இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
மனமாற்றம் பெற்று வருகிற போது ஆண்டவர் நம்மை அரவணைக்கக் கூடியவராக இருக்கின்றார் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றன. தவறு இழைத்த இஸ்ராயேல் மக்களை அழிப்பதற்கு இறைவன் எண்ணிய போது, கடவுளின் செயலை மோசே தடுத்து நிறுத்துகின்றார்.
அதுபோல நற்செய்தி வாசகத்தில் கூட, காணாமல் போன ஆட்டினை தேடி கண்டுபிடிப்பவர் மகிழ்வதுபோல, தவறிழைத்த மனிதன், தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து திருந்தி வருகிற போது, கடவுள் அவனை ஏற்றுக்கொண்டு மகிழக்கூடியவராக இருக்கிறார் என்பதை ஊதாரி மைந்தன் உவமை வழியாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறைவன் எடுத்துரைக்கின்றார்.
அதுபோலவே இன்றைய நாளின் இரண்டாம் வாசகத்தில் தவறிழைத்த மனிதனாக, இயேசுவின் பெயரை அறிக்கை இடுபவர்களை எல்லாம் கொல்லத் தேடிய மனிதனாக தன் வாழ்வை துவங்கிய பவுல் அடியார், கடவுளை ஏற்றுக் கொண்டு கடவுளுக்கு பணி செய்யக்கூடிய நல்லதொரு நற்செய்திப் பணியாளராக மாறியது குறித்து பெருமை கொள்வதை நாம் வாசிக்க கேட்டோம்.
இந்த வாசகங்கள் அனைத்துமே நாம் நமது தவறிய வாழ்வில் இருந்து விடுபட்டு, ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வை வாழ அழைப்பு விடுக்கின்றன. இறைவன் தருகின்ற இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக, மன மாற்றம் பெற்ற மனிதர்களாக மாறி ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியின் பணியாளர்களாகிட இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக