இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நாளின் முதல் வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இஸ்ரயேல் மக்களிடையே நான் மீண்டுமாக எனது பெயரை புனிதப்படுத்துவேன் எனக் கூறுகிறார். இவ்வார்த்தைகள் இந்த இஸ்ரயேல் மக்களின் செயல்பாடுகளால் கடவுளின் பெயர் புனிதமற்ற நிலையில் இருந்தது என்பதை நாம் நினைவு கூர அழைப்பு விடுக்கின்றது.
கடவுளுக்கு தகாத வகையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டிருந்த நிலையிலும் கூட, கடவுள் அந்த மனிதர்களின் மீது இரக்கம் காட்டக் கூடியவராய் அவர்களுடைய குற்றம் குறைகளை எல்லாம் மன்னித்து, அவர்களின் துன்பத்தை அவர்களிடம் இருந்து அகற்றி, அவர்களுக்கு புதிய இதயத்தையும், புதிய ஆவியையும் தருவதாக வாக்களிக்கின்றார். இந்த இறைவார்த்தையின் பின்னணியோடு இன்றைய நற்செய்தி வாசகத்தை நோக்குகிற போது, திருமண விருந்துக்கு அழைக்கப்பட்ட பலரைக் குறித்த உவமையை இயேசு இன்றைய நாளில் எடுத்துரைக்கிறார்.
யூதர்கள் தாங்கள் மட்டுமே மீட்புக்குரியவர்கள்; மெசியா வருவார்; வந்தவர் தங்களை மீட்டுச் செல்வார் என்ற எண்ணத்தோடு இருந்தவர்கள். இப்படிப்பட்ட அழைக்கப்பட்ட நிலையில் இருந்த நிலையிலும் கூட, அவர்கள் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளாமல், அவரின் வார்த்தைகளை உதாசீனப்படுத்தக் கூடிய மனிதர்களாக இருந்தார்கள் என்பதை வரலாற்றிலிருந்தும், விவிலியத்தின் துணை கொண்டும் நாம் அறிகிறோம்.
ஆனால் இயேசுவினுடைய இறை வார்த்தையானது யூதர்களையும் கடந்து, புறவினத்தாருக்கும் தரப்பட்டது. புறவினத்தார் பலரும் ஆண்டவரின் வார்த்தைகளை
கேட்டு தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டார்கள்.
ஆனால் ஒரு சிலர், கடவுளுக்கு தகாத வகையில், தகுதியற்ற நிலையில் இருந்தார்கள். திருமண ஆடை இன்றி விருந்தில் பங்கெடுக்க வந்த நபரை போன்று, பலரும் இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கையற்ற நிலையில் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள்.
அத்தகைய நபர்களை குறித்தே ஆண்டவர் இந்த உவமையை எடுத்துரைக்கிறார்.
இந்த இறை வார்த்தையோடு நமது வாழ்வை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நாம் அனுதினமும் ஆண்டவரின் வார்த்தைகளை கேட்கிறோம். இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, அவரது பாதையில் நடக்கிறோமா? அவருக்கு தகுதி உடையவர்களாக நாம் இருக்கின்றோமா? கேள்வியை இதயத்தில் எழுப்பிப் பார்ப்போம். நம்மை நாமே சரி செய்து கொண்டு, சீர்படுத்திக் கொண்டு, கடவுளுக்கு உகந்த வாழ்வை வாழ இன்முகத்தோடு இந்த நாளைத் துவங்குவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக