ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
அன்புக்குரியவர்களே இன்று தாய்த் திருஅவையாக இணைந்து நாம் ஒவ்வொருவருமே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்பு பெருவிழாவை கொண்டாடி கொண்டிருக்கின்றோம். இந்த நந்நாளில் உங்கள் அனைவருக்கும் இயேசுவின் விண்ணேற்பு பெருவிழா வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கிறேன்.
இயேசு இறந்து உயிர்த்து தன்னுடைய சீடர்களோடு இருந்து அவர்களை பல வழிகளில் ஊக்கப்படுத்தி, நம்பிக்கையை கொடுத்து, அவருடைய பணியை அவர் இன்றி இச்சமூகத்தில் செய்வதற்கு அவர்களை பக்குவப்படுத்தி, தயார்படுத்தி, அதன் பிறகாக விண்ணகம் ஏறிச் சென்றதைக் தான் இன்று நாம் நினைவு கூருகிறோம். இயேசுவின் சீடர்களோடு அவர் உடன் நடந்தார். யாருமே இல்லை. தங்களோடு இருந்தவர் தங்களுக்கு பலவற்றை கற்பித்தவர் இன்று நம்மோடு இல்லை என்று சொல்லி அஞ்சி கலங்கி ஒரு மாடியறைக்குள் முடங்கிக் கிடந்தவர்களுக்கு தூய ஆவியானவரை பொழிந்து அவரின் தூண்டுதலால் துணிவு பெற்றவர்களாக மாற்றி அவர்களை நற்செய்தி பணிக்கு அனுப்பி வைத்தார். அவர்களோடு உடன் நடந்தார். அவர்களோடு அமர்ந்தார். உணவருந்தினார். பல நேரங்களில் பலவற்றைக் குறித்து அவர்களோடு உரையாடினார். பூட்டிய அறைக்குள்ளும் நுழைந்து வந்து அவர்களுக்கு தன்னை வெளிப்படுத்தினார். எத்தனையோ அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்திக் காண்பித்தார் இந்த இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக இந்த இயேசுவை இதயத்தில் ஏற்றுக்கொண்டு எப்போதும் தங்களோடு இருப்பதற்கு அவர் தந்த தூய ஆவியாரின் துணையோடு இவ்வுலகில் அவர் மீண்டும் வருகிற வரை அவரது பணியை செய்கின்ற நபர்களை உருவாக்கவும் தன்னுடைய சீடர்களை தகுதி உள்ளவர்களாக தகுதிப்படுத்திவிட்டு விண்ணகம் ஏறிச் சென்றதைத்தான் இன்று நாம் நினைவு கூருகிறோம். ஆண்டவர் இயேசு விண்ணகம் ஏறிச் சென்றாலும், நம்மோடு இருப்பதற்காக அவர் தந்த தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து ஒவ்வொரு நாளும் நமது வாழ்வை இந்த இயேசுவின் வாழ்வாகவே அமைத்துக் கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். இந்த இயேசுவைப் போல இயேசுவாகவே இந்த சமூகத்தில் நாம் அவர் மீண்டும் வருகிற வரை நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுகிற போது தான், நாம் ஆண்டவருக்கு உகந்த மனிதர்களாக இருக்க முடியும். எப்போது வருவார் என தெரியாத வண்ணம் அவர் நம் மத்தியில் வருகிற போது அவருக்கு உகந்தவர்களாக இருக்கக்கூடிய பண்பினையும் ஆற்றலையும் பெற்றவர்களாக நாம் நம் செயல்களை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக