இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய இறைவார்த்தையின் வாயிலாக நாம் இயேசுவின் வாழ்வில் இயேசு சந்தித்த சவால்களை உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். இயேசு தான் வாழ்ந்தபோது, இந்த சமூகத்தில் எது நல்லதோ அதை கற்பிக்கின்ற நபராக இருந்தார். ஆனால் இயேசுவை ஏற்றுக்கொள்ள இயலாதவர்கள் அவர் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் குற்றம் காணுகின்ற மனநிலை கொண்டவர்களாக, அவரைப் பின்தொடர்ந்தார்கள். எதை கொண்டு நீர் இதை செய்கிறீர்? யார் உமக்கு அதிகாரம் தந்தது என்ற கேள்விகளை எல்லாம் இயேசுவை நோக்கி எழுப்பிய போது, தந்தைக்கும் தனக்குமான உறவை பற்றி அவர் எடுத்துரைக்கக் கூடியவராக இருந்தார்.
இன்று நாம் வாழுகின்ற இந்த சமூகத்திலும் நம்மை சுற்றி உள்ள பல மனிதர்கள் நாம் செய்கின்ற நன்மைத்தனங்களை விட, நம்மிடமிருந்து குறைகளை கண்டுபிடிக்கக் கூடியவர்களாகவே, பல நேரங்களில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்கின்றார்கள். இத்தகைய மனிதர்களைப் போல நமது வாழ்வை அமைத்துக் கொள்ளாமல், குறைகளைப் புறம் தள்ளி, நிறைகளை காணுகின்ற மனிதர்களாக, நிறைகளை ஊக்கப்படுத்துகின்ற மனிதர்களாக நம் வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக