ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
ஆண்டவர் பலரை தனது பணிக்கென அழைத்து, அழைத்தவர்களை தகுதி உள்ளவர்களாக மாற்றினார். பல நேரங்களில் அவர்களிடத்தில் இருக்கின்ற குற்றம் குறைகளை சுட்டிக் காண்பித்து, மறைமுகமாகவும் நேர்மறையாகவும் அவர்களின் தவறுகளை எடுத்துரைத்து அவர்கள் வாழ்வு நெறிப்படுவதற்கு இயேசு முதல் காரணமாக இருந்தார். ஒவ்வொரு நாளும் அவர்களோடு பயணித்த போது அவர்களின் உள்ளத்து உணர்வுகளை உணர்ந்தவர்களாக, அவர்களின் வாழ்வு நெறிப்படுவதற்கான பாடங்களை இறைவன் கற்பித்தார். இந்த இறைவன் தான் ஒவ்வொரு நாளும் சீடர்களோடு உடன் பயணித்தது போல நம்மோடும் சக மனிதர்கள் வாயிலாக உடன் பயணிக்கின்றார். நம் வாழ்வு நெறிப்படுவதற்கான பலவற்றை ஒவ்வொரு நாளும் பல மனிதர்கள் மூலமாக நமக்கு கற்பிக்கின்றார்.
நம்மோடு இருப்பவர்கள் நமக்கு கற்பிக்கின்ற வாழ்வுக்கான பாடங்களை உணர்ந்து கொண்டு, நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, ஒவ்வொரு நாளும் இயேசுவின் பாதையில் பயணம் செய்து, அவரின் உண்மைச் சீடர்களாக திகழ்கிற போது நம்மை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். நம்மை ஏற்றுக் கொள்பவர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு, நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு வாழ இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக