நேசிப்பது நாமாக இருக்க...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவைப் பிடித்து வரச் சென்றவர்கள் இயேசுவை பிடிக்காமல் விட்டு விட்டு வருகிறார்கள். ஏன் இயேசுவை நீங்கள் பிடித்து வரவில்லை? என்ற கேள்வியை எழுப்புகிற போது அவரைப் போன்ற ஒருவரை நாங்கள் இதுவரை கண்டதில்லை என்று பதில் கூறக் கூடியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இன்றைய இறை வார்த்தையானது இன்று நமக்கு உணர்த்துகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன? என ஆராயும் போது இயேசு இந்த மண்ணில் மனிதனாக வாழ்ந்த போது அவர் அனைவருக்குமான ஒரு மனிதராக இருந்தார். அவரின் பார்வையில் பாரபட்சம் என்பதில்லை. மனிதர்களை மனிதர்களாக நோக்கினார். பணத்தின் அடிப்படையிலோ, ஓர் இனத்தின் அடிப்படையிலோ, மொழியின் அடிப்படையிலோ, மனிதர்களை பிரித்துப்பார்க்க கூடியவராக இயேசு இருக்கவில்லை. அவர் அனைவரையும் சமம் எனக் கருதினார்.
எப்படி உதிக்கின்ற சூரியன் நல்லோர் தீயோர் என வேறுபாடு பாராமல் அனைவரின் மீதும் தனது ஒளிக் கீற்றினை வீசுகிறதோ, அது போல கடவுளும் அனைவரையும் தம் பிள்ளைகள் எனக் கருதி நாம் எந்நிலையில் இருந்தாலும் அனைவரும் மீட்பு பெறுமாறு தனது வாழ்வை அர்ப்பணித்தார்.
எனவே தான் பல நேரங்களில் பரிசேயர்களின் செயல்களை அவர் குற்றம்சாட்டிய போதும் கூட அவர்களும் தங்கள் செயல்கள் தவறு என உணர்ந்து கொண்டு நல்லதொரு மன மாற்றத்தை அடைந்து கடவுள் விரும்பும் மக்களாக வாழ வேண்டும் என்பதன் அடிப்படையில் தான் அவர்கள் செய்கிற தவறை தவறு எனச் சுட்டிக் காண்பித்தார். அதனால் தவறு என சுட்டிக் காண்பிக்கக்கூடிய ஒரு மனிதனாக இயேசு செயல்பட்டார். நாமும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை போலவே இந்த சமூகத்தில் வாழ அழைக்கப்படுகிறோம்.
இந்த இறைவார்த்தைப் பகுதியானது நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன? என சிந்திக்கின்ற போது அன்னை தெரசாவின் வாழ்வே நம் கண்முன் வந்து செல்வதாக உணர்ந்து கொள்ள முடிகிறது. அன்னை தெரசா அவர்கள் கூறுவார்கள், "வெறுப்பது யாராயினும் நேசிப்பது நீங்களாக இருங்கள்" என்று.
நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் பல நேரங்களில் அநீதிகளை கண்டு அது அநீதி எனச் சுட்டிக் காட்டுகின்ற போதும், பல நேரங்களில் நல்ல செயல்களை மட்டுமே முன்னெடுப்பதால் பலருடைய கேலிக்கூத்துக்கும் எள்ளி நகையாடக் கூடிய செயல்பாடுகளுக்கும் நாம் உள்ளாகின்ற போதும் நம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய ஒரு வாக்கியம், வெறுப்பது யாராக இருப்பினும் நேசிப்பது நாமாக இருக்க வேண்டும் என்பது தான்.
இயேசுவை பல நேரங்களில் யூதர்கள் வெறுக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர் மீது குற்றம் கண்டுபிடித்து அவரை தண்டித்து கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு அவரைப் பின்தொடர்ந்தார்கள். ஆனால் இயேசு அவர்களை நேசிக்கக் கூடியவராக இருந்தார்.
எனவேதான் அவர்கள் செய்கிற தவறுகளை சுட்டிக் காண்பித்து, அவர்கள் அதனை சரிசெய்து கொண்டு ஆண்டவரின் மக்களாக இருப்பதற்கு வழி காண்பித்தார். இந்த இயேசுவைப் போலவே நாமும் இந்த சமூகத்தில் வாழ இந்நாளில் அழைக்கப்படுகிறோம். எனவே அன்புக்குரியவர்களே!
வெறுப்பது யாராயினும் நேசிப்பது நாமாக இருப்பதற்கான அருளை வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து தொடர்ந்து செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக