இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
நல்லது செய்த ஆண்டவரைப் பின்பற்றுகின்ற நாம் ஒவ்வொருவருமே, நம்மோடு இருப்பவர்களுக்கு நன்மை செய்பவர்களாக இருக்க இன்றைய இறை வார்த்தை நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுள் தொடக்கத்திலிருந்தே மனிதன் தவறுகிற போது தவறை சுட்டிக்காட்டி, அதனை நெறிப்படுத்துபவராக இருந்தார். தூய மக்கள் இனமாக மக்கள் இருக்க வேண்டும் என்பதுதான், இறைவன் விரும்பியதாக இருந்தது. அவ்விருப்பத்தின் அடிப்படையில், தான் மனிதன் தவறிய போதெல்லாம், இறைவாக்கினர்கள், நீதித் தலைவர்கள் எனப் பல்வேறு நபர்கள் வழியாக, நம்மை நெறிப்படுத்துபவராக கடவுள் இருந்தார். இதைத்தான் இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது.
இன்றைய இரண்டாம் வாசகத்திலும் கூட, தூய்மையற்ற நிலையில் இருந்தாலும் கூட, நமக்காக நல்லவர் ஒருவர் தனது இன்னுயிரை தியாகம் செய்தார் என்று, இயேசுவை சுட்டிக்காட்டி, இந்த இயேசுவைப்போல நீங்களும் நானும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
நற்செய்தி வாசகத்திலும் கூட, இந்த இயேசுவை ஏற்றுக் கொண்டிருக்க கூடிய ஒவ்வொருவருமே, இந்த இயேசுவை அறிக்கையிடவும், அறிவிக்கவும், இந்த இயேசுவைப் போல காணுகிற மனிதர்களுக்கெல்லாம், நன்மை செய்பவர்களாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை சுட்டிக்காட்டுகிறது.
இந்த இறைவார்தையின் அடிப்படையில் நமது வாழ்வை சுய ஆய்வு செய்து பார்த்து, நன்மைத்தனங்களால் நமது வாழ்வை அலங்கரித்துக் கொண்டு, நாளும் இயேசுவின் பாதையில் பயணிக்க இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக