அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே,
இன்று நாம் தூய ஜெபமாலை அன்னையின் விழாவை கொண்டாடிட திருஅவை நமக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த விழா, ஜெபத்தின் வல்லமையையும், அன்னை மரியாளின் துணையையும் நமக்கு நினைவூட்டுகிறது.
- திருத்தூதர் பணிகள் 1:12-14 இல், இயேசு விண்ணேற்றம் அடைந்தபின், திருத்தூதர்கள் தாய் மரியாளோடும், பெண்களோடும், இயேசுவின் உறவினரோடும் சேர்ந்து ஒரே மனத்தோடு ஜெபித்தார்கள் என்று வாசிக்கிறோம். இதனால் தொடக்க கால திருஅவை ஜெபத்தின் மேல், மரியாவின் துணையின் மேல் நம்பிக்கை வைத்து வாழ்ந்தது தெரியவருகிறது.
- லூக்கா 1:26-38 இல், மரியாவிற்கு வானதூதர் கபிரியேல் அளித்த அறிவிப்பில், “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று மரியா முழுமையாக இறைவனுக்குச் அர்ப்பணிக்கின்றார்.
இந்த இரண்டு வாசகங்களும் நமக்கு தரும் பாடம்: மரியாள் எப்போதும் ஜெபத்தில் இறைவனோடு இணைந்து வாழ்ந்தார்; அதனால் அவர் ஜெபத்தின் அன்னையாகத் திகழ்கிறார்.
ஜெபமாலை – மரியாளோடு இணைந்து இயேசுவின் வாழ்வை தியானிக்கும் வழி
ஜெபமாலை என்பது வெறும் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்வது அல்ல. அது:
- இயேசுவின் பிறப்பு, வாழ்க்கை, மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை மரியாளின் கண்களால் தியானிப்பதாகும்.
- நம் மனமும், ஐம்புலன்களும் சேர்ந்து இறைவனில் கவனம் செலுத்தும் ஒரு ஆழ்ந்த ஜெபமுறையே ஜெபமாலை ஜெபிப்பது .
அதனால்தான் வீரமாமுனிவர் ஜெபமாலையை “மானிடர்களை மீட்க வானவர் விடுகின்ற வடம்” என்று அழைக்கிறார்.
ஜெபமாலை குறித்து வரலாறு நமக்கு தரும் சாட்சி
1571 ஆம் ஆண்டு லெபந்தோ யுத்தத்தில், கிறிஸ்தவர்கள் ஜெபமாலை கொண்டு அன்னை மரியாளிடம் வேண்டியபோது, அவர்கள் வெற்றி பெற்றார்கள்.
அதேபோல், 1917 ஆம் ஆண்டு பாத்திமாவில், மரியா மூன்று சிறுமிகளுக்கு தோன்றி, “ஜெபமாலை ஜெபியுங்கள், அதுவே உலகிற்கு அமைதி தரும் வழி” என்று கூறினார்.
இதனால், ஜெபமாலை என்பது வரலாறே சாட்சி சொல்லும் ஒரு வல்லமைமிக்க ஜெபமுறை என்று நாம் உணர்ந்து கொள்ள இன்று அழைக்கப்படுகிறோம்.
எனவே அன்புக்கு உரியவர்களே ,
- நாம் தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும் ஜெபமாலை சொல்லுகிறோமா?
- எதிர்பாராத சிரமங்களில், நோய்களில், சோதனைகளில், அன்னை மரியாவின் துணையோடு நம் ஜெபிக்கின்றோமா? இன்று நாம் சிந்திக்க அழைக்கப்படுகிறோம் ...
ஜெபமாலை ஜெபிப்பவர்களுக்கு அன்னை மரியா அளித்த வாக்குறுதிகளை இன்று நாம் நினைவு கூறுவது சாலச் சிறந்தது:
- ஜெபமாலை சொல்வோர் என் மகனின் சகோதர சகோதரிகளாக இருப்பர்...
- அவர்களுக்கு பாதுகாப்பும், அருளும் கிடைக்கும்...
- அவர்களின் வாழ்வு தூய்மையிலும் நற்செயல்களிலும் வளர்ச்சி பெறும்...
- இறக்கும் வேளையில் அவர்கள் விண்ணக மகிமை அடைவார்கள்....
எனவே அன்பான சகோதர சகோதரிகளே,
இன்று ஜெபமாலை அன்னையின் விழாவில் இனிவரும் நாட்களில்
“ஜெபமாலை சொல்வோம் – வெற்றி பெறுவோம்.” என உறுதி ஏற்போம் ...
நம் குடும்பத்தில் தினமும் ஜெபமாலை ஜெபிக்கும் ஒரு பழக்கத்தை உருவாக்குவோம். அன்னை மரியாளின் துணையோடு இயேசுவின் வாழ்வை தியானித்து, அவரது மீட்பை பெறுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக