இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
மண்ணில் வாழுகிற ஒவ்வொரு மனிதனுமே, வாழுகிற ஒவ்வொரு நாளுமே, எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து விடலாம் என எண்ணிக் கொண்டிருந்தாலும், வாழுகிற ஒவ்வொரு மனிதனுடைய இலக்கு எதுவாக இருக்கிறது என சிந்திக்கிற போது, ஒவ்வொரு மனிதனுமே இறுதி நாளில் மீட்கப்பட வேண்டும் என்பதை இதயத்தில் இருத்திக் கொண்டு, தம் வாழ்வை நகர்த்தக்கூடியவர்களாக இருக்கின்றோம். இறைவன் நம்மை மீட்பதற்கு எப்போதும் தயாராக இருக்கிறார்.
அவரின் மீட்பை நாம் கண்டு கொள்ள வேண்டுமாயின் இவ்வுலக வாழ்வில் நாம் எண்ணுவது எதுவாக இருந்தாலும், நாம் செய்வது எதுவாக இருந்தாலும், அதை கடவுள் அறிய மாட்டார் என்பது அல்ல, நமது எண்ணங்களையும் செயல்களையும் கடவுள் அறிந்திருக்கிறார். அந்த எண்ணங்களும் செயல்களும் கடவுளுக்கு உகந்தவையாக இருக்க வேண்டும் என்ற அழைப்பை இன்றைய இறைவார்த்தைப் பகுதி நமக்கு தருகிறது. இந்த எண்ணங்களும் செயல்பாடுகளும் கடவுளுக்கு உகந்த வகையில் இருக்குமாயின், நாம் நமது வாழ்வில் பலவிதமான தடைகளை சந்திக்க நேரிடும். இந்த தடைகளுக்கு மத்தியிலும் நாம் கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை வாழ வேண்டும்.
அதற்கான நம்பிக்கை கொண்ட மனிதர்களாக, தடைகளை எல்லாம் கடவுள் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையின் அடிப்படையில் தகர்த்தெரியக் கூடிய மனிதர்களாக நாம் ஆண்டவரை நோக்கி, அவரது பாதையில் பயணப்பட அழைக்கப்படுகிறோம்.
முதன்மையான இடத்தை நாடுவதை விட, கடைசியாக இடத்தை நாடுங்கள். அப்போது நீங்கள் முதன்மையானவர்களாக மாறுவீர்கள் என இறைவன் நற்செய்தி வாசகத்தில் குறிப்பிடுகிறார்.
இந்த வாசகப் பகுதியோடு நமது வாழ்வை ஒப்பிட்டுப் பார்க்கிற போது, நாம் முதன்மையானது என எண்ணி, பலவற்றை நாடி இந்த சமூகத்தில் பயணம் செய்து கொண்டிருந்தாலும், நாம் கடவுளின் வார்த்தைகளை மட்டும் இதயத்தில் இருத்தியவர்களாய், இந்த இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை அனுதினமும் அமைத்துக் கொள்ளக்கூடிய மனிதர்களாக ஒவ்வொரு நாளும் பயணிக்க இறைவன் அழைப்பு தருகிறார். அத்தகைய அழைப்புக்கு செவி கொடுத்த மனிதர்களாக நாம் பயணம் செய்கிற போது இம்மண்ணுலக வாழ்வில் வருகிற தடைகளை எல்லாம் கடவுளின் துணையோடு எதிர்கொண்டு, இறுதி நாளில் நாம் மீட்பை உரிமையாக்கிக் கொள்ள முடியும். அந்த மீட்பை உரிமையாக்கிக் கொள்ள இறைவனுடைய வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக் கொண்டு அனுதினமும் நமது வாழ்வில் அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் மனிதர்களாகிட இறைவன் அழைப்பு தருகிறார். இந்த அழைப்பிற்கு நம்மை தகுதி உள்ளவர்களாக மாற்றிக்கொள்ள இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக