இன்று நமக்காக உயிர் துறந்தார் இயேசு!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்று ஆண்டவருடைய திருப்பாடுகளின் புனித வெள்ளி. கெத்சமனி தோட்டத்தில் இருந்து ஆண்டவரது பாடுகளின் பயணம் ஆரம்பமாகிறது.
தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு யாரிடமும் இல்லை என்று அன்புக்கு
இலக்கணம் வகுத்த இயேசு,
இதோ இன்று தன்னுயிரை நமது பாவங்களுக்குக் கழுவாயாகக் கொடுத்து நாம் மீட்புப் பெற அழைப்பு
விடுக்கின்றார். அன்பின் உச்சகட்டமே தன் உயிரைக் கொடுப்பதுதான் என்று வார்த்தைகளால் மட்டுமல்ல
வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி,
அவமானத்தின் சின்னமாகக்
கருதப்பட்ட சிலுவையை, தம்முடைய தியாகப்பலியாக, மீட்பின் சின்னமாக
மாற்றுகிறார். ஆம் இன்று
திருப்பாடுகளின் புனித வெள்ளி. பழைய ஏற்பாட்டில் பாலைவனத்தில்
யாவே இறைவனுக்கு எதிராகப் பாவம் செய்து பாம்பின் கடியினால்
இறந்தவர்கள், உயர்த்தப்பட்ட
வெண்கலப் பாம்பை பார்த்து
உயிர் பிழைத்தார்கள். இன்று விண்ணிற்கும் மண்ணிற்கும்
இடையில் சிலுவையில் பலியான செம்மறியாக உயர்த்தப்பட்டிருக்கிற
இயேசுவைப் பார்த்து, அவரது அன்பு நிறைந்த இதயத்திலிருந்து பொங்கி வருகின்ற திருஇரத்தத்தினால் நமது நமது பாவங்கள் கழுவப்பட அருள் வேண்டியவர்களாய் இன்றைய நாளிலே இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் ஆழமாக சிந்திப்போம்.
இயேசுவின் பாடுகள் சிலுவை மரணத்தோடு முடிந்து விடவில்லை. இன்றும் நம் மத்தியில் பல்வேறு இன்னல்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களின் வாழ்வில் தொடர்ந்து கொண்டிருக்கும் இயேசுவின் சிலுவை போராட்டத்தை காணும் கண்கள் நமக்கு இருக்கிறதா என்பதை சந்திப்போம்.
ஆண்டவரது சிலுவை பாடுகள் வழியாக மீட்படைய காத்திருக்கும் நாம்,
நமது அன்றாட வாழ்வில் அனுதினமும் பல்வேறு விதமான சிலுவை போராட்டங்களில் உழல்பவர்களை காண்கின்ற நாம், அன்று சிலுவையின் பயணத்தில் பங்கேற்ற சீமோனைப் போல, இயேசுவின் அன்பு சீடர்களாக, நமது கண்ணெதிரில் நாம் காணும் துன்புறும் இயேசுக்களுக்கு (மனிதர்களுக்கு) நாம் பெற்றுக்கொண்ட அருளை வழங்கக் கூடியவர்களாக, அவரது திருச்சிலுவையை முத்தி செய்வதோடு மட்டுமல்லாமல், அவரது பாடுகளில் நாமும் பங்கேற்பவர்களாக, ஆண்டவர் இயேசுவுக்கு ஆறுதல் தரக்கூடியவர்களாக, நமது வாழ்க்கை பயணத்தை தொடர இன்றைய நாளில் இறையருள் வேண்டி இந்த வழிபாட்டில் இணைந்து செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக