செவ்வாய், 26 ஏப்ரல், 2022

மறுபடியும் பிறக்க வேண்டும்!(26.4.2022)

மறுபடியும் பிறக்க வேண்டும்!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் ஒவ்வொருவரும் மறுபடியும் பிறக்க வேண்டும் என இயேசு நமக்கு கற்பிக்கின்றார்.

 மனிதர்களாகப் பிறந்து இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு நாளும் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள் வழியாக புதிதாக பிறக்கின்றோம் என்பது முற்றிலும் உண்மை. 

நமது உடலில் இருக்கும் அனைத்து செல்களும் புதிது புதிதாகப் பிறந்து கொண்டே இருக்கின்றன என்பது அறிவியல் நமக்கு வெளிப்படுத்தும் உண்மை. இத்தகு புதிய செல்களின் பிறப்பே நமக்கு வாழ்வையும் வளர்ச்சியையும் தந்து கொண்டிருக்கின்றது. 

இன்று நம் உடலில் இருக்கும் செல்கள் நாளைக்கு புதியனவாக மாறிவிடுகின்றன. இன்று நம்மை தழுவிச் செல்லும் காற்று இயற்கையில் கரைந்து விடுகின்றது.  மறுநாள் புதிய காற்று தோன்றிவிடுகிறது. 

ஒவ்வொரு நாளும் புதிதாக தோன்றும் செல்களைப் போல, ஒவ்வொரு நாளும் புதிதாக வீசும் காற்றைப் போல, நமது வாழ்வும் புதிதாக பிறக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு குறிப்பிடுகிறார்.

ஆண்டவரை நோக்கிய நமது வாழ்க்கைப் பயணத்தில் நமது உடல் வளர்ச்சி மட்டுமல்லாது அதனோடு இணைந்த நமது உள்ளத்தின் நலமும் ஆன்மாவின் நலமும் அன்றாடம் நிகழ்ந்திட வேண்டுமென நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு அழைப்புத் தருகின்றார். 



புதிதாகப் பிறந்த குழந்தையானது தாயின் முகம் பார்த்து அவளின் குரல் கேட்டு அவளின் கைகளைப் பற்றிக் கொண்டு அவளைப் போலவே வளர்கின்றது. ஆம்! தாயைப் போல பிள்ளை!

அதுபோலவே நாமும் ஆண்டவரிடம் கொள்ளும் தெய்வ பயத்திலும்,
 நமது அயலாருக்கு செய்யும் அன்பு சேவையிலும், நமது கடமை உணர்ந்து செயலாற்றும் நமது பணிகளிலும், நம்மிடையே காணப்படும் தேவையற்ற கோபம், நான் என்ற ஆணவம்,
அதிகாரம் என் கையில் என்னும் மமதை, என்னால் செய்ய இயலாது என்ற சோம்பேறித்தனம், அனைத்தையும் இறந்து போகும் செல்களோடு அடக்கம் செய்து விட்டு, 

     இன்று புதிதாய் பிறந்தவர்களாக, இறைவனின் கொடையாம் மகிழ்வையும், அன்பையும், சகோதரத்துவத்தையும், நன்மைகளை ஆற்றும் நல்ல நம்பிக்கையையும், உற்சாகத்தையும், அன்றாடம் நமது உள்ளத்தில் பிறக்க செய்திட,  பிறக்கச் செய்வதோடு மட்டுமல்லாது அதனை இவ்வுலகில் பரவச் செய்திட,  ஆண்டவரின் இறையாட்சியை ஒவ்வொருநாளும் இம்மண்ணில் மலரச்  செய்திடும் கருவிகளாக இறைவன் நம்மை மாற்றிட இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...