ஆண்டவரின் வழிகள் செம்மையானவை
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
முகத்தில் இரண்டு கண்கள் இருந்தாலும் அவை பார்க்கும் பார்வை ஒன்று தான். இரண்டு காதுகள் இருந்தாலும் அவை கேட்கும் செய்தி ஒன்று தான். இறைவனும் மனிதனும் இருந்தாலும் ஆன்மாவை ஆட்சி செய்பவர் இறைவன் மட்டும் தான்.
ஆம் அன்புக்குரியவர்களே!
நான் போன பின் என்னை தேடுவீர்கள். நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் இயேசு கூறுகிறார். ஆண்டவர் இருக்கும் இடத்தில் ஆனந்தம் இருக்கும். ஆண்டவர் இருக்குமிடத்தில் அமைதி இருக்கும். ஆண்டவர் இருக்குமிடத்தில் அன்பு நிலைத்திருக்கும். ஆண்டவர் குடிகொள்ளும் ஆன்மாவை கொண்ட மனிதன் அவரைப் போலவே மேன்மையான வழிகளை நாடக் கூடியவனாக இருப்பான். ஆண்டவராம் இறைவன் நமது பெயர் ஒவ்வொன்றையும் தனது உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளார். நமது வாழ்வுக்கான நல்வாழ்வின் திட்டங்களை வகுத்தவராக இருக்கின்றார். அந்த நல்வாழ்வின் பாதையில் நம்மை நாளும் கரம் பற்றி வழி நடத்துகின்றார்.
நமது பாதையில் கற்களும் முட்களும் குறுக்கிட்டாலும் நம்மைத் தமது கரங்களில் ஏந்தக் கூடியவராக இருக்கிறார். இதை உணரும் உள்ளம் சோர்ந்து போவதில்லை, மனமுடைந்து போவதில்லை.
எனவே ஒரே பார்வையை காணும் நமது இரண்டு கண்களைப் போல நாமும் ஆண்டவரோடு இணைந்து அவர் நமக்கென்று வகுத்திருக்கின்ற நல்வாழ்வினை கண்டு கொள்வோம். நம்மை பலமிழக்கச் செய்யும் தேவையற்ற பழக்கங்களில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்வோம். செம்மையான பாதையினைக் கண்டுகொண்டு அப்பாதையில் புது வாழ்வின் பயணத்தை தொடர்ந்திட இன்றைய திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக