செவ்வாய், 27 செப்டம்பர், 2022

நம்பிக்கையின் சாட்சிகளாய் வாழ்வோம்! (27-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

                      இன்றைய முதல் வாசகத்தில் யோபு தன்னை குறித்தும், தான் பிறந்த நாளைக் குறித்தும்,  இழிவாக கருதுகிறார். காரணம், தன் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்களுக்கு காரணம், இறைவன் அல்ல, மாறாக தன்னை இந்நிலைக்கு உள்ளாக்கும் அளவிற்கு தன்னுடைய செயல்பாடுகள் இருந்ததோ என்ற எண்ணத்தின் அடிப்படையில் அவர் தன்னை குறித்து வருந்தக் கூடியவராக, தன்னை தாழ்த்திக் கொள்ளக் கூடியவராக, இறைவனின் திருமுன்னிலையில் இருப்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட உயிர்த்த  ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கையற்றிருந்த மனிதர்களை வானில் இருந்து தீயைப் பொழிந்து அழித்துவிடுமாறு இயேசுவின் சீடர்கள் கூறிய போது, நம்பிக்கையால் நீங்கள் ஆழப்படவும், நம்பிக்கையின் சாட்சிகளாய் இருப்பதற்குமான அழைப்பை அவர்களுக்கு கடவுள் தரக்கூடியவராக  
 இருப்பதை நாம் இன்றைய இறைவார்த்தை வழியாக உணர்ந்து கொள்ள முடிகிறது. 

    இந்த இறை வார்த்தையின்  பின்னணியில் நமது வாழ்வை சீர்தூக்குகிற போது,  நமது வாழ்வில் ஏற்படுகின்ற துன்பங்கள் பல நேரங்களில் கடவுள் மீது நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையிலிருந்து விலகிச் செல்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கலாம். ஆனால், துன்பங்களுக்கு மத்தியிலும்     கடவுள் நம்மை கரம் பிடித்து வழி நடத்துவார், என்ற ஆழமான நம்பிக்கையோடு, துன்பங்களுக்கு மத்தியிலும் இறைவனை இன்முகத்தோடு அதிகமாக தேடுவதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இணைந்து தொடர்ந்து இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.       

துன்பங்களுக்கு மத்தியிலும் இறைத்திருவுளம் நிறைவேற்ற ஆற்றல் பெறுவோம்! (26-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

இன்றைய இறை வார்த்தையானது 
கடவுளின் பெயரால் நாம் நமது வாழ்வில் நடக்கின்ற எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழைப்பை நமக்கு தருகிறது.  

இன்றைய முதல் வாசகத்தில் யோபுவின் வாழ்வை குறித்து நாம் வாசிக்கக் கேட்டோம். கடவுளிடம் அனுமதி பெற்று சாத்தான் யோபுவை சோதித்த போது, யோபு அனைத்து விதமான துன்பங்களுக்கு மத்தியிலும், கடவுள் கொடுத்தார்; கடவுள் எடுத்துக்கொண்டார் என்ற மனநிலையோடு கடவுளிடம் இருந்து வருகின்ற நன்மைகளை மட்டும் எண்ணி நன்றி கூறுகிறவர்கள்,  துன்பங்களை ஏன் ஏற்கக் கூடாது?  என்ற மனநிலை கொண்ட மனிதராக வாழ்ந்ததை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்த இறை வார்த்தையின் பின்னணியோடு,  நாம் இயேசுவின் வாழ்வை ஒப்பிட்டுப் பார்க்கிற போது, தனது வாழ்வில் ஏற்பட்ட எல்லாவிதமான துன்பங்களுக்கு மத்தியிலும்,  கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை மட்டுமே இயேசு தன் வாழ்வின் இலக்காகக் கொண்டிருந்தார்.  இந்த இலக்கை நாமும் நமது இலக்காக கொண்டு, கடவுளின் சார்பாக, கடவுள் நமது வாழ்வில் அனுமதிக்க கூடிய எல்லா விதமான இன்ப துன்பங்களுக்கு மத்தியிலும் அனைத்தையும் கடவுளுக்காக ஏற்றுக் கொண்டு இணைந்து அவரது அன்புறவில் தொடர்ந்து பயணிப்பதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

       

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

நாம் யாரை கண்டு கொள்கிறோம்? (25-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

       மண்ணில் வாழுகிற ஒவ்வொரு மனிதனுமே  அருகில் இருப்பவர்களின் இன்ப துன்பங்களை கண்டும் காணாதவர்களாக இருத்தல் ஆகாது என்பதை இன்றைய இறை வார்த்தையானது எடுத்துரைக்கிறது. செல்வந்தர் மற்றும் ஏழை லாசரைப் பற்றிய உவமையை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம். அருகில் துன்பப்பட்டுக் கொண்டிருந்த லாசரை கண்டுகொள்ளாத நிலையில் இருந்த செல்வந்தனை  குறித்து இறைவன் உரைப்பதை எல்லாம் நாம் நமது வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்க அழைக்கப்படுகின்றோம். 

          பல நேரங்களில் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் அருகாமையில் துன்புறக் கூடிய மனிதர்கள் இருக்கின்ற போது,  அவர்களை கண்டும் காணாத மனிதர்களாக நாம் பயணிக்கிறோம் என்றால் நாம் செல்லுகின்ற பாதை தவறு என்பதை இறைவன் இன்றைய இறைவார்த்தை வழியாக உணர்த்தக்கூடியவராக இருக்கின்றார்.
     அன்று தொடக்க காலத்தில் இஸ்ரயேல் மக்கள் பலவிதமான துன்பங்களுக்கு மத்தியில் கவலைகளோடும் கண்ணீரோடும் வாழ்ந்தபோது அவர்களை  தங்களுடைய அடிமைகளாக வைத்துக் கொள்ளவே பலரும் விரும்பினார்கள். அவர்களின் அந்த அடிமை நிலையை தங்களுக்கு  சாதகமாக மாற்றிக் கொண்டு, பலவிதமான இன்னல்களை மட்டுமே இஸ்ராயேல் மக்களுக்கு தரக்கூடியவர்களாக இருந்தார்கள் பலர். அவர்களை எல்லாம் கடவுள் சாடக்கூடியவராக, உங்களுடைய இன்பம் விரைவில் துன்பமாக மாறும் என்பதை எடுத்துரைக்கக் கூடியவராக, உங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு துன்புறுகின்ற மனிதனுக்கு துணை நிற்கக் கூடிய ஒரு அழைப்பினை இறைவன் இறை வார்த்தை வழியாக நாளும் நமக்கு தருகிறார்.
       இந்த இறைவனின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக் கொண்ட மனிதர்களாக நாம் இன்றைய இரண்டாம் வாசகம் குறிப்பிடுவது போல, நீதியோடும் இறைப்பற்று மிக்க மனிதர்களாகவும், நம்பிக்கையோடும் பணிவு  மிக்க மனிதர்களாகவும் ஒவ்வொரு நாளும் இச்சமூகத்தில் வாழவும் வளரவும் அழைக்கப்படுகின்றோம். இத்தகைய வளர்ச்சி நம்மில் மலருகிறது என்றால் நாம் கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை நமது வாழ்வாக மாற்றிக் கொள்ள முடியும். நமது அருகில் இருப்பவர்களின் துன்பத்தைக் கண்டு அதை வேடிக்கை பார்க்கும் மனிதர்களாக இல்லாமல், அவர்களோடு துணை நிற்கக் கூடியவர்களாக நாம் மாறிட முடியும் என்ற ஆழமான சிந்தனையினை இறைவன் இன்றைய நாளில் நமக்கு தருகிறார். 

இறைவன் தருகின்ற இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக சக மனிதர்களை அன்பு செய்து, மற்றவரின்  இன்ப துன்பத்தில் உடன் இருப்பதற்கான ஆற்றலை வேண்டி இறைவனிடத்தில் தொடர்ந்து மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.  

சனி, 24 செப்டம்பர், 2022

இளமையின் மகிழ்ச்சியில் இறைவனைப் புகழ்வோம்! (24-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

இளமைப் பருவம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கே.  இந்த இளமைப் பருவத்தில் மனம் விரும்புவதையெல்லாம் செய்வதற்கும், ஆனால் செய்கிற ஒவ்வொன்றிற்கும் இறுதி நாளில் கடவுளுக்கு நாம் கணக்குத் தர வேண்டி இருக்கிறது என்பதையும் இன்றைய முதல் வாசகம் ஆழமாக எடுத்துரைக்கிறது. 

   இந்த இறை வார்த்தையின் பின்னணியோடு நற்செய்தி வாசகத்தை நோக்குகிற போது ஆண்டவர் உரைக்கின்ற அனைத்தையும் மனதில் இருத்திக் கொள்ளக்கூடிய மனிதர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான ஒரு அழைப்பை இறைவன் தருகிறார். இறைவனுடைய வார்த்தைகளை இதயத்தில் இருத்திக் கொண்டு அதற்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாக நீங்களும் நானும் வளர்வதற்கான ஆற்றலை வேண்டி இறைவனிடத்தில் இன்றைய நாளில் தொடர்ந்து மன்றாடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

வியாழன், 22 செப்டம்பர், 2022

நீர் கடவுளின் மெசியா! (23-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

     

    மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனுமே வாழுகின்ற ஒவ்வொரு நாளிலும் கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை வாழ வேண்டும் என்பதை இறைவார்த்தை வலியுறுத்துகிறது. பல நேரங்களில் இந்த இறை வார்த்தை வலியுறுத்துகின்ற வாழ்வுக்கான பாடங்களை கேட்டுவிட்டு நகருகின்ற மனிதர்களாக, மாற்றத்திற்கு ஒரு காலம் வரும் என்று எண்ணிக் கொண்டிருக்கக்கூடிய நபர்களாக நாம் இருந்து கொண்டிருக்கிறோம். வருங்காலம் வளமானதாக அமைய, வரும் ஒரு காலம் என்று எண்ணக்கூடிய மனிதர்களாக நீங்களும் நானும் பல நேரங்களில் பயணம் செய்கிறோம்.

         ஒவ்வொன்றிற்கும் ஒரு காலம் உண்டு என்று இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. அதிலும் குறிப்பாக, நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்வதற்கான, அவரை அறிந்து கொண்ட நாம், அவரை அறிவிப்பதற்கான ஒரு காலமே இந்த காலம் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக, இயேசுவை நாம் எந்த அளவிற்கு அறிந்து வைத்திருக்கிறோம், அறிக்கையிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை குறித்து சிந்திப்பதற்கு இன்றைய நாள் இறைவார்த்தையானது நமக்கு அழைப்பு தருகிறது. 

இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்ட மனிதர்களாக, ஆண்டவரை இன்னும் ஆழமாக அறிந்து கொள்ளவும், அறிந்து கொண்ட ஆண்டவரை அறிக்கையிடவும் ஆற்றல் வேண்டி இறைவனிடத்தில் இன்றைய நாளில் தொடர்ந்து மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

நிலையானவர் இறைவன் மட்டுமே! (22-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய முதல் வாசகமானது சபை உரையாளர் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது இந்த புத்தகத்தின் ஆசிரியர் கடவுள் நம்பிக்கை அற்ற ஒரு மனிதனாக இருந்திருப்பாரோ என்ற எண்ணமானது நமக்குள் எழலாம். ஆனால் கடவுளைத் தேடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு, இந்த உலகில் நடக்கின்ற எல்லா நிகழ்வுகளோடும் தன்னை ஒப்புமைப்படுத்திப் பார்த்து இறுதியில், அனைத்தும் வீண் என்று உணர்ந்து, கடவுள் மட்டுமே நிறைவை தரக்கூடியவர் என்பதை ஆழமாக இந்த புத்தகத்தின் ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

      நிலையற்ற இந்த உலகத்தில் நிலையானது என நாம் எதையோ எண்ணிக் கொண்டு பயணிக்காமல், இறைவன் ஒருவரே நிலையானவர் என்பதை உணர்ந்து கொண்டு, ஒவ்வொரு நாளும் பயணிப்பதற்கான அருளினை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

செவ்வாய், 20 செப்டம்பர், 2022

என்னைப் பின்பற்றி வா! (21-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

நற்செய்தியாளர்களுள் ஒருவரான மத்தேயுவை குறித்து சிந்திக்க இன்றைய நாளில் திருஅவை நமக்கு அழைப்பு தருகிறது. மத்தேயு இந்த மண்ணில் வாழ்ந்த போது, மக்களிடமிருந்து வரிகளை வசூலித்து அதை உரோமையர்களுக்கு கொடுக்கக்கூடிய பணியினை செய்து வந்தார். பொதுவாக இந்த வரி வசூலிக்கும் பணியினை செய்பவர்கள் எல்லாம் தங்களிடம் இருந்து அதிகமாக வசூலித்து, அதை அடுத்த ஆட்சியாளர்களிடம் தருகிறார்கள் என்ற மனநிலை  கொண்டிருந்த காரணத்தினால் மக்கள் அவர்களை வெறுப்புக்கு உள்ளானவர்களாக கருதினார்கள். 

 எனவே இவர்களை பாவிகள் என்று முத்திரை இட்டு,  இவர்களோடு பேசவோ பழகவோ விரும்பாத மனிதர்களாக இவர்களை பாவிகள் என முத்திரை குத்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

 இத்தகைய சூழலுக்கு மத்தியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, அவரை தன் பணிக்கென அழைக்கிறார். அவரும் அனைத்தையும் விட்டுவிட்டு ஆண்டவர் இயேசுவின் பணியை செய்வதற்காக முன் வருகின்றார். 

இந்த மத்தேயுவை போலவே நாமும் நமது வாழ்வில் எந்நிலையில் இருந்திருந்தாலும், கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்கிக் கொள்வதற்கான அழைப்பு அனுதினமும் நமக்கு தரப்படுகிறது. இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் நெறிப்படுத்திக் கொண்டிருக்கிறோமா என்ற கேள்வியை இன்று நாம் நமக்குள்ளாக எழுப்பி பார்க்க அழைக்கப்படுகின்றோம்.

     பவுல் நாம் அனைவரும் கடவுளுக்கு உகந்த மனிதர்களாக,  தூய ஆவியாரின் தூண்டுதலால் ஒருவரோடு ஒருவர் அன்பு செய்து, அன்பால் நாம் கட்டி அமைக்கப்பட்ட ஒற்றைச் சமுதாயமாக வாழ்வதற்கான அழைப்பை முதல் வாசகம் வழியாக வழங்குகிறார். 

இந்த  இறைவார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கி பார்ப்போம்.  நமது வாழ்வு எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை  குறித்து ஆழமாக சிந்திக்கவும், இன்னும் ஆண்டவர் இயேசுவின் மீதான நம்பிக்கையில் ஆழப்படவும், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஆண்டவரின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருவதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இணைந்து செபிப்போம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

திங்கள், 19 செப்டம்பர், 2022

நேர்மையாளர்களாக..........(20-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
கடவுளுடைய வார்த்தையை கேட்டு அதன்படி செயல்படக்கூடிய ஒவ்வொருவரும் அவரின் தாய் மற்றும் சகோதரருக்கு இணையானவர் என்ற இறை வார்த்தையினை இறைவன் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நமக்குத் தருகின்றார். 

          இறைவனுடைய இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவதற்கு நாம் அழைக்கப்படுகின்றோம். 

         பலி செலுத்துவதை விட  நேர்மையாளர்களாக நாம் இருப்பதே கடவுளுக்கு மகிழ்ச்சி தர வல்லது என்பதை முதல் வாசகம் தெளிவுபடுத்துகிறது.

     இறை வார்த்தையை அனுதினமும் கேட்கக்கூடிய நாம், அதற்கு செயல் வடிவம் தரக்கூடிய மனிதர்களாக மாறிட இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டி செபிப்போம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

நன்மை செய்வதே நமது வாழ்வின் இலக்காகும்! (19-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய முதல் வாசகமானது, நன்மை செய்து கொண்டே வாழ்வது மட்டுமே நமது வாழ்வின் இலக்கு என்பதை எடுத்துரைக்கிறது. நம்மிடம் கேட்பவருக்கு நாம் வைத்துக் கொண்டே இல்லை என்று சொல்லாமல் இருப்பதை இல்லாதவரோடு, கேட்பவரோடு பகிர்ந்து வாழ வேண்டும் என்ற வாழ்வுக்கான நெறியை இன்றைய முதல் வாசகம் வலியுறுத்துகிறது. 

                    இந்த வாழ்வுக்கான நெறியை இதயத்தில் ஏற்றுக்கொண்டு வாழ்வை அமைத்துக் கொள்ளுகிற போது நமது வாழ்வு நற்செய்தி வாசகத்தில் வாசிக்க கேட்ட இதை வார்த்தையின் அடிப்படையில், விளக்கு தண்டின் மீது வைக்கப்பட்ட விளக்காக இருந்து, பலரும் பயன்பெறக்கூடிய வகையில் நமது வாழ்வு அமையும். 

   இத்தகைய வாழ்வை நாம் நமது வாழ்வாக மாற்றிக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

சனி, 17 செப்டம்பர், 2022

முன் மதியோடு ....... நம்பிக்கையோடு...... (18-9-22)


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

        மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற வாழ்வுக்கான நெறிகளை இன்றைய வாசகங்கள் முன்மொழிகின்றன. மண்ணில் வாழுகிற போது ஒவ்வொரு மனிதனும் ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை கொண்டவராய், இணைந்து இன்புற்று வாழ வேண்டும். ஆனால், தொடக்க காலத்தில் மனம் போன போக்கில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற மனநிலையோடு, தான் விரும்பிய வகையில் தன் வாழ்வை அமைத்துக் கொள்வதற்காக அடுத்தவர் வாழ்வை துச்சமென கருதுகிற ஒரு போக்கானது மனிதர்களிடத்தில் காணப்பட்டது. இத்தகைய போக்கு தவறு என்பதை இறைவாக்கினர்களும் ஆண்டவர் இயேசுவினுடைய சீடர்களும் துணிவோடு அறிவித்தார்கள். அந்த அடிப்படையில் தான் இன்றைய முதல் வாசகம், மனிதர்களிடத்தில் இருந்த தவறான எண்ணங்களையும், தவறான செயல்களையும் சுட்டிக் காட்டுகிறது. 

                     இன்றைய இரண்டாம் வாசகம் ஒவ்வொரு மனிதனும் இந்த மண்ணில் எப்படிப்பட்ட மனிதனாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுகிறது.

 நற்செய்தி வாசகத்திலும் இறைவன் நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும்,  கடவுளுக்கு உகந்த மனிதர்களாகவும், ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை காட்டக் கூடியவர்களாகவும், எப்போதும் முன்மதியோடு செயல்படுகின்ற மனிதர்களாகவும் இருக்க வேண்டும் என்ற வாழ்வுக்கான பாடத்தை நமக்கு தருகின்றார். 

              இந்த வாழ்வுக்கான பாடங்களை எல்லாம் இதயத்தில் ஏற்றுக் கொண்ட மனிதர்களாக, நீங்களும் நானும், நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

நம்பிக்கையில் பலம் பெறுவோம்! (17-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

        இன்றைய நற்செய்தி வாசகத்தில் விதை உவமையை குறித்து நாம் வாசிக்க கேட்டோம். மண்ணில் விதைக்கப்படுகின்ற விதை முளைக்கிறது. ஆனால் எந்த நிலத்தில் நாம் விழுந்த விதைகளாக இருக்கிறோம் என்ற கேள்வியை நாம் நமக்குள்ளாக எழுப்பிப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம்.  

அனுதினமும் ஆண்டவரின் வார்த்தைகளை கேட்கிறோம். இந்த வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதர்களாக, நாம் நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் போல, 60 மடங்காகவும், 100 மடங்காகவும் விளைச்சல் தருகிறோமா?  அல்லது பாறையின் மீதோ அல்லது முட்செடிகளுக்கு இடையே விழுந்த விதைகளைப் போல பயன் தராது போய்விடுகிறோமா? என்ற கேள்வியை இன்று நமக்குள்ளாக நாம் எழுப்பி பார்க்க அழைக்கப்படுகிறோம். 

தொடக்க காலத்தில் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள் மீது நம்பிக்கை கொண்டிருந்த தொடக்க கால கிறிஸ்தவர்கள், தங்கள் வாழ்வில் இறப்பு உயிர்ப்பை குறித்து பலவிதமான ஐயங்களுக்கு மத்தியில், பலவிதமான கேள்விகளை எழுப்பினார்கள். அவர்களுக்கெல்லாம் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பில்  நாம் பங்கு பெறுவோம். அப்பொழுது மாட்சி பொருந்திய உடலோடு நாம் இருப்போம் என்பதை பவுலடியார் எடுத்துரைக்கின்றார்.

             நாமும் ஆண்டவரின் வார்த்தைகளை அனுதினமும் கேட்கின்றோம். ஐயங்களை மட்டும் வளர்த்துக் கொள்கின்றோமா? அல்லது, ஐயங்களுக்கு மத்தியிலும் ஆண்டவர் மீதான நம்பிக்கையில்  நிலைத்திருக்கின்றோமா? என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிப் பார்த்து நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

நன்மைகளை நன்றியோடு நினைவு கூர்வோம்! (16-9-22)


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

        ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது, சென்ற இடமெல்லாம் நன்மைகளை செய்து கொண்டே சென்றார். அவர் செய்த நன்மைகளின் நிமித்தமாக பலரும் அவர் மீது நம்பிக்கை கொண்டு அவரை பின்பற்றக்கூடிய சீடர்களாக மாறினார்கள். அப்படி மாறிய ஆண் பெண் சீடர்களை குறித்தே, இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம். 

          இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதர்களாக நீங்களும் நானும் இருக்கின்ற போது இறந்த இயேசு உயிர்த்தெழுந்தது போல, நீங்களும் நானும் இறுதி நாளில் உயிர்த்தெழுவோம் என்பது திண்ணம் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. 

            இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கும் வாழ்வுக்கான பாடங்களை இதயத்தில் இருத்தியவர்களாய், மண்ணில் வாழுகிற ஒவ்வொரு நாளுமே ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு செய்த எல்லாவிதமான நன்மைகளையும் நன்றியோடு நினைவுகூர்ந்து, இந்த நன்மைகளின் நிமித்தமாக அவர் மீதான நம்பிக்கையில் இன்றும் என்றும் ஆழப்படுவதற்கான ஆற்றல் வேண்டி இறைவனிடத்தில் தொடர்ந்து மன்றாடுவோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

வியாழன், 15 செப்டம்பர், 2022

தூய அன்னை மரியின் வியாகுலங்கள்! ( 15-9-22)


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

        இன்று தாய்த்திரு அவையானது மரியாவின் ஏழு துயரங்களை நினைவு கூர நமக்கு அழைப்பு விடுக்கின்றது. ஏறக்குறைய 1232 ஆம் ஆண்டு ஏழு பேர் தஸ்கானா பகுதியில் ஒன்றுகூடி மரியின் ஊழியர் சபையை துவங்கினார்கள். இவர்கள் சிலுவை அடியில் நின்ற மரியாவை தங்கள் பாதுகாவலியாக ஏற்றுக் கொண்டு, மரியாவின் துயரங்களை குறித்து ஆழமாக சிந்தித்து துயரத்தின் வழியாக மீட்பு உண்டு என்பதை எடுத்துரைத்தார்கள். மரியாவின் வாழ்வில் ஏற்பட்ட ஏழு துன்பங்கள் என்ன என பார்க்கின்ற போது, 

மரியாவைப் பார்த்து இறைப்பற்று மிகுந்த  சிமியோன் உரைத்த இறைவாக்கு: உமது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும் என்ற இறை வார்த்தையைக் கேட்டு மரியாவின் உள்ளம் கலங்கிற்று. 

    அதுபோல இயேசுவை தூக்கிக் கொண்டு அவர்கள் எகிப்திற்கு தப்பி ஓடியது மரியாவின் வாழ்வில் ஏற்பட்ட இரண்டாவது துயரமாக பார்க்கப்படுகிறது. 

மூன்றாவதாக, தன்னுடைய ஒரே மகனை கோவிலில் தொலைத்து விட்டு, தேடித் திரிந்த மாதாவின் துயரத்தை நாம் நினைவு கூர அழைக்கப்படுகின்றோம்.

 நான்காவதாக, இயேசு தான் பத்து மாதம் சுமந்து பெற்ற மகன் சிலுவையை சுமந்து கொண்டு செல்வதைக் கண்டு தாயின் உள்ளமானது துயருற்றது.

ஐந்தாவதாக, தன்னுடைய ஒரே மகன் சிலுவையில் தொங்குவதை சிலுவையின் அடியில் நின்று தாய் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த துயர நிலையை நாம் நினைவு கூர அழைக்கப்படுகின்றோம். 

ஆறாவதாக, இறந்து போன இயேசுவின் உடலை தன் மடியில் வைத்துக் கொண்டு, தாயானவர் கதறுகின்றார்.  

ஏழாவதாக, தான் உயிரோடு இருக்க, தன்னுடைய மகனை கல்லறையில் அடக்கம் செய்கின்றார்.

இந்த ஏழு துயரங்களையும் நாம் நினைவு கூர அழைக்கப்படுகின்றோம். இந்த மரியாவின் வாழ்வில் ஏற்பட்ட இந்த துயரங்கள், நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது, நமது வாழ்வு இன்பமும் துன்பமும் கலந்த ஒரு வாழ்வு. எது எப்போது வரும் என அறியாத வண்ணம், இறைவன் இரண்டையும் நமது வாழ்வில் மாறி மாறி அனுமதிக்கின்றார். ஆதலால், நாம் துயரத்தின் மத்தியில் இன்பத்தை காண முடியும். துயர நேரங்களில் எல்லாம் கடவுள் நமக்கு துணை இருந்து துன்பங்களை கடந்து வருவதற்கான ஆற்றலை தருவார் என்பதை ஆழமாக உணர்ந்து கொள்ள, இந்த மரியாவின் துன்பங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன. 

      இந்த மரியாவின் துயரங்களை நினைவு கூருகின்ற இந்நன்னாளில் நாம் நமது வாழ்வில் மேற்கொள்ளுகின்ற துயரங்களில் எல்லாம் கடவுளின் உடனிருப்பு நம்மோடு இருந்து நம்மை வழி நடத்துகிறது என்பதை ஆழமாக புரிந்து கொண்டு கடவுள் மீதான நம்பிக்கையில் இன்னும் ஆழப்பட இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டி செபிப்போம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

புதன், 14 செப்டம்பர், 2022

திருச்சிலுவை மகிமையோடு உயர்த்தப்பட்ட விழா ! (14-9-22)


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!


        இன்று தாய்த்திரு அவையானது திருச்சிலுவையை  மகிமைப்படுத்துகின்ற விழாவை  கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கின்றது. மனித வரலாற்றை நாம் திருப்பி பார்க்கிற போது,  பல நிலைகளில் மனிதன் அடிமைப்பட்டு கிடந்த போது, இந்த மனிதனை மீட்டு வருவதற்காக கடவுள் பல வழிகளை கையாண்டார். அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரேல் மக்களை அழைத்து வந்தவர் கடவுள்.  தங்களை அழைத்து வந்த கடவுளை புறம் தள்ளிவிட்டு தங்கள் மனம் போன போக்கில் வாழ முயன்ற போதெல்லாம், பலவிதமான துன்பங்கள் வழியாக, கடவுள் அவர்களுக்கு  தனது உடன் இருப்பையும், தன்னையும் வெளிப்படுத்தக் கூடியவராக, கடவுள் இருந்தார் என்பதை விவிலியத்தின் துணை கொண்டு நாம் அறிகிறோம். 

   ஒரு கட்டத்தில்,  மனிதன் தவறுவது இயல்பு என்பதை உணர்ந்தவராய் இந்த மண்ணில் மனிதனாக வந்து ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை தன் வாழ்வால் வாழ்ந்து காண்பித்து,  நமக்கு முன் உதாரணமாக அனைத்திற்கும் அடிப்படையாக, சிலுவை மரணத்தை ஏற்று,  நம்மை பாவத்திலிருந்து மீட்டார் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. 

     இந்த  ஆண்டவர் இயேசு கிறிஸ்து அறையப்பட்ட சிலுவையை, நம்பிக்கையோடு பயன்படுத்துகிற போது, நோக்குகிறபோது, பலவிதமான நன்மைகளை நாம் பெற்றுக் கொள்வோம் என்பதை வரலாற்றின் துணை கொண்டு நாம் அறிய முடிகிறது. 312ம் ஆண்டுகளில் கான்ஸ்டன்ட்டைன் மன்னன் போர் தொடுத்துச் செல்லுகிற போதெல்லாம், சிலுவை வரையப்பட்ட கொடியினை சுமந்து சென்றார். அதன் விளைவாக போரில் வெற்றி அடைந்தார். ஏறக்குறைய இந்த வெற்றிகளுக்கு பிறகாக,  அவர் கிறிஸ்தவ மதத்தை அரச மதமாக அறிவித்தார். 


13 ஆம் நூற்றாண்டுகளில் கான்ஸ்டன்ட்டைன் மன்னனுடைய தாயானவர்,  கல்வாரி மலைக்குச் சென்று, இயேசு அறையப்பட்ட சிலுவையை தேடினார். ஏறக்குறைய மூன்று சிலுவைகளை அவர் கண்டுபிடித்தார். அதில் எது இயேசு அறையப்பட்ட சிலுவை என்ற கேள்வி அவருக்குள் எழுந்த போது,  கை சூம்பிய ஒரு மனிதனை அழைத்து வந்து, மூன்று சிலுவைகளையும் தொடச் சொன்னார். அப்படி அவன் தொட்ட போது, ஒரு சிலுவையைத் தொட்ட மாத்திரம் அவனது கை நலம் பெற்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு, அதுவே ஆண்டவர் இயேசு அறையப்பட்ட சிலுவை என்று கூறி, அந்த சிலுவையை எடுத்துச் சென்று உரோமையில் ஆலயம் ஒன்றை நிறுவி அதனை அங்கு வைத்தார்.

        எனவேதான் ஒவ்வொரு மாதமும் செப்டம்பர் 14ஆம் தேதி இந்த திருச்சிலுவை நிறுவப்பட்ட தினத்தினை நினைவுகூர்ந்து கொண்டாடிட, திரு அவை நமக்கு அழைப்பு விடுக்கின்றது.‌ இந்த நல்ல நாளில், நாமும் நம்பிக்கையோடு சிலுவையை நோக்குவோம். இந்த சிலுவை நமக்கு கற்றுத் தருகின்ற வாழ்வுக்கான பாடங்களை உணர்ந்து கொள்வோம். இந்த சிலுவை மரணத்தை ஏற்க இறைவன் திருவுளம் கொண்டார். நமது வாழ்வில் துன்பங்களை ஏற்க, அத்துன்பங்களின் வழியாக, நாம் இறைவனை இன்னும் ஆழமாக கண்டுகொள்ள இன்றைய நாளில் இறையருள் வேண்டி தொடர்ந்து செபிப்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 





                 

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

இறப்பிலும் உயிர்ப்பு சாத்தியமே! (13-9-22)


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!


                 இன்றைய இறைவார்த்தைப் பகுதியானது,  நாம் உடலால் தனித்து இருந்தாலும், உள்ளத்தால் ஆண்டவர் இயேசுவோடு ஒன்றிணைந்திருக்கிறோம் என்பதை வலியுறுத்துகிறது. ஆண்டவர் இயேசுவோடு ஒன்றிணைந்து இருக்கக்கூடிய நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு நாளும் நம்பிக்கை நிறைந்த மனிதர்களாக வளர வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை நமக்கு எடுத்துரைக்கிறது.

       நம்பிக்கையின் அடிப்படையில் நாம் செயல்படுகிற போது,  நம் நம்பிக்கையின் நிமித்தமாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து பலவிதமான வல்ல செயல்களை நமது வாழ்வில் செய்ய வல்லவர் என்பதை,  நீங்களும் நானும் உணர்ந்து கொள்ள இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். 


         இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறந்து போன ஒரு விதவை தாயின் மகனுக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து உயிர் கொடுக்கின்றார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது கொள்ளுகின்ற ஆழமான நம்பிக்கை,  இறப்பிலும் உயிர்ப்பை சாத்தியமாக்கும் என்பதை நமக்கு இன்றைய இறைவார்த்தை வழியாக வழங்குகிறது.

       இறைவன் தருகின்ற இந்த இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது உள்ளத்தில் ஆண்டவர் மீதான ஆழமான நம்பிக்கையை விதைத்துக் கொண்டவர்களாக நாளும் பயணம் செய்ய இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

திங்கள், 12 செப்டம்பர், 2022

அன்னை மரியாவின் தூய்மை மிகு பெயர் விழா! (12-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

       இன்று தாய்த்திரு அவையானது, மரியாவின் தூய்மை மிகு பெயரினை நினைவு கூர்ந்து கொண்டாடிட நமக்கு அழைப்பு விடுக்கிறது. வரலாற்றின் பக்கங்களை திருப்பி பார்க்கிற போது, துருக்கிய படை கிறிஸ்தவ நாடுகளின் மீது எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்ற அச்சம் நிலவிக் கொண்டிருந்த சூழ்நிலையில், போலந்து நாட்டு அரசனாக இருந்த ஜான் செவாஸ்க்கி என்பவர், தனது படையினை மரியன்னையின் தூய்மை மிகு பெயருக்கு ஒப்புக்கொடுத்து ஜெபித்து, அப்படையோடு துருக்கிய படையை எதிர்கொண்டு போரில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் அடையாளமாக, அந்த வெற்றி பெற்ற தினத்தினை மரியாவின் தூய்மை மிகு பெயருக்கு ஒப்புக்கொடுத்து ஜெபிக்கின்ற பழக்கத்தை அப்போதைய திருத்தந்தையாக இருந்த 11-ம் இன்னசென்ட் அவர்கள் அறிவுறுத்தினார் . அந்த அறிவுறுத்தலின் அடிப்படையில் தான் இன்றைய தினம் வரை ஒவ்வொரு மாதமும் செப்டம்பர் 12ஆம் தேதியை மரியாவின் தூய்மை மிகு பெயருக்கு ஒப்புக்கொடுத்து நாம் ஜெபித்து கொண்டிருக்கின்றோம்.

          கடவுளின் பெயருக்கு வல்லமை உண்டு என்பதை விவிலியம் நமக்கு சுட்டிக்காட்டுவது போல, மரியாவின் தூய்மை மிகு பெயருக்கும் வல்லமை உண்டு என்பதை புனிதர்களின் வாழ்வில் இருந்து நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. 

      புனித பிரிஜித் அவர்களின் வாழ்வில், அவர் ஒரு காட்சி காண்கின்றார். அந்த காட்சியில், அன்னை மரியாவின் பெயரை சொல்லுகிறவர்களிடம் தீய ஆவி அகன்று ஓடுவதை அவர் காண்கின்றார். அதே சமயம் மரியாவின் பெயரை உச்சரிப்பவர்களுக்கு வானதூதர்கள் இறங்கி வந்து உதவி செய்வது போன்ற காட்சியை காண்பதாக பிரிஜித் அவர்களின் வாழ்வில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

        அன்னையின் தூய்மை மிகு பெயரினை நினைவு கூருகின்ற இந்த நாளில், இந்த அன்னையின் வழியாக நாம் பெற்றுக் கொண்ட நன்மைகளுக்கு நன்றி சொல்லி, நன்றி உள்ளவர்களாக வாழ்வதற்கான அருள் வேண்டி இன்றைய நாள் முழுவதும் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 
          
                

ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

ஆண்டவருக்கு உகந்த மனமாற்றம் பெற்று நற்செய்திப் பணியாளராகிடுவோம்! (11-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

          மனமாற்றம் பெற்று வருகிற போது ஆண்டவர் நம்மை அரவணைக்கக் கூடியவராக இருக்கின்றார் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றன.  தவறு இழைத்த இஸ்ராயேல் மக்களை அழிப்பதற்கு இறைவன் எண்ணிய போது, கடவுளின் செயலை மோசே தடுத்து நிறுத்துகின்றார். 

    அதுபோல நற்செய்தி வாசகத்தில் கூட, காணாமல் போன ஆட்டினை தேடி கண்டுபிடிப்பவர் மகிழ்வதுபோல, தவறிழைத்த மனிதன், தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து திருந்தி வருகிற போது, கடவுள் அவனை ஏற்றுக்கொண்டு மகிழக்கூடியவராக இருக்கிறார் என்பதை ஊதாரி மைந்தன் உவமை வழியாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறைவன் எடுத்துரைக்கின்றார். 

      அதுபோலவே இன்றைய நாளின் இரண்டாம் வாசகத்தில் தவறிழைத்த மனிதனாக, இயேசுவின் பெயரை அறிக்கை இடுபவர்களை எல்லாம் கொல்லத் தேடிய மனிதனாக தன் வாழ்வை  துவங்கிய பவுல் அடியார்,  கடவுளை ஏற்றுக் கொண்டு கடவுளுக்கு பணி செய்யக்கூடிய நல்லதொரு நற்செய்திப் பணியாளராக மாறியது குறித்து பெருமை கொள்வதை நாம் வாசிக்க கேட்டோம். 

           இந்த வாசகங்கள் அனைத்துமே நாம் நமது தவறிய வாழ்வில் இருந்து விடுபட்டு, ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வை வாழ அழைப்பு விடுக்கின்றன. இறைவன் தருகின்ற இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக, மன மாற்றம் பெற்ற மனிதர்களாக மாறி ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியின் பணியாளர்களாகிட இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
             

சனி, 10 செப்டம்பர், 2022

நற்செயல்களால் நற்செய்தி அறிவிப்போம்! (10-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

             இன்றைய நாள் இறைவார்த்தைகள் அனைத்துமே நமது செயல்களை குறித்து சிந்திப்பதற்கு அழைப்பு தருகின்றன. ஒவ்வொரு மனிதனுமே அவரவர் செய்கின்ற செயல்களை வைத்து அறியப்படுகின்றோம் என்ற செய்தியினை
இன்றைய வாசகங்கள்  நயமாக எடுத்துரைக்கின்றன.
ஒவ்வொரு மரமும் அதன் கனியை கொண்டு அறியப்படும் என்பதற்கு ஏற்ப, நமது செயல்கள் நாம் யார் என்பதையும், நாம் எப்படிப்பட்ட மனிதர்கள் என்பதையும் இந்த சமூகத்தில் அறிமுகப்படுத்துகின்றன.

                      நாம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை கேட்கின்ற மனிதர்களாக மட்டுமல்லாமல், வாழ்வாக்குகின்ற மனிதர்களாக மாறுகிற போது,  நமது வாழ்வு அர்த்தமுள்ள கிறிஸ்தவ வாழ்வாக அமைகிறது. அத்தகைய வாழ்வு நம் வாழ்வாக மாறுகிறபோது நாம் பாறையின் மீது அடித்தளம் இடப்பட்ட வீட்டினை கட்டக்கூடிய நபர்களாக இச்சமூகத்தில் வலம் வரமுடியும். பவுல் அடியாரைப் போல ஆண்டவர் இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, அவரின் வார்த்தைகளை எல்லாம் வாழ்வாக மாற்றிக்கொண்டு, பவுல் பயணித்தது போல நீங்களும் நானும் பயணிப்பதற்கான அழைப்பு இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது.

      இந்த நல்ல நாளில் நமது செயல்பாடுகளையும், ஆண்டவரின் இறை வார்த்தையையும் ஒப்பிட்டு பார்த்து, நம்மை நாம் சரி செய்து கொண்டு, ஆண்டவரின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தரும் மனிதர்களாக நீங்களும் நானும் மாறிட இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

வெள்ளி, 9 செப்டம்பர், 2022

இன்னல்களும் இனிதாகிட நற்செய்திப் பணியாற்றுவோம்! (9-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

     ஆண்டவர் இயேசுவை பற்றிய நற்செய்தியை அறிவிக்கக்கூடிய மனிதர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான ஒரு அழைப்பு, இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நமக்கு தரப்படுகிறது.  இப்பணியை செய்த பவுல்,  தன் வாழ்வில் எத்தகைய துன்பங்கள் வந்தாலும், துன்பங்களுக்கு மத்தியிலும் ஆண்டவர் இயேசுவை பற்றிய நற்செய்தி அறிவிக்கும் நல்லதொரு  நற்செய்தியாளராக  வாழ்ந்து, நாமும் வாழ அழைப்பு தருகிறார்.  

   அவரின் அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக, நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள வேண்டுமாயின், நம்மை நாம் சரி செய்து கொண்டு,  நெறிப்படுத்திக் கொண்டு ஆண்டவரின் வார்த்தைகளை நமது வாழ்வில் ஏற்று, அதை பின்பற்றுகின்ற மனிதர்களாக நாம் மாறி, அதனை தொடர்ந்து மற்றவர்களையும் அப்பணியில்  ஈடுபடச் செய்யக்கூடிய மனிதர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான அழைப்பை இறைவன் இன்றைய நாளில் நமக்கு தருகிறார்.

      இறைவன் தருகின்ற அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக, நற்செய்தியை அறிவிக்க ஆண்டவரின் ஆசியை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார். 

வியாழன், 8 செப்டம்பர், 2022

இன்று நம் அன்னைக்கு பிறந்தநாள்! (8-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!


இன்று தாய்த்திரு அவையானது 
அன்னை மரியாவின் பிறப்பு விழாவை கொண்டாடுகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை இந்த அகிலத்திற்கு கொண்டு வருவதற்காக அன்னை மரியா பாவம் இல்லாமல் இவ்வுலகில் பிறந்தார். இந்த அன்னை மரியாவின் பிறப்பு விழாவை கொண்டாடுகின்ற இந்த நேரத்தில் அன்னை மரியாவின் பெயரை தாங்கி இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் நாமவிழா வாழ்த்துக்களை மகிழ்வோடு உரித்தாக்கி கொள்கிறோம்.
 ஆண்டவருக்காகவே இவ்வுலகிற்கு வந்த அன்னை மரியா தன் வாழ்வு முழுவதுமே ஆண்டவருடைய வார்த்தைகளை வாழ்வாக்குவதில் நிலைத்திருந்தார். இந்த அன்னை மரியாவைப் போல நீங்களும் நானும் ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற மனிதர்களாக, அவரின் திட்டத்திற்கு நம்மை முழுவதுமாக கையளிக்கின்ற மனிதர்களாக மாறிட இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

புதன், 7 செப்டம்பர், 2022

அன்பின் திருக் குடும்பமாக வாழ்வோம்! (7-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!


நேற்றைய நாள் வாசகமானது குருக்களை மையப்படுத்தி அமைந்திருந்தது. ஆனால் இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் திருமணம் முடித்தவர்களை குறித்து சிந்திப்பதற்கான ஒரு அழைப்பை தருகிறது.  அழைக்கப்பட்டவர்கள் பலர். ஆனால்,  தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிலர் என குறிப்பிடுவார்கள்.

                      ஆனால், கடவுள் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரையும் அவரவர் இருக்கின்ற நிலையிலிருந்து அவரின்  பணியை செய்வதற்கு அழைப்பு தந்திருக்கிறார். ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வாக்குவதற்கான உயரிய இடம் வேறு எங்கும் இல்லை, குடும்பங்களில் தான் இணைந்திருக்கிறது. அன்போடு  வாழுங்கள் என்ற வார்த்தையை முதலில் வாழ்வாக்க வேண்டியது குடும்பங்களில் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக,  மணம் முடித்த நிலையில் இருந்தாலும்,  பொதுநிலையினராக இருந்தாலும், நாம் ஒவ்வொருவரும் நாம் இருக்கின்ற தளத்தில் இருந்து ஆண்டவரின் பணியை செய்கின்ற மனிதர்களாக நாளும் வாழ்வதற்கான அழைப்பை இறைவன் தருகிறார்.

    இந்த அழைப்பை உணர்ந்து கொண்டு நமது வாழ்வை நாம் நெறிப்படுத்திக் கொண்டு வாழும் போது கடவுளின் ஆசிகளை நாம் பெற்றுக் கொள்வோம் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது. இந்த வாசகங்களின் பின்னணியில் நமது வாழ்வை ஆண்டவருக்கு உகந்த வாழ்வாக மாற்றிக்கொள்ள இறைவனிடத்தில் தொடர்ந்து இன்றைய நாளில் மன்றாடுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

ஆண்டவரின் அழைப்பு பெற்ற குருக்கள்! ( 6-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

                  இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் பணியை செய்வதற்காக பன்னிருவரை பெயர் சொல்லி அழைப்பதை நாம் வாசிக்கக் கேட்டோம். இந்த இறைவார்த்தையின் அடிப்படையில் நாம் இன்றைய நாளில் குருக்களை குறித்து சிந்திப்பதற்கு அழைக்கப்படுகிறோம்.

      ஆண்டவரின் பணியை செய்வதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட குருக்களுடைய வாழ்வோடு நமது வாழ்வையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க அழைக்கப்படுகின்றோம். கடவுளின் வார்த்தையை அறிவிப்பதையும், அதை வாழ்வாக்க முயற்சிப்பதையும், அறிவுறுத்துவதையும், தங்கள் வாழ்வின் இலக்காக கொண்டு அப்பணியை செய்கிற அவர்களுக்கு நாமும் உறுதுணையாக இருப்பதற்கு இன்றைய இறைவார்த்தை வழியாக நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.

               இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பவுல் நீங்கள் வழக்குக்காக நம்பிக்கையற்ற மனிதர்களிடம் செல்வதை விட, இறை மக்களிடம் செல்லுங்கள் என, குருக்களை நோக்கி உங்களுடைய குறைகளையும் உங்களிடம் இருக்கின்ற இன்ப துன்பங்களையும் பகிர்ந்து கொள்ளச் செல்லுமாறு அழைப்பு விடுக்கின்றார். 


      இந்த இறைவார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் ஒப்பிட்டுப் பார்க்கிற போது குருக்கள் பற்றிய எத்தகைய மனநிலை கொண்டிருக்கிறோம் என்பதை குறித்து சிந்திக்கவும், நாம் குருக்களுக்காக ஜெபிப்பதற்கும் இந்த நாளில் அழைக்கப்படுகிறோம். இறைவன் தருகின்ற இந்த அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாக, நமக்கு தெரிந்த அனைத்து குருக்களுக்காகவும் இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். தொடர்ந்து அவர்கள் இறைவனுடைய பணியை செய்வதற்கான ஆற்றலை இறைவன் அவர்களுக்கு தர வேண்டுமாக நாம் தொடர்ந்து நமது ஜெபங்களில் அவர்களை நினைவு கூர இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்ட மனிதர்களாக, இன்றைய நாளில் குருக்களுக்காக ஜெபிக்க இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

செவ்வாய், 6 செப்டம்பர், 2022

அன்பின் தேவதை - அன்னை தெரசா! (5-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 


                             இன்று தாய்த்திரு அவையானது, புனித அன்னை தெரசாவை நினைவு கூர நமக்கு அழைப்பு விடுக்கின்றது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்வு முழுவதையும் திருப்பிப் பார்த்தாலும்,  அவரின் வார்த்தைகள் அனைத்தையும் புரட்டிப் பார்த்தாலும்,  அனைத்தும் வலியுறுத்துவது அன்பு என்ற ஒற்றைச் சொல்லை மட்டுமே.

 இந்த அன்பை உணர்ந்து கொண்ட ஒரு பெண்மணியாக, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக்கொண்டு, தன் வாழ்நாள் முழுவதும் புறக்கணிக்கப் பட்டவர்களையும், கைவிடப்பட்டவர்களையும், நோயாளிகளையும், அன்பு செய்து, அவர்களை பராமரித்து பாதுகாக்கின்ற பணியினை செய்த அன்னை தெரசாவை நினைவு கூருகின்ற இந்த நாளில்,  நாமும், நம் மத்தியில் வாழுகிற, தேவையில் இருக்கின்ற மனிதர்களை இனம் கண்டு கொண்டு,  அவர்களின் தேவையில் உடன் இருக்கவும், அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை தரவும், தேவையில் இருப்பவரை கவனித்துக் கொள்ளவும் அழைப்பு தரப்படுகிறது. 

        இறைவன் தருகின்ற இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்டவர்களாக, அன்பை மட்டுமே முன்னிறுத்தி, அனுதினமும் பயணம் செய்ய ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

வார்த்தைகளை வாழ்வாக்குவோம்! (4-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 


                நாம் ஏற்றுக் கொண்ட ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக அனைத்தையும் இழக்கத் துணிந்த உண்மையான சீடர்களாக வாழ இன்றைய நாள் இறை வார்த்தை வழியாக நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருமே, அவருக்காக தங்கள் வாழ்வையே இழக்க துணிந்தார்கள். அவர்களுள் பலரை நாம் புனிதர்களாகக் கொண்டு,  ஒவ்வொரு நாளும் அவர்களை நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம்.
      
                   இந்த புனிதரின் வாழ்வானது நாமும் அவர்களை போல, ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கி, அவருக்கு உகந்த மனிதர்களாக, அவரின் உண்மை சீடர்களாக நாமும் மாறிட முடியும் என்ற வாழ்வுக்கான பாடத்தை நமக்கு ஒவ்வொரு நாளும் தருகிறது.

        தன்னிடம் இருக்கின்ற அனைத்தையும் ஆண்டவர் இயேசுவுக்காக இழக்கத் துணிந்த மனிதராக இன்றைய வாசகங்கள் பவுலடியாரை சுட்டிக்காட்டுகின்றன. ஆண்டவர் இயேசுவுக்காக அனைத்தையும் குப்பையென கருதுகிறேன் என அனைத்தையும் புறம் தள்ளிவிட்டு, ஆண்டவர் இயேசுவை மட்டுமே இதயத்தில் ஏற்றுக்கொண்டு, அவரின் பாதையில் அனுதினமும் நடந்த பவுல் அடியாரைப் போல, நீங்களும் நானும் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற மனிதர்களாக,  நாளும் இச்சமுகத்தில் பயணம் செய்து, உண்மைச் சீடர்களாக மாறிட, இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 
           

ஆண்டவர் இயேசுவை அறிக்கையிடுவோம்! (3-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

          ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது, பலவிதமான பாடங்களை தம் சீடர்களுக்கு கற்பித்தார். சின்னஞ்சிறிய உவமைகள் வாயிலாகவும், பல நிகழ்வுகள் வாயிலாகவும், வாழ்வுக்கான பாடத்தை கற்பித்தார். இந்த கற்பித்தலை உள்வாங்கிக் கொண்ட இயேசுவின் சீடர்கள், உலகெங்கும் சென்று அதை மற்றவர்களுக்கு அறிவிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களின் அடிப்படையில் நாமும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றி நாளும் அறிந்திருக்கிறோம்.  நாம் அறிந்திருக்கின்ற ஆண்டவர் இயேசுவைக் குறித்து அறிக்கை இடுகின்ற மனிதர்களாக நாம் இருக்கின்றோமா? என்ற கேள்வியை எழுப்பிப் பார்ப்பதற்கான ஒரு அழைப்பை இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு தருகின்றார்.

           இறைவன் தரக்கூடிய இந்த அழைப்பினை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக, நாம் அறிந்திருக்கின்ற ஆண்டவரைப் பற்றி அறிவிப்பவர்களாகவும், அவரின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற மனிதர்களாகவும் நாம் இச்சமூகத்தில் இருக்கின்றோமா என்ற கேள்வியை இன்று எழுப்பி பார்ப்போம். ஆண்டர் இயேசு கிறிஸ்துவை அறிந்திருக்கின்ற நாம், அவரிடம் காணப்பட்ட இறையாட்சியின் மதிப்பீடுகளான அன்பையும், சமத்துவத்தையும், சமூக நீதியையும் நமது வாழ்வில் நமது செயல்கள் மூலமாக பின்பற்றக்கூடிய மனிதர்களாக இருப்பதற்கான ஆற்றலை  வேண்டி இறைவனிடத்தில் இன்றைய நாளில் மன்றாடுவோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 


      
     

தீர்ப்பிடாதே! (2-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

                  இன்றைய முதல் வாசகமானது,  நாம் யாரையும் தீர்ப்பிடாமல் வாழ்வதற்கு அழைப்பு விடுக்கிறது.  நாம் மனிதர்களின் தீர்ப்புக்கு அஞ்சுவதை விட, கடவுளின் தீர்ப்புக்கு மட்டுமே அஞ்சக்கூடிய மனிதர்களாக இச்சமூகத்தில் நாளும் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற பணிகளை சிறப்போடு செய்வதற்கான அழைப்பு, இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது.

      இன்றைய நற்செய்தி வாசகத்தில் பழைய ஆடையில் யாரும் புதிய துணியை ஒட்டு போடுவதில்லை,  பழைய தோற்பையில் புதிய மதுவை ஊற்றுவதில்லை என்ற வார்த்தைகள் வழியாக இறைவன் அன்றன்றைய நாளுக்குரிய வேலைகளை அன்றன்று செய்வதற்கான ஒரு அழைப்பை  இறைவன் தருகின்றார்.  அன்றைய நாள் வேலைகளை அன்றே நாம் செய்து முடிக்கின்ற போது, அடுத்த நாளில் அடுத்த நாளுக்கான வேலைகளை குறித்து நமது கவனத்தை செலுத்த இயலும்.

    மாறாக இன்றைய நாள் வேலைகளை நாம் இன்று செய்யாமல் அதை அடுத்த நாளுக்கு கடத்திச் செல்கிற போது நமது வாழ்வில் பணிச்சுமையானது அதிகமாகி கொண்டே செல்கிறது. 

    அன்றைய நாளுக்குரிய வேலைகளை    அன்றன்றைக்கு செய்து,  நாம் கடவுளுக்கு உகந்த மனிதர்களாக, கடவுளின் தீர்ப்புக்கு மட்டுமே அஞ்சக்கூடிய நபர்களாக இச்சமூகத்தில் வாழ்வதற்கான ஒரு அழைப்பை இறைவன் இன்றைய நாளில் நமக்கு வழங்குகின்றார். 

      இந்த இறைவன் தருகின்ற அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக, நம்மை நாம் செதுக்கிக்கொண்டு நமது வாழ்வை கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வாக அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.  

ஆண்டவரில் ஆழமான நம்பிக்கை கொள்வோம்! (1-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

               
       நாம் ஒவ்வொருவருமே கிறிஸ்துவுக்கு உரியவர்கள். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாம் ஒவ்வொருவருமே, அவரைச் சார்ந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே, ஒவ்வொரு நாளும் நம்பிக்கை நிறைந்த மனிதர்களாக இச்சமூகத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதை இன்றைய நாள் இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகின்றார்.

    ஆண்டவர் இயேசுவோடு உடன் பயணித்த சீடர்கள், பல நேரங்களில் அவர் மீது நம்பிக்கை அற்றவர்களாக இருந்தாலும், அவரின் வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக, அவரது வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக இருந்தார்கள் என்பதை விவிலியத்தில் பல பகுதிகளில் நாம் காணலாம்.

        அதிலும் குறிப்பாக, இன்று நாம் வாசிக்க கேட்ட நற்செய்தி வாசகத்தில்,  இரவு முழுவதும் மீனைத் தேடி, ஒன்றும் கிடைக்காத சூழ்நிலையில், மீண்டுமாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூற, ஆண்டவரின் வார்த்தைகளை தங்கள் வாழ்வாக்கிக் கொண்டு, ஆழத்திற்கு சென்று வலைகளைப் போட்டு மிகுதியான மீன்பாட்டை சீடர்கள் கண்டார்கள் என்பதை இன்றைய செய்தி வாசகமாக நாம் வாசிக்க கேட்கிறோம்.

       சீடர்களின் வாழ்வு இன்று நமக்கு தருகின்ற  வாழ்வுக்கான பாடம், கிறிஸ்துவுக்கு உரியவர்களாகிய நாம்,  அவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக,  நாளும் வளர வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை வழியாக, இறைவன் நமக்கு உணர்த்துகிறார். நாமும் நமது வாழ்வில் ஆண்டவர் இயேசுவின் மீதான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

தூய ஆவியாரின் இயல்பு நம்மிடம் மலரட்டும்! (31-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

                
       ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது, சென்ற இடமெல்லாம் நன்மையை செய்து கொண்டே சென்றார். இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் கூட காய்ச்சலாய் இருந்த பேதுருவின் மாமியாருக்கு அவர் நலம் தருவதையும்,  நம்பிக்கையோடு அவரை நாடி வந்த பலருக்கு அவர் நலம் தருவதையும் நாம் வாசிக்க கேட்கின்றோம்.  இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றக்கூடிய நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு நாளும் அடுத்தவருக்கு நல்லது செய்கின்ற நபர்களாக வாழ்வதற்கான ஒரு அழைப்பு இன்று நமக்கு தரப்படுகிறது.

         இத்தகைய வாழ்வை வாழுகிற போது, நாம் ஊனியல்புக்கு ஏற்ப வாழாமல் தூய ஆவியாரின் இயல்புக்கு உரியவர்களாக நாம் இச்சமூகத்தில் வாழ முடியும். 

        பல நேரங்களில் ஊனியல்புக்கு உரிய மனிதர்களாக, தூய ஆவியானவரை தவிர்த்து விட்டு, நமது வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், தூய ஆவியின் இயல்புக்குரிய மனிதர்களாக நாளும் நாம் வளர வேண்டும் என்பதை இறைவன் இன்றைய வாசகங்கள் வழியாக நமக்கு உணர்த்துகிறார்.

           இறைவன் உணர்த்தும் இந்த வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக, தூய ஆவியாரின் இயல்புக்குரிய மனிதர்களாக, நாளும் வாழ,  உலக இச்சைகளை எதிர்கொண்டு, ஆவியானவரின் துணைகொண்டு, இச்சமூகத்தில் அனுதினமும் நன்மைகளை மட்டுமே செய்து கொண்டிருப்பதற்கான ஆற்றலை இறைவனிடத்தில் இன்றைய நாளில் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

தூய ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்ட வாழ்வு. (30-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 


இன்றைய நாள் இறை வார்த்தையானது தூய ஆவிக்குரிய இயல்பு கொண்ட மனிதர்களாக நாம் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை கண்டு, வியந்து போன மக்கள், எங்கிருந்து இவருக்கு இந்த ஞானம் வந்தது என வியந்தார்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்து நாமும் அவரைப் போலவே இந்த சமூகத்தில் அதிகாரத்தோடு நல்ல செயல்களை முன்னெடுக்கக் கூடியவர்களாக நல்ல காரியங்களை துணிவோடு அறிவிக்கக்கூடிய மனிதர்களாக இருப்பதற்கான ஒரு அழைப்பை இன்று தருகிறார். 
           இதற்கான வல்லமையை தூய ஆவியானவர் என்றும் நம்முள் இருந்து நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து அவருக்குரிய இயல்புகளை பெற்றுக் கொண்ட மனிதர்களாக நாளும் இச்சமூகத்தில் நாம் வளர்ந்திட, இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

திருமுழுக்கு யோவானின் நீதி! (29-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

               இன்று தாய்த்திரு அவையானது, திருமுழுக்கு யோவானின் பாடுகளை நினைவு கூர்கின்றது. பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் இணைக்கின்ற ஒரு இறைவாக்கினராக இந்த திருமுழுக்கு யோவான் இருக்கின்றார். இந்த திருமுழுக்கு யோவானின் வாழ்வு, மத்தேயு நற்செய்தி ஐந்தாம் அதிகாரத்தில் நாம் வாசிக்கின்ற, மலைப்பொழிவில் இடம் பெறுகின்ற, நீதியின் பொருட்டு துன்புறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர் என்ற இறை வார்த்தைகளுக்கு ஏற்ப அமைந்த ஒரு வாழ்வாக பார்க்கப்படுகிறது. 

         நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு தவறான வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த அரசனையும் அரசன் எனப் பாராது, அவன் செய்வது தவறு என்பதை துணிவோடு எடுத்துரைக்கக்கூடிய ஒரு நபராக திருமுழுக்கு யோவான் இருந்தார். அத்தகைய செயல்பாட்டின் விளைவாக, தனது இன்னுயிரையும் இழக்க நேர்ந்தது. அவர் தனது இன்னுயிரை இழந்ததை இன்று நாம் தாய்த்திரு அவையாக நினைவு கூருகிறோம். இவரின் வாழ்வு இன்று நமக்கு தருகின்ற வாழ்வுக்கான பாடம், எந்நிலையில் இருந்தாலும் நாம் தவறை சுட்டிக்காட்டும் பண்புடைய மனிதர்களாக நாளும் இருப்பதற்கான ஒரு அழைப்பை இறைவன் இன்றைய நாளில் நமக்கு தருகிறார். நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்ட மனிதர்களாக, நாம் இருக்கும் பொழுது, நாம் கண்டிப்பாக நிறைவு பெறுவோம் என்பதை இதயத்தில் இருத்தியவர்களாய் செயல்படுவதற்கான ஆற்றலை வேண்டி, இறைவனிடத்தில் இன்றைய நாளில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...