சனி, 17 ஜூன், 2023

அன்னை மரியாவின் மாசற்ற இருதய பெருவிழா! (-17-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாளில் மரியாவின் மாசற்ற இருதயத்தை நினைவு கூர நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம். 

      1913ம் ஆண்டு, ஜூன் மாதம் 13ம் தேதி பாத்திமா நகரில் அன்னை மரியா காட்சி கொடுத்து, மூன்று சிறுவர்களுக்கு இந்த மாசற்ற இருதய பக்தியை பரப்பவும், இந்த இருதய பக்தியில் நிறைந்து இருக்கிறவர்கள், மீட்பை பெறுவார்கள் என்றும் காட்சி கொடுத்ததாக, வரலாறு கூறுகிறது. 

    மரியாவின் தூய்மைமிகு இருதயத்தை குறித்து, மாசற்ற இருதயத்தை குறித்து, இந்த நாளில் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். மரியாவின் இருதயம் இறைவனின் திட்டத்திற்கு தன்னை முழுமையாக கையளிக்க வைத்தது. மரியாவின் இருதயம் தேவையில் இருப்பவரைக் கண்டு ஓடிச்சென்று உதவ வைத்தது. மரியாவின் இதயம் அடுத்தவரின் துன்பத்தில் பங்கெடுக்கவும், கடவுளின் அருளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதிலும், துடிக்க கூடிய ஒரு இதயமாக இருந்தது. 

       மரியாவின் இதயம் தான் பெற்றெடுத்த மகனை இந்த அகிலத்தின் நன்மைக்காக அர்ப்பணிக்க முன் வந்தது. இந்த மரியாவின் இதயம் பல்வேறு வேதனைகளை சுமந்து கொண்டு, கடவுளின் வார்த்தையை இதயத்தில் இருத்தி இருத்தி, சிந்திக்க கூடிய இதயமாக இருந்தது. 

       இத்தகைய இதயம் உங்கள் இதயமாகவும் எனது இதயமாகவும் மாறிட வேண்டும் என்பதுதான் இந்த நாள் நமக்கு தருகின்ற வாழ்வுக்கான சிந்தனையாக இருக்கிறது. கடவுள் படைத்த இந்த உலகத்தில் பலவிதமான பாகுபாடுகளுக்கு மத்தியிலும், வேறுபாடுகளுக்கு மத்தியிலும், நாம் "நம்மை" என்ற எண்ணத்தை புறம் தள்ளிவிட்டு, நம்மோடு இருக்கின்ற அனைவர் மீதான அன்பிலும் அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற பண்பிலும் வளர்வதற்கான ஆற்றலை வேண்டுவோம். 

        மரியாவின் மாசற்ற இருதயம் போல நமது இருதயமும் மாசற்ற இருதயமாக மாறிட இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...