இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
கடவுள் நம்மை இம்மண்ணில் படைத்திருக்கிறார் என்றால், நமக்கான நோக்கத்தையும் நம் படைப்புக்கான காரணத்தையும் நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். கடவுள் நம்மை படைத்ததன் நோக்கமே இந்த சமூகத்தில் அனைவரோடும் இணைந்து இன்புற்று வாழ வேண்டும் என்பதற்காகவே. ஆனால் பல நேரங்களில் மற்றவரை துயரப்படுத்தி அதில் வருவது தான் இன்பம் என்று எண்ணுகின்ற மனிதர்களாக நாம் இருக்கின்றோம். ஆனால் மற்றவர் துயருறும் போது அவரின் துயரத்தில் துணை நிற்பதும், அவரது வாழ்வை இன்பமயமான வாழ்வாக மாற்ற துணை நிற்பதும் தான் கடவுள் நம்மை படைத்ததன் நோக்கம் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம்.
திராட்சை தோட்டத்தை சிலரிடத்தில் குத்தகைக்கு கொடுக்கின்ற போது, இவர்கள் இங்கு உழைத்து, இதிலிருந்து வருகின்ற பயனில் நமக்குரியதை தருவார்கள் என்ற நம்பிக்கையோடு தான் திராட்சைத் தோட்ட உரிமையாளர் திராட்சை தோட்டத்தை குத்தகைக்கு விட்டார். ஆனால் குத்தகைக்குச் சென்ற மனிதர்கள் எல்லாம் அத்தோட்டத்தை உரிமையாக்கிக் கொள்ள எண்ணம் கொண்டு, இந்த நிலத்துக்கு உரியவர்கள் வருகிற போது அவர்களை எள்ளி நகையாடுகிறவர்களாகவும் கொன்றொளிக்கின்ற நபர்களாகவும் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். இத்தகைய ஒரு வாழ்வாக நமது வாழ்வு இருக்கிறது என்றால், அது கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வு அல்ல. கடவுள் இந்தக் காரியத்திற்காக நம்மை மண்ணில் படைக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டு, நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் கடவுள் நம்மை எதற்கு படைத்தார் என்பதை ஆழமாக உணர்ந்தவர்களாக, நம்மிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சரிவர செய்து இறைவனோடு எப்போதும் இணைந்து வாழக்கூடியவர்களாக இம்மண்ணில் ஒவ்வொருவரோடும் இணைந்து மனம் வீசுகின்ற மலர்களாக நாம் இருக்க ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக