ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
ஆண்டவர் இயேசுவின் மீதான ஆழமான அன்பு உறவில் இணைக்கப்பட்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவருமே அவரின் கட்டளைகளை கடைபிடிக்கின்ற மக்களாக இருக்க வேண்டும் என்பதை இதயத்தில் இருத்திக் கொள்ள அழைக்கப்படுகிறோம். இயேசுவின் வார்த்தைகளை தங்கள் இதயத்தில் இருத்திக் கொண்டதன் அடிப்படையில் தான் இயேசுவின் சீடர்களும் இயேசுவை அறிந்தவர்களும் எத்தனையோ நன்மைகளை பலருக்கு செய்தார்கள் என விவிலியம் சுட்டிக்காட்டுகிறது.
இன்றைய முதல் வாசகத்தில் கூட இயேசுவின் பெயரை அறிக்கையிட்ட திருத்தூதர்கள் எத்தனையோ அவர்களுக்கு நலம் தந்தார்கள் என்பதை வாசிக்க கேட்டோம். இந்த வாசகங்களை எல்லாம் இதயத்தில் இருத்தியவர்களாக இயேசுவிற்கு இதயத்தில் இடம் கொடுத்து, இந்த இயேசுவின் சொல்லையும் செயலையும் ஆழமாக சிந்தித்து அதனை நமது வாழ்வில் செயல் வடிவம் தருகின்ற நபர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ளுகிற போது தான் கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை நாம் வாழ முடியும். கடவுளுக்கு உகந்த வாழ்வை வாழ்வது என்பது இந்த இயேசுவின் வார்த்தைகளை அறிவிப்பதோடு நின்று விடுவது அல்ல; மாறாக, அறிவிக்கின்ற வார்த்தைகளை நமது வாழ்வில் செயல் வடிவப்படுத்துகிற போது தான் அது அர்த்தமுள்ள வாழ்வாக மாறுகிறது.
இயேசுவின் அன்பில் இணைக்கப்பட்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவருமே அவரின் வார்த்தைகளை இதயத்தில் எழுதிக்கொண்டு நாளும் அதனைப் பின்பற்றுவதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு எப்போதும் இயேசுவின் அன்பு உறவில் நிலைத்திருக்க இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். எப்போதெல்லாம் இயேசுவின் வார்த்தைகள் இதயத்தில் ஆழமாக வேரூன்றி செயல்படுவோம் பெறுகிறதோ அப்போதெல்லாம் கடவுளிடமிருந்து ஏராளமான நன்மைகளை நாம் பெற்றுக் கொள்வோம் என்பதை இதயத்தில் இருத்திக் கொண்டு நம் வாழ்வை நெறிப்படுத்திக்கொண்டு இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக