திங்கள், 18 ஏப்ரல், 2022

சாட்சிகளாய் மாறிட...(19.4.2022)

சாட்சிகளாய் மாறிட...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நாள் இறை வார்த்தையானது விழிப்போடு இருந்து இறைவனைக் கண்டு கொள்ள நமக்கு அழைப்பு தருகிறது.  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அதிகமாக அன்பு செய்த நபர்களில் ஒருவராக நாம் மகதலா மரியாவை அறிய முடியும்.  ஆனால் இந்த மகதலா மரியா, இறந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலைப் பார்ப்பதற்காக தன்னந்தனியே கல்லறைக்கு விரைந்து செல்லுகின்றார்.  கல்லறையில் இயேசுவின் உடல் இல்லாத காரணத்தினால், யாரோ ஒருவர் அதை எடுத்துச் சென்று விட்டார்கள் என்ற எண்ணத்தோடு கலங்கியவளாய், திகிலுற்றவளாய், என்ன செய்வதென அறியாது,  திகைத்துக் கொண்டிருந்தார்.  தன் முன்பாக நிற்கின்ற மனிதர் யார் என்பதைக் கூட அறிந்து கொள்ள இயலாத நிலையில், அந்தப் பெண்மணி இறந்த  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலை தேடிக்கொண்டிருந்தார்.  ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொன்னபடி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். 

உயிர்த்தெழுந்த இயேசுவை கண்டுகொள்ள மறுத்து,  இறந்துபோன இயேசுவின் உடலை தேடிக் கொண்டிருந்த அந்த மகதலா மரியாவுக்கு,  ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் வார்த்தைகளால் விழிப்படையச் செய்தார். 

ஆண்டவர் இயேசுவின் குரலைக் கேட்டு விழிப்படைந்த மகதலா மரியா, "ரபூனி" அதாவது, போதகரே என்று அழைத்து, உயிர்த்த ஆண்டவர் இயேசுவை தன் கண்களால் கண்டார். கண்ட இறைவனை தன்னுடன் இருந்தவர்களுக்கும், இயேசுவைப்பற்றி அறிந்தவர்களுக்கும் பறைசாற்றுவதற்காக இயேசுவால் அனுப்பி வைக்கப்பட்டார்.  அவரும் சென்று, தான் கண்டதை மற்றவருக்கு பகிர்ந்தார்.                
                இன்று பல நேரங்களில் நமது வாழ்வில் இந்த இறைவார்த்தைப் பகுதி  நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என்று சிந்திக்கின்ற போது,  பல நேரங்களில் இறைவன் நம்மோடு இருந்து நம் வழியாக பல நல்ல காரியங்களை இச்சமூகத்தில் முன்னெடுக்க விரும்புகிறார்.  ஆனால் பல நேரங்களில் மகதலா மரியாவைப் போல,  விழிப்பற்ற நிலையில் இருந்து கொண்டு, நாம் ஏதோ ஒன்றை மனம் போன போக்கில் செய்து கொண்டிருக்கிறோம்.  ஆனால் இறைவனது வார்த்தைகளின் அடிப்படையில் விழிப்படைந்து, மனிதர்களாகிய நாம் இந்த மண்ணில் இருப்பதன் நோக்கமே, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்வாக்குவதற்கு என்பதை உணர்ந்துகொண்டு, சக மனிதர்களான ஒருவர் மற்றவரை அன்புசெய்து இன்புற்று வாழ, அதன்வழி இயேசுவின் இறையாட்சியை இம்மண்ணில் நிலைநாட்டிட,  விழிப்படைந்த மக்களாக மாறிட,  இன்றைய நாளில் இறைவன் அழைப்பு தருகின்றார்.  இறைவன் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாய் விழிப்படைவோம்! ஆண்டவரின் மீது நம்பிக்கை கொள்வோம்! நாம் கொண்ட நம்பிக்கையை,  துணிவோடு அடுத்தவருக்கு அறிவிக்கும் இயேசுவின் சாட்சிகளாய் மாறிட இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...