இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் பணியை செய்வதற்காக பன்னிருவரை பெயர் சொல்லி அழைப்பதை நாம் வாசிக்கக் கேட்டோம். இந்த இறைவார்த்தையின் அடிப்படையில் நாம் இன்றைய நாளில் குருக்களை குறித்து சிந்திப்பதற்கு அழைக்கப்படுகிறோம்.
ஆண்டவரின் பணியை செய்வதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட குருக்களுடைய வாழ்வோடு நமது வாழ்வையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க அழைக்கப்படுகின்றோம். கடவுளின் வார்த்தையை அறிவிப்பதையும், அதை வாழ்வாக்க முயற்சிப்பதையும், அறிவுறுத்துவதையும், தங்கள் வாழ்வின் இலக்காக கொண்டு அப்பணியை செய்கிற அவர்களுக்கு நாமும் உறுதுணையாக இருப்பதற்கு இன்றைய இறைவார்த்தை வழியாக நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.
இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பவுல் நீங்கள் வழக்குக்காக நம்பிக்கையற்ற மனிதர்களிடம் செல்வதை விட, இறை மக்களிடம் செல்லுங்கள் என, குருக்களை நோக்கி உங்களுடைய குறைகளையும் உங்களிடம் இருக்கின்ற இன்ப துன்பங்களையும் பகிர்ந்து கொள்ளச் செல்லுமாறு அழைப்பு விடுக்கின்றார்.
இந்த இறைவார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் ஒப்பிட்டுப் பார்க்கிற போது குருக்கள் பற்றிய எத்தகைய மனநிலை கொண்டிருக்கிறோம் என்பதை குறித்து சிந்திக்கவும், நாம் குருக்களுக்காக ஜெபிப்பதற்கும் இந்த நாளில் அழைக்கப்படுகிறோம். இறைவன் தருகின்ற இந்த அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாக, நமக்கு தெரிந்த அனைத்து குருக்களுக்காகவும் இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். தொடர்ந்து அவர்கள் இறைவனுடைய பணியை செய்வதற்கான ஆற்றலை இறைவன் அவர்களுக்கு தர வேண்டுமாக நாம் தொடர்ந்து நமது ஜெபங்களில் அவர்களை நினைவு கூர இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்ட மனிதர்களாக, இன்றைய நாளில் குருக்களுக்காக ஜெபிக்க இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக