ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்க அழைக்கப்பட்டிருக்கக்கூடிய நாம் ஒவ்வொருவருமே அவருக்காக நம் இன்னுயிரையும் இழக்கத் துணிந்தவர்களாக இருக்க வேண்டும். நம் ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்தவர் அவர். அழைத்தவர் நம்மை தகுதி உடையவராக மாற்றி, நம் வழியாக பல நற்காரியங்களை இச்சமூகத்தில் செய்து வருகிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் கூட பர்னபாவையும் பவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென ஒதுக்கி வையுங்கள் என்ற தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து திருத்தூதர்கள் அவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள். அதுபோல மண்ணில் பிறந்த நம் ஒவ்வொருவருமே இந்த கடவுளின் பணியை செய்வதற்காகவே இம்மண்ணில் பிறந்திருக்கிறோம். நமக்கென கடவுளின் திட்டம் எது என்பதை உணர்ந்து கொண்டு, அத்திட்டத்திற்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக நாளும் இயேசுவின் உறவில் நிலைத்திருந்து, அவருக்காகவே நம் வாழ்வை அர்ப்பணிக்க துணிந்தவர்களாக இருப்பதற்கான அழைப்பை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு தருகிறார்.
நாம் வாழுகின்ற சமூகத்தில் அடுத்தவர் மீது அக்கறை கொண்டவர்களாக, தன் இன்னுயிரையும் அடுத்தவருக்காக இழக்கத் துணிந்த இயேசுவைப்போல நீங்களும் நானும் இழக்கத் துணிந்த ஒரு வாழ்வை வாழுகிற போது நம் வாழ்வு அர்த்தம் பெறும் என்பதை உணர்ந்தவர்களாக, நம் வாழ்வை நெறிப்படுத்திக்கொண்டு இயேசுவின் பாதையில் துணிவோடு நாளும் பயணிப்போம், இயேசுவின் தோழர்களாக. இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக