இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்று நம் தாய் திருநாடு சுதந்திரம் பெற்ற 75 ஆவது ஆண்டினை நாம் நினைவு கூருகின்றோம். அதே சமயம் திரு அவை அன்னை மரியாவின் விண்ணேற்பை நினைவு கூற நமக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த நல்ல நாளில் உங்கள் அனைவருக்கும் விழா வாழ்த்துக்களை முதலில் உரித்தாக்கி மகிழ்கிறேன்.
கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி வாழ்வது தான் சுதந்திரம் என்ற மனநிலையோடு இன்று நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்று சுதந்திரம் பெற்ற போது பாரதி சுதந்திரத்தைக் குறித்து பாடுகிற போது, பாரினில் இனி நாம் யாருக்கும் அடிமை இல்லை. பரம்பொருள் ஒருவனுக்கே நாம் அடிமைகள் என்று பாடினார். பாரதியின் இவ்வார்த்தைகள் உலகில் வாழ்கிற போது நாம் எவருக்கும் அடிமைகள் இல்லை. இறைவன் ஒருவரைத் தவிர என்பதை வலியுறுத்தினாலும் , இந்த வார்த்தைகளுக்கு ஏற்ற வகையில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டவர் அன்னை மரியா என்பதை நாம் நினைவு கூர அழைக்கப்படுகிறோம்.
சமூகத்தில் இருந்த பலவிதமான பிரச்சனைகளுக்கு மத்தியில், பலவிதமான சட்டங்களுக்கு மத்தியில், கடவுளுக்கு மட்டுமே பயந்த ஒரு பெண்மணியாக மரியா தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். மரியாவின் விண்ணேற்பு நமது மீட்பை குறித்து சிந்திப்பதற்கான ஒரு அழைப்பை நமக்கு தருகிறது. ஆதாம் ஏவாளின் பாவத்தின் விளைவாக வீழ்ச்சியை சந்தித்த மனித இனம்,
புதிய ஏற்பாட்டின் ஆதாம் ஏவாளாகிய இயேசு மரியாள் வழியாக மீட்பை அடைந்தது.
அந்த மீட்பை நினைவு கூரும் விதமாகவே, விண்ணேற்பில் கடவுளின் முன்னிலையில், ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்தும் வகையில், மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவை திரு அவை இன்றைய நாளில் நினைவு கூர நமக்கு அழைப்பு விடுக்கிறது.
இந்த நல்ல நாளில் நமது நாட்டின் விடுதலைக்காக தியாகம் செய்த, உயிர் தியாகம் செய்த ஒவ்வொருவரையும் நன்றியோடு நினைவுக்கு கூர்ந்து, அவர்களுக்காக இறைவனிடத்தில் மன்றாடவும், அன்னை மரியாவை போல ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வை நாம் வாழவும் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக