ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறப்பு உயிர்ப்புக்கு பிறகாக நம்மோடு இருப்பதற்காக தரப்பட்ட தூய ஆவியானவர் நம்மை உண்மையை நோக்கி அழைத்துச் செல்வார். நீதியை நமக்கு கற்பிப்பார். எப்படி நாம் செயல்பட வேண்டும் என்பதை நம்மிலிருந்து நமக்கு அவர் வெளிப்படுத்துவார் என்பதை நற்செய்தி வாசகத்தின் வாயிலாக ஆண்டவர் இயேசு எடுத்துரைக்கிறார்.
இந்த தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாகத்தான் இயேசுவின் சீடர்கள் எல்லாம் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க சென்றார்கள். சென்ற இடங்களில் எல்லாம் துன்பங்களையும் துயரங்களையும் அவர்கள் அனுபவித்தார்கள். இந்த துன்ப துயரங்களைக் கண்டு துவண்டு போய்விடாமல் தூய ஆவியானவர் அவர்களுக்குள் இருந்து அவர்களுக்கு ஊக்கம் தருகின்றவராக இருந்தார். இந்த ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்துத் தான் ஊக்கம் பெற்றவர்களாக இயேசுவின் பணியை தொய்வின்றி இன்னும் ஆர்வத்தோடு செய்கின்ற நபர்களாக இருந்தார்கள் இயேசுவின் சீடர்கள்.
இந்த இயேசுவின் சீடர்களைப் போல நாமும் செயல்படுவதற்கு நம்முள் இருக்கின்ற ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் உண்மையையும், நீதியையும், நேர்மையையும் நிலை நாட்டுகின்ற மனிதர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்வோம். இப்பணியை செய்வதால் வருகின்ற இன்னல்களைக் துவண்டு போய்விடாமல் தூய ஆவியானவரின் துண்டுதலோடு துணிவு பெற்றவர்களாக தொடர்ந்து பயணிப்போம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக