திங்கள், 12 செப்டம்பர், 2022

அன்னை மரியாவின் தூய்மை மிகு பெயர் விழா! (12-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

       இன்று தாய்த்திரு அவையானது, மரியாவின் தூய்மை மிகு பெயரினை நினைவு கூர்ந்து கொண்டாடிட நமக்கு அழைப்பு விடுக்கிறது. வரலாற்றின் பக்கங்களை திருப்பி பார்க்கிற போது, துருக்கிய படை கிறிஸ்தவ நாடுகளின் மீது எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்ற அச்சம் நிலவிக் கொண்டிருந்த சூழ்நிலையில், போலந்து நாட்டு அரசனாக இருந்த ஜான் செவாஸ்க்கி என்பவர், தனது படையினை மரியன்னையின் தூய்மை மிகு பெயருக்கு ஒப்புக்கொடுத்து ஜெபித்து, அப்படையோடு துருக்கிய படையை எதிர்கொண்டு போரில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் அடையாளமாக, அந்த வெற்றி பெற்ற தினத்தினை மரியாவின் தூய்மை மிகு பெயருக்கு ஒப்புக்கொடுத்து ஜெபிக்கின்ற பழக்கத்தை அப்போதைய திருத்தந்தையாக இருந்த 11-ம் இன்னசென்ட் அவர்கள் அறிவுறுத்தினார் . அந்த அறிவுறுத்தலின் அடிப்படையில் தான் இன்றைய தினம் வரை ஒவ்வொரு மாதமும் செப்டம்பர் 12ஆம் தேதியை மரியாவின் தூய்மை மிகு பெயருக்கு ஒப்புக்கொடுத்து நாம் ஜெபித்து கொண்டிருக்கின்றோம்.

          கடவுளின் பெயருக்கு வல்லமை உண்டு என்பதை விவிலியம் நமக்கு சுட்டிக்காட்டுவது போல, மரியாவின் தூய்மை மிகு பெயருக்கும் வல்லமை உண்டு என்பதை புனிதர்களின் வாழ்வில் இருந்து நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. 

      புனித பிரிஜித் அவர்களின் வாழ்வில், அவர் ஒரு காட்சி காண்கின்றார். அந்த காட்சியில், அன்னை மரியாவின் பெயரை சொல்லுகிறவர்களிடம் தீய ஆவி அகன்று ஓடுவதை அவர் காண்கின்றார். அதே சமயம் மரியாவின் பெயரை உச்சரிப்பவர்களுக்கு வானதூதர்கள் இறங்கி வந்து உதவி செய்வது போன்ற காட்சியை காண்பதாக பிரிஜித் அவர்களின் வாழ்வில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

        அன்னையின் தூய்மை மிகு பெயரினை நினைவு கூருகின்ற இந்த நாளில், இந்த அன்னையின் வழியாக நாம் பெற்றுக் கொண்ட நன்மைகளுக்கு நன்றி சொல்லி, நன்றி உள்ளவர்களாக வாழ்வதற்கான அருள் வேண்டி இன்றைய நாள் முழுவதும் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 
          
                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...