நம்மில் செயலாற்றும் இறைவன் ...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நற்செய்தியைப்பறைசாற்ற இயேசு தனது சீடர்களை அனுப்புகிற நிகழ்ச்சி இன்றை வாசகமாக நமக்குத்தரப்படுகிறது.
இயேசு தனது சீடர்களை நற்செய்தி அறிவிக்க அனுப்பியதோடு தனது கடமை நிறைவேறிவிட்டது என்று கருதவில்லை . மாறாக, சீடர்களோடு உடனிருந்து செயலாற்றுகிறார். பல்வேறு சூழ்நிலைகளில் அவர்களை உறுதிப்படுத்துகிறார்.
கடவுள் எங்கே இருக்கிறார்...? என கேட்டால் பலர் கூப்பிடும் தூரத்தில் என்பார்கள். கூப்பிடும் தூரத்தில் இருப்பதனால்தான் பலர் கடவுளை கூப்பிடுவது இல்லை.ஆனால் கடவுள் நம்மை விட்டு வெகுதூரம் இருக்கக்கூடிய கடவுள் அல்ல. மாறாக, நம்மில் ஒருவராக இருந்து செயலாற்றுகிறவர்.
இயேசுவின் பிரசன்னம் இந்த உலகத்தில் அவர் வாழ்ந்ததோடு முடிந்துவிடவில்லை.
அவருடைய பணி உயிர்ப்போடு நிறைவுபெறவில்லை.
அவருடைய கடமை விண்ணேற்றத்தோடு நின்றுவிடவில்லை.
இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது அவர் ஏற்படுத்திய கிருத்துவத்தின் வழியாக ...
அவர் ஒவ்வொரு நாளும் தனது பணியைச்செய்யும் பணியாளர்களை உறுதிப்படுத்துகிறார். துவண்டுபோகிறபோதெல்லாம் அவர்களைத் தாங்கிப்பிடிக்கிறார். தோளோடு தோள் கொடுக்கிறார். இயேசுவின் சீடர்களும் தங்களின் வாழ்க்கையில் இதனை அதிகமாக உணர்ந்தனர். எனவே அந்த இயேசுவுக்காக தங்களது என் உயிரையும் தியாகம் செய்யத் துணிந்தனர்.
இன்றைய இறைவார்த்தை பகுதி நமக்கு உணர்த்தும் வாழ்வுக்கான பாடம். இயேசுவின் பணியை நாம் அனைவருமே முன்னெடுத்துச்செல்ல வேண்டும். குருக்கள் மட்டுமல்ல, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அறிக்கையிடுகிற அனைவருமே நற்செய்தியின் பணியாளர்கள்தான். இயேசு நம்மிலே தொடர்ந்து செயலாற்ற, நம்மையே முழுவதுமாக இயேசுவிடம் ஒப்படைக்க இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக ஜெபிப்போம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக