வெள்ளி, 29 ஏப்ரல், 2022

ஆண்டவரைக் கண்டு கொண்டு, அச்சம் களைவோம்!(30.4.2022)

ஆண்டவரைக் கண்டு கொண்டு, அச்சம் களைவோம்!


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் இருள் சூழ்ந்த மாலை வேளையில் படகில் ஏறிக் கப்பர்நாகூமுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பயணம் செய்து கொண்டிருக்கின்ற கடல் பகுதி என்பது தீய ஆவிகள் வாழும் இடமாக கருதப்படுகின்றது. இத்தகைய தீய ஆவிகளைப் பற்றிய அச்சத்தை சீடர்களிடம் நீக்கும் வண்ணமாகத் தான் இயேசு கடல்மீது நடந்து செல்கிறார். தம்மை நோக்கி வருகின்ற ஆண்டவர் இயேசுவை கண்டும், அவர் இயேசு தான் என்பதை உணர இயலாத நிலையில் சீடர்கள் இருக்கின்றார்கள். 

          அவரைப் பேய் எனக் கருதி சீடர்கள் அஞ்சுகின்ற பொழுது, "அஞ்சாதீர்கள்! நான்தான்" என்று இயேசு அவர்களிடம் கூறுகிறார். விவிலியம் முழுவதையும் புரட்டி பார்க்கின்ற பொழுது 365 முறை அஞ்சாதீர்கள் என்ற இந்த வார்த்தையானது விவிலியத்தில் இடம்பெறுகிறது. வருடம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஆண்டவர் இயேசு நம்மைப் பார்த்து "அஞ்சாதீர்கள்" என்று கூறுகிறார். 

இந்த வார்த்தையானது நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற பொழுது , வாழ்வில் எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் எதைக் கண்டும் அஞ்சாதவர்களாக நாம் இருக்க அழைக்கப்படுகிறோம். 

இயேசுவோடு உடன் இருந்தவர்கள்,  உடன் பயணித்தவர்கள், அவருடைய அரும் அடையாளங்களைக் கண்டவர்களான இயேசுவின் சீடர்கள் கூட, ஆண்டவர் இயேசுவை அவர்களது இருளின் வேலையில் மறந்து போனார்கள். 

ஆனால், ஆண்டவர் இயேசுவை நாம் மறந்தாலும் கூட,  நம்மை மறவாத ஆண்டவர், நமது இக்கட்டான சூழ்நிலையில் நமது அருகில் வந்து நின்று, "அஞ்சாதீர்கள்! நான்தான் உடன் இருக்கிறேன்" என்று அன்று சீடர்களிடம் கூறிய அதை வார்த்தைகளை நம்மிடமும் கூறுகிறார். 

நம்மை வழிநடத்த காத்திருக்கும் நம் ஆண்டவர் இயேசுவை கண்டு கொண்டு, நமது இன்னல் இடையூறுகளில் அவரது கரங்களைப் பற்றிக்கொண்டு, தீமைகளை வென்றெடுக்க இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

My Portfolio. ( 2025)