலவிதமான அரும்அடையாளங்களை நிகழ்த்தியவராய், ஐயத்தோடு இருந்தவர்களின் ஐயங்களை களைய வைத்து, நம்பிக்கைக்குரிய மனிதர்களாக மாற்றினார்.
அந்த இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் தான்
இயேசுவின் சீடர்கள் அச்சத்தோடும் தயக்கத்தோடும் யாரைக் கண்டு அஞ்சி பயந்து ஒதுங்கி ஓடி ஒளிந்தார்களோ, அவர்களுக்கு முன்னிலையிலேயே சென்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து உயிர்த்தார் என்ற செய்தியை பறைசாற்றக் கூடிய மனிதர்களாக மாறினார்கள் என்பது வரலாறு நமக்கு கற்பிக்கின்ற பாடம். இந்த இயேசுவின் உயிர்ப்பை அறிவித்ததன் விளைவாக பலர் தங்களது இன்னுயிரையும் இழந்தார்கள் என்பதையும் வரலாற்றில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாய் அவர் இந்த மண்ணில் வாழ்ந்த போது நாம் எப்படி வாழவேண்டும் என கற்பித்தாரோ அந்தக் கற்பிதங்களுக்கு ஏற்றவர்களாய் நாமும் நமது வாழ்வை அமைத்துக் கொண்டு, அவர் காட்டிய பாதையில் துணிவோடு இறையாட்சியை இம்மண்ணில் கட்டி எழுப்புவதற்கான கருவிகளாக நாம் மாறிட வேண்டும் என்பதை இன்றைய நாள் நமக்கு வலியுறுத்துகிறது.
அதற்கு நாம் ஆண்டவரின் மீது ஆழமான நம்பிக்கை கொள்வோம். அவருக்கு சான்று பகரக் கூடிய நல்ல சாட்சிகளாக மாறுவோம்.
இன்றைய இரண்டாம் வாசகமாகிய திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இரண்டாம் வாசகத்தில் யோவான் தான் கண்ட காட்சியாக குறிப்பிடுகிறார். கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி என்பது இங்கு இயேசு கிறிஸ்துவுக்கு சுட்டிக்காட்டப்படுகிறது, உருவகப்படுத்தி பார்க்கப்படுகிறது. சிலுவையிலே குற்றுயிரும் குலை உயிருமாக மூன்று ஆணிகளால் கொல்லப்பட்ட அந்த இயேசு கிறிஸ்துவே இந்த ஆட்டுக்குட்டி.
பின்பு, விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும், அவற்றில் இருந்த ஒவ்வொன்றும்,“அரியணையில் வீற்றிருப்பவருக்கும் ஆட்டுக்குட்டிக்கும் புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன” என்று பாடக் கேட்டேன்.
திருவெளிப்பாடு 5:13
என்ற திருவெளிப்பாட்டு நூலின் ஆசிரியர் யோவான் தான் கண்ட கனவுகளை தொகுத்துக் கொடுத்தார். அந்த கனவுகள் நனவாகும் நாள் வெகு விரைவில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டவர்களாய் நாம் ஒவ்வொருவரும் உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு சான்று பகரக் கூடிய மக்களாக இம்மண்ணில் வாழ அழைக்கப்படுகிறோம்.
இயேசு கிறிஸ்து உயிர்த்தார். அந்த உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்பி நமது வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும், அவரின் வார்த்தைகளை வாழ்வாக்குவோம். அவரின் உயிர்ப்பை உலகிற்கு அறிவிக்கும் உன்னத சாட்சிகளாக வாழ இறைவனிடத்தில் அருள் வேண்டி இந்த திருப்பலி வழியாக பக்தியோடு செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக