ஞாயிறு, 19 மே, 2024

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  

 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
      இன்றைய முதல் வாசகம், முதல் பெற்றோரின் பாவத்தை சுட்டிக் காட்டுகிறது. இன்றைய நற்செய்தி வாசகம் முதல் பெற்றோரின் பாவத்தால் இழந்த உறவை மீண்டும் இறைவன் கொடுக்கின்ற ஒரு நிகழ்வாக, தன்னுடைய ஒரே தாயை நமக்குத் தாயாக கொடுத்த நிகழ்வை நாம் வாசிக்க கேட்கின்றோம். இந்த இறை வார்த்தைப் பகுதிகளை இதயத்தில் இருத்தி சிந்திக்கிற போது ஆண்டவர் நமக்கு கொடுத்த அன்புத் தாயாகிய அன்னை மரியாவின் மீது ஆழமான அன்பை வளர்த்துக்கொண்டு அன்னை மரியாவின் வழியாக ஆண்டவரிடத்தில் இறை வேண்டலை முன்னெடுக்கவும், அன்னை மரியா ஆண்டவருக்கு உகந்த வாழ்வை தம் வாழ்வாக அமைத்துக் கொண்டது போல நீங்களும் நானும் நமது வாழ்வை அன்னை மரியாவின் வாழ்வு போல ஆண்டவருக்கு உகந்த வாழ்வாக அமைத்துக் கொள்ள இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் நமது வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் இருத்திக் கொள்ள அழைக்கப்படுகிறோம். இந்த வாழ்வுக்கான பாடத்தை வெறும் வார்த்தையாக எண்ணி கடந்து விடாமல், இந்த வார்த்தைகளை இதயத்தில் இருத்தி சிந்தித்தவர்களாக இந்த அகிலத்தில் கடவுளின் திட்டத்திற்கு தன்னை முழுவதுமாக கையளித்து வாழ்ந்த அந்த அன்னையை நமக்கு அன்னையாக கொடுத்த ஆண்டவருடைய பண்பை உணர்ந்து கொண்டவர்களாக நீங்களும் நானும் அன்னை மரியாவைப் போல் அகிலத்தில் பல அறப்பணிகளை முன்னெடுக்கவும், ஆன்மீகப் பணிகளை முன்னெடுக்கவும், ஆண்டவருக்கு உகந்த வாழ்வை நமது வாழ்வாக மாற்றிக் கொள்ளவும் இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

தூய ஆவியார் பெருவிழா (19-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  


இன்றைய இறை வார்த்தையானது தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுக்க வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது. 

தூய ஆவியானவரின் குரலுக்கு இயேசுவின் சீடர்கள் செவிகொடுத்தார்கள். அதன் விளைவாக யாருக்கெல்லாம் அஞ்சி நடுங்கி பயந்து போனார்களோ அத்தகைய மனிதர்களின் முன்னிலையில் போய் நின்று இயேசுவின் இறப்பை குறித்தும் உயிர்ப்பை குறித்தும் உறுதியோடும் உரக்கச் சொல்லுகிற நபர்களாக தங்கள் வாழ்வை அவர்கள் மாற்றிக் கொண்டார்கள் இந்தத் தூய ஆவியானவருக்கு நாமும் செவி கொடுக்கிற போது, இந்த அகிலத்தில் இருக்கின்ற அநீதிகளைக் கண்டு அஞ்சாமல், நீதியையும் உண்மையையும் உரக்கச் சொல்லுகிற நபர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும் என்பதை சீடர்களின் சீடர்களின் வாழ்வில் இருந்து நமது வாழ்வுக்கான பாடமாக கற்றுக்கொள்ள இன்றைய இறை வார்த்தை வழியாக அழைக்கப்படுகிறோம்.
       நமக்கு நன்மை தீமையை எடுத்துரைக்கும் அத்தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து நமது வாழ்வை ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு உகந்த ஒரு வாழ்வாக அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

சனி, 18 மே, 2024

இவரது சான்று உண்மையானது!(18-05-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 

இன்றைய இறை வார்த்தையானது, இறைவன் மீது ஆழமான அன்பு உறவு கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் சமகாலத்தில், இயேசுவின் சீடர்களுள் ஒருவரான யோவான் இயேசுவின் மீது அதிக அன்பு கொண்டிருந்தார் என்பதும், இந்த யோவானுக்கு அழிவு என்பது இல்லை என்பதும் இயேசுவின் சீடர்களின் மன நிலையாக இருந்தது. அப்படிப்பட்ட சூழலில் இவருக்கு என்னவாகும் என்று கேள்வியை இயேசுவை நோக்கி எழுப்பிய போது ஆண்டவர் அதே அன்பு கொண்டவர்களாக ஒவ்வொருவரும் தமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார்.. இந்த யோவானை போலவே நீங்களும் நானும் இயேசுவின் மீது ஆழமான அன்பு கொண்டவர்களாக யோவானை போலவே இயேசுவுக்கு சான்று பகருகின்றவர்களாக இயேசுவைப் பற்றி இறுதிவரை அறிவிக்கின்ற நபர்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இந்த இறை வார்த்தை வழியாக அழைக்கப்படுகிறோம். இந்த இறைவா வார்த்தை தருகின்ற அழைப்பை இதயத்தில் இருத்திக்கொண்டு ஆண்டவர் இயேசுவை இன்னும் அதிகமாக அன்பு செய்கின்ற நபர்களாக நமது வாழ்வை அலங்கரித்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம் இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

சனி, 17 ஜூன், 2023

நன்மை செய்வோம்! நல்லவராய் வாழ்வோம்! (18-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

            நல்லது செய்த ஆண்டவரைப் பின்பற்றுகின்ற நாம் ஒவ்வொருவருமே,  நம்மோடு இருப்பவர்களுக்கு நன்மை செய்பவர்களாக இருக்க இன்றைய இறை வார்த்தை நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுள் தொடக்கத்திலிருந்தே மனிதன் தவறுகிற போது தவறை சுட்டிக்காட்டி, அதனை நெறிப்படுத்துபவராக இருந்தார். தூய மக்கள் இனமாக மக்கள் இருக்க வேண்டும் என்பதுதான், இறைவன் விரும்பியதாக இருந்தது.  அவ்விருப்பத்தின் அடிப்படையில், தான் மனிதன் தவறிய போதெல்லாம், இறைவாக்கினர்கள், நீதித் தலைவர்கள் எனப் பல்வேறு நபர்கள் வழியாக, நம்மை நெறிப்படுத்துபவராக கடவுள் இருந்தார். இதைத்தான் இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. 

      இன்றைய இரண்டாம் வாசகத்திலும் கூட, தூய்மையற்ற நிலையில் இருந்தாலும் கூட, நமக்காக நல்லவர் ஒருவர் தனது இன்னுயிரை தியாகம் செய்தார் என்று, இயேசுவை சுட்டிக்காட்டி, இந்த இயேசுவைப்போல நீங்களும் நானும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. 

       நற்செய்தி வாசகத்திலும் கூட,  இந்த இயேசுவை ஏற்றுக் கொண்டிருக்க கூடிய ஒவ்வொருவருமே, இந்த இயேசுவை அறிக்கையிடவும், அறிவிக்கவும், இந்த இயேசுவைப் போல காணுகிற மனிதர்களுக்கெல்லாம், நன்மை செய்பவர்களாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை சுட்டிக்காட்டுகிறது. 

       இந்த இறைவார்தையின் அடிப்படையில் நமது வாழ்வை சுய ஆய்வு செய்து பார்த்து, நன்மைத்தனங்களால் நமது வாழ்வை அலங்கரித்துக் கொண்டு, நாளும் இயேசுவின்  பாதையில் பயணிக்க இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

      

அன்னை மரியாவின் மாசற்ற இருதய பெருவிழா! (-17-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாளில் மரியாவின் மாசற்ற இருதயத்தை நினைவு கூர நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம். 

      1913ம் ஆண்டு, ஜூன் மாதம் 13ம் தேதி பாத்திமா நகரில் அன்னை மரியா காட்சி கொடுத்து, மூன்று சிறுவர்களுக்கு இந்த மாசற்ற இருதய பக்தியை பரப்பவும், இந்த இருதய பக்தியில் நிறைந்து இருக்கிறவர்கள், மீட்பை பெறுவார்கள் என்றும் காட்சி கொடுத்ததாக, வரலாறு கூறுகிறது. 

    மரியாவின் தூய்மைமிகு இருதயத்தை குறித்து, மாசற்ற இருதயத்தை குறித்து, இந்த நாளில் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். மரியாவின் இருதயம் இறைவனின் திட்டத்திற்கு தன்னை முழுமையாக கையளிக்க வைத்தது. மரியாவின் இருதயம் தேவையில் இருப்பவரைக் கண்டு ஓடிச்சென்று உதவ வைத்தது. மரியாவின் இதயம் அடுத்தவரின் துன்பத்தில் பங்கெடுக்கவும், கடவுளின் அருளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதிலும், துடிக்க கூடிய ஒரு இதயமாக இருந்தது. 

       மரியாவின் இதயம் தான் பெற்றெடுத்த மகனை இந்த அகிலத்தின் நன்மைக்காக அர்ப்பணிக்க முன் வந்தது. இந்த மரியாவின் இதயம் பல்வேறு வேதனைகளை சுமந்து கொண்டு, கடவுளின் வார்த்தையை இதயத்தில் இருத்தி இருத்தி, சிந்திக்க கூடிய இதயமாக இருந்தது. 

       இத்தகைய இதயம் உங்கள் இதயமாகவும் எனது இதயமாகவும் மாறிட வேண்டும் என்பதுதான் இந்த நாள் நமக்கு தருகின்ற வாழ்வுக்கான சிந்தனையாக இருக்கிறது. கடவுள் படைத்த இந்த உலகத்தில் பலவிதமான பாகுபாடுகளுக்கு மத்தியிலும், வேறுபாடுகளுக்கு மத்தியிலும், நாம் "நம்மை" என்ற எண்ணத்தை புறம் தள்ளிவிட்டு, நம்மோடு இருக்கின்ற அனைவர் மீதான அன்பிலும் அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற பண்பிலும் வளர்வதற்கான ஆற்றலை வேண்டுவோம். 

        மரியாவின் மாசற்ற இருதயம் போல நமது இருதயமும் மாசற்ற இருதயமாக மாறிட இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

இயேசுவின் திரு இருதய பெருவிழா!(16-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

தாய்த் திரு அவையானது இன்று திரு இருதய ஆண்டவரின் பெருவிழாவினை கொண்டாட அழைப்பு விடுக்கிறது. ஜூன் மாதம் என்றாலே திரு இருதய ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம் என்று சொல்லுவார்கள். இந்த மாதத்தில் பலரும் தங்கள் வீடுகளில் வைத்திருக்கிற திரு இருதய ஆண்டவர் படத்தை புதுப்பிப்பது வழக்கம். 

      இந்த திரு இருதய ஆண்டவர் நம் குடும்பங்களை தமது திரு இருதயத்தில் வைத்து பாதுகாப்பார் என்பது நமது நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் நிமித்தமாக இன்றைய இறை வார்த்தையை உற்று நோக்குகிற போது கடவுள் நம்மீது எந்த அளவிற்கு அன்பு கொண்டார் என்பதை முதல் வாசகம் சுட்டிக்காட்டுகிறது. 

          இரண்டாம் வாசகத்திலும் அந்த அன்பினை நாம் ஒருவர் மற்றவரோடு பகிர வேண்டும் என்பதை இறைவார்த்தை நமக்கு எடுத்துரைக்கிறது. 

    இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நம்மோடு இருப்பவர்கள் ஒவ்வொருவரையும் அன்பு செய்யவும், இரக்கம் காட்டவும், அவர்களுக்கான நல்லதை செய்வதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கவும் இறைவனிடத்தில் ஆற்றல் வேண்டுவோம். 

         இயேசுவின் இருதயத்திலிருந்து பொழியப்படுகின்ற அன்பு நம்மையும் நமது குடும்பத்தையும் பாதுகாப்பது போல நாமும், அன்பால்  இந்த அகிலத்தில் உள்ள ஒவ்வொருவரோடும் இணைந்து இறைவனை புகழ்வதற்கு ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 
      

தம் சகோதர சகோதரிகளிடம் சினம் கொள்கிறவர் தண்டனை தீர்ப்புக்கு ஆளாவார்! (15-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!


          கிறிஸ்தவர்களாகிய நம்முடைய நெறி மிகச்சிறந்த நெறியாக  இருக்க வேண்டும் என்பது இன்றைய இறைவார்த்தை நமக்கு தருகின்ற வாழ்வுக்கான பாடமாக இருக்கிறது.  அது என்ன நமக்கான நெறி? என்று கேள்வியை எழுப்புகிற போது இயேசுவை அறிந்து அவரின் வழித்தடங்களில் பயணிக்க கூடிய நாம் ஒவ்வொருவருமே அவரைப் போல இந்த சமூகத்தில் வாழ வேண்டும். 

       மன்னியுங்கள் என்று சொன்ன இயேசு, மன்னிப்பவராக உயிர் விடுகின்ற நேரத்திலும் தன் வார்த்தைக்கு செயல் வடிவம் கொடுத்தார்.  இந்த இயேசுவை ஏற்றுக் கொண்டு அவர் மீதான நம்பிக்கையில் நாளும் வளர்ந்து கொண்டிருக்க கூடிய நீங்களும் நானும், இந்த இயேசுவின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் இதயத்தில் இருத்தியவர்களாக, அவ்வார்த்தைக்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள இறைவனிடத்தில் ஆற்றல் வேண்டுவோம். தூய ஆவியானவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவதற்கான ஆற்றலைத் தந்து நம்மை வழிநடத்துவார் என்ற ஆழமான நம்பிக்கையோடு இந்த நாளில் இனிதாய் பயணிப்போம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

செவ்வாய், 13 ஜூன், 2023

அழிப்பதற்கு அல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்! (14-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

கடவுளுக்குரிய காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருக்க, கடவுளின் கட்டளைகளை பின்பற்றுவதற்கு  இன்றைய இறை வார்த்தை வழியாக நீங்களும் நானும் அழைக்கப்படுகின்றோம். கட்டளைகளை பின்பற்றுகிற ஒவ்வொரு மனிதனுமே விண்ணகத்தில் பெரிய மனிதராக இருப்போம் என்று இன்றைய இறை வார்த்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

        இந்த இறைவார்த்தையின் அடிப்படையில் இம்மண்ணில் வாழுகிற ஒவ்வொரு நாளும் நாம் அறிந்த  இயேசுவை அறிக்கையிடவும்,    அவரிடத்தில் காணப்பட்ட நற்பண்புகளை நமது நற்பண்புகளாக இம்மண்ணில் செயல்படுத்தவும் ஆற்றல் வேண்டி இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

பதுவை நகர் புனித அந்தோணியார்! (13-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்

தாய் திரு அவையோடு இணைந்து இன்று நாம் புனித பதுவை நகர் அந்தோனியாரை நினைவு கூர அழைக்கப்படுகின்றோம். இன்றைய வாசகங்களில் கூட கடவுள் உண்மையுள்ளவர் என்பது வெளிப்படுத்தப்படுகிறது. இந்த உண்மையான கடவுளை அறிவிப்பது மட்டுமே தன் வாழ்வின் இலக்கு என கருதிய ஒரு மனிதனாக , இயேசுவைப் பற்றிய நற்செய்தியை உலகெங்கும் சென்று அறிவிக்க கூடியவராக, அறிவித்து, அப்படி அறிவித்ததன் பயனாக அழியா நாக்கோடு இன்றும் நம் மத்தியில் நினைவு கூரப்படுகின்ற பதுவை நகர் புனித அந்தோணியாரின் திருவிழா வாழ்த்துகளை உங்களுக்கு  உரித்தாக்குகிறேன். நாம் அறிந்த நிலையில் புனித அந்தோனியாரின் நாமத்தை தாங்கியவர்களுக்கு இன்றைய நாளில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோம். 

                இந்த அந்தோணியார் இந்த மண்ணில் வாழ்ந்த போது, இன்றைய நற்செய்தி வாசகத்திற்கு ஏற்ப உப்பாகவும் ஒளியாகவும் விளங்கினார். 


      உப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று உணவில். ஆனால் அது இருப்பது பெரிய அளவிற்கு வெளியில் தெரியாது. ஆனாலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அதுபோலவே அந்தோணியார் என்பவர் ஒரு சிறிய மனிதராக இருந்தாலும் கூட , நம்பிக்கை நிறைந்த மனிதர்களுக்கு இவர் பல நன்மைகளை செய்தார் என்றும், கடவுள் மீது கொண்டிருந்த நம்பிக்கையினால் பலவிதமான அரும் செயல்களை செய்தார் என்றும் இவரைக் குறித்து இவரது வரலாற்றை நாம் அறிந்து கொள்ள முடியும். 


  இந்த அந்தோனியாரை நினைவு கூருகின்ற இன்றைய நன்னாளில், நாமும் அந்தோணியாரைப் போல ஆண்டவர் இயேசுவை அறிக்கையிட்டு மற்றவர்களும் நம்மிடமிருந்து ஆண்டவர் இயேசுவை அறிந்து கொள்ள இந்த உலகில் நல்லதொரு ஒளியாக செயல்படுவதற்கான ஆற்றல் வேண்டுவோம். அந்தோணியாரின் வழியாக நம்பிக்கையில் இன்னும் ஆழப்படவும், உப்பாகவும் ஒளியாகவும் இயேசுவை அறிவிப்பதில் விளங்கவும் ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.


      

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்! (12-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

       ஆண்டவர் இயேசு கிறிஸ்து கற்பித்த மலைப் பொழிவை குறித்தே இன்று நாம் வாசிக்க கேட்டோம். மண்ணில் வாழுகிற ஒவ்வொரு மனிதனும் எப்படி வாழ வேண்டும் என்பதைத்தான் இந்த மலைப்பொழிவானது நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

     ஏழைகளின் மீது அக்கறை கொண்டவர்களாகவும் துயரத்தில் இருப்பவர்களுக்கு துணை நிற்பவர்களாகவும் நீதியை நாடி தேடக்கூடியவர்களுமாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.

      மலைப்பொழிவில் சொல்லப்பட்ட வார்த்தைகளை எல்லாம் வெறும் வார்த்தையாக இயேசு சொல்லவில்லை. சொன்னபடி தம் வாழ்வை அமைத்துக் கொண்டவர் இந்த இயேசு.  நமக்காக பாடுகள் பட்டு, ரத்தம் சிந்தி, சிலுவையில் தன் இன்னுயிரை தியாகம் செய்தவர்.  இந்த இயேசுவை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு நாம் பயணிக்கின்ற இச்சமுகத்தில் ஒருவர் மற்றவருக்கு நம்மால் முடிந்த நன்மைகளை செய்து, வாசிக்கப்பட்ட மலைப்பொழிவு வசனங்களை நம் வாழ்வில் செயலாக்கபடுத்துவதற்கான ஆற்றல் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

இயேசுவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா! (11-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

        தாய்த்திரு அவையோடு இணைந்து இன்று நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவினை கொண்டாட நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம். நமக்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்து தனது உடலையும் இரத்தத்தையும் சிலுவையில் தியாகமாக தந்தார். அவரின் தியாகத்தையும் அவர் நம் மீது கொண்டிருந்த அன்பையும் ஒவ்வொரு நாளும் நினைவு கூரும் வண்ணமாகத் தான் ஒவ்வொரு நாளும்  கல்வாரிப்பாடுகளை நாம் திருப்பலியில் நினைவு கூருகிறோம். 

             ஏதோ வாடிக்கை கிறிஸ்தவர்களாக, திருப்பலிக்கு வந்து செல்லுகிறவர்களாக நாம் இருந்து விடாமல் உண்மையிலுமே திருப்பலியில் பங்கெடுக்கிற போது இந்த இயேசு நமக்கு முன்மாதிரியாக கற்றுக் கொடுத்த வாழ்க்கைக்கான பாடங்களை இதயத்தில் இருத்திக் கொள்ளவும், நமக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்ற இந்த இயேசுவைப் போல, அடுத்தவருக்காக நம்மையும் இழக்கத் துணிந்தவர்களாக இருக்கவும், நற்கருணை மீதான நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் வேரூன்றவும் இறைவனிடத்தில் ஆற்றல் வேண்டிட இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.

      நற்கருணை மீதான அதீத நம்பிக்கை கொள்வோம். நமக்காக காத்திருக்கின்ற இறைவனிடத்தில் சில மணித்துளிகள் ஒதுக்கி உரையாடுவோம். எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் என்று சொல்லி, அப்ப வடிவில் நம் மத்தியில் வீற்றிருக்கின்ற இறைவனை அனுதினமும் சந்தித்து அவரோடு உரையாடி, நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளிலிருந்து உள்ளத்தில் உறுதி ஏற்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...