இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நற்செய்தி வாசகத்தில் விதை உவமையை குறித்து நாம் வாசிக்க கேட்டோம். மண்ணில் விதைக்கப்படுகின்ற விதை முளைக்கிறது. ஆனால் எந்த நிலத்தில் நாம் விழுந்த விதைகளாக இருக்கிறோம் என்ற கேள்வியை நாம் நமக்குள்ளாக எழுப்பிப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம்.
அனுதினமும் ஆண்டவரின் வார்த்தைகளை கேட்கிறோம். இந்த வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதர்களாக, நாம் நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் போல, 60 மடங்காகவும், 100 மடங்காகவும் விளைச்சல் தருகிறோமா? அல்லது பாறையின் மீதோ அல்லது முட்செடிகளுக்கு இடையே விழுந்த விதைகளைப் போல பயன் தராது போய்விடுகிறோமா? என்ற கேள்வியை இன்று நமக்குள்ளாக நாம் எழுப்பி பார்க்க அழைக்கப்படுகிறோம்.
தொடக்க காலத்தில் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள் மீது நம்பிக்கை கொண்டிருந்த தொடக்க கால கிறிஸ்தவர்கள், தங்கள் வாழ்வில் இறப்பு உயிர்ப்பை குறித்து பலவிதமான ஐயங்களுக்கு மத்தியில், பலவிதமான கேள்விகளை எழுப்பினார்கள். அவர்களுக்கெல்லாம் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பில் நாம் பங்கு பெறுவோம். அப்பொழுது மாட்சி பொருந்திய உடலோடு நாம் இருப்போம் என்பதை பவுலடியார் எடுத்துரைக்கின்றார்.
நாமும் ஆண்டவரின் வார்த்தைகளை அனுதினமும் கேட்கின்றோம். ஐயங்களை மட்டும் வளர்த்துக் கொள்கின்றோமா? அல்லது, ஐயங்களுக்கு மத்தியிலும் ஆண்டவர் மீதான நம்பிக்கையில் நிலைத்திருக்கின்றோமா? என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிப் பார்த்து நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக