இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
நம்பிக்கையோடு காத்திருப்பவர்கள் எல்லாம் கடவுளிடமிருந்து, உரிய நேரத்தில் நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்ற வாக்கிற்கு ஏற்ப, நம்பிக்கையோடு தோபியாவுக்காக காத்திருந்த தோபித்து, பார்வையற்ற நிலையில் இருந்த அவர், கடவுளை நோக்கி கண்ணீரோடு தன் மன்றாட்டை எழுப்பியவர். ஏன் மற்றவரின் இழிச் சொல்லுக்கு ஆளாகி மற்றவர்கள் தன்னை ஏச்சு பேசுகிற போது, நான் இவர்களுக்கு மத்தியில் ஏன் வாழ வேண்டும் என்று எண்ணி, தன் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என கடவுளிடத்தில் மன்றாடிய ஒரு நபர். ஆனால் கடவுள் உரிய நேரத்தில் தன் வாழ்வில் இருக்கின்ற துன்பத்தை மாற்ற வல்லவர் என்ற ஆழமான நம்பிக்கை அவரிடத்தில் இருந்தது. அந்த நம்பிக்கையின் நிமித்தமாக கடவுளின் அழைப்பிற்கும் கடவுளின் திட்டத்திற்கும் தன்னை முழுவதுமாக ஒப்படைத்தார்.
தோபியா திருமணம் முடித்து வந்த பிறகாக, இரபேல் வான தூதரின் வார்த்தைகளின் அடிப்படையில், தன் தந்தையை பார்வை பெறுவதற்கு உதவுகின்றார். பார்வை இழந்த நிலையில் இருந்த தோபித்து பார்வை பெற்றவராக, கடவுளை போற்றி புகழுகின்றார்.
இந்த தோபித்திடம் இருந்து நாம் நமது வாழ்விற்கு உள்வாங்கிக் கொள்ள வேண்டிய பாடம், நம் வாழ்வில் துன்பம் நிலைத்திருக்கிறது என்றால், கண்டிப்பாக ஒரு நாள் அத்துன்பம் நம்மை விட்டு மறைந்து போகும் என்பதை மனதில் இருத்தியவர்களாக, நம்பிக்கையோடு, துன்பத்தை துணிவோடு எதிர்கொள்ளவும், கடவுள் மீதான நம்பிக்கையில் நிலைத்திருக்கவும் இன்றைய நாளில் இறைவனிடத்தில் ஆற்றல் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக