சனி, 17 ஜூன், 2023

நன்மை செய்வோம்! நல்லவராய் வாழ்வோம்! (18-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

            நல்லது செய்த ஆண்டவரைப் பின்பற்றுகின்ற நாம் ஒவ்வொருவருமே,  நம்மோடு இருப்பவர்களுக்கு நன்மை செய்பவர்களாக இருக்க இன்றைய இறை வார்த்தை நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுள் தொடக்கத்திலிருந்தே மனிதன் தவறுகிற போது தவறை சுட்டிக்காட்டி, அதனை நெறிப்படுத்துபவராக இருந்தார். தூய மக்கள் இனமாக மக்கள் இருக்க வேண்டும் என்பதுதான், இறைவன் விரும்பியதாக இருந்தது.  அவ்விருப்பத்தின் அடிப்படையில், தான் மனிதன் தவறிய போதெல்லாம், இறைவாக்கினர்கள், நீதித் தலைவர்கள் எனப் பல்வேறு நபர்கள் வழியாக, நம்மை நெறிப்படுத்துபவராக கடவுள் இருந்தார். இதைத்தான் இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. 

      இன்றைய இரண்டாம் வாசகத்திலும் கூட, தூய்மையற்ற நிலையில் இருந்தாலும் கூட, நமக்காக நல்லவர் ஒருவர் தனது இன்னுயிரை தியாகம் செய்தார் என்று, இயேசுவை சுட்டிக்காட்டி, இந்த இயேசுவைப்போல நீங்களும் நானும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. 

       நற்செய்தி வாசகத்திலும் கூட,  இந்த இயேசுவை ஏற்றுக் கொண்டிருக்க கூடிய ஒவ்வொருவருமே, இந்த இயேசுவை அறிக்கையிடவும், அறிவிக்கவும், இந்த இயேசுவைப் போல காணுகிற மனிதர்களுக்கெல்லாம், நன்மை செய்பவர்களாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை சுட்டிக்காட்டுகிறது. 

       இந்த இறைவார்தையின் அடிப்படையில் நமது வாழ்வை சுய ஆய்வு செய்து பார்த்து, நன்மைத்தனங்களால் நமது வாழ்வை அலங்கரித்துக் கொண்டு, நாளும் இயேசுவின்  பாதையில் பயணிக்க இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

      

அன்னை மரியாவின் மாசற்ற இருதய பெருவிழா! (-17-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாளில் மரியாவின் மாசற்ற இருதயத்தை நினைவு கூர நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம். 

      1913ம் ஆண்டு, ஜூன் மாதம் 13ம் தேதி பாத்திமா நகரில் அன்னை மரியா காட்சி கொடுத்து, மூன்று சிறுவர்களுக்கு இந்த மாசற்ற இருதய பக்தியை பரப்பவும், இந்த இருதய பக்தியில் நிறைந்து இருக்கிறவர்கள், மீட்பை பெறுவார்கள் என்றும் காட்சி கொடுத்ததாக, வரலாறு கூறுகிறது. 

    மரியாவின் தூய்மைமிகு இருதயத்தை குறித்து, மாசற்ற இருதயத்தை குறித்து, இந்த நாளில் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். மரியாவின் இருதயம் இறைவனின் திட்டத்திற்கு தன்னை முழுமையாக கையளிக்க வைத்தது. மரியாவின் இருதயம் தேவையில் இருப்பவரைக் கண்டு ஓடிச்சென்று உதவ வைத்தது. மரியாவின் இதயம் அடுத்தவரின் துன்பத்தில் பங்கெடுக்கவும், கடவுளின் அருளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதிலும், துடிக்க கூடிய ஒரு இதயமாக இருந்தது. 

       மரியாவின் இதயம் தான் பெற்றெடுத்த மகனை இந்த அகிலத்தின் நன்மைக்காக அர்ப்பணிக்க முன் வந்தது. இந்த மரியாவின் இதயம் பல்வேறு வேதனைகளை சுமந்து கொண்டு, கடவுளின் வார்த்தையை இதயத்தில் இருத்தி இருத்தி, சிந்திக்க கூடிய இதயமாக இருந்தது. 

       இத்தகைய இதயம் உங்கள் இதயமாகவும் எனது இதயமாகவும் மாறிட வேண்டும் என்பதுதான் இந்த நாள் நமக்கு தருகின்ற வாழ்வுக்கான சிந்தனையாக இருக்கிறது. கடவுள் படைத்த இந்த உலகத்தில் பலவிதமான பாகுபாடுகளுக்கு மத்தியிலும், வேறுபாடுகளுக்கு மத்தியிலும், நாம் "நம்மை" என்ற எண்ணத்தை புறம் தள்ளிவிட்டு, நம்மோடு இருக்கின்ற அனைவர் மீதான அன்பிலும் அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற பண்பிலும் வளர்வதற்கான ஆற்றலை வேண்டுவோம். 

        மரியாவின் மாசற்ற இருதயம் போல நமது இருதயமும் மாசற்ற இருதயமாக மாறிட இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

இயேசுவின் திரு இருதய பெருவிழா!(16-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

தாய்த் திரு அவையானது இன்று திரு இருதய ஆண்டவரின் பெருவிழாவினை கொண்டாட அழைப்பு விடுக்கிறது. ஜூன் மாதம் என்றாலே திரு இருதய ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம் என்று சொல்லுவார்கள். இந்த மாதத்தில் பலரும் தங்கள் வீடுகளில் வைத்திருக்கிற திரு இருதய ஆண்டவர் படத்தை புதுப்பிப்பது வழக்கம். 

      இந்த திரு இருதய ஆண்டவர் நம் குடும்பங்களை தமது திரு இருதயத்தில் வைத்து பாதுகாப்பார் என்பது நமது நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் நிமித்தமாக இன்றைய இறை வார்த்தையை உற்று நோக்குகிற போது கடவுள் நம்மீது எந்த அளவிற்கு அன்பு கொண்டார் என்பதை முதல் வாசகம் சுட்டிக்காட்டுகிறது. 

          இரண்டாம் வாசகத்திலும் அந்த அன்பினை நாம் ஒருவர் மற்றவரோடு பகிர வேண்டும் என்பதை இறைவார்த்தை நமக்கு எடுத்துரைக்கிறது. 

    இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நம்மோடு இருப்பவர்கள் ஒவ்வொருவரையும் அன்பு செய்யவும், இரக்கம் காட்டவும், அவர்களுக்கான நல்லதை செய்வதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கவும் இறைவனிடத்தில் ஆற்றல் வேண்டுவோம். 

         இயேசுவின் இருதயத்திலிருந்து பொழியப்படுகின்ற அன்பு நம்மையும் நமது குடும்பத்தையும் பாதுகாப்பது போல நாமும், அன்பால்  இந்த அகிலத்தில் உள்ள ஒவ்வொருவரோடும் இணைந்து இறைவனை புகழ்வதற்கு ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 
      

தம் சகோதர சகோதரிகளிடம் சினம் கொள்கிறவர் தண்டனை தீர்ப்புக்கு ஆளாவார்! (15-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!


          கிறிஸ்தவர்களாகிய நம்முடைய நெறி மிகச்சிறந்த நெறியாக  இருக்க வேண்டும் என்பது இன்றைய இறைவார்த்தை நமக்கு தருகின்ற வாழ்வுக்கான பாடமாக இருக்கிறது.  அது என்ன நமக்கான நெறி? என்று கேள்வியை எழுப்புகிற போது இயேசுவை அறிந்து அவரின் வழித்தடங்களில் பயணிக்க கூடிய நாம் ஒவ்வொருவருமே அவரைப் போல இந்த சமூகத்தில் வாழ வேண்டும். 

       மன்னியுங்கள் என்று சொன்ன இயேசு, மன்னிப்பவராக உயிர் விடுகின்ற நேரத்திலும் தன் வார்த்தைக்கு செயல் வடிவம் கொடுத்தார்.  இந்த இயேசுவை ஏற்றுக் கொண்டு அவர் மீதான நம்பிக்கையில் நாளும் வளர்ந்து கொண்டிருக்க கூடிய நீங்களும் நானும், இந்த இயேசுவின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் இதயத்தில் இருத்தியவர்களாக, அவ்வார்த்தைக்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள இறைவனிடத்தில் ஆற்றல் வேண்டுவோம். தூய ஆவியானவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவதற்கான ஆற்றலைத் தந்து நம்மை வழிநடத்துவார் என்ற ஆழமான நம்பிக்கையோடு இந்த நாளில் இனிதாய் பயணிப்போம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

செவ்வாய், 13 ஜூன், 2023

அழிப்பதற்கு அல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்! (14-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

கடவுளுக்குரிய காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருக்க, கடவுளின் கட்டளைகளை பின்பற்றுவதற்கு  இன்றைய இறை வார்த்தை வழியாக நீங்களும் நானும் அழைக்கப்படுகின்றோம். கட்டளைகளை பின்பற்றுகிற ஒவ்வொரு மனிதனுமே விண்ணகத்தில் பெரிய மனிதராக இருப்போம் என்று இன்றைய இறை வார்த்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

        இந்த இறைவார்த்தையின் அடிப்படையில் இம்மண்ணில் வாழுகிற ஒவ்வொரு நாளும் நாம் அறிந்த  இயேசுவை அறிக்கையிடவும்,    அவரிடத்தில் காணப்பட்ட நற்பண்புகளை நமது நற்பண்புகளாக இம்மண்ணில் செயல்படுத்தவும் ஆற்றல் வேண்டி இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

பதுவை நகர் புனித அந்தோணியார்! (13-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்

தாய் திரு அவையோடு இணைந்து இன்று நாம் புனித பதுவை நகர் அந்தோனியாரை நினைவு கூர அழைக்கப்படுகின்றோம். இன்றைய வாசகங்களில் கூட கடவுள் உண்மையுள்ளவர் என்பது வெளிப்படுத்தப்படுகிறது. இந்த உண்மையான கடவுளை அறிவிப்பது மட்டுமே தன் வாழ்வின் இலக்கு என கருதிய ஒரு மனிதனாக , இயேசுவைப் பற்றிய நற்செய்தியை உலகெங்கும் சென்று அறிவிக்க கூடியவராக, அறிவித்து, அப்படி அறிவித்ததன் பயனாக அழியா நாக்கோடு இன்றும் நம் மத்தியில் நினைவு கூரப்படுகின்ற பதுவை நகர் புனித அந்தோணியாரின் திருவிழா வாழ்த்துகளை உங்களுக்கு  உரித்தாக்குகிறேன். நாம் அறிந்த நிலையில் புனித அந்தோனியாரின் நாமத்தை தாங்கியவர்களுக்கு இன்றைய நாளில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோம். 

                இந்த அந்தோணியார் இந்த மண்ணில் வாழ்ந்த போது, இன்றைய நற்செய்தி வாசகத்திற்கு ஏற்ப உப்பாகவும் ஒளியாகவும் விளங்கினார். 


      உப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று உணவில். ஆனால் அது இருப்பது பெரிய அளவிற்கு வெளியில் தெரியாது. ஆனாலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அதுபோலவே அந்தோணியார் என்பவர் ஒரு சிறிய மனிதராக இருந்தாலும் கூட , நம்பிக்கை நிறைந்த மனிதர்களுக்கு இவர் பல நன்மைகளை செய்தார் என்றும், கடவுள் மீது கொண்டிருந்த நம்பிக்கையினால் பலவிதமான அரும் செயல்களை செய்தார் என்றும் இவரைக் குறித்து இவரது வரலாற்றை நாம் அறிந்து கொள்ள முடியும். 


  இந்த அந்தோனியாரை நினைவு கூருகின்ற இன்றைய நன்னாளில், நாமும் அந்தோணியாரைப் போல ஆண்டவர் இயேசுவை அறிக்கையிட்டு மற்றவர்களும் நம்மிடமிருந்து ஆண்டவர் இயேசுவை அறிந்து கொள்ள இந்த உலகில் நல்லதொரு ஒளியாக செயல்படுவதற்கான ஆற்றல் வேண்டுவோம். அந்தோணியாரின் வழியாக நம்பிக்கையில் இன்னும் ஆழப்படவும், உப்பாகவும் ஒளியாகவும் இயேசுவை அறிவிப்பதில் விளங்கவும் ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.


      

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்! (12-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

       ஆண்டவர் இயேசு கிறிஸ்து கற்பித்த மலைப் பொழிவை குறித்தே இன்று நாம் வாசிக்க கேட்டோம். மண்ணில் வாழுகிற ஒவ்வொரு மனிதனும் எப்படி வாழ வேண்டும் என்பதைத்தான் இந்த மலைப்பொழிவானது நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

     ஏழைகளின் மீது அக்கறை கொண்டவர்களாகவும் துயரத்தில் இருப்பவர்களுக்கு துணை நிற்பவர்களாகவும் நீதியை நாடி தேடக்கூடியவர்களுமாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.

      மலைப்பொழிவில் சொல்லப்பட்ட வார்த்தைகளை எல்லாம் வெறும் வார்த்தையாக இயேசு சொல்லவில்லை. சொன்னபடி தம் வாழ்வை அமைத்துக் கொண்டவர் இந்த இயேசு.  நமக்காக பாடுகள் பட்டு, ரத்தம் சிந்தி, சிலுவையில் தன் இன்னுயிரை தியாகம் செய்தவர்.  இந்த இயேசுவை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு நாம் பயணிக்கின்ற இச்சமுகத்தில் ஒருவர் மற்றவருக்கு நம்மால் முடிந்த நன்மைகளை செய்து, வாசிக்கப்பட்ட மலைப்பொழிவு வசனங்களை நம் வாழ்வில் செயலாக்கபடுத்துவதற்கான ஆற்றல் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

இயேசுவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா! (11-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

        தாய்த்திரு அவையோடு இணைந்து இன்று நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவினை கொண்டாட நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம். நமக்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்து தனது உடலையும் இரத்தத்தையும் சிலுவையில் தியாகமாக தந்தார். அவரின் தியாகத்தையும் அவர் நம் மீது கொண்டிருந்த அன்பையும் ஒவ்வொரு நாளும் நினைவு கூரும் வண்ணமாகத் தான் ஒவ்வொரு நாளும்  கல்வாரிப்பாடுகளை நாம் திருப்பலியில் நினைவு கூருகிறோம். 

             ஏதோ வாடிக்கை கிறிஸ்தவர்களாக, திருப்பலிக்கு வந்து செல்லுகிறவர்களாக நாம் இருந்து விடாமல் உண்மையிலுமே திருப்பலியில் பங்கெடுக்கிற போது இந்த இயேசு நமக்கு முன்மாதிரியாக கற்றுக் கொடுத்த வாழ்க்கைக்கான பாடங்களை இதயத்தில் இருத்திக் கொள்ளவும், நமக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்ற இந்த இயேசுவைப் போல, அடுத்தவருக்காக நம்மையும் இழக்கத் துணிந்தவர்களாக இருக்கவும், நற்கருணை மீதான நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் வேரூன்றவும் இறைவனிடத்தில் ஆற்றல் வேண்டிட இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.

      நற்கருணை மீதான அதீத நம்பிக்கை கொள்வோம். நமக்காக காத்திருக்கின்ற இறைவனிடத்தில் சில மணித்துளிகள் ஒதுக்கி உரையாடுவோம். எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் என்று சொல்லி, அப்ப வடிவில் நம் மத்தியில் வீற்றிருக்கின்ற இறைவனை அனுதினமும் சந்தித்து அவரோடு உரையாடி, நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளிலிருந்து உள்ளத்தில் உறுதி ஏற்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

இவர் உண்மையாகவே அதிகம் கொடுத்தார்! (10-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

      கடவுள் நாம் துன்பத்தில் வாடுகிற போது நமக்கு துணை நிற்பதற்காக பல்வேறு வான தூதர்களை அனுப்புகின்றார்.  எப்போதும் நமக்கு காவலாக ஒரு வான தூதர் நம்மை சுற்றி சுற்றி வருவதாக சிறு வயதில் மறைக்கல்வி ஆசிரியர்கள் சொல்லக் கேட்டிருப்போம். மண்ணில் வாழுகிற ஒவ்வொரு மனிதருக்கும் அருகாமையில் கண்ணுக்கு புலப்படாத வகையில் ஒரு காவல் தூதர் அவரைப் பாதுகாத்துக் கொண்டு இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள இன்றைய இறைவார்த்தை நமக்கு அழைப்பு விடுக்கிறது.

     இரபேல் என்ற வான தூதர் தோபித்தின் மன்றாட்டை கடவுளிடத்தில் எடுத்துச் சென்றதாகவும், அவரது மன்றாட்டுக்களுக்கு கடவுள் செவி கொடுத்து அவரது வாழ்வில் இருக்கின்ற துயரத்தை மாற்றுவதற்காக கடவுள் தன்னை அனுப்பியதாகவும்  எடுத்துக் கூறுகிறார். 

             தோபியாவுடன் உடன் நடந்தவர் இரபேல் வான தூதர் என்பதை அறியாத நிலையில், அவருக்கு சம்பளம் கொடுத்து அவரை அனுப்பி விடும் என்று சொல்லிய போது, இரபேல் வான தூதர், கடவுளைப் போற்றி புகழுங்கள்; நன்மை செய்யுங்கள்; நீதியை நிலை நாட்டுங்கள்; அரசருக்கு அஞ்சுவதை விட ஆண்டவருக்கு அஞ்சுவது தலைசிறந்தது என்று சொல்லக் கூடியவராக, மண்ணில் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை தோபித்துக்கும் தோபியாவுக்குமாக சொல்லிச் செல்லுகின்றார்.

      இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்க்கின்ற போது, நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில்  எத்தனை இடர்பாடுகள், இன்னல்கள், எது வந்தாலும் கடவுள் மீதான நம்பிக்கையில் வேரூன்றியவர்களாக,  நம்மால் இயன்ற நன்மைகளை ஒவ்வொரு நாளும் செய்து கொண்டே செல்லவும், பல்வேறு நன்மைகளை நமக்கு செய்யக்கூடிய கடவுளை ஒவ்வொரு நாளும் போற்றிப் புகழுகின்ற மனிதர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான அழைப்பு இன்றைய இறை வார்த்தை வழியாக நமக்கு தரப்படுகிறது.  இந்த இறை வார்த்தை தருகின்ற அழைப்பை இதயத்தில் இருத்திக்கொண்டு கடவுள் இது நாள் வரை நமக்குச் செய்த செயல்களுக்காக அவரைப் போற்றிப் புகழ்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

மெசியா கடவுளின் மகன்! (9-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

 நம்பிக்கையோடு காத்திருப்பவர்கள் எல்லாம் கடவுளிடமிருந்து, உரிய நேரத்தில் நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்ற வாக்கிற்கு ஏற்ப, நம்பிக்கையோடு தோபியாவுக்காக காத்திருந்த தோபித்து, பார்வையற்ற நிலையில் இருந்த அவர், கடவுளை நோக்கி கண்ணீரோடு தன் மன்றாட்டை எழுப்பியவர். ஏன் மற்றவரின் இழிச் சொல்லுக்கு ஆளாகி மற்றவர்கள் தன்னை ஏச்சு பேசுகிற போது, நான்  இவர்களுக்கு மத்தியில் ஏன் வாழ வேண்டும் என்று எண்ணி,  தன் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என கடவுளிடத்தில் மன்றாடிய ஒரு நபர். ஆனால் கடவுள் உரிய நேரத்தில் தன் வாழ்வில் இருக்கின்ற துன்பத்தை மாற்ற வல்லவர் என்ற ஆழமான நம்பிக்கை அவரிடத்தில் இருந்தது. அந்த நம்பிக்கையின் நிமித்தமாக கடவுளின் அழைப்பிற்கும் கடவுளின் திட்டத்திற்கும் தன்னை முழுவதுமாக ஒப்படைத்தார். 

       தோபியா திருமணம் முடித்து வந்த பிறகாக, இரபேல் வான தூதரின் வார்த்தைகளின் அடிப்படையில், தன் தந்தையை பார்வை பெறுவதற்கு உதவுகின்றார்.  பார்வை இழந்த நிலையில் இருந்த தோபித்து பார்வை பெற்றவராக,  கடவுளை போற்றி புகழுகின்றார்.

     இந்த தோபித்திடம் இருந்து நாம் நமது வாழ்விற்கு உள்வாங்கிக் கொள்ள வேண்டிய பாடம்,  நம் வாழ்வில் துன்பம் நிலைத்திருக்கிறது என்றால், கண்டிப்பாக ஒரு நாள் அத்துன்பம் நம்மை  விட்டு மறைந்து போகும் என்பதை மனதில் இருத்தியவர்களாக, நம்பிக்கையோடு, துன்பத்தை துணிவோடு எதிர்கொள்ளவும், கடவுள் மீதான நம்பிக்கையில் நிலைத்திருக்கவும் இன்றைய நாளில் இறைவனிடத்தில் ஆற்றல் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.


புதன், 7 ஜூன், 2023

நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்! (8-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!


             ஒருவர் மற்றவர் மீது அன்பு செலுத்தி வாழ வேண்டும் என்பது ஆண்டவரின் கட்டளையாக இருந்தாலும், இக்கட்டளைக்கு செயல் வடிவம் தருவது பல குடும்பங்கள். அறியாத ஒரு நபரை மணமுடித்துக் கொண்டு, அவருக்காக வாழ்வையே அர்ப்பணிக்கின்ற ஒரு மகத்துவம் குடும்ப வாழ்வில் நிகழ்கிறது.  அதன் அடிப்படையில் எல்லாவிதமான இன்ப துன்பங்களிலும், ஒருவருக்கு துணையாக மற்றவர் இருக்கின்ற ஒரு நிகழ்வானது இவ்வுலகத்தில் அரங்கேறுகின்ற இடம் குடும்பம் எனலாம்.  தோபியாவும் சாராவும் தங்கள் திருமண வாழ்வை துவங்குவதற்கு முன்பாக இறைவனின் முன்னிலையில் முழந்தாள் படியிட்டு, இன்று முதல் நாங்கள் விரும்புகிற முதுமை எட்டும் வரை இணைந்திருப்பதற்கான ஆற்றலைத் தாரும் என்று வேண்டி இல்லற வாழ்வை துவங்கினார்கள். 

      இவர்களைப் போலவே இல்லறத்தில் இணைந்திருக்கிற அத்துணை உறவுகளும், அன்போடும் அறத்தோடும் ஒருவர் மற்றவரோடு இணைந்து வாழவும் இறைவனிடத்தில் அருள வேண்டிட இன்றைய நாள் இறைவார்த்தையின் வாயிலாக நாம் அழைக்கப்படுகிறோம்.   கடவுளின் முன்னிலையில் கொடுத்த வாக்குறுதிகளை வாழ்வாக்குகின்ற தம்பதியினராக இவ்வகிலத்தில் வாழ்ந்து காண்பிக்க இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

செவ்வாய், 6 ஜூன், 2023

அவர் வாழ்வோரின் கடவுள்! (7-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

                 வாழ்வில் வருகின்ற எல்லா இடர்பாடுகளிலும் கடவுளை நாடித் தேடுகின்ற மனிதர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதை இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற தோபித்தும் சாராவும் வாழ்வுக்கான பாடமாக நமக்கு கொடுக்கின்றார்கள்.  இந்த தோபித்தையும் சாராவையும் இதயத்தில் இருத்திக்  கொண்டு கடவுளால் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே இந்த மண்ணில் நம்மால் இயன்ற நன்மைகளை மற்றவருக்கு செய்வோம். ஒருவேளை நன்மை செய்தும் துன்பமே நமக்கு பரிசாக கிடைத்தாலும் துணிவோடு கடவுளின் துணையை நாடுவோம்.

        நம்மைக் காக்க நம்மோடு இருக்க, அவர் அனுப்பிய காவல் தூதர்கள் நம்மை பாதுகாப்பார்கள்; வழி நடத்துவார்கள். அவர்களின் பாதுகாப்பிலும் வழி நடத்தலின் அடிப்படையிலும் துன்பங்களுக்கு மத்தியிலும் கடவுளின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தி, அவரின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

துன்பங்களுக்கு மத்தியிலும் இறை வார்த்தை நம்மை வழிநடத்தட்டும்! (6-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

         
           இறைவன் படைத்த இந்த இனிய உலகத்தில் மகிழ்வோடு ஆண்டவருக்கு உகந்தவற்றை செய்கின்ற நபர்களாக நாம் வாழ இன்றைய இறை வார்த்தை  நமக்கு அழைப்பு தருகிறது.

       துன்பங்களுக்கு மத்தியிலும் துணிவோடு கடவுளை நாடித் தேடிய தோபித்து சாராவைப் போல, நீங்களும் நானும் கடவுளை நாடித் தேட வேண்டும் என இன்றைய நாளில் இறை வார்த்தையின் வழியாக அழைக்கப்படுகின்றோம்.

              ஆண்டவர் மீது அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவருமே வாழ்வில் வருகின்ற இடர்பாடுகளின் போது கடவுளை நாடித் தேடவும், அவரின் உடன் இருப்பை உணரவும்,  நம்மை காக்க அவர் நம்மோடு இருக்க அனுப்பிய காவல் தூதர்கள் நம்மை வழி நடத்துவார்கள் என்ற ஆழமான நம்பிக்கையில், ஒவ்வொரு நாளும் துன்பத்திற்கு மத்தியிலும் ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வாக்க இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறை அருள் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

ஞாயிறு, 4 ஜூன், 2023

இறைவன் என்னை எதற்காக படைத்தார்? (5-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

      கடவுள் நம்மை இம்மண்ணில் படைத்திருக்கிறார் என்றால், நமக்கான நோக்கத்தையும் நம் படைப்புக்கான காரணத்தையும் நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். கடவுள் நம்மை படைத்ததன் நோக்கமே இந்த சமூகத்தில் அனைவரோடும் இணைந்து இன்புற்று வாழ வேண்டும் என்பதற்காகவே. ஆனால் பல நேரங்களில் மற்றவரை துயரப்படுத்தி அதில் வருவது தான் இன்பம் என்று எண்ணுகின்ற மனிதர்களாக நாம் இருக்கின்றோம். ஆனால் மற்றவர் துயருறும் போது அவரின் துயரத்தில் துணை நிற்பதும், அவரது வாழ்வை இன்பமயமான வாழ்வாக மாற்ற துணை நிற்பதும் தான் கடவுள் நம்மை படைத்ததன் நோக்கம் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம்.

      திராட்சை தோட்டத்தை சிலரிடத்தில் குத்தகைக்கு கொடுக்கின்ற போது, இவர்கள் இங்கு உழைத்து, இதிலிருந்து வருகின்ற பயனில் நமக்குரியதை தருவார்கள் என்ற நம்பிக்கையோடு தான் திராட்சைத் தோட்ட உரிமையாளர் திராட்சை தோட்டத்தை குத்தகைக்கு விட்டார். ஆனால் குத்தகைக்குச் சென்ற மனிதர்கள் எல்லாம் அத்தோட்டத்தை உரிமையாக்கிக் கொள்ள எண்ணம் கொண்டு, இந்த நிலத்துக்கு உரியவர்கள் வருகிற போது அவர்களை எள்ளி நகையாடுகிறவர்களாகவும் கொன்றொளிக்கின்ற நபர்களாகவும் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள்.  இத்தகைய ஒரு வாழ்வாக நமது வாழ்வு இருக்கிறது என்றால், அது கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வு அல்ல. கடவுள் இந்தக் காரியத்திற்காக நம்மை மண்ணில் படைக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டு, நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் கடவுள் நம்மை எதற்கு படைத்தார் என்பதை ஆழமாக உணர்ந்தவர்களாக, நம்மிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சரிவர செய்து இறைவனோடு எப்போதும் இணைந்து வாழக்கூடியவர்களாக இம்மண்ணில் ஒவ்வொருவரோடும் இணைந்து மனம் வீசுகின்ற மலர்களாக நாம் இருக்க ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

சனி, 3 ஜூன், 2023

மூவொரு இறைவன் பெருவிழா! (4-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

 
         இன்று தாய்த் திரு அவையானது, மூவொரு இறைவனின் புகழை நினைவு கூர நமக்கு அழைப்பு விடுக்கிறது.  தந்தை மகன் தூய ஆவி என்ற மூன்று நபர்களாக செயல்பட்டாலும், ஒரே ஞானத்தோடு, ஒரே சித்தத்தோடு, ஒரே வல்லமையோடு அவர்கள் இருந்ததை நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். 

     நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் மனிதர்களாக இருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் எண்ணத்தாலும், செயலாலும், வேறுபட்டு இருந்தாலும், கடவுளுக்கு உகந்தவற்றை எப்போதும் நாடித் தேடுகின்ற மனிதர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதற்கான மிகச் சிறந்த முன்னுதாரணமாக இந்த மூவொரு இறைவனை நாம் எடுத்துக்கொள்கிறோம். ஆள் நபரில் அவர்கள் வேறுபட்டாலும், இறை ஞானத்தோடு ஒவ்வொரு நாளும், ஒரே சிந்தனையோடும் ஒரே சித்தத்தோடும் இருந்தார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம். கடவுளின் எண்ணத்திற்கு செயல் வடிவம் தருகின்ற நபராக இயேசுவும், இயேசுவை வழிநடத்துகின்ற நபராக தூய ஆவியாருமாக இருந்து, நமக்கொரு முன் உதாரணமாக இவர்கள் விளங்குகிறார்கள். இவர்களை இதயத்தில் இருத்திக் கொண்டு நமது வாழ்வை நாம் சீர்தூக்கிப் பார்ப்போம். 
    ஒவ்வொரு நாளும் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் கடவுளின் எண்ணத்திற்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக நாம் இருக்கிறோமா?  செயல் வடிவம் தரவேண்டும் என்ற எண்ணத்தோடு நம்மை உள்ளிருந்து தூண்டுகின்ற தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுக்கின்ற மனிதர்களாக இருக்கின்றோமா? என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிப் பார்த்து, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, மூவொரு இறைவனைப் போல நாம் வாழுகின்ற இச்சமூகத்தில் இணைந்து, இறைவனுடைய எண்ணத்திற்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

எந்த அதிகாரத்தால் இவற்றை செய்கின்றீர்? (3-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

          இன்றைய இறைவார்த்தையின் வாயிலாக நாம் இயேசுவின் வாழ்வில் இயேசு சந்தித்த சவால்களை உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். இயேசு தான் வாழ்ந்தபோது, இந்த சமூகத்தில் எது நல்லதோ அதை கற்பிக்கின்ற நபராக இருந்தார். ஆனால் இயேசுவை ஏற்றுக்கொள்ள இயலாதவர்கள் அவர் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் குற்றம் காணுகின்ற மனநிலை கொண்டவர்களாக, அவரைப் பின்தொடர்ந்தார்கள். எதை கொண்டு நீர் இதை செய்கிறீர்? யார் உமக்கு அதிகாரம் தந்தது என்ற கேள்விகளை எல்லாம் இயேசுவை நோக்கி எழுப்பிய போது, தந்தைக்கும் தனக்குமான உறவை பற்றி அவர் எடுத்துரைக்கக் கூடியவராக இருந்தார்.

                இன்று நாம் வாழுகின்ற இந்த சமூகத்திலும் நம்மை சுற்றி உள்ள பல மனிதர்கள் நாம் செய்கின்ற நன்மைத்தனங்களை விட, நம்மிடமிருந்து குறைகளை கண்டுபிடிக்கக் கூடியவர்களாகவே, பல நேரங்களில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்கின்றார்கள். இத்தகைய மனிதர்களைப் போல நமது வாழ்வை அமைத்துக் கொள்ளாமல்,  குறைகளைப் புறம் தள்ளி, நிறைகளை காணுகின்ற மனிதர்களாக, நிறைகளை ஊக்கப்படுத்துகின்ற மனிதர்களாக நம் வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

என் இல்லம் இறைவேண்டலின் வீடு! ( 2-6-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

         கடவுளின் இல்லத்திற்கு உரிய மதிப்பையும் மரியாதையும் கொடுக்கத் தவறிய பரிசேய சதுசேய மறை நூல் அறிஞர்களின் செயல்பாடுகளை ஆண்டவர் இயேசு கிறிஸ்து சாட்டை எடுத்து கண்டிப்பதை தான் இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம்.

    இறைவனின் இல்லம் என்பது இறை வேண்டலின் வீடு.  இந்த இறை வேண்டலின் வீட்டில் நாம் இறைவனோடு உரையாட அழைக்கப்படுகின்றோம். இந்த உரையாடலை நிகழ்த்துவதற்கு பதிலாக நாம் இந்த இறைவனுடைய இல்லத்தை வியாபாரக்கூடமாக மாற்றுகிற போது, கடவுள் அதனை எதிர்க்கும் மனநிலை கொண்டவர் என்பதை உணர்ந்தவர்களாக இறைவனின் இல்லத்தை ஒவ்வொரு நாளும் அதற்குரிய மரியாதையோடு பயன்படுத்துவதற்கான ஆற்றலை பெற்றுக் கொள்ளவும், கடவுள் நமக்கு கொடுத்திருக்கின்ற அழைப்பை இதயத்தில் உணர்ந்து கொண்டு, நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, நமக்காக உறைந்திருக்கின்ற இறைவனை அவரின் இல்லத்தில் சந்தித்து அவரோடு உரையாடுவதற்கான ஆற்றலை இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

ரபி நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்! (1-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

        இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்ட மனிதனாக பார்வையற்ற பர்த்தலோமேயு என்ற மனிதன் நம்பிக்கையோடு கடவுளை கூவி அழைத்து, அவரிடம் இருந்து நலன்களை பெற்றுக் கொள்வதை நாம் நற்செய்தி வாசகமாக வாசிக்கக் கேட்டோம். 

        இந்த இறை வார்த்தை பகுதியில் நமது வாழ்வை சீர்தூக்கி பார்க்கின்றபோது, நம்பிக்கை நிறைந்த மனிதர்களாக கடவுளை நோக்கி அழைக்கின்ற போது கடவுள் நமது மன்றாட்டுக்களுக்கு நின்று பதில் தருவார் என்பதை உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். பர்த்தலோமேயுவிடம் காணப்பட்ட அதே நம்பிக்கையை நமது நம்பிக்கையாக மாற்றிக்கொண்டு நாளும் இயேசுவின் பாதையில் பயணம் செய்ய ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

தூய கன்னி மரியா எலிசபெத்தை சந்தித்தல்! (31-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

          அன்னை மரியா எலிசபெத்தை சந்தித்த தினத்தை நினைவு கூர திரு அவை இன்று  நமக்கு அழைப்பு விடுக்கிறது. கபிரியேல் தூதரின் வார்த்தைகளை கேட்டு வயிற்றில் 
 இயேசுவை சுமந்து கொண்டிருந்த நிலையில், தன்னைவிட மூத்தவரான எழுசபெத்து கருவுற்று இருக்கிறார்; அதிலும் ஆறு மாதங்கள் ஆகிவிட்டது என்பதை உணர்ந்தவராக, தன்னுடைய சேவை அவர்களுக்கு தேவை என்று சொல்லி, அவர்களை தேடிச் சென்று பணி செய்கின்ற ஒரு பெண்ணாக மரியாள் இருப்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். மரியாவின் வாழ்த்தொலியை கேட்டவுடனே, எலிசபெத்தின் வயிற்றில் இருந்த குழந்தை பேருவகையால் துள்ளியது.

       மரியாவை எலிசபத்து வாழ்த்த, மரியாவும் கடவுளைப் புகழ்ந்தார். மரியாவிடம் காணப்பட்ட இந்த தாழ்ச்சியும், கடவுளைப் போற்றுகின்ற பண்பும், நமது பண்புகளாக மாறிடவும், நாமும் மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற நபர்களாகவும் தாழ்ச்சியோடு, கடவுளின் முன்னிலையில் நம்மை தாழ்த்திக் கொண்டு, கடவுளை முன்னிறுத்துகின்ற, முதன்மைப்படுத்துகின்ற மனிதர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

இம்மையில் சொத்தை நூறு மடங்கும் மறுமையில் நிலை வாழ்வையும் பெறாமல் போகார்! (30-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

       கைமாறு கருதாமல் கடவுளுக்கு உரியவற்றை செய்கின்ற நபர்களாக நாம் இருப்பதற்கான அழைப்பை இன்றைய இறைவார்த்தை வழியாக பெற்றுக் கொள்ள அழைக்கப்படுகிறோம்.  ஆண்டவருக்கு என தம் வாழ்வை அர்ப்பணிக்கின்ற ஒவ்வொருவரும் கைமாறு எதிர்பார்க்காமல் கடவுளுக்கான காரியங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதை இறை வார்த்தைகள் வலியுறுத்துகின்றன.

       இந்த வார்த்தைகளை நம் வாழ்வாக மாற்றிக் கொண்டு கடவுளுக்கு உரியவற்றை எப்போதும் தேடக் கூடியவர்களாகவும், அதை செய்வதில் கருத்தூன்றியவர்களாக இருப்பதற்குமான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

அன்னை மரியா- திரு அவையின் தாய்! (29-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

      திரு அவையின் தாய் அன்னை மரியா என்பதை நினைவு கூர்ந்து கொண்டாடி மகிழ திரு அவை இன்று நமக்கு அழைப்பு விடுகிறது. நம்பிக்கை இழந்த நிலையில் ஐய உணர்வோடு இருந்தவர்களை ஒன்றிணைத்து, மாடியறையில் ஜெபித்துக் கொண்டிருந்த அன்னை மரியா, தொடக்க காலத் திரு அவையில் சீடர்களுக்கு வழிகாட்டக் கூடியவராக இருந்தார்.  அன்னை மரியாவின் உடன் இருப்பு ஒவ்வொரு நாளும் சீடர்களை ஊக்கப்படுத்தியது.  இயேசுவின் மீதான நம்பிக்கையில் அவர்களை நிலைத்திருக்கச் செய்தது.

         அந்த அன்னை மரியாவைத் தான்,  தாய்த்திரு அவையினுடைய தாயாக நினைவு கூருகின்ற இந்நன்னாளில் நாமும் இந்த அன்னை மரியா வழியாக பெற்றுக் கொண்ட நன்மைகளுக்கு நன்றி சொல்லுவோம்.  இந்த அன்னை மரியா வழியாக நாம் நம்பிக்கையில் வேரூன்றிய தருணங்களை நினைவு கூர்ந்து, கடவுளுக்கு நன்றி சொல்லுகின்ற மனிதர்களாக, அன்னை மரியாவை போல் நமது வாழ்வை ஆண்டவருக்கு அர்ப்பணித்தது போல, நாமும் அர்ப்பணித்து வாழ ஆண்டவரிடத்தில் அருள் வேண்டி இன்றைய நாளில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்! (28-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

            இன்று தாய்த் திரு அவையாக இணைந்து நாம் பெந்தகோஸ்து திருவிழாவை கொண்டாடி கொண்டிருக்கிறோம். ஆண்டவர் இயேசுவின் இறப்புக்கு பிறகாக அஞ்சி நடுங்கி, பயத்தோடும் கலக்கத்தோடும் ஒரு மாடியறைக்குள் தங்களை அடைத்துக் கொண்ட இயேசுவின் சீடர்களுக்கும் மரியாவுக்குமாக கடவுளின் ஆவியார் அவர்கள் மீது இறங்கினார்.  நெருப்பு போன்ற ஒரு நாவடிவில் அவர்கள் மீது இந்த தூய ஆவியானவர் இறங்க, துணிவு பெற்றவர்களாக, எந்த இயேசுவை பற்றி அறிவிப்பதற்கு அஞ்சி நடுங்கி நான்கு சுவற்றிற்குள் தங்களை அடைத்துக் கொண்டார்களோ, அந்த சுவற்றினை கடந்து, எவரெல்லாம் அறிக்கையிடக்கூடாது என்று சொன்னார்களோ, அவர்களுக்கு மத்தியில் எல்லாம் நின்று துணிவோடு இயேசு என்று ஒரு மனிதன் இருந்தார். பல்வேறு நன்மைகளை செய்தார்.  கடவுளின் மகன் அவர்.  அவரை நீங்கள் கொன்றீர்கள். குற்றம் எதுவும் செய்யாத அவரை நீங்கள் கொலை செய்தீர்கள் என்று சொல்லி, துணைவோடு இயேசுவின் இறப்பை அறிக்கையிடுகின்ற மனிதர்களாக இந்த இயேசுவின் சீடர்கள் மாறினார்கள்.  இதற்கு அடிப்படை ஆவியானவரின் தூண்டுதல் என்பதை நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.

   இந்த ஆவியானவர் நமக்குள் இருக்கிறார். நம் வாழ்வில் நாம் தோல்வியை சந்திக்கிற போதும், துவண்டு போகிற போதும், துன்பத்தில் மூழ்கி கிடக்கிற போதும் இந்த ஆவியானவர் நமக்குள் இருந்து துணிவை கொடுத்து எதிர்த்து நிற்பதற்கும் எதையும் சாதிப்பதற்குமான ஆற்றலை நமக்குள் தருகின்றார்.  இந்த ஆவியாரின் குரலுக்கு செவி கொடுக்கின்ற போது நமது வாழ்வு அர்த்தமுள்ள வாழ்வாக மாறுகிறது. நம்பிக்கை இழந்திருந்த சீடர்கள் ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஆற்றலோடு இயேசுவின் பணியை செய்தது போல, நீங்களும் நானும் நமது வாழ்வில் நம்முள் இருக்கின்ற ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து, அர்த்தமுள்ள ஒரு வாழ்வாக நமது வாழ்வை மாற்றிக்கொண்டு துணிவோடு இயேசுவின் இறையாட்சிப் பணியை இம்மண்ணில் செய்வதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

யோவான் இவற்றை எழுதி வைத்தார்! அவரது சான்று உண்மையானது! (27-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!


           இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் அன்பு சீடரை குறித்து நாம் வாசிக்க கேட்கிறோம். இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவராக, எப்போதும் இயேசுவை விட்டு நீங்காமல் அவரை பின்தொடர்கின்ற ஒரு மனிதராக யோவான் இருந்தார். இந்த யோவானின் மீது பலரும் பொறாமை கொள்ளுகின்ற நபர்களாக இருந்தார்கள்.  இயேசுவின் இரண்டாம் வருகை வரை இவர் இறக்க மாட்டார் என்ற எண்ணம் கூட அவர்கள் உள்ளத்தில் மேலோங்கி இருந்தது. அந்த அளவிற்கு இயேசுவின் மீது இந்த யோவான் அதிகமான அன்பு கொண்டிருந்தார்.

      இந்த யோவானை போலத்தான் நீங்களும் நானும் நம் வாழ்வில் இயேசுவின் மீதான அன்பில் நிலைத்திருக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தைகள் வழியாக உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.  நமது சொல்லும் செயலும் இந்த இயேசுவின் மீது நாம் அன்பு கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் ஆற்றல் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

என் ஆட்டுக்குட்டிகளை பேணி வளர்! என் ஆடுகளை மேய்! ( 26-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

       இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பேதுருவினிடத்தில் மூன்று முறை நீ என்னை அன்பு செய்கிறாயா? என்ற கேள்வியை எழுப்பி, பேதுரு கொண்டிருக்கின்ற நம்பிக்கையையும், அவரது புரிதலையும் அனைவரும் அறிந்து கொள்ளுகின்ற வகையில் எடுத்துரைக்கின்றார்.  இரண்டு முறை ஆம் இறைவா, நான் உன்னை அன்பு செய்கிறேன் என்று சொல்லியவராக, மூன்றாம் முறை தன்னை முழுவதுமாக அவரிடம் அர்ப்பணித்து, எல்லாம் உமக்குத் தெரியுமே என்று சொல்லி தன்னை முழுவதுமாக இயேசுவினிடத்தில் அர்ப்பணிக்கின்றார்.தன்னை முழுவதுமாக இயேசுவினிடத்தில் அர்ப்பணித்த பேதுருவை , "என்னை பின் தொடர்ந்து வா!" என்ற வார்த்தைகளை இயேசு கொடுக்கின்றார்.

         இந்த இயேசுவை அன்பு செய்கிறோம் என்று சொல்லக்கூடிய நாம் ஒவ்வொருவருக்கும் இறைவன் தருகின்ற அழைப்பு அவரை பின்தொடர்ந்து வா என்பதுதான்.  பேதுருவுக்கு தரப்பட்ட அந்த அழைப்பு இன்று நமக்கும் தரப்படுகிறது.  இந்த இயேசுவை அன்பு செய்கிறவர்கள் நாம் என்பதை சொல்லிலும் செயலிலும் வெளிகாட்டுகின்ற மனிதர்களாக நாளும் இந்த இயேசுவின் பாதையில் அவரைப் பின்தொடர்ந்து செல்ல இறைவனிடத்தில் ஆற்றல் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

அனைவருக்காகவும் மன்றாடுவோம் ! (25-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

                 ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களுக்கு பலவற்றை கற்பித்திருந்தாலும், மற்றவர்களுக்காக வேண்டவும் அவர் கற்றுக் கொடுத்தார்.  அதன் அடிப்படையில் தான் தன்னுடைய வார்த்தைகளை கேட்டு தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்கிறவர்களுக்காக ஆண்டவர் மன்றாடியதையும் தன்னுடைய வார்த்தைகளை கேட்டு தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள் மற்றவர்களுக்கு இதனை அறிவிக்கின்ற போது, அதை கேட்கிற நபர்களும் தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு , நாளும் இயேசுவின் பாதையில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக இறைவன் இறைவேண்டல் செய்ததை குறித்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம்  வாசிக்க கேட்டோம்.  இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கி பார்க்கிற போது,  நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் எத்தனை பணிகள் இருந்தாலும் அத்தனை பணிகளுக்கு மத்தியிலும் நாம் அடுத்தவருக்காக மன்றாட வேண்டும் என்பதை  இதயத்தில் இருத்திக் கொள்வோம்.  நாம் செய்கின்ற நன்மைத்தனங்களையும், நாம் சொல்லுகின்ற நல்லவற்றையும் கேட்டு ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். எனவே எதை செய்தாலும்  இறைவனை முன்னிறுத்தி, இறைவனின் துணையோடு செய்வதற்கான ஒரு ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! (24-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

      இன்றைய இறைவார்த்தையானது ஆண்டவர் இயேசு கிறிஸ்து தந்தையோடு எந்த அளவிற்கு ஒன்றித்திருந்தார் என்பதை உணர்ந்து கொள்ள நமக்கு அழைப்பு விடுகிறது. கடவுளோடு அவர் கொண்டிருந்த ஆழமான உறவு அந்த ஒன்றிப்பு அவரை எல்லா துன்பங்களுக்கு மத்தியிலும் இந்த மண்ணில் கடவுளின் பணியை செய்வதற்கான ஆற்றலை கொடுத்தது.  நாமும் கடவுளோடு எப்போது இணைந்திருக்கிறோமோ அப்போதெல்லாம் இச்சமூகத்தில் உள்ள அத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் எழுந்து நிற்பதற்காகவும், துணிவோடு செயல்படுவதற்கான ஆற்றலையும் பெற்றுக் கொள்வோம் என்பதை இயேசுவின் வாழ்வில் இருந்து நீங்களும் நானும் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். 

           இயேசு தன்னுடைய வாழ்வில் சந்தித்த அத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தனிமையான இடத்திற்குச் சென்று ஆண்டவரோடு உரையாடி ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருந்தார். இந்த இயேசுவைப் போல நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள நாளும் நேரம் ஒதுக்கி கடவுளோடு உரையாடி அவரோடு உள்ள உறவில் நாளும் நிலைத்திருக்க இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

தந்தையே நீர் உம் மகனை மாட்சிப்படுத்தும்! ( 23-5-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

                    ஆண்டவர் இயேசு கிறிஸ்து தனது வாழ்வை குறித்து தந்தையாகி இறைவனோடு உரையாடுவதை குறித்து தான் இன்று நாம் வாசிக்க கேட்கிறோம். கடவுள் தனக்கென வகுத்த திட்டங்கள் அனைத்தையும் உணர்ந்தவராக அந்த திட்டங்களுக்கு செயல் வடிவம் தருகின்ற நபராக இயேசு இந்த மண்ணில் வலம் வந்தார்.  எத்தனையோ இடர்பாடுகள், நிராகரிப்புகளை வாழ்வில் சந்தித்தபோதும், அத்தனைக்கும் மத்தியிலும் தளரா மனதோடு கடவுளின் பணியை செய்வதில் நிலைத்திருந்தார்.  தான் இதற்காகத்தான் வந்தேன் என்பதை உணர்ந்து இருந்தார்.  வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அத்துணை இன்னல்களையும் இடர்பாடுகளையும் எதிர்கொண்டார்.  இறுதிவரை கடவுள்களின் திருவுளத்தை நிறைவேற்றுவது மட்டுமே தன் வாழ்வின் இலக்கு என்பதை உணர்ந்தவராக, தன் இன்னுயிரையும் நமக்காக தியாகம் செய்து கடவுளின் விருப்பத்திற்கு செயல் வடிவம் கொடுத்தார்.  இந்த இயேசுவைப் போலத்தான் நீங்களும் நானும் இருக்க வேண்டும் என்று அழைப்பு இன்றைய இறை வார்த்தை வழியாக நமக்கு தரப்படுகிறது. எத்தனை துன்ப துயரங்கள் வந்தாலும், அத்துணைக்கு மத்தியிலும் இயேசுவைப் போல கடவுளின் திருவுளத்தை அறிந்து நிறைவேற்றுகின்ற மனிதர்களாக நாம் நமது செயல்களை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

துணிவுடன் இருங்கள். நான் உலகின் மீது வெற்றி கொண்டு விட்டேன். (22-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
        இன்றைய இறை வார்த்தையின் அடிப்படையில் சிந்திக்கின்ற போது இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை கேட்டு பெரிதும் கவரப்பட்ட இயேசுவின் சீடர்கள், உமது பணியை செய்வோம் என்று சொல்லி உறுதிபாட்டை இயேசுவுக்கு தருகிறார்கள். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம்மோடு இருந்தவர்களை நன்கு அறிந்தவர்.  எனவே அவர், நீங்கள் காலம் வருகிற போது என்னை விட்டுவிட்டு ஓடிச் செல்வீர்கள் என்று சொல்லி அவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பதையும் அறிவித்து, அவர்களை தன்னுடைய பணிக்கு தகுதி உடையவராக மாற்றுகின்றார். முதல் வாசகத்திலும் கூட இயேசுவின் பெயரால் ஈர்க்கப்பட்டு திருமுழுக்கு பெற்ற பலரும் கூட துன்பங்கள் வருகிற போது தொடக்க காலத்தில் இயேசுவின் பெயருக்கு எதிராக செயல்படுகிற நபர்களாக மாறினார்கள். ஆனாலும் சிலர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக, அந்த நம்பிக்கையில் நிலைத்திருந்து இயேசுவுக்காக தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்தார்கள்.  

     இந்த இரண்டு வாசகங்களையும் நமது வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்கிற போது நாமும் இந்த இயேசுவை அறிந்திருக்கிறோம்; அவரின் வார்த்தைகளை அனுதினமும் கேட்கிறோம், வாசிக்கிறோம். கேட்ட வாசிக்கின்ற இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நாம் இந்த இயேசுவின் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையின் ஆழத்தை சீர்தூக்கிப் பார்க்க அழைக்கப்படுகிறோம். துன்பங்களும் இடையூறுகளும் வருகிற போது விட்டுவிட்டு ஓடுகின்ற நபர்களாக இருந்துவிடாமல் இயேசுவுக்கு சான்று பகருகின்ற மனிதர்களாக இன்றும் என்றும் இருப்பதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது! (21-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
    அன்புக்குரியவர்களே இன்று தாய்த் திருஅவையாக இணைந்து நாம் ஒவ்வொருவருமே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்பு பெருவிழாவை கொண்டாடி கொண்டிருக்கின்றோம். இந்த நந்நாளில் உங்கள் அனைவருக்கும் இயேசுவின் விண்ணேற்பு பெருவிழா வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கிறேன். 

       இயேசு  இறந்து உயிர்த்து தன்னுடைய சீடர்களோடு இருந்து அவர்களை பல வழிகளில் ஊக்கப்படுத்தி, நம்பிக்கையை கொடுத்து, அவருடைய பணியை அவர் இன்றி இச்சமூகத்தில் செய்வதற்கு அவர்களை பக்குவப்படுத்தி, தயார்படுத்தி, அதன் பிறகாக விண்ணகம் ஏறிச் சென்றதைக் தான் இன்று நாம் நினைவு கூருகிறோம். இயேசுவின் சீடர்களோடு அவர் உடன் நடந்தார். யாருமே இல்லை. தங்களோடு இருந்தவர் தங்களுக்கு பலவற்றை கற்பித்தவர் இன்று நம்மோடு இல்லை என்று சொல்லி அஞ்சி கலங்கி ஒரு மாடியறைக்குள் முடங்கிக் கிடந்தவர்களுக்கு தூய ஆவியானவரை பொழிந்து அவரின் தூண்டுதலால் துணிவு பெற்றவர்களாக மாற்றி அவர்களை நற்செய்தி பணிக்கு அனுப்பி வைத்தார். அவர்களோடு உடன் நடந்தார். அவர்களோடு அமர்ந்தார். உணவருந்தினார். பல நேரங்களில் பலவற்றைக் குறித்து அவர்களோடு உரையாடினார். பூட்டிய அறைக்குள்ளும் நுழைந்து வந்து அவர்களுக்கு தன்னை வெளிப்படுத்தினார்.  எத்தனையோ அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்திக் காண்பித்தார் இந்த இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக இந்த இயேசுவை இதயத்தில் ஏற்றுக்கொண்டு எப்போதும் தங்களோடு இருப்பதற்கு அவர் தந்த தூய ஆவியாரின் துணையோடு இவ்வுலகில் அவர் மீண்டும் வருகிற வரை அவரது பணியை செய்கின்ற நபர்களை உருவாக்கவும் தன்னுடைய சீடர்களை தகுதி உள்ளவர்களாக தகுதிப்படுத்திவிட்டு விண்ணகம் ஏறிச் சென்றதைத்தான் இன்று நாம் நினைவு கூருகிறோம்.  ஆண்டவர் இயேசு விண்ணகம் ஏறிச் சென்றாலும்,  நம்மோடு இருப்பதற்காக அவர் தந்த தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து ஒவ்வொரு நாளும் நமது வாழ்வை இந்த இயேசுவின் வாழ்வாகவே அமைத்துக் கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.  இந்த இயேசுவைப் போல இயேசுவாகவே இந்த சமூகத்தில் நாம் அவர் மீண்டும் வருகிற வரை நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுகிற போது தான், நாம் ஆண்டவருக்கு உகந்த மனிதர்களாக இருக்க முடியும். எப்போது வருவார் என தெரியாத வண்ணம் அவர் நம் மத்தியில் வருகிற போது அவருக்கு உகந்தவர்களாக இருக்கக்கூடிய பண்பினையும் ஆற்றலையும் பெற்றவர்களாக நாம் நம் செயல்களை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

நீங்கள் என் மீது அன்பு கொண்டு என்னை நம்பினீர்கள்! (20-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

             இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக இயேசுவின் பெயரால் நாம் கேட்பதையெல்லாம் பெற்றுக்கொள்வோம் என்ற வாக்குறுதியை இயேசு நமக்கு தருகிறார். இயேசுவின் பெயருக்கு வல்லமை உண்டு. இந்த இயேசுவின் பெயரால் தான் முடக்குவாதமுற்றிருந்த ஒரு மனிதனை பேதுரு எழுந்து நடக்க வைத்தார். "என்னிடம் பொன்னும் இல்லை பொருளும் இல்லை. ஆனால் என்னிடத்தில் இருப்பதை உனக்குத் தருகிறேன். நாசரேத்து இயேசுவின் பெயரால் சொல்கிறேன் எழுந்து நட" என்று சொல்லி இயேசுவின் பெயரால் குணப்படுத்திய பேதுருவைப் போல இயேசுவின் பெயருக்கு வல்லமை உண்டு என்பதை உணர்ந்தவர்களாக, கடவுளின் துணையோடு இயேசுவின் வழியாக நாளும் நாம் நம் தேவைகளை இறைவனிடத்தில் எடுத்துரைக்க அழைக்கப்படுகிறோம்.

           இயேசுவின் பெயரால் தேவைகளை எடுத்துரைக்கின்ற நாம் ஒவ்வொருவருமே இந்த இயேசுவைப்போல இச்சமூகத்தில் வாழ வேண்டும். அவர் எப்படி இந்த சமூகத்தில் வாழுகிற போது அனைவரையும் மதித்து, மதிப்போடு எது நீதியோ அறிவிக்கின்றவராகவும் பின்பற்றுகிறவராகவும் இருந்தாரோ, அவரைப்போல நாமும் இருக்க வேண்டும். எப்போது இயேசுவைப்போல நமது செயல்பாடுகள் அமைகிறதோ அப்போதெல்லாம் இயேசுவின் பெயரால் நாமும் பல அற்புதங்களையும்,  அடையாளங்களையும் இந்த மண்ணில் செய்ய முடியும் என்பதை இதயத்தில் ஏற்றுக்கொண்டு, இயேசுவின் பெயரால் இணைந்திருக்கின்ற, ஒன்று கூடுகின்ற நாம் ஒவ்வொருவருமே இன்னும் அதிகமாக இயேசுவின் பெயரில் நம்பிக்கை கொண்டு வாழ இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

உங்களின் மகிழ்ச்சியை யாரும் உங்களிடம் இருந்து நீக்கி விட முடியாது! (19-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
           துன்பங்கள் வாழ்வில் மேலோங்குகிற போதெல்லாம் வாழ்வே துன்பமயமாக மாறிவிட்டது என்று சொல்லி துவண்டு போய்விடாமல் இருப்பதற்கான ஆற்றலைப் பெற்றுக்கொள்ள இறைவன் அழைப்பு தருகிறார். வாழ்வில் இன்பம் துன்பம் என்ற இரண்டும் வந்து செல்லும். துன்பம் இப்போது உங்களை சூழ்கிறது என்றால், இந்த துன்பம் உங்களை விட்டு மறைந்து உங்கள் வாழ்வு இன்பமயமாக மாறும் என்பதைத் தான் இன்றைய இறைவார்த்தை வழியாக இறைவன் எடுத்துரைக்கிறார். நீங்கள் துன்பத்தைக் கடந்து மகிழ்ச்சியை கண்டு கொள்வீர்கள். மகிழ்வோடு இருப்பீர்கள். உங்கள் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் என்ற வார்த்தைகளை இயேசு குறிப்பிடுவதை நாம் நமது வாழ்வுக்கான வார்த்தைகளாக எடுத்துக் கொள்ள அழைக்கப்படுகிறோம். 

             பரபரப்பான இந்த உலகத்தில் பல பணிகளுக்கு மத்தியில், பல நேரங்களில் எதற்கும் நேரமில்லை என்று சொல்லி ஓடிக்கொண்டே இருக்கக்கூடிய நாம் ஒவ்வொருவருமே நம் வாழ்வில் வருகின்ற  துன்பங்களைக் கண்டு துவண்டு போய்விடாமல், இந்த துன்பங்களை கடந்து இறைவன் இன்பத்தை தரவல்லவர் என்பதை இதயத்தில் ஏற்றுக்கொண்டு, மகிழ்வோடு ஆண்டவரை நாடிச் செல்லவும், ஆண்டவர் தருகின்ற மகிழ்ச்சியை உணர்ந்து கொள்ளவும் ஆற்றல் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
        

நீங்கள் துயருறுவீர்கள். உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்! (18-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

                இன்றைய இறை வார்த்தை வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னோடு இருக்கின்ற  சீடர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து தனது இறப்பை உணர்ந்தவராக, நான் உங்களை விட்டு செல்ல வேண்டிய காலம் வருகிறது. நீங்கள் என்னை தேடுவீர்கள். ஆனால் நான் உங்கள் மத்தியில் இருக்க மாட்டேன் என்று சொல்லி, அந்நேரங்களில் எல்லாம் கலங்கிட வேண்டாம், துணிவோடு இருங்கள், துணிச்சல் பெற்றவர்களாக இருங்கள். எத்தகைய இடர்பாடுகள் உங்கள் வாழ்வில் வந்தாலும் அத்துணை இடர்பாடுகளையும் எதிர்த்து நில்லுங்கள் என்று சொல்லி, தன்னுடைய சீடர்களை ஊக்கப்படுத்துகின்ற நிகழ்வை இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் வாசிக்கக் கேட்டோம். 

    இந்த ஊக்கம் தான் ஆண்டவர் இயேசுவின் பெயரை அறிக்கை இட்ட ஒவ்வொருவருக்குள்ளும் இருந்தது. எத்தனையோ இன்னல்களை தங்கள் வாழ்வில் அவர்கள் சந்தித்தபோதும் கூட, தளரா மனதோடு ஆண்டவரின் பணியை செய்கிறோம் என்பதில் நிலைத்திருந்தவர்களாக துணிவோடு இயேசுவைப் பற்றிய நற்செய்தியை துன்பங்களுக்கு மத்தியிலும் அறிவித்தார்கள். நாமும் இவர்களைப் போல துன்பங்களுக்கு மத்தியிலும், இயேசுவின் நற்செய்தியை பாரெங்கும் உள்ள மக்களுக்கு அதிலும் குறிப்பாக  இயேசுவை அறியாத மக்களுக்கு அறிவிக்கின்ற மனிதர்களாக இருப்பதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

வெளிப்படுத்தும் தூய ஆவியார் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்! (17-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

    உண்மையை எடுத்துரைக்கும் தூய ஆவியானவர் நம்முள் இருக்கிறார்.  அவரின் குரலுக்கு செவி கொடுத்து இந்த சமூகத்தில் உண்மையை நிலை நாட்டுகின்ற மனிதர்களாக, உண்மையை சார்ந்து வாழுகின்ற மனிதர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் அழைக்கப்படுகிறோம்.

     அன்று ஏதேன்ஸ் நகருக்கு சென்ற பவுலும் அவரது உடன் உழைப்பாளர்களும்,  அறியாத தெய்வத்திற்கு நீங்கள் வழிபட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உண்மை தெய்வத்தை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன் என்று சொல்லி இயேசுவை எடுத்துரைத்து, அவர்களின் வாழ்வு நெறிப்பட உதவினார். இந்த உண்மை தெய்வத்தை அவர்கள் உணர்ந்து கொண்டது இந்த தூய ஆவியாரின் தூண்டுதலால். நம்முள் இருந்து செயலாற்றுகின்ற தூய ஆவியானவரின் குரலுக்கு செவி கொடுக்கிற போது நம் வாழ்வும் உண்மை நிறைந்த வாழ்வாகவும், இச்சமூகத்தில் உள்ள உண்மைகளை கண்டுகொள்ளுகின்ற வாழ்வாகவும் அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நம்முள் இருக்கின்ற ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து, நம் செயல்களை அமைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் உண்மையின் மக்களாக வாழ்வதற்கு இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார்! (16-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
                ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறப்பு உயிர்ப்புக்கு பிறகாக நம்மோடு இருப்பதற்காக தரப்பட்ட தூய ஆவியானவர் நம்மை உண்மையை நோக்கி அழைத்துச் செல்வார். நீதியை நமக்கு கற்பிப்பார். எப்படி நாம் செயல்பட வேண்டும் என்பதை நம்மிலிருந்து நமக்கு அவர் வெளிப்படுத்துவார் என்பதை நற்செய்தி வாசகத்தின் வாயிலாக ஆண்டவர் இயேசு எடுத்துரைக்கிறார்.

       இந்த தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாகத்தான் இயேசுவின் சீடர்கள் எல்லாம் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க சென்றார்கள். சென்ற இடங்களில் எல்லாம் துன்பங்களையும் துயரங்களையும் அவர்கள் அனுபவித்தார்கள்.  இந்த துன்ப துயரங்களைக் கண்டு துவண்டு போய்விடாமல் தூய ஆவியானவர் அவர்களுக்குள் இருந்து அவர்களுக்கு ஊக்கம் தருகின்றவராக இருந்தார். இந்த ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்துத் தான்  ஊக்கம் பெற்றவர்களாக இயேசுவின் பணியை தொய்வின்றி இன்னும் ஆர்வத்தோடு செய்கின்ற நபர்களாக இருந்தார்கள் இயேசுவின் சீடர்கள்.

          இந்த இயேசுவின் சீடர்களைப் போல நாமும் செயல்படுவதற்கு நம்முள் இருக்கின்ற ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் உண்மையையும், நீதியையும், நேர்மையையும் நிலை நாட்டுகின்ற மனிதர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்வோம். இப்பணியை செய்வதால் வருகின்ற இன்னல்களைக் துவண்டு போய்விடாமல் தூய ஆவியானவரின் துண்டுதலோடு துணிவு பெற்றவர்களாக தொடர்ந்து பயணிப்போம்.  இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார். 

தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுப்போம்! (15-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

             கடவுள் எப்போதும் நம்மோடு இருப்பதற்காக ஒரு துணையாளரை தருவேன் என்று சொல்லி தூய ஆவியாரை நமக்கு தந்திருக்கிறார். இந்த தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு நாளும் இயேசுவின் பாதையில் பயணம் செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். இந்த தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து வாழுகிற போது நாம் கடவுளிடமிருந்து பல நன்மைகளை பெற்றுக் கொள்வோம் என்பதற்கு சான்றாக இன்றைய முதல் வாசகம் அமைகிறது.

    ஜெபிப்பதற்கான ஒரு இடத்தை தேடியும் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தி பணியை தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப செய்து கொண்டிருந்த பவுலும் அவரின் உடன் உழைப்பாளர்களும், தங்க இடம் யார் தருவார் என்ற எண்ணத்தோடு இருந்த போது, இவர்களின் பேச்சை கேட்டு இவர்களின் வார்த்தைகளால் கவரப்பட்ட லீதியா என்ற பெண் ஆனவள் இவர்களுக்கு தங்க இடம் கொடுத்து உபசரிக்கின்றாள்.

                  தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுக்கின்ற போது நாம் பல்வேறு நன்மைகளை பெற்றுக் கொள்வோம் என்பதற்கு சான்றாக இன்றைய முதல் வாசகம் அமைகிறது. நம்மிலிருந்து செயலாற்றுகின்ற இந்த ஆவியானவரின் குரலுக்கு செவி கொடுத்து நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு தூய ஆவியாரின் துணையோடு பல நன்மைகளைப் பெற்றுக் கொள்ள இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

வியாழன், 1 ஜூன், 2023

துணையாளராம் தூய ஆவியாரே எம்மை வழி நடத்தும்! (14-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

              ஆண்டவர் இயேசுவின் மீதான ஆழமான அன்பு உறவில் இணைக்கப்பட்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவருமே அவரின் கட்டளைகளை கடைபிடிக்கின்ற மக்களாக இருக்க வேண்டும் என்பதை இதயத்தில் இருத்திக் கொள்ள அழைக்கப்படுகிறோம். இயேசுவின் வார்த்தைகளை தங்கள் இதயத்தில் இருத்திக் கொண்டதன் அடிப்படையில் தான் இயேசுவின் சீடர்களும் இயேசுவை அறிந்தவர்களும் எத்தனையோ நன்மைகளை பலருக்கு செய்தார்கள் என விவிலியம் சுட்டிக்காட்டுகிறது.

           இன்றைய முதல் வாசகத்தில் கூட இயேசுவின் பெயரை அறிக்கையிட்ட திருத்தூதர்கள் எத்தனையோ அவர்களுக்கு நலம் தந்தார்கள் என்பதை வாசிக்க கேட்டோம்.  இந்த வாசகங்களை எல்லாம் இதயத்தில் இருத்தியவர்களாக இயேசுவிற்கு இதயத்தில் இடம் கொடுத்து, இந்த இயேசுவின் சொல்லையும் செயலையும் ஆழமாக சிந்தித்து அதனை நமது  வாழ்வில் செயல் வடிவம் தருகின்ற நபர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ளுகிற போது தான் கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை நாம் வாழ முடியும். கடவுளுக்கு உகந்த வாழ்வை வாழ்வது என்பது இந்த இயேசுவின் வார்த்தைகளை அறிவிப்பதோடு நின்று விடுவது அல்ல;  மாறாக, அறிவிக்கின்ற வார்த்தைகளை நமது வாழ்வில் செயல் வடிவப்படுத்துகிற போது தான் அது அர்த்தமுள்ள வாழ்வாக மாறுகிறது. 

    இயேசுவின் அன்பில் இணைக்கப்பட்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவருமே அவரின் வார்த்தைகளை இதயத்தில் எழுதிக்கொண்டு நாளும் அதனைப் பின்பற்றுவதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு எப்போதும் இயேசுவின் அன்பு உறவில் நிலைத்திருக்க இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். எப்போதெல்லாம் இயேசுவின் வார்த்தைகள் இதயத்தில் ஆழமாக வேரூன்றி செயல்படுவோம் பெறுகிறதோ அப்போதெல்லாம் கடவுளிடமிருந்து ஏராளமான நன்மைகளை நாம் பெற்றுக் கொள்வோம் என்பதை இதயத்தில் இருத்திக் கொண்டு நம் வாழ்வை நெறிப்படுத்திக்கொண்டு இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

நான் உலகில் இருந்து உங்களை தேர்ந்தெடுத்து விட்டேன்! (13-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

          ஆண்டவர் இயேசுவின் பெயரால் இணைக்கப்பட்டிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே இந்த இயேசுவின் பணியை செய்ய அழைக்கப்படுகிறோம். இந்த இயேசுவின் பணியை செய்கின்ற போது பல நேரங்களில் நாம் இன்னல்களையும் சந்திக்க நேரிடும்.  பலரின் பாராட்டுகளையும் பெற்றுக் கொள்ள நேரிடும். இந்த இயேசுவின் பணியை செய்வதன் காரணமாக பல்வேறு நன்மைகளும் நமக்கு கிடைக்கும். பல்வேறு துயரங்களும் சூழ நேரிடும். ஆனால் அனைத்து சூழ்நிலைகளிலும் ஆண்டவருக்கு உகந்தவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதைத்தான் இன்று இறை வார்த்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. 

      முதல் வாசகத்தில் ஆண்டவர் இயேசுவின் செய்தியை அறிவிக்கச் சென்ற பவுலை திமொத்தேயு ஏற்று பராமரித்தது போல பல நேரங்களில் இயேசுவின் பெயரால் பலரும் பலவிதமான நன்மைகளை நமக்குச் செய்யலாம். அதே சமயம் இயேசுவின் பெயரை அறிவித்ததனால் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளான சீடர்களைப் போல இயேசுவின் பெயரை அறிவிப்பதால் பல்வேறு துன்பங்களையும் நாம் சந்திக்க நேரிடலாம். துன்பம் வந்தாலும் இன்பம் வந்தாலும் நாம் ஏற்றுக் கொண்ட இயேசுவின் மீது இன்னும் ஆழமான நம்பிக்கையை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

அன்பு செய்து வாழுங்கள்! (12-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!


              ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்க அழைக்கப்பட்டிருக்கக்கூடிய நாம் ஒவ்வொருவருமே அவருக்காக நம் இன்னுயிரையும் இழக்கத் துணிந்தவர்களாக இருக்க வேண்டும்.  நம் ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்தவர் அவர். அழைத்தவர் நம்மை தகுதி உடையவராக மாற்றி, நம் வழியாக பல நற்காரியங்களை இச்சமூகத்தில் செய்து வருகிறார்.

          இன்றைய முதல் வாசகத்தில் கூட பர்னபாவையும் பவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென ஒதுக்கி வையுங்கள் என்ற தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து திருத்தூதர்கள் அவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள். அதுபோல மண்ணில் பிறந்த நம் ஒவ்வொருவருமே இந்த கடவுளின் பணியை செய்வதற்காகவே இம்மண்ணில் பிறந்திருக்கிறோம். நமக்கென கடவுளின் திட்டம் எது என்பதை உணர்ந்து கொண்டு, அத்திட்டத்திற்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக நாளும் இயேசுவின் உறவில் நிலைத்திருந்து, அவருக்காகவே நம் வாழ்வை அர்ப்பணிக்க துணிந்தவர்களாக இருப்பதற்கான அழைப்பை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு தருகிறார்.
     நாம் வாழுகின்ற சமூகத்தில் அடுத்தவர் மீது அக்கறை கொண்டவர்களாக, தன் இன்னுயிரையும் அடுத்தவருக்காக இழக்கத் துணிந்த இயேசுவைப்போல நீங்களும் நானும் இழக்கத் துணிந்த ஒரு வாழ்வை வாழுகிற போது நம் வாழ்வு அர்த்தம் பெறும் என்பதை உணர்ந்தவர்களாக, நம் வாழ்வை நெறிப்படுத்திக்கொண்டு இயேசுவின் பாதையில் துணிவோடு நாளும் பயணிப்போம், இயேசுவின் தோழர்களாக. இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறும்! (11-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

         
                  இன்றைய இறை வார்த்தையானது ஆண்டவருடைய அன்பில் நிலைத்திருக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுளோடு கொண்டிருக்கின்ற உறவில் எப்போதும் நிலைத்திருக்கின்ற போது, இந்த கடவுள் நமக்கு கற்றுக் கொடுத்த வாழ்வுக்கான நெறிமுறைகளை எல்லாம் இதயத்தில் இருத்தியவர்களாக நம் வாழ்வை அவருக்கு உகந்த ஒரு வாழ்வாக நாம் அமைத்துக் கொள்ளக் கூடியவர்களாக நாம் இருப்போம்.  இந்த கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை வாழுகிற போதெல்லாம் மகிழ்ச்சி என்பது நம் உள்ளத்தில் மேலோங்கி இருக்கும்.  நம்மிடம் இருக்கின்ற இந்த மகிழ்ச்சியை மற்றவரோடு பகிர்ந்து கொண்டு, எப்போதும் ஆண்டவரின் அன்பில் நிலைத்திருக்க ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
      

என்னுடன் இணைந்து இருந்தால் மிகுந்த கனி தருவீர்கள்! ( 10-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

               ஆண்டவரோடு இணைந்து இருப்பதற்கு இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. நானே திராட்சை செடி; நீங்கள் அதன் கிளைகள் என்று சொல்லி, நம்மை அவரோடு இணைந்தவர்களாக காட்டுகின்ற இந்த இயேசுவை இதயத்தில் இருத்தியவர்களாக எப்போதும் அவரோடு இணைந்த வாழ்வை நாம் வாழ அழைக்கப்படுகிறோம். தொடக்க காலத்தில் இந்த இயேசுவை அறிவித்தவர்களும், இயேசுவின் பெயரால் ஒன்று கூடியவர்களும், இயேசுவோடு இணைந்து இருந்தார்கள். தங்கள் வாழ்வில் ஏற்பட்ட எல்லாவிதமான சிக்கல்களுக்கு மத்தியிலும் கூட அவர்கள் ஆண்டவரின் துணையோடு அனைத்தையும் எதிர் கொண்டார்கள்.

    இன்றைய முதல் வாசகத்திலும் கூட விருத்தசேதனம் செய்வதா? இல்லையா? என்ற விவாதம் எழுந்த போது தூய ஆவியாரின் துணையோடு திருஅவையில் இருக்கக்கூடிய அனைத்து திருத்தூதர்களின் உதவியை நாடி, அவர்களோடு கலந்துரையாடி இச்சிக்கலுக்கு தீர்வு காண முயற்சித்தார்கள். இயேசுவை துணை கொண்டு தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள் வாழ்வில் வருகிற அத்தனை துயர்களிலும் இந்த இயேசுவின் துணையை நாடிச் சென்றது போல, அவரது அன்பில் நிலைத்திருப்பவர்கள் நாம் என்று மார்தட்டிக் கொள்ளக்கூடிய நாம் ஒவ்வொருவருமே நம் வாழ்வில் வருகின்ற எல்லாவிதமான இடையூறு இன்னல்கள் அனைத்திலும் இந்த ஆண்டவரோடு இணைந்தவர்கள் நாம் என்பதை இதயத்தில் இருத்தி அவரின் துணையோடு அனைத்தையும் எதிர்கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.


    

என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்! (9-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

                      அமைதி என்பதை கூட சத்தமாக சொல்லுகின்ற காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு அமைதியை தருவதாக இன்று இறை வார்த்தை வழியாக நமக்கு எடுத்துரைக்கின்றார். ஆண்டவர் தருகின்ற அமைதியை நாமும் அடுத்தவருக்கு தருகின்ற மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதை இதயத்தில் இருத்திக்கொள்ள அழைக்கப்படுகிறோம்.  நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் அமைதியை விரும்புகிற நபர்களாகவும், அமைதியை அடுத்தவர்களுக்கு கொடுக்கின்ற நபர்களாகவும் நாம் இருக்க வேண்டும்.  அடுத்தவர் மீதான போட்டி பொறாமையோடு அவர்களின் வாழ்வை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நாம் செய்கிற ஒவ்வொரு செயல்களும் அடுத்தவர் வாழ்வில் அமைதியை அழிக்கின்றது.  நாம் அடுத்தவர் வாழ்வில் அமைதியை உருவாகும் சூழலை உருவாக்கும் வண்ணமாக,  நமது சொல்லிலும் செயலிலும் வழியாக அடுத்தவர் வாழ்வில் அமைதி மேலோங்குவதற்கு வழி வகுத்து கொடுக்கின்றவர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம்.  இயேசுவின் சீடர்கள் இத்தகைய ஒரு வழியையே பின்பற்றினார்கள்.  சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் அமைதியை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். இந்த இயேசுவின் சீடர்களை பின்பற்றி இயேசுவை அறிந்து கொண்ட நாம் ஒவ்வொருவருமே அமைதியை அடுத்தவர் வாழ்வில் மேலோங்குவதற்கான வழிகளை காட்டுபவர்களாகவும், அதற்கேற்ற வகையில் நமது செயல்களை அமைத்துக் கொள்ளக்கூடியவர்களுமாக இருப்பதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

தூய ஆவியார் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்! (8-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

              இன்றைய இறை வார்த்தையின் அடிப்படையில் கடவுளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கின்ற அன்பு கொண்டிருக்கின்ற ஒவ்வொருவருமே அவரின் கட்டளைகளை கடைப்பிடிப்பார்கள் என இயேசு குறிப்பிடுகின்றார். இந்த இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கையும் அன்பும் கொண்டிருந்த காரணத்தினால் தான் இயேசுவின் சீடர்கள் இயேசுவின் பெயரால் எத்தனையோ அருள் அடையாளங்களை செய்தார்கள்.

          இன்றைய முதல் வாசகத்தில் கூட திருத்தூதர் பவுல் கால் ஊனமுற்றிருந்த ஒரு நபரை நடக்க வைக்கின்ற ஒரு நிகழ்வினை நாம் வாசிக்க கேட்கின்றோம்.  எப்படி சாதாரணமான பவுலால் இதை செய்ய இயன்றது என்ற கேள்வியை எழுப்புகிற போது, அவர் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையும் அன்பும் தான் இயேசுவின் வழியாக இப்புதுமையைச் செய்ய அவருக்கு ஆற்றலை தந்தது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

    இந்த இயேசுவின் பெயரால் ஒன்று கூடி இருக்கின்ற நாம் ஒவ்வொருவருமே இந்த இயேசுவின் மீது இன்னும் ஆழமான நம்பிக்கையும் அன்பும் கொண்டவர்களாக, நாளும் அவரது அன்பு உறவில் நிலைத்திருந்து, அவர் வழியாக அவரின் பெயரின் வண்ணமாக பல்வேறு அரும் செயல்களை செய்வதற்கான ஆற்றலை இறைவன் நமக்கு தர வேண்டுமாய் இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

வழியும் உண்மையும் வாழ்வும் நானே! (7-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!


                 இன்றைய இறை வார்த்தையானது இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் இருத்திக் கொண்டு நம்பிக்கையோடு அனைத்து விதமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இணைந்து பயணிக்க அழைப்பு விடுக்கிறது. 


   தொடக்க கால கிறிஸ்தவர்கள் இயேசுவின் பெயரால் ஒன்றிணைந்தார்கள். இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து கொண்டு, இறை வேண்டலில் நிலைத்திருந்து ஜெபித்தவர்கள்.  ஆனால் தங்களுக்குள்ளாக சிலர் கவனிக்கப்படவில்லை என்ற சிக்கல்கள் எழுந்தபோதெல்லாம் திருத்தூதர்களை அவர்கள் நாடினார்கள். திருத்தூதர்கள் தூய ஆவியாரின் தூண்டுதலோடு அந்த பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். 

         நாம் வாழுகின்ற இந்த சமூகத்திலும் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்க முயல்கிற போது பலவிதமான எதிர்ப்புகளையும் நிராகரிப்புகளையும் நாம் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.  இத்தகைய சூழல் வருகிற போதெல்லாம் இறைவனின் துணையை நாடித் தேடிய தொடக்க கால கிறிஸ்தவர்களைப் போல, நாமும் நாடி  தேடக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.  இறைவனின் துணையை நம்பி இறைவனின் துணையோடு அனைத்து விதமான இன்னல்களையும் எதிர்கொண்டு நம்பிக்கையோடு இயேசுவின் வார்த்தைகளை இம்மண்ணில் செயல் வடிவப்படுத்துகின்ற மனிதர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இறைவனிடத்தில் இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

என்னை காண்பது, தந்தையை காண்பது ஆகும்! (6-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
           ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது தான் எப்படியெல்லாம் வாழ்ந்து காண்பித்தாரோ அதன்படி ஒவ்வொருவரையும் வாழ அறிவுறுத்தினார்.  குறிப்பாக தன்னுடைய சீடர்களிடத்தில் தான் தந்தையின் திருவுளத்தை  அறிந்து அதனை நிறைவேற்றுகின்றவராக இருப்பது போல, நீங்களும் இருக்க வேண்டும் என்பதை அவர் அவர்களுக்கு எடுத்துரைத்தார். 

    இயேசுவின் வார்த்தைகளை கேட்ட இயேசுவின் சீடர்கள் தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக்கொண்டு, தங்கள் வாழ்ந்த போது ஒவ்வொரு நாளும் இந்த இயேசுவிடம் காணப்பட்ட நற்பண்புகளை எல்லாம் தங்கள் நற்பண்புகளாக மாற்றிக்கொண்டு, இயேசுவுக்கு சான்று பகருகின்ற மனிதர்களாக இந்த மண்ணில் வாழ்ந்து நமக்கு நல்லதொரு முன்மாதிரிகளாக திகழ்ந்தார்கள்.  இவர்களைப் போலவே நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய இறை வார்த்தை வழியாக அழைக்கப்படுகின்றோம்.

     நாம் அறிந்த இயேசுவை இதயத்தில் இருத்தி நமது செயல்கள் ஒவ்வொன்றையும் இந்த இயேசுவுக்கு உகந்த செயல்களாக மாற்றிக்கொண்டு, ஒவ்வொரு நாளும் இச்சமூகத்தில் பயணிக்க இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

வழியும் உண்மையும் வாழ்வும் நானே! (5-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
             இன்றைய இறை வார்த்தையானது ஆண்டவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைவன் மீது நம்பிக்கையோடு நாம் இந்த அகிலத்தில் பலவிதமான பணிகளை செய்வதற்கு அழைக்கப்படுகிறோம். கடவுளின் துணையோடு நாம் செய்கிற அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவோம் என்பதை இதயத்தில் இருத்தியவர்களாக, வாழ்வு தருகின்ற இறைவனை பின்பற்றிக்கொண்டு, நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, நாளும் இயேசுவின் பாதையில் பயணம் செய்து இயேசுவுக்கு உகந்த மனிதர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் ஆற்றல் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

நான் அனுப்புகிறவரை ஏற்றுக் கொள்பவர், என்னை ஏற்றுக் கொள்கிறார்! (4-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
  ஆண்டவர் பலரை தனது பணிக்கென அழைத்து, அழைத்தவர்களை தகுதி உள்ளவர்களாக மாற்றினார். பல நேரங்களில் அவர்களிடத்தில் இருக்கின்ற குற்றம் குறைகளை சுட்டிக் காண்பித்து, மறைமுகமாகவும் நேர்மறையாகவும் அவர்களின் தவறுகளை எடுத்துரைத்து அவர்கள் வாழ்வு நெறிப்படுவதற்கு இயேசு முதல் காரணமாக இருந்தார். ஒவ்வொரு நாளும் அவர்களோடு பயணித்த போது அவர்களின் உள்ளத்து உணர்வுகளை உணர்ந்தவர்களாக, அவர்களின் வாழ்வு நெறிப்படுவதற்கான பாடங்களை இறைவன் கற்பித்தார்.  இந்த இறைவன் தான் ஒவ்வொரு நாளும் சீடர்களோடு உடன் பயணித்தது போல நம்மோடும் சக மனிதர்கள் வாயிலாக உடன் பயணிக்கின்றார்.  நம் வாழ்வு நெறிப்படுவதற்கான பலவற்றை ஒவ்வொரு நாளும் பல மனிதர்கள் மூலமாக நமக்கு கற்பிக்கின்றார்.

      நம்மோடு இருப்பவர்கள் நமக்கு கற்பிக்கின்ற வாழ்வுக்கான பாடங்களை உணர்ந்து கொண்டு, நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, ஒவ்வொரு நாளும் இயேசுவின் பாதையில் பயணம் செய்து, அவரின் உண்மைச் சீடர்களாக திகழ்கிற போது நம்மை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். நம்மை ஏற்றுக் கொள்பவர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு, நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு வாழ இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

நீ என்னை அறிந்து கொள்ளவில்லையா? (3-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
          ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக தந்தையை அடைவதற்கு இன்றைய நாள் இறை வார்த்தை வழியாக நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை தன் வாழ்வால் நமக்கு கற்பித்துச் சென்றார்.

         இந்த இயேசுவைப்போல நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் ஒருவர் மற்றவரிடத்தில் அன்பை பகிர்கின்ற மனிதர்களாக, இரக்கத்தை பகிர்கின்ற மனிதர்களாக, மன்னிப்பை வழங்குகின்ற  மனிதர்களாக, நமது வாழ்வை அமைத்துக் கொண்டு கிறிஸ்துவின் வழியாக இறைவனை அடைவதற்கு இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...