இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய முதல் வாசகமானது இஸ்ரயேல் மக்களின் அழிவுக்குப் பிறகாக, அவர்கள் பாபிலோனிய அடிமைத்தனத்திற்கு சென்றதற்குப் பிறகாக, அவர்களை ஆள்வதற்கென உருவாக்கப்பட்ட தலைவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்யாததன் விளைவு, அவர்கள் இத்தகைய துன்பத்தை அவர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளும் வகையில் எடுத்துரைப்பதாக இன்றைய முதல் வாசகம் அமைந்துள்ளது. இந்த இறைவார்த்தைப் பகுதியோடு இன்றைய நற்செய்தி வாசகத்தை ஒப்பிட்டு பார்க்கிறபோது, ஒரு நிலக்கிழார் தன்னிடம் வேலை செய்வதற்காக ஒரு நாளில் பல்வேறு நேரங்களில் தம்மிடம் வரக்கூடியவர்களை எல்லாம் அழைத்து, அவர்களுக்கு வேலைகளை பகிர்ந்து கொடுத்து, அவர்களுக்கு தேவையானதை தன் விருப்பம் போல, தன்னிடம் இருப்பதிலிருந்து கொடுக்கக் கூடிய நபராக இருப்பதை நாம் வாசிக்க கேட்டோம்.
இறுதி நேரத்தில் வேலைக்கு வந்தவர்களுக்கும் இவர் தங்களுக்கு தருவது போன்ற ஊதியத்தை தருகிறாரே என பலர் எண்ணிய போது தனக்குரியதை தன் விருப்பம் போல மற்றவருக்கு கொடுப்பதற்கு எனக்கு உரிமை இல்லையா? என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம் கடவுளின் பணியை செய்வதற்காக அழைக்கப்பட்டிருக்கக் கூடிய கூடிய நீங்களும், நானும், நாம் இருக்கின்ற தளத்தில் கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை வாழவும், கடவுளின் திருவுளத்தை அறிந்து அதனை செய்கின்ற மனிதர்களாக இருப்பதற்குமான ஒரு அழைப்பை இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு தருகிறார். நம்மிடம் அவர் ஒப்படைத்து இருக்கின்ற பலவிதமான பொறுப்புகளை, கடமையை உணர்ந்து, கடமை உணர்வோடு, மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து அதை செய்யக்கூடிய மனிதர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான அழைப்பை இன்றைய வாசகங்கள் நமக்கு தருகின்றன.
இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்ப்போம். கடவுள் நமக்கென கொடுத்து இருக்கக்கூடிய பணிகளையும் பொறுப்புகளையும் சரிவர செய்யக்கூடிய மனிதர்களாக, நீதியோடு செயல்படக்கூடிய நபர்களாக நாம் இருக்கின்றோமா என்று கேள்வியை எழுப்பி பார்ப்போம். இருக்கிறோம் என்றால் கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். ஒருவேளை நம்மிடத்தில் ஏதேனும் ஒன்று குறைவுபடுவது போன்ற உணர்வு எழுகிறது என்றால் நாம் கடவுளின் திட்டத்தை உணர்ந்து கொண்டு, அவர் நம்மிடம் ஒப்படைத்து இருக்கிற பணிகளை எல்லாம், இன்முகத்தோடு ஏற்று நீதியோடும் நேர்மையோடும் அவருக்கு உகந்த வகையில் அதனை செய்வதற்கான ஆற்றலை வேண்டி மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக